உலக யுத்த நியதிகளுக்கு அமையவே பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளை முன்னெடுத்தோம் | தினகரன் வாரமஞ்சரி

உலக யுத்த நியதிகளுக்கு அமையவே பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளை முன்னெடுத்தோம்

- இலங்கை விமானப் படையின் 18ஆவது விமானப் படைத் தளபதியான எயார் மார்ஷல் சுதர்ஷன பத்திரன உடனான நேர்காணல்

  • பெயர்: எயார் மார்ஷல் சுதர்ஷன பத்திரன
  • பதவி : 18ஆவது விமானப் படைத் தளபதி
  • பிறந்த திகதி: 1965 டிசம்பர் 30
  • பாடசாலை: தர்மராஜ கல்லூரி, கண்டி
  • படையில் இணைவு: 1985 ஜூலை 2 கெடெட்  அதிகாரியாக
  • ஆரம்ப பயிற்சிகள்: இலங்கை, பாகிஸ்தான் 1987 ஜூலை 02 கொமிஷன் அதிகாரியாக
  • விமானியாக 3.500 மணித்தியாலங்கள் செலுத்தியுள்ளார்.
  • விமானங்கள்: கபிர், எப் - 7 உட்பட 10 வகையான தாக்குதல் விமானங்கள்

விமானப் படை பற்றிய சிறிய அறிமுகத்தை கூற முடியுமா?

1951 மார்ச் மாதம் 02ஆம் திகதி ‘ரோயல் சிலோன் எயார்போஸ்’ என உருவாக்கப்பட்ட இலங்கையின் விமானப் படை இவ்வாண்டு அதன் 70ஆவது ஆண்டு நிறைவை வெகுவிமர்சையாக கொண்டாடியது.  தாய் நாட்டையும் அதன் வான் பரப்பையும் நாட்டு மக்களையும் பாதுகாக்கும் பொருட்டு தனது அர்ப்பணிப்பு மிக்க சேவையை சிறப்பாக முன்னெடுத்து வரும் பலமான படைகளில் ஒன்றாகும்.

1951ஆம் ஆண்டு ரோயல் சிலோன் எயார்போஸிடமிருந்து பெறப்பட்ட  விமானங்கள் மற்றும் உபகரணங்களுடன் ஸ்தாபிக்கப்பட்ட இலங்கை விமானப் படை தற்பொழுது தாக்குதல், பயணிகள் விமானங்கள், போரில் ஈடுபடுத்தக் கூடிய, பயணிகளை ஏற்றிச் செல்லக்கூடிய ஹெலிகொப்டர்கள், ஆளில்லா விமானங்கள் போன்றவற்றுடன், 35ஆயிரத்திற்கும் அதிகமான மனிதவளத்தைக் கொண்டதாக தற்பொழுது பலத்துடன் செயற்பட்டு வருகின்றது.  

யுத்தத்தின் போது வழங்கிய தலைமைத்துவத்திற்கும் தற்போதைய தலைமைத்துவத்திற்கும் நீங்கள் காணும் வித்தியாசம் என்ன?

மூன்று தசாப்தங்களாக மனிதாபிமான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. அந்த காலத்தில் வடக்கையும் தெற்கையும் இணைத்து வடக்கிற்கும் தெற்கிற்கும் பாலமாக செயற்பட்டவர்கள் நாம் என்ற வகையில் பெருமையடைகின்றோம்.

பயங்கரவாதிகள், அப்பாவி பொது மக்களை வடக்கில் பலாத்காரமாக தடுத்து வைத்திருந்த போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்ய சகல சந்தர்ப்பங்களிலும் சவால்களுக்கும் எதிரிகளின் மிசைல் தாக்குதல்களுக்கு  மத்தியில் நாம் மக்களுக்காக செயற்பட்டோம்.

