சமூகப் பணியாற்றும் சுகாதாரத்துறை சேவையாளர்கள் | தினகரன் வாரமஞ்சரி

சமூகப் பணியாற்றும் சுகாதாரத்துறை சேவையாளர்கள்

சுகாதாரத்துறை என்றதும் பெரும்பாலானோருக்கு நினைவுக்கு வருபவர்கள் ஸ்டெதெஸ்கோப்பை கழுத்தில் மாட்டியபடி வரும் மருத்துவர்களாகவே இருப்பார்கள். இலங்கை சமூகம் மருத்துவர்களுக்கு அளிக்கும் கௌரவமும் மரியாதையும் ஒரு மாணவன் தன் ஆசிரியருக்கு அளிக்கும் கௌரவத்துக்கு சமனானது என்றால் மிகையாகாது. 

இன்றைக்கும் ஏராளமான நோயாளர்கள் நோய்களில் இருந்து தம்மை மீட்கும் இரட்சகர்களாகவே இவர்களை நோக்குகிறார்கள் என்பதோடு எழுதித்தரும் மருந்துகளை ஏன் எதற்கு என்று கேட்காமல் வாங்கிக் கொள்ளும் பலருக்கு தம்மைப் பீடித்திருப்பது என்ன நோய் என்பது தெரியாமலேயே வீடு திரும்புகிறார்கள்.  ஆனால் மருத்துவம் என்பது ஒரு அறமாகவும் பெரும் சேவையாகவும் திகழ்ந்த காலம் போய் இன்று முற்றிலும் வர்த்தகமயமாகி விட்டதையும் நோயாளர்களை எவ்வாறெல்லாம் அவர்களின் பொருளாதாரத்தை படிப்படியாக   உறிஞ்சி எடுத்து  சக்கையாக பிழியலாம் என்பதை தனியார் மருத்துவ மனைகளும் அங்கு வரும் மருத்துவர்களும் நன்றாகவே கற்று வைத்திருக்கிறார்கள் என்பதும் மிகவும் வெளிப்படையான உண்மை. மருத்துவத்துறையில் மருத்துவர்கள் பிரதான இடத்தை வகிப்பதாலும் அது ஒரு உயிர்காக்கும் சேவை என்பதாலும் அத்துறை முற்றிலும் வியாபார நோக்கிலேயே தொடர்வதை தடுக்க வேண்டிய மாற்று நடவடிக்கைகளையும் அவர்களே எடுத்தாக வேண்டும்.

மருத்துவத்துறையில் மருத்துவர்கள் முக்கியத்துவம் வாய்ந்த இடத்தை வகிப்பது போலவே, சுகாதாரப் பிரிவில் சுகாதாரப் பணியாளர்கள் மிக முக்கிய பணிகளை ஆற்றி வருகிறார்கள். சுகாதாரப் பணியாளர்கள் என்றதும் பலருக்கும் தாதியரே நினைவுக்கு வருகிறார்கள். ஆனால் சுகாதாரத்துறை ஆரோக்கியமாக இயங்குவதற்கு மருத்துவிச்சிமார், சுகாதார கண்காணிப்பாளர்கள், பொது சுகாதார உத்தியோகத்தர்கள், சுத்திகரிப்பாளர்கள் என அனைவருமே தமது பங்களிப்பை வழங்கினால் மட்டுமே மக்கள் சுகாதாரமாகவும் ஆரோக்கியமாகவும் வாழமுடியும். நோய்கள் அதிகரிக்கும்போது மருத்துவர்களின் முக்கியத்துவம் தெரிய வருவதைப் போலவே கொவிட் பெருந்தொற்று இந்நாட்டில் பரவ ஆரம்பித்த பின்னரேயே சுகாதார உத்தியோகத்தர்களின் பணி எவ்வளவு முக்கியமானது என்பதை மக்கள் உணர்ந்து கொண்டார்கள்.

