கொவிட் தொற்று ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு மத்தியில் உருவெடுத்த மற்றொரு நெருக்கடி! | தினகரன் வாரமஞ்சரி

கொவிட் தொற்று ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு மத்தியில் உருவெடுத்த மற்றொரு நெருக்கடி!

கொவிட்-19 வைரஸ் தொற்று பரவல் காரணமாக ஏற்பட்டுள்ள பொருளாதார பின்னடவுகளுக்கு மத்தியில், கொழும்பு துறைமுகத்துக்கு அண்மித்த கடற்பரப்பில் தீப்பற்றிக் கொண்ட சிங்கப்பூர் கொடியைக் கொண்ட MV X-Press Pearl சரக்குக் கப்பலினால் ஏற்பட்டுள்ள மதிப்பிட முடியாத சுற்றாடல் பாதிப்பை
சரிசெய்ய வேண்டிய சவால் நிலைக்கு அரசாங்கம் தள்ளப்பட்டுள்ளது.

கடந்த மே மாதம் 25ஆம் திகதி குறித்த கப்பலுக்குள் ஏற்பட்ட வெடிப்பைத் தொடர்ந்து தீப்பற்ற ஆரம்பித்தது. இத்தீயைக் கட்டுப்படுத்துவதற்கும், கப்பல் கடலில் மூழ்குவதைத் தடுப்பதற்கும் கடற்படையினரும், விமானப் படையினரும் கடும் பிரயத்தனங்களை மேற்கொண்டிருந்தனர். இதற்கு இந்திய கரையோரப் பாதுகாப்புப் படையினரும், இந்திய கடற்படையினரும் பூரண ஒத்துழைப்பை வழங்கியிருந்தனர்.

186 மீற்றர் நீளமான இந்தக் கப்பல் 278 தொன் எண்ணெய், 50 தொன் எரிவாயு மற்றும் அழகுசாதனத்துறை உள்ளிட்ட ஏனைய தொழில்துறைகளுக்குப் பயன்படுத்தப்படும் நச்சுத் தன்மை கொண்ட இரசாயனங்களை உள்ளடக்கிய 1,486 கொள்கலன்கள், 25 தொன் நைத்திரிக் அமிலம் ஆகியவற்றைக் கொண்டிருந்தது.

கப்பலில் ஏற்பட்ட தீயினால் இதிலிருந்த நச்சுத் தன்மையான பொருட்கள் கடலில் கலப்பதைத் தவிர்ப்பதற்கு தீயணைப்பில் ஈடுபட்டிருந்த தரப்பினர் கடுமையான பிரயத்தனங்களை மேற்கொண்டிருந்த போதும், தவிர்க்க முடியாத காரணத்தினால் அவை கடலில் கலக்கத் தொடங்கின. தீயினால் கொள்கலன்கள் வெடித்துச் சிதறியமை மற்றும் பல கொள்கலன்கள் நீரில் வீழ்ந்தமையால் அவற்றிலிருந்த இரசாயனங்கள் பல கரையொதுங்கின.

இதனால் கொழும்பின் பல்வேறு பகுதிகளிலுள்ள கரையோரங்கள், நீர்கொழும்பு மற்றும் அதனை அண்டிய கரையோரங்கள் எங்கும் அடித்துச் செல்லப்பட்ட இரசாயனங்களால் அப்பிரதேசம் கறுப்பு நிறமாக மாறியதையும் காணக் கூடியதாகவிருந்தது.
அலைகளால் அடித்துச் செல்லப்பட்டு கரையொதுங்கிய பல்வேறு பொருட்களை தமது வீடுகளுக்கு எடுத்துச் சென்ற பொதுமக்கள் சலரும் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இரசாயனப் பொருட்களால் ஏற்படக் கூடிய ஆபத்துக்களை அறிந்து கொள்ளாத அவர்களின் இந்த செயற்பாடு பல்வேறு தரப்பினராலும் விமர்சிக்கப்பட்டிருந்தது.

இவ்வாறான நிலையில் கரையொதுங்கிய இரசாயனப் பொருட்களையும், தீப்பற்றிய கப்பலிலிருந்து அடித்துச் செல்லப்பட்ட பொருட்களையும் அங்கிருந்து அகற்றி சுத்தப்படுத்துவதற்கு கடல்சார் பாதுகாப்பு அதிகாரசபையினருடன் இணைந்து கடற்படையினரும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இந்த தீவிபத்தினால் ஏற்பட்டுள்ள சுற்றாடல் பாதிப்பு பல்வேறு தலைமுறைகளுக்குத் தொடர்வதற்கான வாய்ப்பு இருப்பதாக சூழலியலாளர்கள் பலரும் சுட்டிக் காட்டியுள்ளனர். மைக்ரோ பிளாஸ்டிக் பயன்பாடு மற்றும் அதிகப்படியான மீன்பிடி போன்றவற்றினால் கடுமையான தொந்தரவுக்கு நாடு உள்ளாகியுள்ள நிலையில், இந்த எதிர்பாராத சம்பவம் நாட்டின் கடல் சூழலுக்கு தாங்க முடியாத அளவு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இது நாட்டில் இடம்பெற்ற மிகவும் மோசமான சுற்றுச்சூழல் பேரழிவு எனக் கருதப்படுகிறது.