அதேசமயம் தாய் நாட்டுக்கும் மக்களுக்கும் இடையூறாக செயற்பட்ட பயங்கரவாதிகள் மீதும் அவர்களின் அடையாளங் காணப்பட்ட இலக்குகள் மீதும் தாக்குதல் நடத்தி மக்களை பாதுகாத்தோம். உலக யுத்த நியதிகளுக்கு அமையவே நாம் பயங்கரவாதத்திற்கு எதிரான எமது நடவடிக்கைகளை முன்னெடுத்தோம் என்பதை இன்று சர்வதேசம் கூட ஏற்றுக் கொண்டுள்ளது. ஐ.நா அமைதி காக்கும் பணியில் ஈடுபட விமானப்படைக்கு அனுமதி வழங்கியுள்ளமை எமக்கான சிறந்த அங்கீகாரம் என்பதை பொறுப்புடன் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.

உலகிலேயே தோற்கடிக்க முடியாது என்று கூறப்பட்ட கொடூர பயங்கரவாதத்தை தோற்கடிக்க அன்று தலைமைத்துவத்தை வழங்கி அதில் வெற்றிபெற்றோம். இன்று திறமையான ஜனாதிபதியின் கீழ்' விமானப் படைக்கு தலைமைத்துவத்தை வழங்குகின்றேன்.

நாட்டின் பாதுகாப்பு போன்று அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கான விமானப் படையின் பங்களிப்புக்கள் என்ன ?

விமானப் படைக்கு பிரதான கடமைகள் பல உள்ளன. இவற்றில் நாட்டின் தேசிய பாதுகாப்பும் வான் பரப்பின் பாதுகாப்பும் எமது பிரதான கடமையாகும். இரண்டாவதாக அவசர சந்தர்ப்பங்களில் ஏனைய படையினருக்கு உதவி ஒத்துழைப்பு வழங்குதல், மூன்றாவதாக சட்டமும் ஒழுங்கும் பாதிப்படையும் சந்தர்ப்பத்தில் சிவில் நிர்வாகத்தை மீண்டும் கொண்டுவர பொலிஸாருடன் இணைந்து செயற்படல், நான்காவதாக நாட்டின் எந்தவொரு சந்தர்ப்பத்தின் போதோ அல்லது அனர்த்தங்களின் போதோ நாட்டின் சொத்துக்களையும் பொது மக்களினதும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த செயற்படல், நாட்டில் ஆட்சி பீடத்திலுள்ள அரசாங்கத்தினால் முன்மொழியப்படும் தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கான தேசிய அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கு நேரடியாக பங்களிப்பு செய்தல் என்பதாகும்.

விமானப் படையினால் எவ்வாறான சமூக செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன ?

வடக்கு, கிழக்கு உட்பட நாட்டின் பல்வேறு பகுதியிலுள்ள எமது 24 முகாம்களின் ஊடாக மக்கள் நலன் சார்ந்த பல்வேறு வேலைத்திட்டங்களை அவ்வப்போது முன்னெடுத்து வருகின்றோம்.

இதுதவிர யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மட்டக்களப்பு, திருகோணமலை, வீரவில, கட்டுநாயக்க உட்பட பல பிரதேசங்களில் நாங்கள் அன்றிலிருந்து இன்று வரை விமானப் படை தினத்தின் போதும் முன்னெடுக்கும் அபிவிருத்தித் திட்டங்களையும் உதாரணமாக கூறலாம்.

பாடசாலைகள், வைத்தியசாலைகள், சகல மத ஸ்தலங்கள் அபிவிருத்தி செய்தும் புனரமைத்தும் கொடுத்துள்ளோம். இதுதவிர அரசாங்கம் அவ்வப்போது வழங்கும் விசேட வேலைத்திட்டங்களையும் முன்னெடுத்துள்ளோம்.  இதேவேளை, ஜனாதிபதியால் எமக்கு நேரடியாக வழங்கப்பட்ட கெப்பித்திகொல்லாவ பிரதேசத்திலுள்ள கனுகஸ்வெவ கிராமத்தில் அபிவிருத்தி பணிகள் தற்பொழுது கட்டங் கட்டமாக இடம்பெற்று வருகின்ற நிலையில் இதன் முதற்கட்ட பணிகள் கடந்த மார்ச் மாதம் முதல் வாரத்தில் நிறைவு செய்யப்பட்டு கையளிக்கப்பட்டன.