மருத்துவ மனைகளுக்கு சென்றால் தாதிமாரும் கங்காணிமாரும் எவ்வளவு துரிதமாக செயல்பட வேண்டியவர்களாக இருக்கிறார்கள் என்பதை உணர்ந்து கொள்ளலாம்.  இப் பெருந்தொற்று காலத்தில் அவர்கள் தம்மையும் பாதுகாத்துக் கொண்டு, அதற்கான ஆடைகளையும் அணிந்து கொண்டு நெருக்கடியான அல்லது இறுக்கமான சூழல்களிலும் பொறுமையுடன் பணியாற்றி வருவதை அவதானிக்க முடிகிறது. 

முன்னரங்கு சுகாதாரப் பணியாளர்கள்,  சுத்திகரிப்போர் அனைவரும் இவ்வளவு  காலமாக பணியாற்றி வந்திருக்கின்ற போதிலும் அப்பணிகளும் சேவைகளும் எம் கண்களில் படவில்லை, பொருட்படுத்தவும் இல்லை.  இப்பெருந்தொற்று  சில நன்மைகளையும் செய்திருக்கிறது என்றால், அவற்றில் முதன்மையானது, சுகாதாரப் பணியாளர்கள் செய்துவரும்  சேவைகளை மக்களுக்கு கோடிட்டுக் காட்டியிருப்பதைச் சொல்லலாம். பொது சுகாதார உத்தியோகத்தர்கள் ஆற்றும்  பணிகள் என்னவென்று சாதாரண மக்கள் அறிந்திருக்க மாட்டார்கள். உணவகங்கள் தூய்மையை பரிசோதனை செய்வோர், மாமிச விற்பனைக்கு அனுமதி அளிப்பவர்கள் என்றுதான் மேலோட்டமாக அறிந்து வைத்திருப்பார்கள்.  பெருந்தொற்றின் பின்னரே பொது சுகாதார உத்தியோகத்தர்களின் சேவை முக்கியத்துவத்தை பலரும் உணர்ந்து கொண்டார்கள். 
மருத்துவர்கள் கடவுளுக்கு சமமானவர்கள் என்று ஒரேயடியாக உச்சாணிக் கொம்பில் வைப்பது எப்படி தவறான அணுகுமுறையோ அவ்வாறே சுகாதாரப் பணியாளர்களின் பணிகளையும் உதாசீனம் செய்வதும் தவறு என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தான் பதவியேற்ற சில தினங்களிலேயே தமிழகத்தை இரண்டு வாரங்களுக்கு முழுமையாக முடக்கும் தீர்மானத்தை எடுத்தார். இதற்கான காரணங்களை சொல்லும்போது. செவிலியர்கள் உட்பட முன்னரங்கு சுகாதாரப் பணியாளர்கள் தொடர்ச்சியாக இரவு பகலாக பணியாற்றி வந்திருப்பதாகவும் அவர்கள் உண்மையாகவே களைத்துப் போயிருப்பதால் அவர்களுக்கும் ஒரு ஓய்வு, ஒரு தளர்வு அளிக்க வேண்டிய கட்டாயம் இருப்பதாகவும் சொன்னார்.  தமிழகம் முடக்கப்படும்போது சுகாதாரப் பணியாளர்களின் பணிப்பளு கொஞ்சம் குறையும் என்பது இதன்பொருள். இலங்கையில் இச் சுகாதாரப் பணியாளர்கள் முறையாகக் கவனிக்கப்படுகிறார்களா, சரியான கௌரவம் அவர்களுக்கு வழங்கப்படுகிறதா என்றால் இல்லை என்றுதான் கூற வேண்டியிருக்கும். கடந்த வருடம் மாரச் மாதம் முதல் அவர்களது நாளாந்த பணிச்சுமை அதிகரித்திருக்கிறது. இவர்களுடன், சாதாரண மக்களுடன் நேரடியாகப் பழகக்கூடிய கிராம சேவகர்களும் சமுர்த்தி பணியாளர்களும் முன்களப் பணியாளர்களாக உள்ளடக்கப்பட வேண்டும். 

