மாகாணசபை முறைமை தோற்க சி.வி விட்ட தவறுகளே காரணம்! | தினகரன் வாரமஞ்சரி

மாகாணசபை முறைமை தோற்க சி.வி விட்ட தவறுகளே காரணம்!

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும், மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவரும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சிவனேசதுரை சந்திரகாந்தன்

கேள்வி : மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தித் திட்டங்கள் பற்றிக் கூறுவதானால்?

பதில் : இந்நாட்டை ஜனாதிபதி கோட்டாபய பொறுப்பேற்று சில நாட்களிலேயே நாடளாவிய ரீதியில் கொரோனா தொற்றும் ஆரம்பித்து விட்டது. தற்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆயிரம்பேரைத் தாண்டி இந்த கொரோனா தொற்று சென்று கொண்டிருக்கின்றது. இந்த நிைலமை அரசாங்கத்திற்கும், அரசுடன் இணைந்து பணியாற்றுகின்ற எமக்கும் பெரிய சவாலாக இருக்கின்றது.  

எனினும் எமது நாட்டின் பொருளாதார நிலைமைகளைக் கருத்திற்கொண்டு, சுபீட்சத்தின் நோக்கு வேலைத்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் வேலைத் திட்டங்கள் நடைபெறுகின்றன. குறிப்பாக ஒரு லட்சம் வேலைவாய்ப்பு, ஒரு இலட்சம் காணித் துண்டுகளை வழங்குதல், தேசிய பாடசாலைகளை உருவாக்குதல், போன்ற பொதுவான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. அதுபோல் கிராமிய பொருளாதாரத்தை மையமாகக் கொண்ட மட்டக்களப்பு மாவட்டம் என்ற அடிப்படையில் உள்ளூர் உற்பத்திகளை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கில் விவசாய உற்பத்திகளுக்கு முன்னுரிமை வழங்கி வருகின்றோம். நாம் சிந்திப்பனவற்றை விரைவு படுத்திச் செயற்படுத்துவதற்கும் கொவிட் தொற்று தாக்கத்தைச் செலுத்துகின்றது. பாரிய அளவில் எதுவும் நடைபெறவில்லை என்று மக்கள் நினைக்கலாம். இவற்றையெல்லாம் கடந்து இந்த வருட இறுதிக்குள்ளே முடிந்தவரை கொவிட் தடுப்பூசியை மக்களுக்கு ஏற்றி கணிசமான முன்னேற்றத்துடன், அடுத்த ஆண்டிலிருந்து அதிகளவு வேலைத்திட்டங்களை மக்களின் காலடிக்குக் கொண்டு சேர்க்க வேண்டும் என்பது எங்களது எதிர்பார்ப்பாகும். இருந்தாலும் ஒப்பீட்டளவில் இவற்றையெல்லம் ஈடுசெய்யக்கூடிய பொருளாதார முன்னேற்றத்தையும் மக்களுக்கான உணவுத்தட்டுப்பாடு வராமலும், பட்டினி அற்ற சூழலையும் அரசாங்கம் முகாமை செய்து வருகின்றது.  

கேள்வி : செயற்கை உர வகைகளைப் பயன்படுத்தி வந்த விவசாயிகளுக்கு இயற்கை உர வகைகளை பயன்படுத்துமாறு அரசு கூறுவது வரவேற்கத்தக்கது. ஆனாலும் போதியளவு இயற்கை உரங்களை விவசாயிகள் எங்கிருந்து பெற்றுக்கொள்வது அதனையும் அரசு வழங்கவுள்ளதா?