கொவிட் நிலமையை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் தங்களது பங்களிப்பு என்ன?

நாடளாவிய ரீதியில் சுகாதார துறையினருடன் இணைந்து பலவேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றோம். நாட்டிலுள்ள வைத்தியசாலைகளின் புனரமைப்பு கொவிட் நோயாளர்களுக்கு தேவையான வாட்கள் நிர்மாணித்தல், விமான நிலையங்கள், புகையிரத நிலையங்கள், அமைச்சுக்கள், ஊடக நிறுவனங்கள் போன்ற பொது இடங்களில் தொற்று நீக்கும் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அத்துடன் கொவிட் நிலையங்கள், தனிமைப்படுத்தல் நிலையங்கள் முகாமை செய்யப்படுகின்றன. இன, மத பேதமின்றி சகலருக்கும் சேவை வழங்கப்படுகின்றன்.

விமானப் படையின் எதிர்கால முன்னேற்றத்திற்கான தங்களது இலக்கு என்ன ?

நான் பொறுப்பேற்றுக் கொண்ட போது எமது விமான பலம் 70 வீதம் வீழ்ச்சியடைந்தே காணப்பட்டது. அதனால் தான் இலக்கு ஒன்றை நோக்கி பயணிக்க வேண்டும் என்று தீர்மானித்தேன். அந்த அடிப்படையில் பின்வரும் நான்கு பிரதான இலக்குகளை அடிப்படையாகக் கொண்டு எனது செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றேன். அவற்றில் சிலவற்றில் வெற்றியை நோக்கி பயணிக்கின்றேன்.

1. தற்போதுள்ள விமான பலத்தை மேலும் அதிகரிப்பதே எனது பிரதான இலக்காகும்,இதற்கமைய பழுதடைந்த விமானங்களை பழுதுபார்த்தல் மற்றும் புதுப்பித்தல் நடவடிக்கைகளை மேற்கொள்ளல்.

2.  25 வீதமான கடற்பரப்பு எமது பொறுப்பில் உள்ளது. எமது பொருளாதார பலம் கடல்சார் நடவடிக்கையிலும் கடல் வளங்களிலுமே உள்ளன. எனவே, கடற்படையுடன் இணைந்து கடல்சார் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளை அதிகரிக்க வேண்டும்.

3. உலகலாவிய ரீதியில் காணப்படும் சைபர் தாக்குதலுக்கு முகம் கொடுக்கும் வகையில் துறைசார் தொழில்நுட்ப துறையை மேம்படுத்தல்.

4. மக்களின் வரிப்பணத்தில் இயங்கும் படை என்றவகையில் எந்தவொரு அனர்த்தங்களின் போதும் அதிலிருந்து நாட்டையும், வளங்களையும் மக்களையும் பாதுகாக்கும் வகையிலான சவால்களுக்கு முகம் கொடுக்க தயார் நிலையில் இருத்தல் என்பனவாகும்.

உங்களது இலக்கின் தற்போதைய அடைவு எவ்வாறு உள்ளது?

நான்  பொறுப்பேற்று ஆறு மாதங்களே கடந்துள்ள நிலையில் எனது இலக்கில் பல்வேறு  முன்னேற்றங்களை கண்டுள்ளேன். எம்மிடமுள்ள தாக்குதல் விமானங்கள், பயணிகள்  விமானங்கள் மற்றும் ஹெலிகொப்டர்களின் பலத்தை மேம்படுத்துவதற்கு தேவையான  அடித்தாளம் இடப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக் ஷ, பாதுகாப்புச்  செயலாளர் ஜெனரல் கமல் குணரட்ன ஆகியோரின் வழிகாட்டல் மற்றும் அனுமதியுடன்  இதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கடல்சார் பாதுகாப்பு, கண்காணிப்பு நடவடிக்கைகள் எவ்வாறு முன்னெடுக்கப்படுகின்றன. ?

