கொவிட் -19 வைரஸ் வெளிப்பட்டது இயற்கையாகவா, ஆய்வக கசிவினாலா? | தினகரன் வாரமஞ்சரி

கொவிட் -19 வைரஸ் வெளிப்பட்டது இயற்கையாகவா, ஆய்வக கசிவினாலா?

- 2015ம் ஆண்டு ஆவணமொன்றில் 'புதிய மரபணு ஆயுதம்' எனக் குறிப்பிட்டுள்ளனர் 
- கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான ஆதாரங்களை சீனா ஒன்றில் அழித்துவிட்டது அல்லது மறைத்து விட்டது. 

கடவுள் இருக்கிறாரா, இல்லையா? என்ற கேள்விக்கு எப்படி இன்றளவும் உறுதியான ஒரு முடிவு இல்லையோ!. கடவுளால் தூக்க முடியாத ஒரு பாறையை எல்லாம் வல்ல கடவுளினால் படைக்க முடியுமா? என்ற கேள்விக்கு முடிவான ஒரு பதில் எப்படி இல்லையோ, அப்படித்தான் உள்ளது கொரோனா−-19 வைரஸ் எப்படி, எங்கே, எவ்வாறு தோற்றம் பெற்றது என்பதற்கான பதிலும். 

சமீப காலமாக புதிய தொற்று நோய்கள் தோன்றிய இடமாக சீனா அடையாளப்படுத்தப்படுகிறது. பன்றிக்காய்ச்சல், பறவைகள் காய்ச்சல், சார்ஸ் என சொல்லிக் கொண்டே போகலாம். சீனாவின் முக்கிய உணவுகளில் பன்றி மாமிசம் முதலிடம் வகிக்கிறது. அங்கே கோடிக்கணக்கில் பன்றிகள் வளர்க்கப்படுகின்றன. தினமும் இலட்சக்கணக்கில் அறுக்கப்படுகின்றன. மேலும் தவளை, பாம்பு, வௌவால், பூச்சிகள், வண்டுகள் என விதவிதமான விலங்குகள் சீனர்களினால் ருசியான உணவுகளாக உண்ணப்படுகின்றன. 

பன்றிகள் மனிதனுக்கு நெருக்கமானவை. அதாவது உடலியல் ரீதியாக அதனால்தான் மருத்துவ பரிசோதனைகளுக்காக பன்றிகள் பயன்படுத்தப்படுகின்றன. வௌவால்கள் மற்றும் எனைய பறவைகளில் இருக்கக்கூடிய தொற்றும் கிருமிகள் – வைரசுகள் – பன்றியின் உடலுக்குள் சென்று அங்கே மரபணு டீ என் ஏ அல்லது அவற்றின் ஆர் என் ஏ திரிபடைந்து மனித உடலில் வாழக்கூடியதாக தம்மை மாற்றிக் கொள்வதாகவும் பின்னர் பன்றியில் இருந்து மனிதனைத் தொற்றுவதாகவும் ஒரு மருத்துவக் கோட்பாடு உண்டு. முன்னைய சீனத் தொற்றுகளின் தோற்றுவாய்க்கு இவ்வாறான விளக்கமே கொடுக்கப்பட்டது. 

சீனாவின் வூஹான் மாநிலத்தில் முதலில் தோற்றம் பெற்ற கொவிட் -19 வைரஸ் ஏனைய சீனத் தொற்றுகளை விட வெகு வேகமாக உலக நாடுகளில் எல்லாம் பரவி, கடந்த வருடம் ஏறக்குறைய முழு உலகையுமே முடக்க வேண்டியதாயிற்று. நாம் அறிந்த உலக வரலாற்றில் இவ்வாறு ஒரு உலகம் தழுவிய சர்வதேச தொற்றொன்று நிகழவே இல்லை; முழு உலகமும் முடக்கப்படவும் இல்லை. உலகளாவிய ரீதியாக பொருளாதாரச் சரிவு இதற்கு முன்னர் ஏற்பட்டதும் இல்லை, இதில் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயம், முதலாம் உலகப்போரும் இரண்டாம் உலகப்போரும் ஐரோப்பாவிலும் ஆசியாவின் ஒரு பகுதியிலும் நடைபெற்றது. பெரும்பாலான உலக நாடுகள் போரில் கலந்து கொள்ளவில்லை. இப்போதுதான் முதல் தடவையாக முழு உலகமும் பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளது. குறிப்பாக, ஒரு வைரஸ் பலம் பொருந்திய அமெரிக்காவையும் ஐரோப்பிய நாடுகளையும் கிடுகிடுக்கச் செய்தது இதுவே முதல் தடவை.

