பொருளாதார நெருக்கடியால் திணறும் மலையகம்; பாடம் கற்றுத் தருமா கொவிட்-19? | தினகரன் வாரமஞ்சரி

பொருளாதார நெருக்கடியால் திணறும் மலையகம்; பாடம் கற்றுத் தருமா கொவிட்-19?

கொவிட் 19 இன் மூன்றாவது அலை நாட்டின் இயல்பு நிலையை முடக்கிப் போட்டுள்ளது. பயமும் பதட்டமும் நிறைந்த மன உணர்வுடன் அன்றாடப் பொழுதுகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர் மக்கள். இத்துடன் அடை மழையும் சேர்ந்து அட்டகாசம் பண்ணி ஓய்ந்துள்ளது. இதனால் கொவிட் 19 தொற்றினை மேலும் அதிகரித்து விடுமோ என்ற அச்சமும் எழாமல் இல்லை.  

மலையகத்தைப் பொறுத்தவரை முதலாம் இரண்டாம் அலைகள்  நிலைகளை பெரிதாக குழப்பிவிடவில்லை. ஆனால் முன்றாம் கட்ட அலையானது தனது மூர்க்கத் தனத்தை அவிழ்த்து விட்டுள்ளது. பி.சி.ஆர். பரிசோதனைகள், தொற்றாளர்களை இனங்காணல், முடக்கம், தனிமைப்படுத்தல் என்று பரபரப்பான சூழ்நிலை. இதேவேளை பெருந்தோட்டப் பிரதேசங்கள் யாவும் பொது சுகாதார பரிசோதகரின் (PHI) முழுக் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடவில்லை. தோட்ட வைத்தியர்களே (EMA) பெருந்தோட்ட சுகாதார நடைமுறைகளைக் கையாள்கிறார்கள். இவர்களை மையப்படுத்தியே கொரோனா பரவல் தடுப்பு ஏற்பாடுகள் நடந்தேறி வருகின்றன. ஆனால் இவர்கள் இந்தப் பெருந்தொற்றுப் பரவலை முழுமையாக கையாளக்கூடிய அளவு பரிச்சயமானவர்கள் அல்ல என்பதே அவதானிகளின் பார்வை. 

இதனால் தொற்றாளர்கள் இனம் காணப்படுவதில் காலதாமதமும் அசமந்தமும் ஏற்பட இடமுண்டு. சில தோட்டங்களில் சிறுவர் பராமரிப்பு நிலைய பொறுப்பாளர்கள் கூட இந்த விடயங்களில்  சம்பந்தப்படுவதாக தகவல்கள் இருக்கின்றன. இது சரியான பலனை தருமா என்பது ஐயமே.  தேசிய ரீதியிலான சுகாதார நெறிமுறைக்குள் பெருந்தோட்டங்கள் உள்வாங்கப்படாமையாலேயே இந்த அவலம். இது பாரிய பிரச்சினைகளை தோற்றுவித்தால் கூட ஆச்சரியப்படுவதற்கு இல்லை. தவிர தொற்றாளர்கள் இனம் காணப்படும் பட்சத்தில் அவர்களைத் தனிமைப்படுத்தும் நிலையங்கள் சொற்பமாகவே காணப்படுகின்றன.

வீடுகளில் தனிமைப்படுத்தல் என்பது கைக்கூடாத காரியம். அந்த அளவு நெருக்கடியான வாழ்விட நிலைமை.  இதனாலேயே பெருந்தோட்டப் பிரதேசங்களில் கொவிட் 19 பரவலைக் கட்டுப்படுத்துவதும் அதனைப் பரவ விடாது தடுப்பதும் சவாலாகவே காணப்படுகின்றது. ஏற்கனவே சுகாதார கணிப்பீடுகளில் மிகவும் மோசமானதாக இனம் காணப்படும் பெருதோட்டப் பகுதிகள் தொடர்ந்தும் அச்சுறுத்தல் நிறைந்ததாகவே அமைகின்றன. இத்தனைக்கும் இடையில் தோட்ட பிரதேசங்களில் வழமையான தொழில் நடவடிக்கைகள் மட்டும் நடந்து வருகின்றன.
தமது குடும்பத்தின் வயிற்றுப் பாட்டுக்காகவும் இந்நாட்டு பொருளாதார பங்களிப்புக்காகவும் தோட்ட மக்கள் தொடர்ந்தும் வேலையில் ஈடுபட்டு வருகிறார்கள். 