பதில்: விவசாயிகளுக்கு வழங்கப்படும் செயற்கை உரத்தை கொஞ்சம் கொஞ்சமாகக் குறைக்கும் முறையை வகுத்திருந்தார்கள். இருந்தாலும், இரசாயன உர இறக்குமதியாளர்களின் பிரச்சினை, மக்களின் சேமிப்பு, தேவைக்கதிகமான யூரியா பயன்பாடு, போன்ற பல விடயங்கள் தொடர்பிலும், கவனம் செலுத்தப்படுகின்றது. மட்டக்களப்பு மாவட்டத்தில் பெரும்பாலான நிலங்கள் நஞ்சாகிப்போகின்ற நிலமையும் காணப்படுகின்றது. புற்றுநோய், சிறுநீரகப் பிரச்சினை எனப் பல்வேறு நோய்களும் இதனால் ஏற்படுகின்றன. இவ்வாறான நோய்களுக்கு செலவு செய்யும் நிதியையும், வெளிநாடுகளிலிருந்து உரம் இறக்குமதி செய்யும் நிதியையும் ஒப்புநோக்கினால் அதிகளவு நிதி வீண் விரயமாகின்றது  

பிள்ளைகளுக்கு நஞ்சான உணவு கொடுக்கப்படுகின்றது. அதிகமான உற்பத்திகளை ஐரோப்பிய சந்தைகளிலும் விற்பனைசெய்ய முடியாத சூழல் ஏற்பட்டிருக்கின்றது. இவ்வாறான பலவிதமான சூழலைக் கருத்திற்கொண்டுதான் கடுமையான முடிவாக இருந்தாலும்கூட இதனை அமுலாக்குவது எவ்வாறு என்பது தொடர்பில் பல்கலைக்கழக மட்டத்திலும் அரசியல்வாதிகளிடமும், ஆலோசிக்கப்படுகின்றது.  

இந்நிலையில் இயற்கையை நம்பி வாழ்கின்ற விவசாயிகள் இதனை ஏற்றுக் கொள்கின்றார்கள். நஞ்சற்ற உணவை மக்களுக்கு வழங்கவேண்டும் என்ற நோக்குடைய சாதாரண விவசாயிகள் ஏற்றுக் கொள்கின்றார்கள். ஆனால் பெரியளவில் முதலீடு செய்கின்ற கம்பனிகள், மற்றும் 50 முதல்- 100 ஏக்கர் வரையிலாக வேளாண்மை செய்கின்ற விவசாயிகளுக்கும் இது பெரிய பிரச்சினையாக இருக்கின்றது.  

மட்டக்களப்பில் 2 இலட்சம் வயற் காணி உள்ளன. அதில் 70 ஆயிரம் ஏக்கர் குளங்களை நம்பியும், ஏனையவை மழையை நம்பியும் வேளாண்மை செய்கை பண்ணப்படும் வயற்காணியாகும். வருடாந்தம் 3 இலட்சம் மெற்றிக்தொன் நெல் வருடத்திற்கு உற்பத்தி செய்யப்படுகின்றது. இதில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு 50 ஆயிரம் மெற்றிக்தொண் நெல்தான் உணவுக்காகத் தேவைப்படுகின்றது. இனிமேல் உணவுக்காக விவசாயம் செய்வது மேலோங்கலாம்.  

இது ஒரு கடுமையான முடிவாக இருந்தாலும் கடந்த காலங்களில் விவசாயிகள் பாவித்து வந்த நஞ்சான செயற்கை உரங்கள் காரணமாக மண்ணில் படிந்திருக்கின்ற நச்சுத்தன்மை அகலும் வரைக்கும் இது ஒரு கடுமையான சூழலாக இருக்கலாம். விவசாயி ஒருவர் 100 மூடை உறபத்தி செய்திருந்தால் இத்தடையால் அவருக்கு 50 மூடை வீழ்ச்சி ஏற்பட்டிருந்தால் அந்த 50 மூடைக்கும் நட்ட ஈட்டைக் கொடுப்பது என ஜனாதிபதி தெரிவிக்கின்றார். அதேபோல் உள்ளூரிலும் விவசாயிகளுக்கு மானியங்கள் வழங்குதல், கடன் வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல், போன்ற செயற்பாடுகளையும் மேற்கொண்டு விரைவாக திட்டத்தை வகுப்போம் இதனடிப்படையில் வருகின்ற போகத்தில் இது அமுலாகும் என நாம் எதிர்பார்க்கின்றோம்.  

கேள்வி : கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்துவது தொடர்பில் ?

