கசப்பும் இனிப்பும் | தினகரன் வாரமஞ்சரி

கசப்பும் இனிப்பும்

கசப்பு-1

‘சீனப் பட்டாசு’ என்பது புதிதான பொருளல்ல. உலகப்பிரசித்தம்.  இந்தியா முழுக்க ஒவ்வொரு தீபாவளியிலும் கோடிக்கணக்கில் இறக்குமதி செய்து  வெடிக்க வைப்பார்கள். என்றாலும் இப்போது இல்லை. தடை!  

இந்தச் சீனப்பட்டாசு ஒருவெடிச் சமாசாரமாக இருந்தாலும், சில  எதிர்பாரா சம்பவங்கள், சச்சரவுகள் குடும்பத்திலும் வெளியிலும் நடந்தாலும்  “என்ன இது, சீனப்பட்டாசு வெடிக்கிற மாதிரி’ என்று வர்ணிப்பார்கள். 

பாருங்கள் ஒரு புறம் ‘பயணத்தடை’ என்ற பெயரில் முடங்கிக்  கிடந்தாலும் கிருமித் தொற்றிலிருந்து கடல் பகுதி ஒரு  குட்டித் தீவாக மாறிக் கொண்டிருக்கும் காட்சி வரையில் சீனச் செய்திகளாக பேசித்  தீர்த்துக்கொண்டு தான் இருக்கிறோம். 
எனது பேனா முனை 2011 களிலேயே ஒன்றுக்கு மேற்பட்ட தடவை பத்தி எழுத்து ரூபத்தில் பேசி இருக்கிறது. 

அப்பொழுது கலை இலக்கியச் சஞ்சிகை ‘‘ஞானம்’’  குடும்பத்தி னர்  “சும்மா சும்மா ஓசை இட்டுக் கொண்டிருக்கக் கூடாது. ஓசையில்லாம ஓசைகள்  இடுங்கள் அய்யா’ என்று ஓரிரண்டு பக்கங்களை ஒதுக்கித் தந்தார்கள். 

அந்தத் தலைப்பில் ஓசை இட்டதில்,  

2011 நவம்பர், 138-ஆம் இதழில் 54 ஆம் பக்கத்தில் இப்படியொரு சீனப்பட்டாசு!  
ஒரு வேட்பாளர் வெடிக்க வைத்த ஆய்வுத் தகவல்  

எத்தனை ஆய்வில் மூழ்கி முக்குளித்து முத்தெடுத்தும் என்ன பயன்? 

சமீபத்திய கொழும்பு மாநகரசபைத் தேர்தலில் வேட்பாளராக வந்த  ஒருவர் தமிழரல்லர். தன்னைப் பற்றிய அறிமுக அறிக்கையில் முதல் பந்தியை  ஆய்வுத் தகவலாக இப்படி அமைத்திருந்தார்:- 

14ம் நூற்றாண்டில் கொழும்புக்கு வருகைதந்த வெண்டா யுவான் என்ற  சீன வியாபாரி கொழும்பை “காவோ- லங்-பு” எனக் கூறினார். அதே நூற்றாண்டின்  நடுப்பகுதியில் கொழும்பு வந்த இபுன் பதுதா என்பவர் “கெலன்போய்” என  ஸ்ரீலங்காவை அடையாளம் கண்டார். போர்த்துக்கீசியரான பர்னாவோடி கொறாஸ்  என்பவர் கொழும்பை” கொலொம்போ” என அழைத்தார். 

நான் கொழும்பை எனது ஊர் என கூறுகிறேன்!! 

அட ஆண்டவா! வாக்கு கேட்க இந்த ஆய்வுத் தகவல் எதற்கய்யா? அதுவும் ஆரம்பப் பந்தியிலேயே! 

ஆனால் என் போன்ற ‘மக்கு’களுக்கு ஒன்று புரிந்தது,  “சீனப்பட்டாசு” எழுநூறு ஆண்டுகளுக்கு முன்பும் கொழும்பில்  வெடித்திருக்கிறது! இப்போ வெடிப்பதொன்றும் புதுசல்ல! 

இதே போன்று இன்னொரு “பட்டாசையும் பதினொரு ஆண்டுகளுக்கு முன் வெடித்து ஓசை இட்டிருக்கிறேன்,  

கசப்பு கசப்பாக! 

ஸ்ரீலங்கா – சீனா ஜயவேவா! சீன வகுப்புகளைத் தேடுங்கள் 

விஜிதா யாப்பா என்ற பிரபலமானதொரு புத்தக விற்பனை நிறுவனத்திற்குள் நுழைய நேரிட்டபொழுது அந்தப் புத்தகம் கண்ணில் பட்டுத் தொலைத்தது! 

“சிங்கள- சீன அகராதி”! எடுத்துப் பார்க்காமல் நகர முடியவில்லை. 
களனிப் பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவரது கைவண்ணம் என்பது  மட்டுமல்ல, அங்கே சீனமொழியியல் பிரிவும் உள்ளது என்பதையும் புரிந்து கொள்ள  முடிந்தது. 

கசப்பு-2

இந்நாட்டின் ‘திரு- திருமதி பெரும்பான்மைகள்’ மண்ணில்  மேலோங்கி வரும் சீன ஆதிக்கத்தையும், பரந்த தொழில்துறை வியாபித்தலையும்  உணர்ந்த நிலையில் உரிய நடவடிக்கைகள் மேற்கொண்டிருப்பது துலாம்பரம்.  எதிர்காலத்தைத் துல்லியமாகக் கணக்கிட்டுக் காரியமாற்றத் தொடங்கியுள்ளனர். 

