எரிபொருள் விலை அதிகரிப்பு உருவாக்கிய அரசியல் சர்ச்சை! | தினகரன் வாரமஞ்சரி

எரிபொருள் விலை அதிகரிப்பு உருவாக்கிய அரசியல் சர்ச்சை!

கொரோனா தொற்று பரவுதலின் மூன்றாவது அலையைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அரசாங்கத்தினால் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணத் தடை நடவடிக்கை சுமார் ஒரு மாத காலத்தை எட்டவுள்ள தற்போதைய நிலையில், எரிபொருள் விலைகளை அதிகரிப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் அரசியல் அரங்கத்தில் சமீப நாட்களாக பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் வலு சக்தி அமைச்சர் உதய கம்மன்பில எரிபொருள் விலை அதிகரிப்புக் குறித்த அமைச்சரவைத் தீர்மானத்தை அறிவித்திருந்தார். உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலையில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பு, அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கைப் பெறுமதியின் வீழ்ச்சி போன்ற காரணங்களால் எரிபொருள்களின் விலைகளை அதிகரிக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் சுட்டிக் காட்டியிருந்தார்.

வாழ்க்கைச் செலவு தொடர்பான அமைச்சரவை உபகுழு வழங்கிய அங்கீகாரத்துக்கு அமைய எரிபொருட்களின் விலைகளில் திருத்தம் மேற்கொள்ளப்படுவதாகவும்,  எரிபொருளை குறைந்த விலையில் விற்பனை செய்வதால் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு ரூபா 331 பில்லியன் (ரூ. 33,100 கோடி) நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் அமைச்சர் உதய கம்மன்பில சுட்டிக் காட்டியிருந்தார்.

ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் இந்த அறிவிப்பினை வெளியிட்டிருந்த நிலையில், இதற்கு முதலில் எதிர்ப்புத் தெரிவித்தது என்னவோ ஆளும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியாகும். அக்கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் அறிக்கையொன்றை உடனடியாக வெளியிட்டு, எரிபொருள் விலையேற்றத்துக்கு தமது கட்சி சார்பில் அதிருப்தியை வெளியிட்டிருந்ததுடன், பயணக் கட்டுப்பாடுகளால் முடக்கப்பட்டுள்ள மக்களுக்கு மேலும் சுமையை ஏற்றும் வகையில் எரிபொருள் விலையை அதிகரித்தமைக்கு அமைச்சர் உதய கம்மன்பில பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் எனவும் கோரியிருந்தார்.

தமது இந்த நிலைப்பாட்டில் எந்த விதமான மாற்றமும் இல்லையென்றும் பொதுஜன பெரமுன பொதுச் செயலாளர் சாகர காரியவசம் வலியுறுத்தியிருந்தார்.

எரிபொருள் விலையேற்றம் தொடர்பில் உதய கம்மன்பில மற்றும் சாகர காரியவசம் ஆகியோரின் கருத்துகளையடுத்து இவ்விடயத்தில் ஆளும் கட்சிக்குள் இரட்டை நிலைப்பாடு உள்ளதா என சந்தேகிக்கும் நிலைமை தவிர்க்க முடியாமல் ஏற்படலாயிற்று. 

எனினும், எரிபொருள் விலையில் மாற்றம் ஏற்படுத்துவது தொடர்பில் தான் தனித்து முடிவெடுக்கவில்லையென்றும், அமைச்சரவை உபகுழுவின் தீர்மானத்துக்கு அமைச்சரவை கூட்டுப் பொறுப்புடன் இணக்கம் தெரிவித்திருந்ததாகவும் அமைச்சர் உதய கம்மன்பில மீண்டும் விளக்கமளித்திருந்தார்.

நிதி அமைச்சர் என்ற ரீதியில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் இத்தீர்மானத்தில் கையொப்பமிட்டிருந்தமையையும் அமைச்சர் உதய கம்மன்பில நினைவுபடுத்தினார். அமைச்சரின் இந்தக் கூற்றுக்கு வலு சேர்க்கும் வகையில் ஜனாதிபதி ஊடகப் பிரிவினால் அறிக்கையொன்றும் வெளியிடப்பட்டிருந்தது.