அமெரிக்காவையும் செல்வந்த ஐரோப்பிய நாடுகளையும் நிலை குலையச் செய்வதற்கு பல திட்டங்கள் அவ்வப்போது வகுக்கப்பட்டதும் பிரயோகிக்கப்பட்டதும் நாம் அறிந்த விஷயங்கள். பல தீவிரவாதத் தாக்குதல்கள் அவ்வப்போது நிகழ்த்தப்பட்டதும் நாம் அறிந்த விஷயங்கள். பல தீவிரவாதத் தாக்குதல்கள் அவ்வப்போது நிகழ்த்தப்பட்டுள்ளன. ஆனால் ஒரு வைரஸ், இந்நாடுகளின் பொருளாதார வளர்ச்சியை நிலை குலையச் செய்திருக்கிறது. கொவிட் -19 பொருந்தொற்றின் விளைவுகளை முழுமையாக மதிப்பிடுவதற்கு இன்னும் காலம் எடுக்கும். உலகெங்கும் பல வளர்ச்சித் திட்டங்களை இத் தொற்று முடக்கிப் போட்டுள்ளது. 

இதனால்தான் இத்தொற்று மனிதனைப் பீடித்தது ஒரு தற்செயல் நிகழ்வா, திட்டமிடப்பட்ட ஒரு விபத்தை அல்லது பிள்ளையார் பிடிக்கப்போய் குரங்கான கதையாக ஏதோவொன்றுக்கு திட்டமிடப்பட அது வேறொன்றாக மாறியதா என்ற கேள்விகள் உலகளாவிய ரீதியாக அரசியல், பொருளாதார, மருத்துவ, விஞ்ஞான மற்றும் புலனாய்வு மட்டங்களில் எழுந்தன. இவை இயல்பானவை.

பன்றிக் காய்ச்சல் பறவைக் காய்ச்சல் போல இதுவும் வழமையான விஷயம்தான் என்று உலகளாவிய ரீதியாக நம்பப்பட்டு வந்தாலும் வேறு விதமான கேள்விகளும் விடைகளுக்காகக் காத்திருக்கவே செய்கின்றன.  

இவ் வைரஸ் தோற்றம் பெற்றது சீனாவின் வூஹானில் ஒரு இறைச்சி விற்பனைக் கூடத்தில். இதை நாம் அறிவோம். அவ்வாறு வெளிப்பட்ட இந்த வைரஸ் பலம்பொருந்திய நாடுகளை எல்லாம் எவ்வளவு தூரம் சீரழிக்க முடியும் என்பதையும் நாம் பார்த்துவிட்டோம். அதனால்தான் இது ஏன் ஒரு உயிரியல் மரபணு ஆயுதமாக இருக்கக்கூடாது என்ற கேள்வி விஞ்ஞான மருத்துவ ஆய்வாளர் மத்தியில் ஏற்பட்டுள்ளது.  

ஏனெனில் உலகின் முன்னணி நாடுகள் தம்மை என்றோ ஒருநாள் நிகழும் என எதிர்பார்க்கப்படுகின்ற மூன்றாம் யுத்தத்துக்குத் தம்மை இரகசியமாகத் தயார் செய்து வருகின்றன. அவ்வாறு ஒரு யுத்தம் மூளுமானால் அது எப்படி நிகழும் என்பதை நாடுகளின் இராணுவ மதியூகிகள் திட்டமிட்டு வியூகங்களை அமைத்தும் வைத்திருக்கிறார்கள். அத்தகைய ஒரு யுத்தத்தில் உயிரியல் ஆயுதங்களின் பயன்பாடும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

சீனாவின் மக்கள் விடுதலை இராணுவத்தின் விஞ்ஞானிகள் கொரோனா வைரஸை ஆயுதமாகப் பயன்படுத்துவது தொடர்பாக 2015ம் ஆண்டு ஆவணமொன்றில் 'புதிய மரபணு ஆயுதம்' எனக் குறிப்பிட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது.  
'இயற்கைக்கு மாறாக தோற்றம் பெற்ற சார்ஸ் மற்றும் மரபணு உயிரியல் ஆயுதமாக மனிதனால் உருவாக்கப்பட்ட புதிய உயிரிகள்' என்ற தலைப்பு கொண்ட சீன பத்திரத்தில் செயற்கையாகத் தயார்படுத்தப்பட்ட மனிதனை பீடிக்கக்கூடிய ஒரு வைரஸ் ஆயுதமாக மாற்றப்பட்டு முன்னெப்பொழுதுமே இல்லாதவாறு பிரயோகிக்கப்பட்டிருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளதாம். அவ்வாறானால் சீன இராணுவம் உயிரியல் ஆயுதங்கள் தொடர்பான ஆய்வுகளில் ஈடுபட்டிருப்பதை இதன்மூலம் அறியமுடிகிறது. இவ்வாறான ஆய்வுகளில் முன்னணி நாடுகளும் ஈடுபட்டுள்ளன; உயிரியல் ஆயுதங்களை வைத்துள்ளன என்பதெல்லாம் புதிய விஷயமும் கிடையாது.  