இந்தக் கப்பல் இந்நாட்டுக்குள் நுழைவதற்கு யார் அனுமதியளித்தார்கள்? இக்கப்பலில் எந்தளவு இரசாயனப் பொருட்கள் காணப்படுகின்றன? ஏற்கனவே இக்கப்பலில் இரசாயனக் கசிவு ஏற்பட்டிருந்தமை தொடர்பில் அதிகாரிகள்  அறிந்திருந்தனரா?
இவ்வாறான பல்வேறு கேள்விகள் அரசியல்வாதிகளாலும், சுற்றுச்சூழல் நிபுணர்களாலும் முன்வைக்கப்படுகின்றன. இதனை விடவும் இவ்வாறான சம்பவங்களைக் கையாள்வதற்கு இலங்கையிடம் போதியளவு நிபுணத்துவம் இல்லையா அல்லது பாதிப்புக்களைத் தடுப்பதற்குப் போதிய சட்டக் கட்டமைப்புக்கள் இல்லையா என்ற கேள்விகளும் தொடுக்கப்படுகின்றன.

ஏனெனில், இலங்கையின் கடல் சூழலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் முதலாவது கப்பல் விபத்து  இதுவல்ல. இதற்கு முன்னரும் குறிப்பாக கடந்த வருடம் செப்டெம்பர் மாதத்தில் கிழக்கு கடற்பரப்பில் சங்கமான்கண்டி பிரதேசத்தில் MT new diamond என்ற எண்ணெய் கப்பல் தீப்பிடித்தது. இக்கப்பலில் ஏற்பட்ட தீயைக் கட்டுப்படுத்த இலங்கை அரசாங்கத்துக்கு எற்பட்ட செலவுகளுக்காக கப்பலின் உரிமையாளர்கள் 442 மில்லியன் ரூபாவை செலுத்தியிருந்தனர்.

அத்துடன் கடல் சூழலுக்கு ஏற்பட்ட பாதிப்புக்களுக்காக 3.4 பில்லியன் ரூபா செலுத்துமாறு அண்மையில் ஓய்வு பெற்றுச் சென்ற சட்டமா அதிபர் குறித்த கப்பலின் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகளுக்குப் பணித்திருந்தார். இவ்வாறான நிலையில் மற்றுமொரு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இவ்வாறிருக்கையில் MV X-Press Pearl கப்பலில் ஏற்பட்ட தீ விபத்து குறித்த விசாரணைகளை குற்றவியல் விசாரணைத் திணைக்களம் முன்னெடுத்துள்ளது. இவர்கள் கப்பல் கப்டன் மற்றும் பிரதான பொறியியலாளரிடம் வாக்குமூலங்களைப் பதிவுசெய்திருப்பதுடன், தொடர்ச்சியான விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

குறித்த கப்பல் சர்வதேச சரக்குப் போக்குவரத்து விதிகளை மீறியுள்ளதா என்ற ரீதியிலும் விசாரணைகள் நடத்தப்படுகின்றன. கப்பலின் உண்மையான நிலைமையை மறைத்து கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட சிங்கப்பூர் கம்பனி அனுமதி கோரியுள்ளதா என்ற சந்தேகம் இருப்பதாகவும் சுட்டிக் காட்டப்படுகிறது.

இந்த சரக்குக் கப்பல் சம்பந்தப்பட்ட விடயங்கள் ஏற்படுத்தியுள்ள மோசமான சுற்றுச்சூழல் தாக்கம் மற்றும் சமூக ரீதியான தாக்கங்கள் அரசியல் களத்தில் கவனத்தை அதிகமாக ஈர்த்துள்ளது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து மீன்பிடி நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டதால் ஆயிரக்கணக்கான மீனவர்களின் வாழ்வாதாரம் தடைப்பட்டுள்ளது.

பிரச்சினையின் உணர்திறன் பற்றி நன்கு அறிந்த அரசாங்கம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மீனவர்களுக்கு இடைக்கால கொடுப்பனவாக 5,000 ரூபாவை வழங்குவதற்கு முன்வந்துள்ளது. கொவிட்-19 இனால் ஏற்பட்டுள்ள பயணத் தடைகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் 5000 ரூபா கொடுப்பனவுக்கு சமாந்தரமாக மீனவர்களுக்கு இந்தக் கொடுப்பனவு வழங்கப்படுகிறது.

பாதிக்கப்பட்ட பகுதிகளை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட அரசாங்கத்தின் முக்கியஸ்தர்கள் நேரில் சென்று பார்வையிட்டிருந்தனர். அது மாத்திரமன்றி இந்த சம்பவம்பத்தில் அரசியலைப் பற்றிப் பிடித்துக் கொண்டிருக்காமல் சூழலுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பிலிருந்து நாட்டை மீட்பதற்கும் எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாது தடுப்பதற்குமான நடவடிக்கைகளை முன்னெடுப்பதிலும் கவனம் செலுத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.

அதேநேரம், கப்பல் விபத்தை அடிப்படையாகக் கொண்டு பல்வேறு தரப்பினரும் பலவிதமான கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். சிலர் இதனை அரசுக்கு எதிரான பிரசாரமாகப் பயன்படுத்தி வருவதையும் காணக் கூடியதாகவுள்ளது.
இது போன்ற விபத்துச் சம்பவம் இலங்கையில் இடம்பெற்ற முதலாவது சம்பவம் இல்லை என்பதால் எதிர்காலத்திலும் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாது தடுப்பதற்கான வேலைத் திட்டமொன்றை தயாரிக்க வேண்டிய கட்டாயம் அரசாங்கத்துக்கு உள்ளது. மறுபக்கத்தில் சுற்றாடலுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள பாதிப்பை எவ்வாறு இல்லாமல் செய்வது என்பது பாரியதொரு பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.

பி.ஹர்ஷன்

Comments