எரிபொருள் விலை அதிகரிக்கப்படுவதற்கு முக்கிய காரணங்களாக அமைந்த பல விடயங்கள் குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினதும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினதும் சம்பந்தப்பட்ட துறைகளுக்குப் பொறுப்பான அமைச்சர்களினதும் பங்குபற்றலுடன் இடம்பெற்ற வாழ்க்கைச் செலவு குழுவில் கவனம் செலுத்தப்பட்டது. இங்கு எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கு அமையவே எரிபொருள் விலையில் மாற்றம் செய்ய முடிவெடுக்கப்பட்டது என அந்த அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டிருந்தது. அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டிருப்பதாவது:

'உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலை கடந்த சில மாதங்களாக தொடர்ச்சியாக அதிகரித்தமை இவற்றில் முக்கிய காரணமாகும். தற்போது மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 70 அமெரிக்க டொலர்களைக் கடந்துள்ளதுடன், அது மேலும் அதிகரிக்கக் கூடுமென சந்தை போக்குகளின் மூலம் தெரிய வருகின்றது.

எரிபொருள் இறக்குமதிக்காக பெருமளவு அந்நிய செலாவணியைச் செலவிடும் ஒரு நாடு மட்டுமன்றி, அந்த இறக்குமதியிலேயே நாட்டின் போக்குவரத்துச் சேவைகள், மின்சார உற்பத்தி என்பன தங்கியுள்ளன. இதன் மூலமே சில தொழிற்சாலைகளும் இயங்குகின்றன.

2019ஆம் ஆண்டில் மட்டும் எண்ணெய் இறக்குமதிக்காக 3,677 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அந்நிய செலாவணி செலவிடப்பட்டுள்ளது. வாகன இறக்குமதியைத் தடை செய்தமை மற்றும் சர்வதேச எண்ணெய் விலைகள் 2019ஆம் ஆண்டில் பீப்பாய் ஒன்றுக்கு 68.80 அமெரிக்க டொலர்களிலிருந்து 2020ஆம் ஆண்டு 45.57 அமெரிக்க டொலர்கள் வரை குறைவடைந்தமை காரணமாக 2020ஆம் ஆண்டில் இந்தச் செலவை 2,325 மில்லியன் அமெரிக்க டொலர்களாகக் குறைத்துக் கொள்ள முடிந்தது.

இருப்பினும், தற்போது நிலவும் விலை அதிகரிப்பு காரணமாக, 2021ஆம் ஆண்டில் பீப்பாய் ஒன்றின் விலை 70 அமெரிக்க டொலர்களையும் கடந்திருக்கும் சூழலில், வாகன இறக்குமதித் தடையைத் தொடர்ந்தும் பேணுகின்ற போதும், மசகு எண்ணெய் இறக்குமதிக்காகச் செலவிடப்படும் அந்நிய செலாவணி சுமார் 4,000 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்திருக்கின்றது. இந்தச் செலவு, மொத்த அந்நிய செலாவணியை ஈட்டும் ஏற்றுமதி வருமானத்தில் சுமார் மூன்றில் ஒரு பங்காகும்.

அந்நிய செலாவணியை செலவிடுவதற்கு மேலதிகமாக, இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனமானது நட்டத்தில் இயங்கும் ஒரு நிறுவனமாக இருக்கின்ற காரணத்தினால், ஒவ்வொரு வருடமும் இலங்கை வங்கியிலும் மக்கள் வங்கியிலும் கடனில் தங்கியிருக்கும் ஒரு நிறுவனமாக மாறியுள்ளது. இந்த இரண்டு வங்கிகளுக்கும், சுமார் 652 பில்லியன் ரூபா கடனை தற்போது செலுத்த வேண்டியுள்ளது.