பதில் : கல்முனை வடக்கு பிரதேச செயலத்தை தரமுயர்த்துவது ஒட்டுமொத்த கிழக்குமாகாண தமிழ் மக்களின் பிரச்சினையாக மாறியுள்ளது. இதனை முஸ்லிம் மக்கள் தங்களுடைய இருப்பு சம்பந்தமான பிரச்சினையாகப் பார்க்கிறார்கள். மிக நீண்டகாலமாக இயங்கிக் கொண்டுவரும் இந்த உபபிரதேச செயலகத்தை தரமுயர்த்த வேண்டும் என்பது என்னுடைய நிலைப்பாடு. அதற்கு என்னால் முடிந்த அனைத்து முன்னெடுப்புக்களையும் மேற்கொண்டுள்ளளேன். இதனை மிகக் கவனமாகவும், பக்குவமாகவும் தீர்த்துவைப்பதற்கு எதிர்பார்க்கின்றேன்.  

கேள்வி : களுதாவளை உள்ளிட்ட பல பகுதிகளில் உற்பத்தி செய்யும் மிளகாய் உள்ளிட்ட மேட்டுநிலப் பயிற் செய்கைகளின் விளைபொருட்களுக்குரிய விலைகளை அப்பகுதி விவசாயிகள் தீர்மானிக்க முடியாமல் பெருநட்டத்தை எதிர்கொண்டு வருகின்றார்கள். விளைபொருட்களின் விலைகளை அவர்களே தீர்மானிக்க என்ன செய்யலாம்?

பதில் : உற்பத்தியாளர்கள் உச்ச பயனை அடைய வேண்டும் என்பது என்னுடைய எதிர்பார்ப்பாகும்.   அதிகமான உற்பத்தி வருகின்றபோது அவற்றை எங்கு சேகரிப்பது, எங்கு சந்தைப்படுத்துவது, போன்ற விடயங்கள் தொடர்பிலான திட்டமிடல்கள் இல்லை. இதனை ஏற்றுகொள்ளத்தான் வேண்டும். அதற்குரிய நேரத்தையும் விவசாய அமைப்புக்களும், விவசாயத் திணைக்களமும் ஒதுக்குவதுமில்லை. அதிகமான பிரச்சினைகளுக்கு தீர்வுகாணுவதற்குரிய திட்டமிடல் இல்லாமல் இருக்கின்றது என்ற கவலை எனக்கிருக்கின்றது.  

களுதாவளையில் அமைந்துள்ள விசேட பொருளாதார மத்திய நிலையத்தை திறந்து வைப்பது எளிதான விடயம் அது இயங்குவது எவ்வாறு என்பது பற்றி ஆராயவேண்டும்.  

மட்டக்களப்பு மாவட்டத்தின் பலவீனமான விடயம் என்னவெளில் முந்திரிவிதை ஒரு கிலோ 4 ஆயிரம் ரூபா போகின்றபோது உற்பத்தியாளர்கள் மொத்தவிலையாக ஒருகிலோ விதையை 1000 ரூபாவுக்குத்தான் விற்பனை செய்வது வழக்கமாக இருந்து வருகின்றது. அதுபோல் ரூனா (கிளைவாளை) எனும் மீனைப் பிடித்து 700 ரூபாவுக்கு விற்பனை செய்பவர்களும், அதனை 1800 ரூபாவுக்கு விற்பனை செய்பவர்களும் இருக்கின்றார்கள். அதனை பாதுகாப்பது, பேணுவது, போன்ற விடயங்களிலும், உற்பத்தி துறையிலும் எமது மக்கள் இன்னும் பின்னடைவான நிலையிலதான் இருக்கிறார்கள் .  

மக்களின் விளைபொருட்களுக்கு நியாயமான விலைகளைப் பெற்றுக் கொடுப்பதற்கு துறைசார்ந்த அமைப்புக்களும், திணைக்களங்களும். அரசியல்வாதிகளும், சரியான திட்டமிடல்களை மேற்கொள்ள வேண்டும். இவற்றையெல்லாம் கட்டியெழுப்ப வேண்டிய பொறுப்பு எனக்கும் இருக்கின்றது. அடுத்த வருடம் இவற்றுக்கான கேள்விகளை என்னிடம் கேட்டால் பல முன்னேற்றகரமான பதில்களை வழங்குவேன்.​

கேள்வி: பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலும் பார்க்க முதலமைச்சர் பதவியை வைத்துக் கொண்டு அதிகளவு அபிவிருத்தியை மேற்கொள்ளலாம் என நினைக்கின்றீர்களா?

