கள்ளச் சாராயத்தை கட்டுப்படுத்தலாம் | தினகரன் வாரமஞ்சரி

கள்ளச் சாராயத்தை கட்டுப்படுத்தலாம்

மதுவும் விபசாரமும் உலகில் இருந்து ஒழித்துக்கட்ட முடியாத இரண்டு விஷயங்களாகவும், மனிதனின் மாறா பழக்கங்களாகவும் கருதப்பட்டாலும் இவை இரண்டுமே கட்டுப்பாட்டில் வைக்கப்பட வேண்டியவை என்பதில் எவருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

இலங்கையை எடுத்துக் கொள்வோமானால் இந்நாடு என்றைக்குமே மது விலக்குக்கு உள்ளான நாடல்ல. அரசர் காலத்தில் இருந்த கள் பாவனை பிரிட்டிஷ் ஆட்சியின்போது சாராயமானது. கள்ளில் இருந்து சாராயம் வடிகட்டப்பட முடியும் என்பதை வெள்ளையர்களே சுதேசிகளுக்கு கற்றுக்கொடுத்தனர். கொலனி ஆட்சியில் அதிகாரபூர்வமாக சாராயம் தயாரித்து தவறணைகள் அமைக்கப்பட்டு அதனூடாக மது விற்பனை செய்யப்பட்டதன் மூலம் அரசு வரிவருமானம் பெற்ற அதே சமயம் இலங்கையில் சாராய முதலாளிமார் ஒரு பணபலம் மிக்க தனிப்பிரிவினராக உருவெடுத்தனர். தென்னிலங்கையில் விசாலமான தென்னத் தோட்டங்களுக்கும் வடிசாலைகளுக்கும் உரிமையாளர்களாக மாறிய அவர்கள் பிற்காலத்தில் அரசியலுக்கும் வந்தனர். இக்காலப்பகுதியில் தான் மது வடிக்கும் நுட்பங்களைக் கற்றுக் கொண்டோர் நாடெங்கும் மலிவு விலையில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்யத் தொடங்கினர்.

தற்போது பெருந்தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் ஒரு உத்தியாக நாடெங்கும் சட்ட பூர்வமான மதுக்கடைகள் பூட்டப்பட்டுள்ளன. ஒன்லைன் மூலம் சுப்பர் மார்க்கட் ஊடாக மதுவிற்பனை செய்ய கலால் திணைக்களம் தீர்மானம் மேற்கொண்ட போதிலும் பெருந்தொற்று தடுப்புக்குழு அந்த யோசனையை நிராகரித்துள்ளது. எனினும் ‘குடி’மக்களின் தாகம் தீர்க்க நாடெங்கும் கள்ளச்சாராயம் காய்ச்சப்பட்டு அதிக விலைக்கு, பொலிஸ் கெடுபிடிகளின் மத்தியிலும், அமோகமாக விற்பனை செய்யப்படுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இலங்கையிலேயே அதிக மதுவிற்பனை வடக்கிலும், அதிகளவிலான மதுக்கடைகள் மலையகத்திலும் காணப்படுவதாக ஒரு பழைய செய்தி உண்டு. அது இன்றைக்கும் புதிது போலத்தான் உள்ளது. தற்போது மலையக மதுக்கடைகள் பூட்டப்பட்டுள்ள நிலையில் கள்ளச் சாராயம் காய்ச்சப்படுவது  பன்மடங்காக அதிகரித்துள்ளதாக அறிய முடிகிறது.

எனினும் விடாக்கண்டனும் கொடாக்கண்டன் போல கலால் திணைக்களத்தினரும் பொலிசாரும் பெருந்தோட்டப் பகுதிகளில் திடீர் சுற்றிவளைப்புகளை மேற்கொண்டு சாராயம் வடிப்போரை சட்டத்தின் முன் நிறுத்தி வருகிறார்கள். எனினும் இலாபம் அதிகம் என்பதாலும், தனக்கு பதிலாக பிடிபட்டு தண்டனை பெறப் பலர் தயாராக இருப்பதாலும், சிற்றூர்களில் ‘மரியாதை’ மிக்க மனிதராக வலம்வர முடியும் என்பதாலும் இத்தொழிலை நடத்துவோர் தொழிலை கைவிடுவதில்லை.

இரத்தினபுரி நிவித்திகலையில் ஒரு நபர் கள்ளச்சாராய முதலாளியைக் காட்டி கொடுக்க, சிறை சென்று வெளியே வந்த அவர் காட்டிக் கொடுத்தவர் வீட்டையே அடித்து நொறுக்கிய சம்பவம் கடந்த வாரம் இடம்பெற்றிருந்தது. தடியெடுத்தவர் தண்டல்காரன் என்பதுபோல இவர்கள் மலையக மற்றும் கிராமப் புறங்களில் செயல்பட்டு வருகின்றனர் என்பதற்கு இது ஒரு பொருத்தமான உதாரணம்.

