இந்திய உயர்ஸ்தானிகர் மேற்கொண்ட அவசர சந்திப்புகளின் பின்னணி என்ன? | தினகரன் வாரமஞ்சரி

இந்திய உயர்ஸ்தானிகர் மேற்கொண்ட அவசர சந்திப்புகளின் பின்னணி என்ன?

கொரோனா தொற்றுக்கு எதிரான தடுப்பூசி ஊடான சுகாதாரப் பாதுகாப்பு மற்றும் கொழும்பு துறைமுக நகரத்தின் ஊடாக பொருளாதார ஊக்குவிப்பு என்றெல்லாம் பல்வேறு துறைகளில் சீனாவின் உதவி அல்லது முதலீடு இலங்கையில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

நாடு எதிர்கொண்டுள்ள பெருந் தொற்று நோய் சூழலில் அதிகளவான தடுப்பூசிகளை இலங்கைக்கு வழங்கிய நாடாக சீனா காணப்படுகிறது. கொரோனா சவாலுக்கு மத்தியிலும் சீனாவின் ஒத்துழைப்புடன் முன்னெடுக்கப்படும் கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு ஆணைக்குழுவுக்கான உறுப்பினர்களும் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவுகள் நாளுக்கு நாள் அதிகரித்து புதியதொரு இடத்துக்குச் சென்று வருகின்ற தற்போதைய சூழ்நிலையில், இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான நெருக்கம் தொடர்பில் இந்தியா உன்னிப்பாக அவதானித்து வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தெற்காசிய பிராந்தியத்தில் தவிர்க்க முடியாத சக்தியாகவிருக்கும் இந்தியா, ஆபத்தானதும் அவசரமானதுமான சூழ்நிலைகளில் இலங்கைக்கு கைகொடுக்கும் நட்பான அயல்நாடாகும். இருந்த போதும், இலங்கையின் சீன சார்பான செயற்பாடுகள் புதுடில்லியை திருப்திப்படுத்தியிருப்பதாகத் தெரியவில்லை. இந்தியாவின் சமீப கால போக்குகள் இதனை நன்றாகவே புரிய வைக்கின்றன.

இவ்வாறான சூழ்நிலையிலேயே கடந்த சில வாரங்களில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் இலங்கையில் பல்வேறு உயர்மட்டச் சந்திப்புக்களில் ஈடுபட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது. இந்தச் சந்திப்புகளில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களுடன் கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற சந்திப்பு குறிப்பிடத்தக்கதாக அமைந்துள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான குழுவினருக்கும், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவுக்கும் இடையில் நடைபெற்ற இச்சந்திப்பில், தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகள் பற்றியும் பிரஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

சமத்துவம், சமாதானம், நீதி மற்றும் நல்லிணக்கம் ஆகியவற்றுக்கான தமிழ் மக்களின் அபிலாசைகளுக்கு அமைவாகவும் வலுவான இலங்கையை உருவாக்கவும் 13ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துதல் என்ற அடிப்படையில் ஐக்கிய இலங்கை என்ற கட்டமைப்பிற்குள் அதிகாரங்களை பகிர்வதற்கு இந்தியா ஆதரவினை வழங்கும் என்ற விடயத்தையும் உயர்ஸ்தானிகர் தமிழ்க் கூட்டமைப்பிடம் வலியுறுத்தியுள்ளார்.
வடக்கு, கிழக்கு மக்களின் அபிவிருத்திக்கான அபிலாசைகள் மற்றும் அதிகாரப் பகிர்வு குறித்த பல்வேறு நோக்குகள் தொடர்பாகவும் இச்சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டிருந்தது. இலங்கையின் அரசியலமைப்பு மற்றும் ஆட்சியமைப்பின் ஒருங்கிணைந்த பகுதியான   மாகாணசபை தேர்தல்கள் தொடர்பான தற்போதைய நிலைமை குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் இந்திய உயர்ஸ்தானிகருக்கு விளக்கிக் கூறியுள்ளனர்.

அது மாத்திரமன்றி வடக்கு, கிழக்குப் பகுதிகளில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்திகள் தொடர்பிலும் கருத்துப் பரிமாற்றங்கள் இடம்பெற்றுள்ளன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் இடையில் சந்திப்பொன்று நடைபெறவிருந்து இறுதி நேரத்தில் அது பிற்போடப்பட்ட நிலையில், முன்னரே திட்டமிடப்பட்டபடி இந்திய உயர்ஸ்தானிகருக்கும், தமிழ்க் கூட்டமைப்பினருக்கும் இடையில் இச்சந்திப்பு நிகழ்ந்துள்ளது.

இலங்கையின் மின்வலுத்துறையில் முதலீடு செய்வதில் இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையில் ஏற்கனவே போட்டியொன்று காணப்படும் சூழலில், இது தொடர்பில் இலங்கையுடன் ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்ட மறுநாள் தமிழ்க் கூட்டமைப்பினருடன் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

யாழ்குடாநாட்டில் உள்ள தீவுப் பகுதிகளில் சூரியமின்கலங்களைக் கொண்ட மின்னுற்பத்தி நிலையங்களை அமைக்கும் ஒப்பந்தத்தை சீனாவுக்கு வழங்க இலங்கை முன்னர் தீர்மானித்திருந்தது. எனினும், இந்தியாவின் தலையீட்டைத் தொடர்ந்து அரசின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டது. இந்த நிலையில் சூரியக்கல மின்சக்தித் திட்டங்களுக்காக இந்திய அரசாங்கம் கடந்த புதன்கிழமை இலங்கைக்கு 100 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவியை வழங்கியுள்ளது.