மேற்படி இரண்டு வங்கிகளுக்கும், இலங்கை மின்சார சபையும் சுமார் 85 பில்லியன் ரூபா  கடனைச் செலுத்த வேண்டி இருப்பதால், இதற்காக அரச வங்கிகள் வழங்கியுள்ள கடன்களுக்கு திறைசேரியினால் பிணைமுறிகள் வழங்கப்பட்டுள்ளன. அத்துடன், இக்கடன்களுக்காக அதிக வட்டியும் செலுத்த வேண்டியுள்ளது.

தனியார் மற்றும் பொதுப் போக்குவரத்துச் சேவைகளுக்காகப் பயன்படுத்தப்படும் சுமார் 60 சதவீதமான எரிபொருள் பாவனை குறைக்கப்பட வேண்டும். எனவே, போக்குவரத்துக்காக மின்சாரக் கார்களைப் பயன்படுத்துவதுடன், புகையிரத சேவைகளை முடியுமானளவு மின்சாரத்தினால் இயங்கும் சேவைகளாக மாற்றவும் வேண்டும். எரிபொருள்களால் இயங்கும் வாகனங்கள் இறக்குமதி செய்யப்படுவது முழுமையாக நிறுத்தப்பட்டு, மின்சாரக் கார் பாவனை ஊக்குவிக்கப்பட்டு, முச்சக்கர வண்டிகளுக்கும் மின்சார என்ஜின்களை வழங்குவதன் மூலம் போக்குவரத்துச் செலவுகளைக் குறைத்துக் கொள்ள முடியும்.

எனவே, இந்த விலை அதிகரிப்பானது, சுதேச பொருளாதாரத்தை வலுப்படுத்தும் பொது நிகழ்ச்சித் திட்டத்தின் ஒரு முக்கிய அம்சம் மட்டுமே ஆகும். இது நாட்டின் வங்கி முறைமையை பலப்படுத்தி, குறைந்த வட்டி வீதத்தைப் பேணுவதற்கும் அந்நிய செலாவணியை குறைத்து, செலாவணி வீதத்தைப் பலப்படுத்தவும், மக்களின் சுகாதார, நலன் பேணலைப் பாதுகாக்கவும், இறக்குமதியின் மீது தங்கி இருக்கும் நுகர்வுப் பொருளாதாரத்தை தேசிய உற்பத்தியின் மீது தங்கியிருக்கும் முதலீட்டு நுகர்வுப் பொருளாதாரமாக மாற்றுவதற்கும் எடுக்கப்பட்ட தீர்மானமாகும்.'  இவ்வாறு அந்த அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மற்றும் அமைச்சரின் நிலைப்பாடுகள் சர்வதேச எரிபொருள் விலை அதிகரிப்புக்கு ஏற்ப யதார்த்தபூர்வமானதாக இவ்வாறானதாக இருக்கும் நிலையில், பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளரின் நிலைப்பாடு வேறுபட்டதாக அமைந்துள்ளமைதான் சர்ச்சைக்குக் காரணமாக அமைந்தது.

பொதுஜன பெரமுன கட்சியை உருவாக்குவதில் முதுகெலும்பாகச் செயற்பட்ட முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ நாட்டில் இருந்திருந்தால் எரிபொருள் விலை அதிகரிப்புக்கு இடமளித்திருக்க மாட்டார் என இராஜாங்க அமைச்சர்கள் சிலர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்திருந்தனர். இதற்கிடையில் அமைச்சர் உதய கம்மன்பில பதவி விலக வேண்டும் என பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் கூறிய கருத்துக்கு எதிராக ஆளும் கட்சியின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் இணைந்து போர்க் கொடி தூக்கியுள்ளனர்.

எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பிலான தீர்மானத்தின் பொறுப்பை அமைச்சர் உதய கம்மன்பில மீது சுமத்தும் முயற்சியைக் கண்டிப்பதாக அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் 8 பங்காளிக் கட்சிகள் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக் காட்டியுள்ளன.