நுவரெலியா எல்பொட தோட்டத்தில் சமீபத்தில் கள்ளச்சாராயத்துக்கு எதிராக ஒரு எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதேபோல புபுரஸ்ஸ ஸ்டெவன் பேர்க் கீழ்ப்பிரிவில் கள்ளச்சாராயத்துக்கு ஆதரவாகவும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றதும் குறிப்பிடத்தக்கது. நுவரெலியா ரெட்டைப் பாதையில் அமைந்திருக்கும் செல்வகந்தை தோட்டத்தில் பொலிசாரின் தொடர் சுற்றிவளைப்புகளின் பின்னர் கள்ளச்சாராய விற்பனை அங்கே குறைந்திருப்பதாகவும் அறிய முடிகிறது. புசல்லாவ ரொச்சல்ட் தோட்டத்தில் அடிக்கடி பொலிஸ் சுற்றிவளைப்பு நடைபெறுவதாகவும் அதேசமயம் புசல்லாவ மெல்போர்ட் தோட்டத்தில் பொலிஸ் கெடுபிடிகளுக்கு மத்தியிலும் கள் விற்பனை நடைபெறுவதாகவும் தகவல் உள்ளது. டயகமையில் கடந்த வாரம் 17 பேர் கைது செய்யப்பட்டனர்.

மதுக்கடைகள் திறந்திருக்கும் சமயங்களிலேயே கள்ளச்சாராயம் அமோகமாக விற்பனையாகி  வருகிறபோது கடைகள் அடைக்கப்பட்டுள்ள இச் சந்தர்ப்பத்தில் நாடெங்கும் கள்ளச்சாராய விற்பனை அதிகரித்திருப்பதில் ஆச்சரியம் இருக்க முடியாதுதான்.

மலிவு விலையில் சாராயம் கிடைப்பதால் சாதாரண மக்கள் அதை நாடுகின்றனர். கொழுத்த இலாபம் கிடைப்பதால் தடைகளை மீறி அதைக் காய்ச்சுகிறார்கள். இப் பின்னணியில் சுற்றிவளைப்பு, தண்டனை என்ற அளவில் இவ்விடயத்தைப் பார்ப்பதா அல்லது வேறு வகையில் இப் பிரச்சினையைக் கையாள்வதா என்பது தீர்மானிக்கப்பட வேண்டும்.

மலையக பெருந்தோட்டங்களில் என்றைக்கும் மதுப்பழக்கம் அதிக அளவில் இருந்தே வந்திருக்கிறது. ஆனால் மலையகத் தொழிற்சங்கங்களும், அரசியல் தலைமைகளும் இத் தமிழ் சமூகத்தின் சிவில் வாழ்க்கை மேம்பாட்டில் பெரிய அளவில் அக்கறை கொள்ளவில்லை. குறிப்பாக மதுப்பழக்கதுக்கு எதிராக உருப்படியாக எந்தத்திட்டத்தையும் முன்வைக்கவில்லை. தற்போது பழைய தலைமுறையினர்  மடிந்து புதிய தலைமுறை தழைத்தோங்கியுள்ள சூழலில் படித்த இளைஞர்களைப் பயன்படுத்தி கள்ளச்சாராய பாவனையில் இருந்து ‘குடி’மக்களை மீட்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுமானால் செயற்பாடுகள் மூலமே கள்ளச்சாராய பாவனையாளர் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும்.

தற்போது மதுக்கடைகள் பூட்டப்பட்டுள்ளன. எனினும் இப்பழக்கமுள்ளவர்களில் மிகப் பெரும்பான்மையோர் மதுவைத் தேடி அலையாமல் வழமைபோல் வாழ்ந்து வருகின்றனர். மதுவின்றியும் அமைதியாக வாழ பெரும்பாலானோருக்கு முடிந்துள்ளது. என்பதை உதாரணமாக, ஒரு சாதகமான அம்சமாக எடுத்துக் கொள்ளலாம்.

இதே சமயம் கள்ளச் சாராயம் காய்ச்சுபவர்களுக்கு தண்டப்பணம், ஜெயில் தண்டனை மட்டும் வழங்கப்படாமல் அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் திட்டங்களை செயற்பாட்டுக்கு கொண்டுவரலாம். தொழில் பயிற்சி, வங்கிக் கடன் உதவி, தொழில்நுட்ப உதவி வழங்கப்படுவதன் மூலம் இத் தொழிலில் இருந்து அவர்களை மீட்கலாம். காய்ச்சுபவர், அதை அருந்துபவர் என இரு தரப்பினரையும் கையாள்வதன்மூலம் நாடெங்கும் கள்ளச்சாராய பாவனையை பெருமளவில் குறைக்க முடியும்.

Comments