மின்சக்தி துறையில் பல்வேறு திட்டங்களை முன்னெடுப்பதற்காக நூறு மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான கடன் வசதிகளை வழங்குவதற்கான உடன்படிக்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் கைச்சாத்திடப்பட்டது. இதில் இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே மற்றும் திறைசேரி செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல ஆகியோர் கைச்சாத்திட்டனர். மின்சக்தித் துறையில் தனது இருப்பினை உறுதிப்படுத்தும் வகையில் இந்தியாவின் இந்தக் கடனுதவித் திட்டம் அமைந்துள்ளது என அரசியல் அவதானிகள் சுட்டிக் காட்டுகின்றனர்.

இது தவிரவும், இம்மாதத்தில் இந்திய உயர்ஸ்தானிகர் மேலும் சில உயர்மட்ட சந்திப்புக்களை நடத்தியிருந்தார். இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பாதுகாப்பு உறவுகளைப் பலப்படுத்துவது தொடர்பில் பாதுகாப்புச் செயலாளர் கமல் குணரட்னவுடன் நடைபெற்ற சந்திப்பு இவற்றில் ஒன்றாகும்.

பிராந்தியத்திலும் பகிரப்பட்ட கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதியிலும் சமாதானம் மற்றும் பாதுகாப்பிற்கான ஒத்துழைப்பின் முக்கியத்துவம் தொடர்பில் இச்சந்திப்புக்களில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

பாதுகாப்புச் செயலாளருடனான சந்திப்புக்கு முன்னர் இந்திய உயர்ஸ்தானிகர், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை நேரில் சந்தித்துக் கலந்துரையாடல்களை நடத்தியிருந்தார். பொருளாதாரம், முதலீடு மற்றும் நிதி ஒத்துழைப்பு உள்ளிட்ட பரந்தளவிலான இருதரப்பு விவகாரங்கள் குறித்து இச்சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டிருந்தது.

இந்தச் சந்திப்புகள் யாவும் ஒரு சில நாட்கள் இடைவெளியில் தொடர்ச்சியாக இடம்பெற்றுள்ளன. இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவுகள் வலுப்பட்டு வரும் நிலையிலேயே இச்சந்திப்புக்களும் இடம்பெற்றுள்ளன.
கொவிட் சவாலுக்கு இலங்கை முகங்கொடுத்திருந்த சூழலில் முதன் முதலில் உதவிக் கரம் நீட்டிய நாடாக இந்தியா விளங்குகின்றது என்பதையும் இவ்விடத்தில் குறிப்பிட்டுக் கூற வேண்டியுள்ளது.

முதன் முதலில் இலங்கைக்கு கொரோனாவுக்கு எதிரான 5 இலட்சம் தடுப்பூசிகளை இந்தியா வழங்கியிருந்தது. அடுத்த ஐந்து இலட்சம் தடுப்பூசிகளுக்கான ஓடரை இலங்கை வழங்கியிருந்த போதும், இந்தியாவில் ஏற்பட்ட நெருக்கடியினால் எமது நாட்டுக்கு தடுப்பூசிகளை வழங்க முடியாத நிலைக்கு இந்தியா தள்ளப்பட்டது.
இவ்வாறான பின்னணியில் சீனாவின் தடுப்பூசிக்கு உலக சுகாதார ஸ்தாபனம் அங்கீகாரம் வழங்கியதும், இலங்கைக்கு பல இலட்சம் தடுப்பூசிகளை சீனா வழங்கத் தொடங்கியது. இது சில வேளைகளில் இந்தியாவுக்கு சங்கடத்தைக் கொடுத்திருக்கலாம் என்று இந்தியாவின் அரசியல் அவதானிகள் சிலர் கருதுவதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்திருந்தன.

எனினும், இலங்கையின் பூகோள அமைவிடம் காரணமாக இலங்கையுடன் நட்புப் பாராட்டுவதற்குப் பல நாடுகள் முயற்சிக்கின்றன. இந்தியாவைப் பொறுத்த வரையில் இலங்கையுடன் பல நூற்றாண்டு கால தொடர்புகள் கொண்ட நாடாக அது விளங்குகின்றது.

சுதந்திரத்துக்குப் பின்னரான இலங்கையின் வரலாற்றை எடுத்து நோக்கும் போது இலங்கையில் உள்நாட்டுக் கிளர்ச்சிகள் உக்கிரமடைந்த வேளைகளிலும் ஏனைய நெருக்கடி சமயத்திலும் உடனடியாக கைகொடுத்து உதவியளித்த நாடாக இந்தியா விளங்குகின்றது. இந்த அயலுறவு நட்பானது தொடர்ந்தும் நீடித்தபடியே வருகின்றது.

பி.ஹர்ஷன்

Comments