ஐக்கிய மக்கள் சக்தியின் அடித்தளத்தை தகர்க்கும் புதிய வியூகம் ஆரம்பம்! | தினகரன் வாரமஞ்சரி

ஐக்கிய மக்கள் சக்தியின் அடித்தளத்தை தகர்க்கும் புதிய வியூகம் ஆரம்பம்!

கடந்த வருடம் (2020ஆம் ஆண்டு) நடைபெற்ற பொதுத் தேர்தலில் தெரிவுசெய்யப்பட்ட ஒன்பதாவது பாராளுமன்றத்தில் இன்னமும் ஒரு ஆசனத்துக்கான வெற்றிடம் காணப்படுகிறது. ஐக்கிய தேசியக் கட்சிக்கு தேசியப் பட்டியல் மூலம் கிடைத்த ஒரேயொரு ஆசனம் இன்னமும் நிரப்பப்படாதுள்ள நிலையில், அக்கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்கவை பாராளுமன்றத்துக்கு அனுப்புவதற்கு அக்கட்சி தீர்மானித்துள்ளது.

அண்மையில் நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் இது தொடர்பான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக அக்கட்சியின் தவிசாளர் வஜ்ர அபேவர்தன அறிவித்திருந்தார். கடந்த 08 ஆம் திகதி பாராளுமன்றம் கூடிய போது ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்ற உறுப்பினராகப் பதவிப் பிரமாணம் செய்து கொள்வாரென எதிர்பார்க்கப்பட்ட போதும், அவருடைய நியமனம் பற்றி இன்னமும் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவரினால் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படவில்லை.

பொதுவாக கட்சியின் செயலாளரினால் தேசியப் பட்டியல் உறுப்பினராகத் தெரிவு செய்யப்படுபவரின் பெயர் அனுப்பி வைக்கப்பட்டதும் அதனை தேர்தல் ஆணைக்குழு வர்த்தமானி மூலம் அறிவிப்பதே வழமையாகும். எனவே செயற்குழு கூடி முடிவெடுத்த போதும், ரணில் விக்கிரமசிங்கவின் பெயர் இன்னமும் ஆணைக்குழுவுக்கு அனுப்பி வைக்கப்படவில்லையென்றே தெரிகிறது.

இருந்த போதும், ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றம் வரப் போகின்றார் என்ற செய்தி அரசியல் அரங்கில் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியிருப்பதைக் காண முடிகிறது. கடந்த 8 ஆம் திகதி நடைபெற்ற பாராளுமன்ற அமர்வில் ரணில் விக்கிரமசிங்க தொடர்பில் இடம்பெற்ற கருத்துப் பரிமாற்றங்கள் இதற்கு சாட்சியாக அமைந்தன.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மீண்டும் பாராளுமன்றத்துக்கு வரவிருப்பதால், தற்போதைய எதிர்க் கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி ஆட்டம் காணப் போவதாகவும், அக்கட்சியைச் சேர்ந்த 15 பேர் ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து கொள்வதற்குத் தயாராக இருப்பதாகவும் பாராளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்திருந்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் செயலாளர் பதவி இல்லாமல் போய் விடப் போகிறது என ரஞ்சித் மத்தும பண்டாரவைப் பார்த்து அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே கூறியிருந்தார். இதனால் சபையில் சலப்பு ஏற்பட்டது. எனினும், எதிர்க் கட்சியில் எந்தவிதமான குழப்பமும் இல்லையென எதிர்க் கட்சியின் முதற்கோலாசான் லக்ஷ்மன் கிரியல்ல பதில் வழங்கியிருந்தார். அத்துடன், எதிர்க் கட்சித் தலைவராக சஜித் பிரேமதாசவை ஏற்றுக் கொள்கின்றோம் என்ற தீர்மானத்தை கட்சிக்குள் நிறைவேற்றியிருப்பதாகவும் அவர் கூறியிருந்தார்.

