கசப்பும் இனிப்பும் | தினகரன் வாரமஞ்சரி

கசப்பும் இனிப்பும்

கசப்பு-1

கடந்த வாரத்தில் இழப்புக்கு மேல் இழப்பு துயரத்திற்கு மேல் துயரம்.  

* ஆயிரத்திலொரு மனிதராக, இன, மத பேதங்களைக் கடந்தவராக, தென்னிலங்கையில் வாழ்ந்து காட்டிய தேரர் (பௌத்த பிக்கு) ஒருவரை கொரோனா கொண்டு போனது.  

* பல மாதங்களாக படுக்கையிலேயே துவண்டு நாட்களை எண்ணிக் கொண்டிருந்த ஒரு படைப்பிலக்கிய ஆளுமை மு.பஷீர் பிரியாவிடை பெற்றது.  

* அவரைப் போலவே, படுக்கையிலேயே கடைசிக் காலங்களைக் கழித்த ஸீ.பீ.எம். காஸிம் என்கிற வானொலி முஸ்லிம் நிகழ்ச்சி நாடங்களின் சிம்மக்குரலோனின் ஓசை நின்றது.  

* மலேசியாவைத் தாயகமாகக் கொண்ட “றம்புட்டான்” பழ உற்பத்தியால் பிரபலமான மள்வானையின் முகங்களுள் ஒருவரான எம்.எச். ஏ ஷஹீத் ஹாஜியார் நிரந்தர ஓய்வுறக்கம் பெற்றது.   ஆக, இழப்புகள் நான்கு.  

இந்தப் பத்தி எழுத்தின் பக்கத்தில், பஷீர் – காஸிம் என்ற இரு ஆளுமைகளைப் பற்றியும் ஏற்கனவே கசப்பாகவும் இனிப்பாகவும் பேனா சுவைக்கக் கொடுத்து விட்டது. இங்கே சில வரிகளையே வழங்குகிறேன்.  

மலையாள கேரளத்து வைக்கம் என்ற ஊர் ஒரு பஷீர் என்ற படைப்பிலக்கிய மாமனிதனைப் பெற்றெடுத்தது போல் இங்கேயும் மினுவாங்கொடை கல்லொழுவையும் அதே பெயரில் நமக்கு ஒருவரைத் தந்தது.  

கலைஞர் பெருமகனார் காஸிம் கொழும்பு வாசி. என் இளவயதுக் கலைத்துறை சகா. அரை நூற்றாண்டுக்கு முன்னே வானொலி, முஸ்லிம் நிகழ்ச்சியில் ஒரு முன்னணிக் கலைஞனாகத் திகழ்ந்தவர். அவரைத் ‘தவமாய் தவமிருந்து’ தான் முஸ்லிம் நிகழ்ச்சி நாடகத் துறை பெற்று வரலாறு படைத்தது என்று தைரியமாகப் பதிவேன்.  

மற்றும் இருவரில், கௌரவத்திற்குரிய பத்தேகம சமித்த தேரர், இலங்கை நாடாளுமன்ற சரித்திரத்திலேயே முதன் முதலாக அந்த மக்கள் மன்றத்தில், காலடி வைத்தவர். (1994)  
தென்னிலங்கையரான அவர், இன, மத, பேதங்களைக் கடந்த ஒப்பற்ற புனிதராக அப்பகுதியில் வாழ்ந்தது ஓர் அதிசயம். அற்புதம்!  

சிறந்த கல்விமானாகத் திகழ்ந்தவர், தமிழிலும் உரையாடுவார். தமிழ்ச் சமூகம் நியாயமான நீதியான தீர்வொன்றைப் பெற்றுச் சிறப்பாக வாழ்வாங்கு வாழக் கனாக் கண்டவர்.  

நம்மத்தியில் இப்பொழுது ஊடகத்துறையில் சிறந்ததொரு இடத்தில் உச்சத்தில் உள்ள, இனியவர் ஆர். சிவராஜா, அன்ன’வரை நேர்கண்ட சமயம் உதிர்த்த உயர்மிகு கருத்து உங்கள் செவிகளுக்கும்.  

*” தமிழ் மக்களை சிறுபான்மை இனம் எனச் சொல்லல் தவறு. அனைவரும் இந் நாட்டு மக்களே! எதை வைத்து சிறுபான்மை, பெரும்பான்மை? இந்த வரையறை சரியே அன்று!”  

மெய்சிலிர்த்துப் போகிறது இந்த வார்த்தைகளைக் கேட்டு  அன்னாருக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்.  

மள்வானை ஸஹீத் ஹாஜியார் ஒரு பிரபல கலை – இலக்கியவாதி அல்லர்.  

கசப்பு-2

இருப்பினும், 2013ல் “மள்வானை முஸ்லிம்களின் ஆரம்பகால வரலாறு” என ஓர் அரிய ஆய்வைச் செய்து நூலாக்கி தனித்துவப் புகழடைந்தவர். தொடர்ந்து “மனுக்குலத்தின் தாயகம் இலங்கை” என்றும் பரபரப்பான தலைப்பில் ஓர் ஆய்வு நூலை அளித்தும் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டவர்.  

அவர் ஒரு கல்வியாளர், சமூக சேவகர், வணிகர், அத்தோடு அரசியல்வாதி அதுவும் கலாநிதி பதியுத்தீன் மஹ்மூத் போஷித்த ‘இஸ்லாமிய சோசலிஸ முன்னணி’யின் ஒரு முக்கிய தூண்.  