சில தினங்களுக்கு முன்னர் தாதிமார் ஒருநாள் அடையாள பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டிருந்தபோது ஊடகங்கள் இப் புறக்கணிப்பால்  நோயாளர்கள் அடைந்த துன்பங்களையும் துயரங்களையும் வெளிப்படுத்தினரே தவிர சுகாதார பணியாளர்களும் முன்களப் பணியாளர்களும் எதிர்கொண்டிருக்கும் அகப் பிரச்சினைகளை வெளிச்சம் போட்டுக் காட்டவில்லை.

மேலதிக பணிக் கொடுப்பனவு, போதுமான விடுப்பு, விசேட படிகள், முகக்கவசம், கையுறை போன்ற பாதுகாப்பு சாதனங்கள், குடும்பத்தினருக்கு தடுப்பூசி, போக்குவரத்து வசதி உட்பட பல கோரிக்கைகளை அவர்கள்  முன்வைத்துள்ளனர்.  இவற்றில் நியாயமான, முக்கியமான தேவைகள் உடனடியாக நிறைவேற்றி வைக்கப்பட வேண்டியது சுகாதார அமைச்சின் கடமை. எவரெல்லாம் தமது சுய பாதுகாப்பையும் ஒதுக்கி வைத்துவிட்டு சிரமமான சூழ்நிலைகளிலும் மக்களுக்காக பணியாற்றுகிறார்களோ அவர்களை அரவணைத்து, அவர்களின் உடனடித் தேவைகளை நிறைவேற்றி வைப்பது அரசின் கடமை.  இந்த அரவணைப்பு   அவர்களுக்கு உற்சாகத்தைத் தரும். மேலும்  அர்ப்பணிப்புடன் பணியாற்ற உந்தித்தள்ளும்.

இலங்கையில் பாதுகாப்பு படையினருக்கு உயர் கௌரவமும் ஏனைய வசதிகளும் செய்து தரப்படுவதும் முன்னிலைப் படுத்துவதுவும் ஒரு வழக்கமாக பின்பற்றப்பட்டு வருகிறது. நாட்டின் பாதுகாப்பு எவ்வளவு முக்கியமோ அவ்வாறே நாட்டின் ஆரோக்கியமும் முக்கியமானதுதான்.  சுகாதாரம் என்றால் அதன் அடையாளம் மருத்துவர்கள் மட்டுமல்லாது வடிகான்களைச் சுத்தப்படுத்தும், அழுக்குகளை கையாளும் முன்களப் பணியாளர்களும் அடையாளம்தான். அவர்களின் இடைவிடா சேவைகளினால்தான் கொவிட்  19 இந்த அளவுக்காவது கட்டுப்பாட்டில் உள்ளது.  சுகாதாரப் பணியாளர்கள், குறிப்பாக செவிலியர்கள் மற்றும் பொது சுகாதார உத்தியோகத்தர்களின் கள அனுபவம் சார்ந்த கருத்துகளுக்கு செவிமடுக்கப்பட வேண்டும்.  இவர்களின் ஆலோசனைகள் அரசியல் மட்டத்தில் புறந்தள்ளப்பட்டதும்  மூன்றாம் அலை வீரியம் பெற்றதற்குக் காரணமாக அமைந்ததை மறந்துவிடக் கூடாது.

சுகாதார முன்களப் பணியாளர்கள் சார்ந்திருக்கும் தொழிற்சங்கங்கள் எந்தப் பக்கம்; அவற்றின் தலைவர்கள் யார், யார் என்பது கவனத்தில் கொள்ளப்படாது இப்பெருந்தொற்றை விரட்டியடிப்பதற்காக முன்நின்று களத்தில், இராணுவ வீரர்களைப்போலவே போராடும் சுகாதார முன்களப் பணியாளர்களுக்கும் அவர்களின் கோரிக்கைகளின் பேரில் நியாயம் செய்யப்பட வேண்டும்.

Comments