இந்த விவகாரம் பாராளுமன்றத்தில் மாத்திரமன்றி வெளியிலும் அதிகம் பேசுபொருளாகியுள்ளது. தனியார் ஊடகமொன்றுக்கு கருத்துத் தெரிவித்துள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் செயலாளர் நாயகம் ரஞ்சித் மத்துமபண்டார, ‘ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்துக்கு வருவதால் எதிர்க் கட்சியில் எந்தவித பாதிப்பும் ஏற்படப் போவதில்லை. ரணில் விக்கிரமசிங்க கடந்த தேர்தலில் மக்களினால் நிராகரிக்கப்பட்டதொரு தலைவர். அவருக்கு சிறந்த இராஜதந்திரத் திறமைகள் இருக்கலாம். எனினும், அரசாங்கம் அவரைத் தமது தேவைகளுக்காகப் பயன்படுத்தி வருகிறது. இதனாலேயே அவருக்கு அதிக பாதுகாப்பை அரசாங்கம் வழங்கியுள்ளது. அவர் பாராளுமன்றத்துக்குள் வருவதால் எதிர்க் கட்சிக்குள் எந்தவிதமான குழப்பமும் ஏற்படாது. அரசாங்கத்துக்கு வேண்டுமாயின் ரணில் விக்கிரமசிங்கவுக்கு அமைச்சுப் பதவியை வழங்கி வைத்துக் கொள்ளட்டும். எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுடன் நாம் ஒன்றாக இருக்கின்றோம் என்பதைக் காண்பிப்பதற்காகவே பிரேரணையொன்றை கட்சிக்குள் நிறைவேற்றியிருக்கின்றோம்’ என்று சுட்டிக் காட்டியிருந்தார்.

பிரதான எதிர்க் கட்சியைச் சேர்ந்த இரு முக்கியஸ்தர்களின் கருத்துகளும் ஒரே விடயத்தை வலியுறுத்துவதாக இருந்தாலும், இதில் அவதானிக்கக் கூடிய விடயம் என்னவெனில் பிரேரணையொன்றை நிறைவேற்றும் நிலைக்கு ஐக்கிய மக்கள் சக்தியினர் சென்றுள்ளார்கள் என்பதாகும்.

பல கட்சிகள் இணைந்து ‘ஐக்கிய மக்கள் சக்தி’ என்ற கூட்டணியை உருவாக்கி சஜித் பிரேமதாசவை எதிர்க் கட்சித் தலைவராக ஏற்றுக் கொண்டு பிரதான எதிர்க் கட்சியாகச் செயற்பட்டு வந்தாலும், அக்கூட்டணிக்குள் இருக்கும் சிலருக்கு தமது சொந்த எதிர்காலத் திட்டங்கள் இருப்பதாக அரசியல் வட்டாரத்தில் தகவல்கள் வெளியாகி வருகின்றன. குறிப்பாக அடுத்த ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல் என்பவற்றை இலக்காகக் கொண்டு சிலர் காய்களை நகர்த்தி வருவதாகவும், ஜனாதிபதிப் பதவி மற்றும் பிரதமர் பதவி என்பவற்றை இலக்காகக் கொண்டே அவ்வாறான காய்நகர்த்தல்கள் மேற்கொள்ளப்படுவதாகவும் அரசியல் அரங்கத்தில் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.
 