இதன் காரணமாகவே பெருந்தோட்டப் பகுதிகள் இயல்பாக இயங்கிக் கொண்டிருப்பதாக பலரும் எண்ணிக் கொள்கிறார்கள். இப்படி வேலைக்குச் செல்வோர் முழுமையான சுகாதார விதிமுறைகளைக் கடைப்பிடிகிறார்களா என்பது கேள்விக்குறியே.  

தோட்ட முகாமையாளர்கள் சிலர் மட்டுமே இது குறித்து கவனம் செலுத்துவதாக தெரிகின்றது. ஆனால் இவர்களுக்கு சுகாதார திணைக்களமோ அதிகாரிகளோ ஒத்துழைப்பு தருவது இல்லை. இதற்குக் காரணம் நிர்வாக ரீதியிலான முரண்பாடுகளே ஆகும். எனவேதான் மலையக பிரதேசங்களும் பொது சுகாதார கட்டமைப்பின் கிழ் கொண்டுவரப்படுவதன் அவசியம் பெரிதும் வலியுறுத்தப்படுகின்றது. இல்லாவிடில் எதிர்காலத்தில் இவ்வாறான அனர்த்தங்கள் ஏற்படும் பட்சத்தில் மலையகம் பாரிய அச்சுறுத்தலை எதிர்கொள்ள நேரிடும்.  

நாடே முடக்கப்படும் பின்புலத்தில் தோட்டத் தொழிலாளர்கள் மட்டும் தொழிலில் ஈடுபடுவதை அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டியது அவசியம். இதனால் தேயிலை சந்தைக்கு விடப்படுகின்றன. நாட்டின் பொருளாதாரத்துக்கு உறுதுணை கிடைக்கிறது. எனவே பெருந்தோட்டப் பகுதிகள் தனிமைப் படுத்தலுக்கு உள்ளாக்கப்படுமானால் அது பாரிய பொருளாதார தாக்கத்தினை ஏற்படுத்தவே செய்யும். இவர்கள் இன்னும் தினக்கூலிகளாகவே இருக்கின்றார்கள். அன்றாடம் தொழிலுக்குப் போனால் மட்டுமே வேதனம். இதே நிலைமை மலையகத்துக்கு வெளியேயும் காணப்படாமல் இல்லை. ஆனால் அவர்களுக்கு நிவாரணங்கள் கிடைக்கின்றன. போதிய சுகாதார வசதிகள், உதவிகள் கிட்டுகின்றன. 5000 ரூபாய் நிவாரண கொடுப்பனவு தோட்ட மக்களுக்குக் கிடைப்பது இல்லை. சமுர்த்தி நிவாரணம் பெறுவோர் தோட்டப் பிரதேசங்களில் மிகவும் குறைவு. எனவே தோட்ட மக்கள் அன்றாடம் வேலைக்குச் செல்வதன் முலமே கடன் வாங்கக்கூடிய தெம்பினைப் பெறக்கூடியவர்களாக இருக்கின்றார்கள். வட்டிக்கு பணத்தை வாங்கி வயிற்றுப் பாட்டினைக் கவனிக்க வேண்டியவர்களாக உள்ளார்கள்.  