கடல்சார்  பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளின் ஓர் அங்கமாக இலங்கை  கடற்படையினருடன் இணைந்து கூட்டு பயிற்சிகளை மேற்கொண்டுள்ளோம். இதற்கு  மேலதிகமாக விமானப் படையின் இலக்கம் 3 கடல்சார் பாதுகாப்பு பிரிவிற்கு  தேவையான விமானங்களையும் விமானிகளையும் வழங்கி தற்போது திட்டமிட்ட  அடிப்படையிலும் முறையாகவும் கடல்சார் கண்காணிப்பு பணிகளை வெற்றிகரமாக  முன்னெடுத்து வருகின்றோம். இந்த செயற்பாடுகளை விஸ்தரிக்கும் பொருட்டு  வெளிநாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம்.

வெளிநாட்டு இராஜதந்திர உறவு எவ்வாறு உள்ளது.?

நாங்கள்  அணிசேரா நாடு என்ற வகையில் இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், அமெரிக்கா,  சீனா, ரஷ்யா, ஜப்பான், அவுஸ்திரேலியா உட்பட உலகிலுள்ள அதிகமான நாடுகளுடன்  சிறந்த இராஜதந்திர உறவுகள் (எயார் டிப்ளொமெசி) எமது விமானப் படை பேணி  வருகின்றது.

விமானப் படையின் 70ஆவது ஆண்டு நிறைவை  முன்னிட்டு கடந்த மார்ச் மாதம் கொழும்பில் நடைபெற்ற நிகழ்வில் இந்திய  விமானப் படை வான் சாகசங்களை காண்பித்தமை, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ்  மற்றும் அமெரிக்க பசுபிக் கட்டளையகத்தின் விமானப் படைத் தளபதிகள்  வெளிநாட்டு அதிதிகளாக கலந்து சிறப்பித்தமை சிறந்த உதாரணங்களாகும். அத்துடன்  விமானப் படை வருடா வருடம் நடத்திவரும் ‘எயார் சிம்போசியம்’  ஊடாகவும்  நாடுகளுக்கிடையிலான விமானப் படைகளின் உறவுகளில் மேம்பாடுகள்  காணப்படுகின்றது.

எந்த நாடுகளிடமிருந்து விமானங்கள் பெற்றுக் கொள்ள முயற்சிக்கப்பட்டுள்ளன ?

இலங்கையின்  கடல்சார் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேம்படுத்த  உதவுமாறு விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க தம்மிடமுள்ள நவீன வசதிகளைக் கொண்ட  நான்கு விமானங்களை இலங்கைக்கு வழங்க அமெரிக்கா மற்றும் இந்தியா ஆகிய இரு  நாடுகள் இணக்கம் தெரிவித்துள்ளன. இதற்கமைய  இந்தியா இரு விமானங்களையும், அமெரிக்கா இரு விமானங்களையும் தந்துதவவுள்ளது.  இதற்கான பேச்சுவார்த்தைகளும் நிறைவடைந்துள்ள நிலையில் இந்தியா நான்கு  மாதங்களுக்குள்ளும் அமெரிக்கா இவ்வாண்டு இறுதிக்குள்ளும் தமது முதலாவது  விமானத்தை வழங்கவுள்ளன.  கடல்சார் கண்காணிப்பு தொடர்பான விஷேட  உபகரணங்களுடன் வழங்கப்படவுள்ள விமானங்களுடன் இதற்கான பயிற்சிகளும்  வழங்கப்படவுள்ளன. இது எமக்கு கிடைக்கும் மற்றுமொரு பாரிய அங்கீகாரமாகும்.

கேள்வி: எந்தெந்த நாடுகளிடமிருந்து விமானங்கள் பெற்றுக் கொள்ளப்படவுள்ளன?