குறிப்பாக பாராளுமன்ற உறுப்பினர்களான சம்பிக்க ரணவக்க, பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, குமார வெல்கம ஆகியோர் தமக்கான சொந்தத் திட்டங்களை அடிப்படையாகக் கொண்டு செயற்படுவதாகவும், இதனால் எதிர்க் கட்சிக்குள் உட்பூசல் ஏற்பட்டு அது உக்கிரமடைந்திருப்பதாகவும் ஆளும் தரப்பு உறுப்பினர்கள் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

இந்நிலையில் தமக்குள் எந்தவிதமான கருத்து வேறுபாடுகளோ முரண்பாடுகளோ இல்லையென இவர்கள் எவரும் உறுதியான அறிவிப்பை இதுவரை விடுக்கவில்லை. அது மாத்திரமன்றி, இங்கு பெயர் குறிப்பிட்ட தரப்பினரின் பிம்பங்களை உயர்த்துவதற்கு ஏற்கனவே சமூக ஊடகங்களின் வாயிலாக பிரசார நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டிருப்பதையும் காணக் கூடியதாகவுள்ளது.

இவற்றை அடிப்படையாகக் கொண்டு பார்க்கும் போது ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் வெற்றிடத்துக்கு ரணில் விக்கிரமசிங்க நியமிக்கப்படுவாராயின் அவருக்கு ஆதரவாக செயற்படுவதற்கு ஒரு சிலர் இணைந்து கொள்வதற்கான வாய்ப்புகளும் உண்டென்பதை மறுப்பதற்கில்லை.

‘அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை, நிரந்தர எதிரியும் இல்லை’ என்பதால் எதுவும் நடப்பதற்கான சாத்தியக்கூறுகளை நாம் முற்றாக நிராகரித்து விட முடியாது.

‘பாராளுமன்றத்தில் எதிர்க் கட்சி என்பது உறுப்பினர்களின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு தீர்மானிக்கப்படுவதில்லை. மக்களின் பிரச்சினைகள் குறித்து உண்மையான அக்கறையுடன் யார் செயற்படுகின்றார்களோ அவர்களே எதிர்க் கட்சியினர். இதனை மக்களே தீர்மானிக்கின்றனர். உண்மையான எதிர்க் கட்சி எது என்பதில் மக்கள் தெளிவாக உள்ளனர்’ என எதிரணியில் உள்ள மற்றுமொரு கட்சியான தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்திருந்தார்.

கொவிட் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளால் நாடு எதிர்கொண்டிருக்கும் பிரச்சினைகளுக்கான நிவாரணங்களை மக்கள் எதிர்பார்த்திருக்கும் சூழ்நிலையில், ரணில் விக்கிரமசிங்கவின் பாராளுமன்ற வருகையினால் எதிர்க் கட்சி குறித்த சலசலப்பு ஏற்பட்டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியையும் ரணில் விக்கிரமசிங்கவையும் பொறுத்த வரையில் கடந்த பொதுத் தேர்தலில் மக்களால் நிராகரிக்கப்பட்ட தரப்பாகும். சுமார் நான்கரை வருடங்களாக ஆட்சியிலிருந்த ஐக்கிய தேசியக் கட்சி மக்கள் எதிர்பார்த்த விடயங்களை முன்னெடுக்கத் தவறியமையே மக்களால் நிராகரிக்கப்பட்டமைக்குப் பிரதான காரணமாகும்.

குறிப்பாக கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் தேசிய பாதுகாப்பு பலவீனமாக இருந்தது என்ற குற்றச்சாட்டும், உயிர்த்த ஞாயிறு தாக்குதலைத் தடுக்கத் தவறினார்கள் என்ற குற்றச்சாட்டும் பாரதூரமானவையாகக் காணப்பட்டன. இது மாத்திரமன்றி, நாட்டின் தேசிய சொத்துக்களை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்ததாகவும், சர்வதேச நாணய நிதியம் போன்ற சர்வதேச அமைப்புக்களின் நிபந்தனைகளுக்காக நாட்டின் பொருளாதாரத்தின் போக்கை மாற்றியமைப்பதற்கு உடந்தையாக செயற்பட்டதாகவும் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் ஐ.தே.க அரசாங்கத்தின் மீது சுமத்தப்பட்டன.