பதில் : அவ்வாறு கூறமுடியாது. நான் முதலமைச்சராக இருந்த சூழல் வேறு, அப்போது இலங்கையில் யுத்தம் முடிவுக்கு வரவில்லை, வடமாகாணத்தில் யுத்தம் நடைபெற்றுக் கொணடிருந்தது. தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் உயிரோடு இருந்தார். அப்போதைய நிலைப்பாடானது மாகாணசபை முறைமையானது தமிழ் மக்களுக்குப்போதும் என்ற எண்ணத்தை உருவாக்க வேண்டும் என்பதாகும். அதனால் மாகாணசபைத் தேர்தலை நடத்தி கிழக்கில் ஒரு தமிழ் முதலமைச்சரைக் கொண்டுவர வேண்டும், தமிழ் மக்கள் மத்தியில் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டில் அரசாங்கம் அப்போது செயற்பட்டது.  

அப்போது அரசாங்கமும், வெளிநாடுகளும் அதிகளவான நிதியை மாகாணசபைகளுக்கு ஒதுக்கீடு செய்திருந்தன. அதனை என்னால் முடிந்தவரையில் பயன்படுத்தினேன் என்பது உண்மை. போராட்டம் முடிவுற்ற பின்னர் ஏற்பட்ட மாகாணசபைத் தேர்தல், வடமாகாணத்தில் முதலமைச்சராக இருந்த சி.வி.விக்னேஸ்வரன், விட்ட பிழைகள் எல்லாம் மாகாணசபை முறைமை சரியா பிழையா என்பது தொடர்பில் சிந்திக்கும் நிலைமைக்கு மக்களைத் தள்ளியுள்ளது.  என்னைப் பொறுத்தவரைக்கும் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட அரசியலமைப்பு பேரவைக்குக்கும் நாம் கூறியது மக்கள் ஏற்றுக் கொள்ளக்கூடிய மாகாணசபை முறையைக் கொண்டு வரவேண்டுமாக இருந்தால் அதிகளவு நிதி ஒதுக்கீடுகளை மாகாணசபைகளுக்கும், உள்ளூராட்சி மன்றங்களுக்கும் வழங்க வேண்டும் என்பதுதான். உள்ளூர் உற்பத்திகளையும் கொண்டு அதிகளவான அபிவிருத்திகளை மேற்கொள்ள முடியும். அது ஒரு அரசியல் ரீதியான பிரச்சினை.  

தற்போதைய சூழலில் ஒரு எம்.பி ஆக இருந்து கொண்டு எதனைச் செய்கின்றீர்கள் என்ற கேள்வி எழுகின்றது. அரசாங்கத்தின் செயற்பாடுகளை கொவிட் -19 தடுத்தி நிறுதிக் கொண்டிருக்கின்றது. எனினும் தற்போதைய நிலையிலும் நாங்கள் பணிகளை ஆற்றிவருகின்றோம்.  

கேள்வி : எதிர்வரும் கிழக்கு மாகாண சபைத் தேர்திலில் தங்களுடைய கட்சி தனித்தா அல்லது ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியுடன் இணைந்தா போட்டியிடும்?

பதில் : தற்போதைய நிலையில் மாகாணசபைத் தேர்தலை எந்த முறைமையில் நடத்துவது என்ற பிரச்சினை உள்ளது. கிழக்கு மாகாணசபைத் தேர்தல் நடைபெற்றால் அதில் ஆட்சியைக் கைப்பற்றுவது எவ்வாறு என்பது தொடர்பில்தான் நாங்கள் செயற்படுவோம். கிழக்கு மாகாணத்தில் முதலமைச்சராக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பிரதிநிதிதான் வரவேண்டும் என்பது தொடர்பில் நாங்கள் வீயூகங்கள் வகுப்போம்.  

