இலங்கையில் நடைபெறும் இந்திய - சீன பலப்பரீட்சை | தினகரன் வாரமஞ்சரி

இலங்கையில் நடைபெறும் இந்திய - சீன பலப்பரீட்சை

எழுபதுகளின் ஆரம்பப் பொழுதில் இலங்கையும் இந்தியாவும் மூடப்பட்ட சோஷலிச பொருளாதார கட்டமைப்பைக் கொண்ட நாடுகளாக விளங்கின. அக் காலத்தில் இந்து சமுத்திரம் அமைதிப்பிராந்தியமாக அறிவிக்கப்பட வேண்டும் எனவும் யுத்தக் கப்பல்கள் நடமாட்டமற்ற சமுத்திரமாக பிரகடனப்படுத்தப்பட வேண்டுமென்றும் இந்து சமுத்திர நாடுகள் மத்தியில் ஒரு கருத்துருவாக்கம் பெற்றிருந்தது. அச்சமயத்தில் அமெரிக்க ஏழாவது கடற்படை ஏதோ ஒரு காரணத்துக்காக இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் நடமாடியது. இலங்கைப் பிரதமரான ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க, ஏழாவது கடற்படை உடனடியாக இந்து சமுத்திரத்தை விட்டு அகல வேண்டும் எனப்பேசியிருந்தமை, பிராந்திய நாடுகளின் கவனத்தை ஈர்த்தது. அமெரிக்கக் கடற்படையை வெளியேறும்படி ஒரு சுண்டைக்காய் நாடு சொல்வதா எனக் கேலிபேசியவர்களும் உண்டு. ஆனால் அணிசேராக் கொள்கையில் பற்று கொண்டும், நேரு, அப்துல்கமால் நாஸர் ஆகியோருடன் இணைந்து அணிசேரா அமைப்பு ஒன்றை உருவாக்குவதில் தீவிரம் காட்டியதோடு இந்து சமுத்திரம் அமைதி பிராந்தியமாக அமைய வேண்டும் என்பதில் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க உறுதியாக இருந்ததோடு அணிசேரா உச்சிமா நாட்டை கொழும்பில் நடத்தவும் செய்தார்.

இரண்டாம் உலகப்போருக்குப் பின்னரான காலப்பகுதியில் அமெரிக்க அணி அல்லது முதலாளித்துவ அணி, சோவியத் அணி அல்லது கம்யூனிஸ அணி என பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள் பிளவு பட்டும் மற்றொரு உலகப்போருக்கு தயார் நிலையிலும் இருப்பதை அவதானித்த ஏனைய அமைதியைவிரும்பும் நாடுகள் இரண்டு பக்கமும் சாராத ஒரு நிலைப்பாட்டை எடுக்க விரும்பியதன் விளைவாகவே அணிசேரா இயக்கத்தை உருவாக்கி தமக்குள் ஒத்துழைப்புகளை விரிவுபடுத்தி ஒரு அணிசேரா பொருளாதார கட்டமைப்பை ஏற்படுத்துவதில் ஈடுபாடு காட்டின. எனினும் அந்த ஆரம்பகாலத் தலைவர்களின் மறைவின் பின்னர், அணிசேரா நாடுகளின் உள்நாட்டு அரசியலில் ஏற்பட்ட பல்வேறு மாற்றங்கள் காரணமாகவும், அமெரிக்க – ரஷ்யா யுத்த கெடுபிடிகள் குறைவடைந்த பின்னர் உருவான புதிய பூகோள அரசியலுக்கு முன்பாகவும் அணி சேரா கொள்கை வலுவிழந்தது. வெவ்வேறு நாடுகளின் ஆதிக்கத்துக்குள் பல்வேறு நாடுகள் செல்லத் தொடங்கின. இதை, வலுவிழந்துபோன Cold war எனப்பட்ட பனியுகக் காலமே மீண்டும் மற்றொரு வகையில் மீள் உருவாக்கம் செய்யப்படுகிறது என்றும் சொல்லலாம்.

ஆசியாவின் பொருளாதார வல்லரசாகத் திகழும் சீனா, தான் அமெரிக்காவைப்போன்ற உலகப் பொலிஸ்காரனாக ஒரு காலத்தில் உலகில் செல்வாக்கு செலுத்த வேண்டும் எனக் கருதி அதற்கான ராஜபாட்டையை அமைத்து வருகிறது. அதை அமெரிக்கா மட்டுமல்ல  இந்தியாவும் ஜப்பான் மற்றும் அவுஸ்திரேலியாவும் வன்மையாக எதிர்க்கின்றன. எனினும் கடல்பட்டுப்பாதை அமைப்பதிலும் தொடர்புடைய நாடுகளில் தன் செல்வாக்கை நிலை நிறுத்துவதிலும் சீனா அசராமல் ஈடுபட்டு வருகிறது. சீனாவின் கடல்பட்டுப்பாதைத் திட்டம் முற்றாக நிறைவேறுமானால், இந்தியா தொடக்கம் ஆபிரிக்கா வரை சீனா தன் நீக்கமற செல்வாக்கை நிலை நிறுத்தி இப்பிராந்தியத்துக்கு தலைமைத்துவம் தரும் நாடாக மாறிவிடும். இதை இன்னொரு வகையில் எவ்வாறு புரிந்து கொள்வதென்றால், இப் பிராந்தியத்தில் ரஷ்ய, அமெரிக்க, ஜப்பானிய மற்றும் ஐரோப்பிய நாடுகளின் செல்வாக்கு முடக்கப்பட்டிருக்கும். இந்தியா, சீனாவுக்கு அடங்கிய நாடாக இருக்க வேண்டி வரலாம். இலங்கையில் சீனாவின் பிரசன்னத்தை இத்தயை பின்புலத்திலேயே இந்தியா அவதானித்து வருகிறது.