அதேநேரம், பல தசாப்தங்களுக்கு மேலாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பதவியை வகித்து வரும் ரணில் விக்கிரமசிங்க, கட்சியின் வளர்ச்சிக்கோ அல்லது வேறு தலைமைகள் உருவாவதற்கோ   இடமளிப்பதில்லையென்ற குற்றச்சாட்டு அவர் மீது இருந்தது. இதற்கு ரணில் விக்கிரமசிங்கவை மாத்திரம் குறை கூற முடியாது. ஐ.தே.கவின் தலைமைத்துவத்துக்கு மேலும் பலரும் கண் வைத்திருந்தமையால் சஜித் பிரேமதாசவினால் தமது தலைமைத்துவக் கனவுக்கு ஆபத்து வந்து விடக் கூடாது என்பதற்காக ரணில் விக்கிரமசிங்கவையே தொடர்ந்தும் அப்பதவியில் நீடிக்கச் செய்வதற்கு சிலர் விரும்பினர்.

கடந்த பொதுத் தேர்தலில் சஜித் தரப்பினருடன் சமரசம் செய்யாமல் ஐ.தே.க தனித்துப் போட்டியிட வேண்டும் என்பதிலும் அவர்களே அதிகம் உறுதியாக இருந்தனர். குறிப்பாக நவீன் திஸாநாயக்க, ரவி கருணாநாயக்க, அகில விராஜ் காரியவசம் போன்றவர்களாவர்.

தலைமைத்துவத்துக்கு என்னதான் போட்டிகள் நடந்தாலும் ஐ.தே.கவின் ஆதரவில் எவ்வித சரிவும் ஏற்படாது என அவர்கள் போட்டிருந்த கணக்கு தப்பானது என்பதை தேர்தல் முடிவுகள் எடுத்துக் காட்டின. தனித்துப் போட்டியிட்டாலும் யானைச் சின்னத்தைக் கொண்ட ஐ.தே.கவினால் வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கை அவர்களிடம் இருந்தது.

எனினும், மக்களின் தீர்ப்போ வேறு விதமாக இருந்தது. பல தசாப்தங்களாக ஐ.தே.கவின் யானைச் சின்னத்துக்கு வாக்களித்த பல வாக்காளர்கள் இம்முறை தொலைபேசிச் சின்னத்தில் போட்டியிட்ட சஜித் அணிக்கு ஆதரவு வழங்கினர். இந்தத் தேர்தல் முடிவுகள் ஐக்கிய தேசியக் கட்சிக்கு பாரியதொரு பின்னடைவாக அமைந்து விட்டன. அதுவும் ஆட்சியிலிருந்து தேர்தலைச் சந்தித்த ஒரு கட்சி பாராளுமன்றத்துக்கு எந்தவொரு ஆசனத்தையும் பெறாத பாரியதொரு பின்னடைவு நிலைக்குத் தள்ளப்பட்டது.

1977ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரை நடைபெற்ற அனைத்துப் பொதுத் தேர்தல்களிலும் வெற்றி பெற்று பாராளுமன்றத்துத் தெரிவு செய்யப்பட்ட ரணில் விக்கிரமசிங்க முதல் தடவையாக 2020 தேர்தலில் தோல்வியைத் தழுவிக் கொண்டார். 2015 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் 5 இலட்சம் வாக்குகளுடன் அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்றவர் என்ற சாதனையை நிலைநாட்டிய ரணில், அடுத்த தேர்தலில் பாராளுமன்றத்துக்குத் தெரிவாகவில்லை.

இதற்கு ரணில் விக்கிரமசிங்க மாத்திரம் தனித்துப் பொறுப்பேற்க வேண்டியவர் அல்ல. ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இதில் கூட்டுப் பொறுப்பு உள்ளது. ‘அரசியல் தந்திரம் மிக்கவர்’ என வர்ணிக்கப்படும் ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்ற உறுப்பினராகும் பட்சத்தில் ஏற்படக் கூடிய அரசியல் நகர்வுகள் எவ்வாறானதாக இருக்கும் என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

Comments