ஆக – என் ஓசை எதிர்ப்பைத் தெரிவிப்பதற்கு அல்ல. நமது மக்கள் –  நமது மக்களின் சந்ததிகள் இலங்கையில் கடைத்தேற வேண்டுமெனின் (அதாவது புலம்  பெயராமல் இங்கேயே இருந்து விடத் தீர்மானிப்போர் வேகமாக – மிக, வேகமாகச் சீன  மொழி கற்றுக் கொள்ளுங்கள்! 

ஒரு காலத்தில், வடக்கிலே, ஆங்கிலம் கற்றார்களே அப்படி!  
இதிலே சோடை போனோமோ! கொழும்பிலும் பிற நகரங்களிலும் முட்டி, மோதப் போகும் சீனர்களைப் பார்த்து ‘பே, பே’ என விழிப்போம். 

கசப்பு-3

சரி, எப்போ பிள்ளை குட்டிகளோடு சீன வகுப்புகளைத் தேடிப் போவோம்? அல்லது நாமே
‘பிசினஸ்’ தொடங்கி விடுவோமா? 

“ஞானம்” – கலை இலக்கிய சஞ்சிகை – டிசம்பர் 2010. 

இனிப்பு-1

இந்தியப் பெரும் தேசத்தில் “NILAGRIS” என ஆங்கிலேயர் ஒரு  மலைப்பகுதிக்குப் பெயர் வைத்தனர். அதை “நீலகிரி” எனத் தமிழில் அழைப்பர்.  அங்கேயும் மனிதர் வாழ்கின்றனர். அவர்களைப் “படகர் இனத்தவர்” எனச் சொல்வர். 

அச்சமூகத்தவர் தங்கள் பெண்களுக்கு வைத்திருக்கிற பெயர்கள்  இங்கே பட்டியல் இடப்படுகின்றன. பார்த்து விட்டு, இப்படியும் கசப்பான  பெயர்களை ஏன் பதிவிடுகிறீர்கள் என்பீர்கள். நானா பெயர் சூட்டியிருக்கிறேன்,  அவர்கள் அவர்கள், படகர்! 

இனிப்பு-2

பெண்களின் பெயர்கள் 

மிக்சி, பெள்ளே, குப்பி, கெப்பி, ரங்கி, கடிகி, சுப்பி,  கப்பி, குன்னி, லிங்கி, சென்னே, கொங்கி, சுங்கி, காங்கி, காடை, மாதி, மாசி, ேலக்சி, கெட்டி, குனிக்கி, காளி, சில்லி, ருக்கி 

எந்தத் தமிழ்ப்பெண்மணியும் இப்படியொரு புடவையை அணிய ஆசைப்படுவாரா? 
ஆசைப்பட்டார் ஒருவர்! 

அதுவும் மனங்கவர் மலேசிய தீபகற்பத்தில்! 

ஆனால் நடந்தது இப்போதல்ல! (அங்கேயும் முடக்கந்தான்!) 

2015ஆம் ஆண்டு ஜனவரியில் உலகத் தமிழராய்ச்சி மாநாடு நடந்த  சமயம் இன்ப அதிர்ச்சி கொடுத்தார். ஒரு பேராளர்! அவர் பூச் சோங் பகுதி  திருமதி பவானி! 
அவரது புடவையை ரசித்த பலருள் நானும் ஒருவன்! அத்தோடு, அவர்  அனுமதியில், என்னென்ன எழுத்துக்கள் இடம் பெற்றிருக்கின்றன என்றும் ஆய்வு  செய்தேன்! 
தலைமைப் பண்புகள் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதற்கு விளக்கம் தரும் மேல்நாட்டு எழுத்தாளர்களின் நூல்கள் நிறைய. 

தமிழில் அபூர்வமே. ஆனாலும் ஒரு நூல் “தலைமைப் பண்புகள் – கம்பர் காட்டியவை” என்பது பெயர். 

கம்பராமாயணப் பாத்திரப் படைப்புகளிலேயே தலைமைப் பண்புகளுக்கு  விளக்கம் இருக்கிறது என்பதை நிரூபித்திருக்கிறார் ஒரு பன்னூலாசிரியர்!  முப்பது நூல்களுக்கு மேல் வெளியிட்டிருப்பவர். 

ராமன் – ராவணன், அனுமன் ஆகியோரை வைத்து தலைமைப்பண்புகள்  எவ்வாறு அமைதல் வேண்டும் என்பதை கம்பர் காட்டியுள்ளதை இனிப்பாக வழங்கி  வியக்கவும் சிந்திக்கவும் வைத்துள்ளார் எழுத்தாளர். 

இவர், இப்பொழுது தமிழக ஆட்சி பீடத்தை இயக்கும்  தலைமையின் கீழ் இயங்கும் செயல் வீரர்களில் ஒருவர் “தலைமைச் செயலர்” என்கிற  அதி உயர் பதவியில் அமர்த்தப்பட்டுள்ளார்.  அவர் இறையன்பு? 

பேனாக்காரர்களுக்குப் பெரிய பெருமை.  இவர் பற்றிய ‘இனிப்புகள் இன்னும் இருக்கின்றன. இடப்பஞ்சம் தீரும் பொழுது பகிர்வேன்.

Comments