பதில்: இந்தியா இரு விமானங்களையும், அமெரிக்கா இரு விமானங்களையும் தந்துதவவுள்ளன. இதற்கான பேச்சுவார்த்தைகளும் நிறைவடைந்துள்ள நிலையில், இந்தியா நான்கு மாதங்களுக்குள்ளும் அமெரிக்கா இவ்வாண்டு இறுதிக்குள்ளும் முதலாவது விமானத்தை அனுப்பவுள்ளன. கடல்சார் கண்காணிப்பு தொடர்பான விஷேட உபகரணங்களுடன் கூடிய இவ்விமானங்களோடு இதற்கான பயிற்சிகளை வழங்கவும் அவை சம்மதித்துள்ளன. இது எமக்கு கிடைக்கும் மற்றுமொரு பாரிய அங்கீகாரமாகும்.

கேள்வி: அனர்த்தங்களின் போது விமானப்படையின் பங்களிப்பு எவ்வாறு காணப்படுகின்றது ?

பதில்: நாட்டில் ஏற்படும் எந்தவொரு அனர்த்தத்தின் போதும் அதற்கு முகம் கொடுக்கும் வகையில் சிறந்த முறையில் பயிற்றப்பட்ட குழு ஹெலிகொப்டர்களுடன் எப்பொழுதும் தயார் நிலையில் உள்ளது. அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்துடனும் படையினர் மற்றும் துறைசார் தரப்பினருடனும் சிறந்த தொடர்பை பேணி வருகின்றோம். வெள்ளப் பெருக்கு, மண்சரிவு போன்ற அனர்த்தம் ஏற்படும் பிரதேசங்கள் தொடர்பில் கண்காணித்து வைத்துள்ளோம். அவ்வாறு அனர்த்தங்கள் ஏற்படும் போது ஹெலிமூலம் எவ்வாறு இறங்குவது, பாதிக்கப்பட்டவர்களை மீட்டெடுப்பது போன்ற நடவடிக்கைக்கு தயார் நிலையில் உள்ளோம். இது தொடர்பில் ஏற்கனவே கூட்டுப் பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ட்ரோன், ஆளில்லா விமானங்கள், ஹெலிகொப்டர்கள் என்பன நிலைமைகளை கண்காணித்து புகைப்படங்கள், வீடியோக்களை பெற்று சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு வழங்கும். சிக்கித் தவிப்பவர்களை மீட்டெடுத்தல், அவர்களுக்கு தேவையான உதவி, நிவாரணங்களை வான் வழியாக வழங்குதல் மருத்துவர்களை அனுப்பி வைத்தல் போன்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

கேள்வி: தீயணைப்பு பிரிவின் செயற்பாடுகள் மீட்பு நடவடிக்கைகள் எவ்வாறு உள்ளன?

பதில்: விஷேட பயிற்சிகளுடன் நவீன உபகரணங்களைக் கொண்ட தீயணைப்பு பிரிவு எம்மிடம் உள்ளது. மிக உயரமான கட்டடங்களில் ஏற்படும் தீயைக் கூட எவ்வித சிரமமுமின்றி அணைக்கும் திறன் கொண்டது அது. எந்தவொரு தரப்பினருக்கும் நெருங்கமுடியாத பகுதிகளுக்கு ஹெலிகொப்டர் மூலம் சென்று தண்ணீர் விசிற முடியும். மீத்தொடமுல்லை சம்பவம், காட்டுத்தீ பரவல் போன்றவற்றை கட்டுப்படுத்தியமை சிறந்த உதாரணங்களாகும். அண்மைக் காலத்தில் இரு வெளிநாட்டு கப்பல்கள் தீப்பிடித்தன. நியு டயமன்ட், எக்ஸ் பிரஸ் பேர்ள் கப்பல்களின் தீ பாரிய அளவில் பரவுவதற்கு முன்னர் ஹெலிகொப்டர்கள் மூலம் வானிலிருந்தவாரே உலர் இரசாயனக் கலவைகளை தூவி தீ பரவுவதை ஓரளவு கட்டுப்படுத்தியதால் சுற்றாடலுக்கு ஏற்படவிருந்த பாரிய பாதிப்பை தவிர்க்க முடிந்தது. மிகவும் சவால் நிறைந்த நடவடிக்கை இதுவாகும்.