இங்கு சுயதொழில் செய்வதற்கான வாய்ப்புகள் தாராளமாக இருக்கின்றன. தரிசு நிலங்கள் கைவிடப்பட்டு வரும் காணிகள் விவசாயம் செய்வதற்கான ஏதுக்கள் ஏராளமாக காணப்படுகின்றன. கொரோனா முதலாம் தொற்று ஆரம்பமானபோது பெருவாரியான தோட்ட மக்கள் குறிப்பாக இளைஞர்கள் தோட்டங்களுக்கே திரும்பி வந்தார்கள். இவர்கள் தோட்டத் தொழிலைக் கைவிட்டு ஏற்கனவே வெளியிடங்களுக்குப் போய் வெலை செய்து கொண்டிருந்தவர்கள். பெருந்தோட்ட இளைஞர்களை சுயதொழிலில் ஊக்குவிக்கப் போவதாக அறிவிப்புகள் வந்தன. காணிகள் பகிர்ந்தளிக்கப்படுமென செய்திகள் வெளியாகின. ஆனால் இதுவரை எதுவுமே சாத்தியமாகவில்லை. இதனால் எமாற்றமும் விரக்தியுமே எஞ்சி நிற்கின்றது.
இவ்வாறானவர்கள் தாம் தமது குடும்பத்துக்குப் பாரமாக இருப்பதாக உணரும் சூழ்நிலையில் உளவியல் ரீதியிலான அழுத்தங்களுக்கு ஆளாகிப்போவது தவிர்க்க வியலாததே. வெளி இடங்களில் வேலை செய்து வந்த ஆயிரக்கணக்கான மலையக இளைஞர், யுவதிகள் இன்று வருமானத்தை இழந்து நிற்கின்றார்கள். சிலர் அன்றாட உணவுக்கே வழியில்லாத நிலையில் தோட்டங்களில் உள்ள பெற்றோரிடம் பணம் கேட்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள். இதனால் குடும்ப வருமானத்துக்கும் குந்தகம் ஏற்படுகின்றது. இவர்களுக்கு நிவாரணங்கள் எதுவுமே கிடைப்பது இல்லை. அநேகமாக இவர்கள் அனைவரும் தனியார் நிறுவனங்களிலேயே வேலை செய்கிறார்கள். இதனால் நிச்சயமற்ற நிலை, தொழிலுக்கு ஆபத்து வரும் அச்சம் எழாமல் இல்லை.  

இன்று விலைவாசி நாளுக்கு நாள் ஏறிக்கொண்டிருக்கின்றது. அண்மையில் உள்ள கடைகளுக்கு மட்டுமே செல்லுங்கள் என்னும் பாதுகாப்பு அறிவித்தல் சில வர்த்தகர்களுக்கு அதிஷ்டமாகியுள்ளது. இவர்கள் எண்ணியபடியே பொருட்களின் விலைகள் நிர்ணயம் செய்யப்படுகின்றன. போக்குவரத்துக் கட்டுப்பாட்டை காரணம் காட்டி தம்மை தியாகிகளாக வரையறை செய்வது கொண்டு அத்தியாவசிய உணவு பொருட்களின் விலையை அநியாயத்துக்குக் கூட்டி விற்பனை செய்து கொள்ளை இலாபம் அடிக்கிறார்கள்.  

மலையக நகர வர்த்தக நடவடிக்கைகள் முற்றிலும் ஸ்தம்பிதமடைந்து போயுள்ளன. பொருட்களை அடகு வைத்தும் வட்டிக்கு வாங்கியும் அன்றாட ஜீவியத்துக்கான பணத்தைத் தேடியாகி வேண்டிய கட்டாயத்தில் பல மலையக குடும்பங்கள் இருப்பது என்னவோ உண்மை. 