வூஹான் ஸைக்கோலொஜி நிலையத்தின் ஒரு பகுதியாக இயங்கிவரும் ஒரு பிரிவுதான் வூஹான் தேசிய உயிரியல் பாதுகாப்பு ஆய்வு நிலையம். இன்று மூன்றரை கோடிக்கும் மேற்பட்ட மக்களை காவுகொண்டிருக்கும் கொவிட் 19 வைரசின் பிறப்பிடமாகக் கருதப்படுவது வூஹான் நகரமே என்பது தெரிந்த விஷயம். 

எனவே இந்த ஆய்வகத்தில் இருந்து கொவிட் வைரஸ் கசிந்திருக்கலாம் என்பது பலரது அபிப்பிராயம் மற்றும் சந்தேகம். இது தொடர்பாக இன்னொரு தகவலும் உண்டு. வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் பத்திரிகை புலனாய்வு தகவல்களைச் சுட்டிக் காட்டி வெளியிட்ட செய்தியில், இந்த வூஹான் ஆய்வு கூடத்தைச் சேர்ந்த சில ஆய்வாளர்கள் கொவிட் -19 தொற்று மூலம் ஏற்படக்கூடிய நோய் அறிகுறிகளை ஒத்த அறிகுறிகளுடன் சுகவீனமுற்று ஆஸ்பத்திரியில் 2019 நவம்பர் மாதம் சேர்க்கப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளது. கொவிட் -19 தொற்று வெளியே தெரிய வருவதற்கு ஒரு மாதத்துக்கு முன்னர் இச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. எனினும் வூஹான் ஆய்வு கூடத்தின் சிரேஷ்ட ஆய்வாளரான ஷிஷென்ங்லி, தமது ஆய்வுகூட ஊழியர்கள் எவருக்கும் சார்ஸ் – COV-2 அல்லது சார்ஸ் தொடர்பான வைரஸ்: பாதிப்பு ஏற்படவில்லை என்று கூறியுள்ளார். கொரோனா வைரசை முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் “சீன வைரஸ்” என அழைத்ததை ஷிஷென்ங்லி கண்டித்து மிருந்தார். 

“SARS- COV-2 வைரஸ் எமது ஆய்வு நிலையத்தில் இருந்து கசிந்ததாக அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்திருப்பது உண்மைக்கு மாறானது. இது எமது புலமை சார் பணிகளை மட்டுமின்றி தனிப்பட்ட வாழ்க்கையையும் தலைகீழாக புரட்டிப் போடுவதாக அமைந்துள்ளது. அவர் இதற்காக மன்னிப்பு கோர வேண்டும்” என அவர் கூறியிருந்தார். தற்போது வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் வெளியிட்டிருக்கும் செய்தியும், கொவிட் வைரஸ் மிருங்களிடமிருந்து தான் வெளிப்பட்டிருக்க வேண்டும் என்பதற்காக போதிய ஆதாரங்கள் இல்லாத விஞ்ஞானிகளிடம் இவ் வைரஸ் வூஹான் ஆய்வகத்தில் இருந்து தான் கசிந்திருக்க வேண்டும் என்ற சந்தேகத்தை தோற்றுவித்திருக்கிறது. 

இவ் வைரஸ் எப்படி தோற்றம் பெற்றிருக்க வேண்டும் என்பது தொடர்பான சாத்தியங்கள் பற்றி ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுவரும் சமயத்தில், ஹொங்கொங் பொது சுகாதார பாடசாலை பல்கலைக்கழகத்தின் ஆய்வாளரான வைரோலொஜிஸ்ட் மருத்துவர் லீ – மெஸ் யான், கொவிட் -19 வைரஸ் ஒரு மனித தயாரிப்பு; அது வூஹான் ஆய்வு கூடத்தில் உருவாக்கப்பட்டது என்கிறார். இந்த விடயத்தில் சீன அரசுக்கும் சம்மந்தம் இருக்கிறது. இது தொடர்பாக விஞ்ஞான உலகும் மௌனம் சாதிக்கிறது.

மக்கள் இதை அறிந்து கொள்வதை அவர்கள் விரும்பவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். இப்போது இவர் அமெரிக்காவில் தஞ்சமடைந்துள்ளார். 