ஆறு மாத காலத்திற்குள் இது இரண்டாவது சம்பவமாகும். எமது செயற்பாடுகளை மீளாய்வு செய்ய வேண்டும்

கேள்வி: தீயணைப்பு படை தொடர்ந்தும் எங்கிருந்து செயற்படவுள்ளது. ?

பதில்: விமானப் படைத் தலைமையகம் அக்குரேகொடயிலுள்ள பாதுகாப்பு தலைமையகத்திற்கு மாற்றப்பட்டாலும் எமது தீயணைப்பு பிரிவை கொழும்பில் அதாவது நகரப் பகுதியில் ஸ்தாபிக்க திட்டமிட்டுள்ளோம். நாரஹேன்பிட்டியில் இதற்கான இடம் அடையாளம் காணப்பட்டுள்ளது. நகர அபிவிருத்தி அதிகார சபையுடன் இணைந்து ஒரு வருட காலத்திற்குள் இதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

கேள்வி: விமானப் படையிடமுள்ள விமானங்களின் நிலைமை எவ்வாறு உள்ளது?

பதில்: எமது விமானப்படையை பலமுள்ள படையாக மாற்றியமைக்கும் திட்டத்தின் ஓர் அங்கமாக எம்மிடம் பழுதடைந்த நிலையில் காணப்பட்ட விமானங்களை பழுதுபார்த்தல், புதுப்பித்தல் நடவடிக்கைகளுக்காக வெளிநாடுகளுக்கு அனுப்பியுள்ளோம். திருத்தப்பட்ட விமானங்கள் மற்றும் ஹெலிகொப்டர்கள் இலங்கைக்கு கொண்டுவரப்படவுள்ளன. இவற்றில் சுமார் 7 ஆண்டுகளாக செயலிழந்து பறக்க முடியாத நிலையில் இருந்த பாரிய பயணிகள் விமானங்களான ஏ.என் -32 ரக மூன்று விமானங்கள் உக்ரைனில் திருத்தப்பட்டு 2021 ஜூன் 09ஆம் கொண்டு வரப்படவுள்ளன.

அதேபோன்று எம்ஐ –17 ஹெலிகொப்டர்கள் ஐந்து திருத்தப்படவுள்ளன. அத்துடன் செயலிழந்த நிலையில் காணப்படும் அதிவேக தாக்குதல் விமானங்களும் மூன்றாண்டுகளுக்குள் திருத்தப்படவுள்ளன. இதற்காக இஸ்ரேலின் நிபுணத்துவக் குழு இலங்கை வரவுள்ளது. அதேபோன்று கட்டுநாயக்கவிலுள்ள விமானம் திருத்தும் தளத்தில் சீனத் தயாரிப்பு விமானங்கள் பழுதுபார்க்கப்படுகின்றன. இதனால் நேரமும் பாரிய நிதியும் எஞ்சுகின்றன.

கேள்வி: விமானப் படையின் சொந்த தயாரிப்பான ஆளில்லா விமானம் பற்றி?

பதில்: விமான பொறியியலாளர்களால் சர்வதேச தரத்திற்கு அமைவாக 'லிஹினியா எம்கே 1' என்ற ஆளில்லா விமானம் தயாரிக்கப்பட்டுள்ளது. மொரட்டுவ பல்கலைக்கழகத்துடன் இணைந்து அதனை மேலும் மேம்படுத்தி உள்நாட்டு தேவைகளுக்கு பயன்படுத்த திட்டமிட்டுள்ளோம்.விமானப் படை, பொலிஸ், அனர்த்த முகாமைத்துவ நிலையம், வனப் பாதுகாப்புத் திணைக்களம், நீர்ப்பாசண திணைக்களம், நில அளவை திணைக்களம் போன்ற அரச நிறுவனங்களின் தேவைகளுக்கு இதனை பயன்படுத்த முடியும். தற்பொழுது 20 கிலோ மீட்டர் தூரம் செல்லக் கூடிய வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. இதனை 50 மற்றும் 100 கிலோ மீட்டர் தூரம் வரை செல்லக் கூடியாதாக மாற்றத் திட்டமிடப்பட்டுள்ளது.