கேள்வி : தற்போதைய நிலையில் தமிழ் மக்களுக்கு உரிமையுடன் இணைந்த அபிவிருத்தியை தங்களால் முன்னகர்த்த முடிகின்றதா?

பதில் : உரிமை அரசியல், அபிவிருத்தி அரசியல் என குழப்பமாக கருத்துக்களை தெரிவிக்க முடியாது, போலியாக தேசியம் என்று பேசி எதனைச் சாதிக்க முடியும். இப்போது இலங்கையிலே அரசியல் செய்கின்ற தமிழ் அரசியல்வாதிகளின் கொள்கை ரீதியான முடிவு என்ன?  

மிகத் தெளிவாகச் சொல்கின்றோம் இங்கு தனி இராச்சியம் சாத்தியமில்லை. இப்போது வடக்கு கிழக்கு இணைப்பும் சாத்தியமில்லை. அரசியலமைப்பிலிருக்கின்ற 13 வது சீர்திருத்தத்தைத்தான் நாங்கள் ஏற்றுக் கொண்டிருக்கின்றோம். அதிலுள்ள அதிகாரம் போதாது, காணி, பொலிஸ் அதிகாரத்தைத் தாருங்கள் என கேட்பது ஒரு விடயமாகும். நிதியும், காணி, பொலிஸ் அதிகாரமும் கிடைக்கப்பெற்றால் மிகப்பெரிய ஆளுமை மிக்க நிறுவனமாக இதனை மாற்றியமைக்கலாம் என நான் நம்புகின்றேன். ஆகையால் இவற்றைப் பெறுவதற்குப் போராடிக் கொண்டு மக்களை மேம்படுத்துவதற்கு எவ்வாறு இந்த அரசாங்கத்தைப் பயன்படுத்த முடியும் என்பதில் நாம் செயற்படுகின்றோம்.  
இருக்கின்ற மக்களை காப்பாற்றிக் கொண்டுதான் நாங்கள் அதிகாரப் பகிர்வுக்குச் செல்லவேண்டுமே தவிர மக்கள் மாவட்டத்தைவிட்டு வெளிப்பிரதேசங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் சென்றுவிட்டால் யாருக்கு அந்த அதிகாரம் என்ற கேள்வி எழும். மக்களுக்குத் தேவையான உரிமையும், அபிவிருத்திகளும், தானாகக் கிடைப்பதற்கு நாம் மக்கள் இயக்கமாக போராட வேண்டுமே தவிர இன்னமும் மக்களை முட்டி மோதி, அடிபட வைக்கக்கூடாது.  

கேள்வி : நீங்கள் கிழக்கில் முதலமைச்சராக இருந்த காலத்தில் இருந்த அரசியல் தலைவர்கள்தான் இலங்கையில் தற்போதும் உள்ளார்கள், இந்நிலையில் தங்களுடைய கட்சியைச் சேர்ந்த ஒருவர் கிழக்கில் மீண்டும் முதலமைச்சராக வரும் சந்தர்ப்பத்தில் மாகாண சபைக்கு காணி பொலிஸ் அதிகாரத்தை அந்த அரசியல் தலைவர்கள் தருவார்கள் என நினைக்கின்றீர்களா?

பதில் : அன்றிருந்தவர்கள், தற்போதும் இருக்கின்றார்கள் அவர்கள் தருவார்கள் என்பதல்ல. மக்களுக்குத் தேவையான காணியை மக்களுக்கு வழங்குவதுதான் முறைமை அதனை மத்திய அரசாங்கமும், மாகாண அரசாங்கமும் பேசித்தீர்க்க வேண்டும். அரசாங்கத்தைப் பயன்படுத்தி அதிகூடிய சேவைகளை மக்களுக்குச் செய்யவேண்டும். எதுவித முன்னெடுப்புகளையும் மேற்கொள்ளாமல் தரவில்லை, தரமாட்டார்கள், என வெறுமனே பேசிக் கொண்டிருப்பதனால் எதுவும் நடக்காது.  