இலங்கையில் சீனா மென்மேலும் திட்டங்களை செயல்படுத்துவதிலும், புதிய முதலீடுகளில் ஈடுபடுவதையும் தன்னைச் சுற்றிலும் விரிக்கப்படும் வலையாகவே இந்தியா கருதுகிறது. சில மாதங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தை அண்மித்த மூன்று தீவுகளில் காற்றலை மின்சார உற்பத்தித்திட்டமொன்றை செயல்படுத்துவதற்கான அனுமதியை சீன நிறுவனமொன்றுக்கு வழங்கப்படவிருந்த நிலையில், தனது நாட்டு எல்லைக்கு அண்மித்ததாக சீன நிறுவனமொன்று மின் உற்பத்தியில் ஈடுபடுவதை முற்றிலுமாக விரும்பாத இந்தியா அதற்கு தன் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்தது. சீன நிறுவனத்துக்கு அனுமதி வழங்கப்படுவது தற்போது நிறுத்தப்பட்டிருப்பதாக அறிய முடிகிறது. இதையடுத்து தமிழகக் கடலோர பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருப்பதோடு கடந்தவாரம் மன்னார் வளைகுடா பகுதியில் விமான கண்காணிப்பும் மேற்கொள்ளப்பட்டிருந்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

பொருளாதார அபிவிருத்தியை முன்நிறுத்தி இலங்கையில் மேற்கொள்ளப்பட்டு வரும் சீன நகர்வுகளுக்கு எதிராக இந்தியா போதிய மாற்று நடவடிக்கைகளை எடுக்கத் தவறி இருப்பதாகவும், இந்தியா தற்போது முகம் கொடுத்துவரும் இரண்டாம் கொரோனா அலையை சீனா தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு இலங்கையில் காரியங்களை சாதித்துக் கொண்டிருப்பதாகவும் ‘இலங்கையில் சீனா’ என்ற முக்கியமான விடயத்தை சரியாகக் கையாள்வதில் மோடி அரசு கோட்டை விட்டு விட்டதாகவும் இந்திய அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். சீனாவோடு ஒப்பிடும்போது இந்திய நகர்வுகள் மெதுவாகவே நடைபெறுகின்றன என்பது அவர்களது குற்றச்சாட்டு. சீனா இலங்கையில் கடன் அடிப்படையில் திட்டங்களை நிறைவேற்றுகிறது. கடன் வழங்குகிறது. ஹம்பாந்தோட்டை துறைமுகம், விமான நிலையம் என்பன இலங்கைக்கு கடன் பளுவை ஏற்படுத்தி இருக்கிறது. தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள களனி – அத்துறுகிரிய அதிவேக நெடுஞ்சாலைத் திட்டத்துக்கான செலவு ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் என மதிப்பிடப்பட்டுள்ளது. இத் திட்டத்தை துறைமுக நகரத்தை நிர்மாணித்துவரும் ‘சைனா ஹார்பர் என்ஜினியரிங்’ நிறுவனமே பொறுப்பேற்றுள்ளது. இப்பாதை நிர்மாணத்தின் பின்னர் 17 வருடங்களுக்கு இந்த நிறுவனத்தின் வசமே இப்பாதை இருக்கும். அதன் பின்னரேயே இலங்கையிடம் இப்பாதை ஒப்படைக்கப்படும். இலங்கையில் சீனா கடன்வழங்கும் உத்தியைப் பயன்படுத்தும் அதே சமயம் இந்தியா இந்நாட்டின் தமிழர் பிரச்சினையை ஒரு அரசியல் உத்தியாக பயன்படுத்துகிறது.

இலங்கைக்கு இந்திய சமாதனப்படையை அனுப்பியது. இலங்கை இந்திய சமாதான உடன்படிக்கை, மாகாணசபை தோற்றம், 13ஆவது திருத்தச்சட்டம், இந்திரா காந்தியின் காலத்தில் தமிழ்த் தீவிரவாதம் வளர்ச்சி பெற்றமை எனப்பல விடயங்களில் இந்தியா இலங்கையில் தன் செல்வாக்கைப் பயன்படுத்தி வந்திருக்கிறது. அப்போது சீனாவின் பிரசன்னம் இலங்கையில் காணப்படவில்லை.