கேள்வி: விமானப் படையின் ட்ரோன் செயற்பாடுகள் தொடர்பில் விபரிக்க முடியுமா ?

பதில்: நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படும் எந்தவொரு சந்தர்ப்பங்களின் போதும், அனர்த்தங்களின் போதும் டெங்கு ஒழிப்பு, சுற்றாடல் பாதிப்பு, காடழிப்பு போன்ற செயற்பாடுகளின்போதும் வான் வழியாகக் கண்காணிக்கும் நடவடிக்கைகளுக்கு பயன்படுவதே இதன் நோக்கமாகும். நான் பொறுப்பேற்கும் போது எம்மிடம் மூன்று ட்ரோன்கள் மாத்திரமே இருந்தன. தற்பொழுது நாட்லுள்ள 24 விமானப் படை முகாம்களில் 13 இல் ட்ரோன் பிரிவுகள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன. சிறிய ரக ட்ரோன்கள் மாத்திரமின்றி இரவு பகலாக பயன்படுத்த கூடிய ட்ரோன்களும் உள்ளன. தேவையான பயிற்சிகளும் வழங்கப்பட்டுள்ளன.

கேள்வி: ட்ரோன் பயன்பாடு தொடர்பில் விமர்சிக்கப்படுகின்றதே?

பதில்: இந்த நாட்டில் சமாதானத்தை விரும்பும் அனைத்து மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், அவர்களது அன்றாட வாழ்க்கையை கொண்டு செல்வதற்கு தேவையான உதவிகளை வழங்குவதற்குமே நாம் உதவுகின்றோம்.

வடக்கு, கிழக்கு என்று மட்டுமல்லாமல் நாடு முழுவதிலும் ட்ரோன் மூலம் கண்காணித்து பொலிஸாருக்கும், கொவிட் - 19 தடுப்புக்கான நிலையத்திற்கும் தேவையான தரவுகளையும் புகைப்படங்களையும் வழங்கி வருகின்றோம். கொவிட் வைரஸை இந்த நாட்டின் பிரதான எதிரியாக நாம் கருதுகின்றோம். எனவே, அந்த எதிரியிடமிருந்து பொதுமக்களை பாதுகாப்பதற்காக முன்னெடுக்கும் வான் வழி நடவடிக்கை ட்ரோனை பயன்படுத்தி முன்னெடுக்கப்படுகின்றது. வைரஸ் பரவுதலை கட்டுப்படுத்தல், பயணக் கட்டுப்பாடு அமுலிலுள்ள காலங்களில் மக்களுக்கான வசதிகள், நிவாரணங்கள், அத்தியாவசிய பொருட்கள் உரிய முறையில் கிடைக்கின்றனவா போன்ற தகவல்கள் கூட கண்காணிக்கப்பட்டு அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படுகின்றது. எனவே, அனைத்து நடவடிக்கைகளும் மக்களின் நலனுக்கானதே.

கேள்வி: இறுதியாக மக்களுக்கு நீங்கள் சொல்லும் தகவல் என்ன?

பதில்: இலங்கையின் வான் பரப்பை பாதுகாத்தல், நாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தல், இறைமை மற்றும் ஆட்புல ஒருமைப்பாட்டை பாதுகாத்தல் என்பன எமது பிரதான கடமைகளாகும்.

அதேபோன்று சட்டவிரேத செயற்பாடுகள், போதைப் பொருள் ஒழிப்பு போன்ற நடவடிக்கைகளுக்கும் முழுமையான பங்களிப்பு வழங்கப்படும். விஷேடமாக, இந்த நாட்டிலுள்ள அனைத்து இன மக்களையும் எமது மக்களாகவே நாம் கருதுகின்றோம். மக்களுக்கு எதிராக இடம்பெறும் அனைத்து நடவடிக்கைகளையும் முறியடிக்கும் வகையில் இந்த நாட்டின் விமானப் படைத் தளபதி என்ற வகையில் நானும் எமது விமானப் படையினரும் செயற்படுவோம்.

ஸாதிக் ஷிஹான்

Comments