இவர் பணியில் இருந்தபோது இந்த உண்மைகளை தனது மேலதிகாரியிடம் (அவர் உலக சுகாதார ஸ்தாபனத்தின் ஆலோசகர்) தெரிவித்ததாகவும் ஆனால் அவர் இது பற்றி பேசாமல் மௌனமாக இருக்கும்படியும் தம்மைக் கேட்டுக் கொண்டதாக தெரிவித்திருக்கின்றார். சீன இராணுவ ஆய்வு பிரிவுகள் 6645 மற்றும் 2 x 641 ஆகிய மோசமான கொரோனா வைரசுகளை திருத்தி புதிய வைரசுகளாக மாற்றியதாகவும் இவர் மேலும் தகவல் தெரிவித்துள்ளார். 

“ஒரு செல்லில் உள்ள முழுமையான மரபணு கட்டமைப்பு என்பது மனிதனின் கட்டை விரல் அடையாளம் போல. இந்த அடிப்படையில் இவற்றை அடையாளம் கண்டு அறிந்து கொள்ளவும் முடியும். எனவே SARS- COV -2 வின் மரபணு கட்டமைப்பில் காணப்படும் இந்த ஆதாரங்களை நாம் எடுத்துக்கொண்டு இந்த வைரஸ் சீனாவில் இருந்து வந்ததுதான் என்பதையும் அதனால் தான் சிந்திக்க முடிந்தது என்பதையும் மக்களுக்குச் சொன்னேன் என்று தெரிவித்துமிருக்கிறார் இவர்.  

வைரஸ் பரவ ஆரம்பித்ததும் இதுதொடர்பான தகவல்களையும் இது எவ்வளவு மோசமானது என்பதையும் சீன அரசு தனது மக்களுக்கும் சர்வதேசத்துக்கும் தெரிவிக்க முன்வரவில்லை. மறைத்துவிட்டது. மேலும் மனிதரில் இருந்து மனிதருக்கு பரவும் என்பதற்கு ஆதாரம் இல்லை என்றும் கூறியது என்றொரு குற்றச்சாட்டும் சீனா மீது வைக்கப்படுகிறது. தற்போது மேற்கு நாடுகளைச் சேர்ந்த ஒரு ஆய்வாளர் குழு ஒரு அறிக்கையைத் தயார் செய்துள்ளது. 

கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான ஆதாரங்களை சீனா ஒன்றில் அழித்துவிட்டது அல்லது மறைத்து விட்டது. இது சர்வதேச வெளிப்படைத்தன்மை மீதான ஒரு தாக்குதல் என்றே கருதப்பட வேண்டும் என்று இவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆய்வாளர் ஷிஷெங்கி சீனாவின் புனான் மாகாண குகையொன்றில் இருந்து பெற்றுக்கொண்ட “ஹோர்ஸ்ஷீ’ வௌவால் எச்சத்தில் ஒரு வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் அந்த வைரஸ் தற்போது 96.2 சதவீதம் SARS- COV-2 வைரசுடன் ஒத்துப்போவதாக காணப்படுவதாகவும் கூறியுள்ளார். 

உலகெங்கும் உள்ள புலனாய்வு அமைப்புகளுக்கு இவ் வைரஸ் இயற்கை வழிகள் மூலம் பீடித்தது அல்லது வூஹான் ஆய்வு கூடத்தில் ஏற்பட்ட கசிவு காரணமாக வெளியேறிய வைரசாகத்தான் இருக்க வேண்டும் என்ற சந்தேகம் இருந்து கொண்டுதான் இருக்கிறது. இந்த அடிப்படையில் உலகெங்குமுள்ள 26 மிகச் சிறந்த விஞ்ஞானிகள் உலக சுகாதார ஸ்தாபனத்திடம் முக்கியமான ஒரு வேண்டுகோளை முன்வைத்துள்ளனர். வூஹான் ஆய்வகத்தின் ஆய்வாளர்கள் மத்தியில் பிரத்தியேக நேர்காணல்களை நடத்த வேண்டும். தொற்று பரவ ஆரம்பித்த காலப்பகுதி நோயாளர்கள் தொடர்பான ஆய்வக பதிவுகள், உயிரியல் மாதிரிகள் என்பனவற்றைப் பெற்று விரிவாகவும் ஆழமாகவும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு உண்மையில் நிகழ்ந்தது என்ன என்பது கண்டறியப்பட வேண்டும் என்பதே உலக சுகாதார ஸ்தாபனத்திடம் அவர்கள் விடுத்திருக்கும் கோரிக்கையாகும்.   

Comments