இந்தியா தன் அரசியல் செல்வாக்கை தமிழர் அரசியல் பிரச்சினையின் ஊடாகத் தொடர்ந்தும் இந்த மாறிவரும் பிராந்திய அரசியல் சூழலில், இலங்கையில் ஆதிக்கம் செலுத்தக் கூடுமா என்பது தற்போது கேள்விக்குறியாகியுள்ளது. ஏனெனில் தற்போதைய இலங்கை அரசு தமிழர் பிரச்சினையை ஒரு பொருட்டாகக் கொண்டிருப்பதாகத் தெரியவில்லை. புதிய அரசு பதவியேற்ற பின்னர் அது தொடர்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. வடக்கு கிழக்கில் மாகாணசபைத் தேர்தல்களை நடத்த வேண்டும் என்ற புதுடில்லியின் விருப்பம் கவனத்தில் கொள்ளப்பட்டதாகத் தெரியவில்லை. தேர்தலொன்றை நடத்துவதற்கான சூழலும் தென்படவில்லை.

இதேசமயம் சீனா ஒரு போக்கைக் கடைப்பிடிப்பதையும் அவதானிக்க முடிகிறது.
அது தமிழ்மொழி புறக்கணிப்பு.

இலங்கை அரசின் மன நிலைக்கு ஏற்பவும், இந்திய நிலைப்பாட்டுக்கு எதிராகவும் ஒரு நிலைப்பாட்டை சீனா எடுக்க முனைந்திருப்பதாக இதைக் கருதலாம் என எதிர்க்கட்சிகள் கருத்து தெரிவித்துள்ளன. சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு சீன அரசு புதிய இ. நூலகமொன்றை அமைத்துக் கொடுத்திருக்கிறது. இதற்கான அறிவிப்புப் பலகையில் தமிழ்மொழி தவிர்க்கப்பட்டுள்ளது. துறைமுக நகரத்தில் காணப்படும் அறிவிப்புப் பலகையிலும் தமிழ் தவிர்க்கப்பட்டுள்ளது.

சமூக வலைத்தளங்களில் இது பற்றி பரவலாக அலசப்பட்டது. ஒரு நாட்டின் தூதுவரகம் அமைந்திருக்கும் நாட்டின் இறைமைக்கு பங்கம் ஏற்படாதவாறு செயற்பட வேண்டியது அவசியம் என்றெல்லாம் சொல்லப்பட்ட போதும் சீனத்தூதரகம் தன் தமிழ்மொழி தொடர்பான கண்டுகொள்ளாத மனப்பான்மையை மாற்றிக் கொள்ளவில்லை. இது இந்தியாவுக்கு எதிரான ஒரு உத்தியாகவே பார்க்கப்படுகிறது.

சீனாவின் இலங்கை செயற்பாடுகள் இந்தியாவுக்கு கொதிப்பை ஏற்படுத்தி இருக்கும் என்றாலும் சீனா அது பற்றி கவலை கொண்டதாகத் தெரியவில்லை. இலங்கையின் நண்பனாகவே சீனா தன்னைக் காட்டிக் கொள்கிறது. ஆனால் இலங்கையில் ஆட்சிக்குவரும் எந்தவொரு அரசுக்கும் தலையிடியைத் தரும் நாடாக, இந்தியா இருந்து வந்திருக்கிறது.

புதுடில்லியின் ‘சௌத் புளொக்’ என அழைக்கப்படும் இராஜதந்திரிகளின் பிரிவு, இந்தியாவின் உள்ளூர் மற்றும் அயலக கொள்கைகளை உருவாக்குவோரைக் கொண்டது என்றும் இந்தியாவை இயக்கும் மூளை என்றும் சொல்வார்கள். ஆனால் ‘இலங்கையில் சீனா’ விஷயத்தில் இந்த கொள்கை வகுப்பு இராஜதந்திரிகள் தோல்வி அடைந்துவிட்டதாகவே ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.

இலங்கையில் அரசியல் கலாசாரத்தை சீனா நன்றாகவே அறியும், அதற்காக பார்வையும், செயல்முறைகளும் அதனிடம் உள்ளன. ஆனால் இந்த அணுகுமுறைகளை இந்தியா, ஜப்பான், அமெரிக்கா மற்றும் அவுஸ்திரேலிய நாடுகள் எவ்வாறு எடுத்துக் கொள்ளும், எதிர்வினையாற்றும் என்பதை சீனாவினால் முற்றாக அனுமானிக்கக் கூடும் எனக் கருதுவதற்கில்லை.

கொவிட் பெருந்தொற்றை இந்திய பெருங்கடல் பிராந்தியத்தில் சீனா தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறது. இப் பெருந்தொற்று கட்டுப்பாட்டுக்குள் வந்து, நிலைமைகள் சீரானதும், இந்த நாடுகள் எவ்வாறு எதிர்வினையாற்றும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். பௌத்தம் சொல்வதைப் போல அனைத்தும் மாற்றங்களுக்கு உட்பட்டவையே!

நோர்மன் ஹொசைன்
 

Comments