அன்னார் இறைவனது அழைப்பை மேற்கொண்டாலும் மள்வானையின் ஒரு பகுதியில் துலங்கும் “சஹீத் ஹாஜியார் மாவத்தை” என்ற பெயர்ப்பலகை மக்களுடன் மக்களாய் வாழ்கிறார் என்பதை நினைவுக்குக் கொண்டுவரும்.  

இன்றைய உலகத்தினருக்கு உணவு, உடைக்கு அடுத்து அத்தியாவசியமாகி விட்ட ‘முகநூல்’ (ஃபேஸ்-புக்), ... (வாட்ஸ் – அப்) இரண்டும் என் பார்வையில் சில சமயங்களில் ‘நல்ல சாத்தான்கள்’ வேறு நேரங்களில் ‘கெட்ட சாத்தான்கள்’!  
இது என்னளவில் அனுபவத்தில் கண்டது.  

இந்த இரண்டு சாத்தான்களுடன் உறவாடும் பல்லாயிரக்கணக்காக தமிழ் நாட்டவரின் மூவரது பதிவுகள் கசப்பாக உங்கள் சிந்தனைக்கு...  

குளச்சல் அஸீம் என்பவர், நாகர்கோவிலிலிருந்து பதிவிடுகிறார்.  

“ பேஸ்புக்ல மெசஞ்சரினால் தொல்லை எனக்கு.  

“வாட்ஸ் – அப்பில், ஃபோர்வர்ட் மெசேஜ் எனும் தொல்லை.  

“ஒரு ஆத்திர அவசரத்திற்கு, வேலை சார்ந்த தகவல் பரிமாற்றத்திற்கு வாட்ஸ்– அப் உபயோகிக்க முடியாத அளவுக்கு அன்புத் தொல்லைகள்.  

இனிப்பு

“உங்களுக்கு ஒரு மெசேஜ் யாரோ ஒருவரால் வருகிறது என்றால், அதே தகவல் ஏற்கனவே பலருக்கும் (உங்கள் முகநூல் நண்பர்களுக்கு) சென்று சேர்ந்திருக்கும் என்று நினையுங்கள்.  

“வரக்கூடிய எல்லாத் தகவல்களையும் எவருக்காவது அனுப்பி சமூக வலைத் தளப் பாவி ஆகாதீர்கள்”  

நூஹூ மஹ்லரி என்பவர், குமரி மாவட்டம் குளச்சலிலிருந்து குரல்:  

“சில சமயம் நாம் பத்து குரூப்பில இருப்போம். நமது நண்பரும் இருப்பார். அந்த நண்பர்
தனக்கு வரும் செய்தியை அந்தப் பத்து குரூப்புக்கும் அனுப்புவார். நம்ம பொறுமையை அது ரொம்ப சோதிக்கும்.கோட்டாரிலிருந்து ரகுமான் கான் சொல்வது  வட்சப்பல எந்த மெசேஜ் வந்தாலும் அதன் உண்மை தன்மையை உறுதிப்படுத்தாம நான் மத்தவங்களுக்கு அனுப்பினது இல்லே. தலையும் இல்லாம வாலும் இல்லாம உதவி கேட்டு சில வீடியோ வரும். உடனேயே டிலீட் தான்!”  

இசை வித்தகர்களாக இன்றைக்கு உயரத்தில் இருப்பவர்கள் இளையராஜாவும், ரஹ்மானும்.  

இவர்களது வாரிசுகளும் இசைக் கலைஞர்களே.  

இளையராஜாவின் மகன் யுவன் சங்கர் ராஜா இப்போது “அப்துல் ஹாலிக்” என்றும் அவர் குடும்பத்தில் அழைக்கப்படுகிறார். துணைவியார் முஸ்லிம்.  

ரஹ்மானின் மகனின் பெயர் ஏ.ஆர். அமீன்.  

இந்த இரண்டு பேரும் சமீபத்தில் இசை மூலம் செய்துள்ள ஒரு பங்களிப்பு, இஸ்லாமிய மார்க்கத்தின் இறுதித் தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களது வாழ்வின் ஒரு நிகழ்வை வைத்து பாடல் பதிவு!  

மக்கா நகரிலிருந்து மதீனா நகரில் புகலிடம் கேட்டு புறப்பட்டுப் போய்ச் சேருகிறார்கள் நபி (ஸல்).  

அங்கே பலத்த வரவேற்பு. மதீனத்து மண்ணின் மைந்தர்கள் அன்னாரை அகமும் முகமும் மலர வரவேற்று வாழ்விடம் வழங்குகிறார்கள்.  

அப்போது அவர்கள் பாடிய வரவேற்புப் பாடலை இந்த இசை வாரிசுகள் தமிழுக்குக் கொண்டு வந்திருக்கிறார்கள்.  

பாடல் விற்பனை மூலம் கிடைக்கக் கூடிய வருவாய், வசதி குறைந்த எளிய மக்களுக்கு நன்கொடையாக வழங்கப்படுமாம்.  

இரண்டையும் அறியும் பொழுது இனிப்புச் சுவை அதிகரிக்கிறது. பாராட்டுகள் யுவன் சங்கர் ஆகிய அப்துல் ஹாலிக்குக்கும், அமீன் வாலிபருக்கும்.
 

Comments