உண்மையில் தற்போதைய நிலவரங்களில் இருந்து கற்றுக் கொள்ளப்பட வேண்டிய பாடங்கள் பல இருக்கின்றன. அவற்றுள் முக்கியமானவை இரண்டு விடயங்கள். ஒன்று, சுகாதார மேம்பாடு. இன்று தோட்ட முகாமைத்துவம், ட்ரஸ்ட் நிறுவனம் ஆகியவையே பெருந்தோட்ட சுகாதார சேவைகளை மேற்கொள்கின்றன. இந்நிலை மாறவேண்டும். அரசாங்கமே இதனை பொறுப்பேற்க வேண்டும். பொது சுகாதார நெறி முறைக்குள் பெருந்தோட்டப் பிரதேசங்கள் கொண்டு வரவேண்டியது அவசியம். சுகாதார திணைக்களத்தின் நேரடி பொறுப்பின் கீழ் தோட்ட சுகாதார சேவைகள் கொண்டு வரப்பட்டால் மட்டும் இங்கு சுகாதார மேம்பாடு என்பது சாத்தியமாகும். 

இரண்டாவது விடயம் சுய பொருளாதார தேடலுக்கான ஏது நிலைகளை உருவாக்கலாகும். அதற்கான பின்புலம் தாராளமாகவே காணப்படுகின்றது. வாய்ப்புகள் ஏற்படுத்துவதன் மூலம் இங்கு பயன்படுத்தப்படாத விளை நிலங்களை இங்குள்ளவர்களுக்கு பகிர்ந்தளிக்கலாம். விவசாய முயற்சிகளுக்கு விடப்படலாம். சுயதொழில் முயற்சிகளை ஊக்குவிக்கலாம். சிறு குறு தொழில் முனைப்புகளை தூண்டிவிடலாம். தமது வருமானத்தைப் பெருக்கிக் கொள்ளக்கூடிய வழிவகைகளை ஏற்படுத்திக் கொள்வதற்கான தொழில் சார் நிதியுதவி இவர்களுக்கு கிடைக்க வேண்டியது அத்தியாவசியம். 

இதன் மூலம் மக்களின் இடப் பெயர்வுகளையும் தடுக்கலாம். இடர்கள் ஏற்படும் இடத்து உளவியல் ரீதியிலான அழுத்தங்கள் எழாமல் பார்த்துக் கொள்ளலாம். எனவே பெருந்தோட்டப் பிரதேசங்களை உள்ளடக்கி இன்று வேலை வாய்ப்பு பெறக்கூடிய வேலைத்திட்டங்கள் அவசியம். இது ஆண், பெண் தொழிலாளர்களும் அவர்களது குடும்பத்து இளைய தலைமுறையினரும் தோட்டங்களைவிட்டு வெளியேறுவதைக் கட்டுப்படுத்த உதவும். இன்று தேயிலைப் பயிர்ச்செய்கை உரிய பராமரிப்பின்றி இறக்கம் கண்டுள்ளன. குறிப்பாக ஆண்களுக்கான வேலை வாய்ப்புகள் அடியோடு ஒழிக்கப்பட்டு விட்டன. பெண்களை மட்டும் நம்பியே இத்துறை இன்று இயங்கிக் கொண்டிருக்கின்றது. இத்துறையை மீளக் கட்டியெழுப்பும் நடவடிக்கைகளை அராசங்கம் எடுக்க வேண்டும்.  

இல்லாவிட்டால் பாரம்பரிய வரலாற்று தரவுகளை தக்கவைத்துக் கொண்டுள்ள ஒரு இனத்தின் சமூக பொருளாதார இன ரீதியில் தேசிய சமூகம் ஒன்றுக்கான கட்டமைப்பே ஆட்டம் கண்டுவிடும்.

எனவே இந்த கொவிட் 19 பெருந்தொற்று அனுபவத்தை அடிப்படையாக கொண்டாவது பாடங்களை கற்று அடுத்தக் கட்ட நகர்வை ஆக்கப்பூர்வமானதாக மேற்கொள்ள பொறுப்புக்கூற வேண்டிய மலையக அரசியல்வாதிகளும் புத்திஜீவிகளும் முன்வர வேண்டும்.  

பன். பாலா 

Comments