கேள்வி : நீங்கள் முதலமைச்சராக இருந்த காலத்திலும் பார்க்க சிறைச்சாலையில் இருந்த காலத்தில் அதிகளவு மக்கள் ஆதரவுகளையும் அரசியல் அனுபவத்தையும் பெற்றுக் கொண்டுள்ளதாக தெரிவிக்கிப்படுகின்றதே?

பதில் : அனுபவம் என்பது தானாக அடிபட்டு வரும் பட்டறிவாகும். நான் அரசியல் பழிவாங்கலுக்காக அடைக்கப்பட்டேன் என்பதை காட்டவேண்டியிருந்தது. அதற்கு இயற்கையும் கடவுளும் உதவி செய்தார்கள்.  

கேள்வி : நீங்கள் சிறையிலிருந்து வெளியேறியதைப்போன்று சிறையில் விசாரணையின்றி இருக்கின்ற தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் உங்களுடைய செயற்பாடு எவ்வாறு அமைந்துள்ளது?

பதில் : கைதிகள் விடயம் ஒரு பெரிய பிரச்சினை, தமிழ் தேசியக்கூட்டமைப்புடனும், கஜேந்திரகுமாரின் கட்சி உறுப்பினர்களுடனும் பேசி இருந்தோம், குரலற்றவர்களின் குரல் எனும் அமைப்பும் எமக்கு கடிதங்களை அனுப்பியிருந்தது. அதிகூடிய காலம் சிறைச்சாலையிலே கழிப்பதென்பது வேதனையான விடயம் அதனை நானும் உணர்ந்திருக்கின்றேன். 12 ஆயிரம் பேருக்கு மன்னிப்பு வழங்கிய அரசாங்கத்திற்கு ஏன் 100 பேருக்கு மன்னிப்பு வழங்க முடியாது. மட்டக்களப்பு சிறைச்சாலையிலே பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் 10 கைதிகள் இருக்கின்றார்கள்.  

கேள்வி : அபிவிருத்தித் திட்டங்களுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு வழங்குவதாக தெரிவிக்கின்றார்கள். உங்களுடைய அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கு அவர்களுடைய ஒத்துழைப்பு எவ்வாறு அமைகின்றது?

பதில் : தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கொள்கை உண்மையில் தோற்றுப் போயிருக்கின்றது. அவர்கள் ஆரம்பதிலிருந்து பெடரல் பார்ட்டி என்றார்கள், ஸ்ரீ சட்டம் வந்தபோது வாகனங்களில் வெலிகந்தைப் பகுதியிலிருந்து ஸ்ரீ அடையாளத்தைப் பொருத்துவது, மட்டக்களப்புக்குள் வந்தால் ஸ்ரீ யைக் கழற்றி விட்டு அ எழுத்தைப் பொருத்திக் கொண்டு செல்வது இவ்வாறு போலி நாடகம் போட்ட கூட்டம்தான் அது.   பாலம், மின்சாரம், வீதி என்பன வேண்டாம் என சொல்லிக் கொண்டு வந்துவிட்டு கம்பரெலியவுக்குத் துணைபோனார்கள். நடந்து முடிந்த தேர்தலில் பிள்ளையானையும், வியாழேந்திரனையும் மக்கள் வெற்றிபெற வைத்துள்ளார்கள் என்பதற்காக தாங்கள் அபிவிருத்திக்கு ஒத்துழைப்பதாகத் தெரிவித்தார்கள். வடக்கு கிழக்கு இணைப்புக்கு சாத்தியமே இல்லை என சுமந்திரன் எம்.பி பேசுகின்ற அளவிற்கு நி​ைலமை வந்துள்ளது. எனவே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கொள்கைகளும், கோட்பாடுகளும் தோற்றுப்போயிருக்கின்றன. அவர்கள் அனைவரும் விழுகின்ற பக்கத்திற்குத்தான் குறி சுடுபவர்களாக உள்ளார்கள். இது மக்கள் மத்தியில் எடுபடாது. 

நேர்கண்டவர்:
வ.சக்திவேல்

Comments