பொதுஜன பெரமுனவின் பங்காளிக் கட்சிகளான ‘எங்கள் மக்கள் சக்தி கட்சி’ சார்பில் அத்துரலிய ரத்தன தேரரும், தேசிய சுதந்திர முன்னணியின் சார்பில் அமைச்சர் விமல் வீரவன்சவும், ஜனநாயக இடதுசாரி முன்னணியின் சார்பில் அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவும், லங்கா சமசமாஜ கட்சியின் சார்பில் பேராசிரியர் திஸ்ஸ வித்தாரணவும், தேசிய காங்கிரஸ் சார்பில் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். அதாவுல்லாவும், ஸ்ரீலங்கா கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஜி.வீரசிங்கவும், எக்சத் மஹஜன கட்சியின் சார்பில் டிரான் அலஸூம், இலங்கை மக்கள் கட்சி சார்பில் அசங்க நவரத்னவும் இந்த அறிக்கையில் கையொப்பமிட்டுள்ளனர்.

சாகர காரியவசத்தின் கருத்தினால் மக்கள் மத்தியில் அரசாங்கம் அநாவசிய நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளது என்பதே உண்மை நிலையாகும். எரிபொருள் விலையேற்றம் தொடர்பான தீர்மானம் ஜனாதிபதி தலைமையில், பிரதமரும் கலந்து கொண்ட வாழ்க்கைச் செலவு தொடர்பான அமைச்சரவை உப குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்டிருந்தது. இதில் அமைச்சரின் தனிப்பட்ட தீர்மானம் எதுவும் இல்லையென்றும் அக்கட்சிகள் தெளிவுபடுத்தியுள்ளன.

ஜனாதிபதி மற்றும் பிரதமர் எடுத்த தீர்மானத்தை சவாலுக்கு உட்படுத்துவதன் மூலம் பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் அரசாங்கத்திற்குள் குழு ரீதியிலான பிளவை ஏற்படுத்துவதற்கு முயல்கின்றாரா என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது எனவும் பங்காளிக் கட்சிகள் தெரிவித்துள்ளன.

ஆளும் கட்சிக்குள் முன்னுக்குப் பின் முரணான கருத்துகள் காணப்படும் நிலையில், பிரதான எதிர்க் கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தனது பங்காளிக் கட்சிகளுடன் இணைந்து அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானமொன்றை பாராளுமன்றத்தில் கொண்டு வருவதற்கு முயற்சிகளை எடுத்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையில் எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட எதிர்க் கட்சி உறுப்பினர்கள் பலரும் கைச்சாத்திட்டுள்ளனர்.

எதிர்வரும் 22ஆம் திகதி கூடவிருக்கும் பாராளுமன்றத்தில் இந்தப் பிரேரணை சபாநாயகரிடம் கையளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாளாந்த வருமானத்தில் தங்கியிருக்கும் பலர் பயணக் கட்டுப்பாடுகளால் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், எரிபொருள் விலையேற்றம் அவர்களைப் பாதித்திருக்கும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.

இருந்த போதும் அரசாங்கமும் பல்வேறு வழிகளில் தனது வருமானத்தை இழந்துள்ளதை இன்றைய நிலையில் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. வருமானங்களை இழந்துள்ள நிலையிலும் மக்களுக்கான சேவைகளை இடையூறின்றி அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது. இவ்வாறான சூழ்நிலையில் உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலையில் ஏற்பட்ட மாற்றம் இலங்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கலாம் என்பதே உண்மை நிலையாகும்.

இவ்வாறான பின்னணியில் குழம்பிய குட்டையில் மீன்பிடிப்பதற்கு எதிரணியினர் தயாராகி வருகின்றனர். கொவிட் தொற்றினால் ஏற்கனவே நொந்து போயுள்ள மக்களை தமது அரசியல் நோக்கங்களுக்காக மேலும் நோகடிக்கச் செய்யாமல் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை முன்னெடுக்க எதிர்க் கட்சியினரும் முன்வர வேண்டும் என்பதுதான் இன்றைய யதார்த்தம் ஆகும்.


 

Comments