மலையகத்துக்கு சூம் கல்வி பொருத்தமானதா? | தினகரன் வாரமஞ்சரி

மலையகத்துக்கு சூம் கல்வி பொருத்தமானதா?

நாட்டுக்கு தேவையான மிகவும் பொருத்தப்பாடுடைய வளமிக்க மனித வளங்களை பெற்றுத்தருவதில் அடிப்படையாகக் காணப்படும் பாடசாலைக் கல்விமுறைகள் இன்று மூடப்பட்டுள்ளன. உலகளாவிய ரீதியில் பரவிவரும் வைரஸ் தொற்றான கொரோனா நமது நாட்டவரையும் விட்டு வைக்கவில்லை.

இதனால் நாட்டின் சகல துறைகளும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் அனைத்தும் மூற்றாக பாதிக்கப்பட்டுள்ளது. பல பரீட்சைகள் பின்போடப்பட்டு இழுபறியாகியுள்ளன. 

மாணவர்கள் தமது எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளதாக அச்சமடைந்து மனவுளைச்சல்களுக்கு உள்ளாக்கியுள்ளனர். இவர்களைவிட பெற்றோர் தமது பிள்ளைகளின் எதிர்காலம் தொடர்பாக சிந்தித்து செய்வதறியாதுள்ளனர். நாட்டுக்கு தேவையான எதிர்கால மனித வளத்தை உருவாக்க அரசு பல்வேறு பிரயத்தனத்தை மேற்கொண்டு வருகின்றது. 

இதற்காக ஒன்லைன் சூம் தொழில்நுட்பம் மூலமான கல்வி நடவடிக்கைகள் தொலைக்காட்சி. வானொலி மூலமாக மாணவர்களது கற்றல் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது. நாட்டிலுள்ள மொத்த மாணவர்களில் 12 சதவீதமான மாணவர்களுக்கு மட்டுமே சூம் தொழில்நுட்பத்தை பயன்படுத்தக்கூடிய 
கனணி மற்றும் போன் வசதிகள் உள்ளதாக ஆய்வொன்று கூறுகின்றது. 

இந்த கணக்கெடுப்பு கூறுவதைவிட மலையகப்பகுதிகளில் தொழில்நுட்ப உபகரணங்கள் வசதியில்லாத மாணவர்களே அதிகம். மலையகத்தில் 90 சதவீதத்திற்கு அதிகமான மாணவர்கள் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களாக காணப்படுகின்றனர். கணினி வசதியானது 1000 மாணவர்களில் ஒருவருக்கேனும் இருப்பது சந்தேகமாக உள்ளது. இவர்களிடம் சாதாரண கைத்தொலைபேசிகளே உள்ளன. இதில் வட்ஸ்அப், ஈமோ, சூம் வசதிகள் எதுவும் இல்லை. தமது பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகளுக்கு தம்மால் உதவ முடியவில்லை. இவர்களுக்கு கணணி மற்றும் கைத்தொலைபேசிகளை பெற்றுக்கொடுக்க பொருளாதார வசதிகள் இல்லையே என கவலையில் ஆழ்ந்துள்ளனர். 

சில வீடுகளில் கணனி அல்லது கைத்தொலைபேசி ஒன்று மட்டும் இருக்கும் சந்தர்ப்பங்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட பிள்ளைகள் இருக்கும்போது எந்த பிள்ளை இதை பயன்படுத்துவது என்ற தர்மசங்கடமான நிலைக்கு பெற்றோர் தள்ளப்படுகின்றனர். இதற்கு மேலாக மூத்த இளைய சகோதர சகோதரிகளுடன் வாக்குவாதம் ஏற்பட்டு முரண்பாடுகள் உருவாகி குடும்ப ஒற்றுமையும் அமைதியும் சீர்குலைந்து விடுகின்றன. இதனால் பிள்ளைகளைவிட பெற்றோரே பெரும் மனவுளைச்சலுக்கு உள்ளாகின்றனர். 

இந்த தொழில்நுட்ப சாதனங்கள் இருப்பவர்களுக்கும் பிரச்சினை உள்ளது. தினமும் நெட்கார்டுகளை கொள்வனவு செய்ய பணவசதி இல்லை. தற்போது ஏற்பட்டுள்ள பொருட்களின் விலைவாசி அதிகரிப்பு, தொழில் இழப்பு காரணமாக பொருளாதார பிரச்சினைக்கு மத்தியில் நெட்கார்டுகளை கொள்வனவு செய்வது எப்படி. காசு கையில் இருந்தாலும் எங்கு போய் நெட்கார்ட் வாங்குவது பயணத்தடை காரணமாக தோட்ட பெட்டிக்கடைகளிலும் இவற்றுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. பல கிலோ மீற்றர் தூரத்துக்கு ஒளிவு மறைவாகச் சென்று நெட்கார்டுகளை பெற்றுகொள்ள வேண்டியுள்ளது.    இன்று மலையகத் தோட்டப்பகுதியில் 40 சதவீதத்திற்கு குறைவானவர்களே தோட்டத் தொழில்துறையில் வேலை செய்கின்றனர். ஏனையோர் வெளியிடங்களில் கடைகள், கட்டடத்தொழில்துறை, ஹோட்டல் துறை, நாட்கூலி, முச்சக்கரவண்டி ஓட்டுதல் போன்ற தொழில்துறையில் ஈடுபட்டு வருபவர்களே அதிகம். 
இவர்களது வருமானம் முற்றாக இல்லாமல் போயுள்ளது. ஒருவேளை உணவுக்கே வழியில்லாத நிலையில் போன், கணனி நெட்கார்ட் வாங்குவது எப்படி. 

போன், கணனி, நெட்கார்ட் என தேவையான தொழில்நுட்ப சாதனங்கள் இருந்தபோதும் மலையகத்தில் அதிகமான பகுதியில் நெட் கவரேஜ் போதியதாக இல்லை.  இதனால் பெரும் சிரமத்துக்குள்ளாகியுள்ள மாணவர்கள் நெட் கவரேஜ் பெற்றுக்கொள்ள மரங்களிலும் மலை உச்சியிலுள்ள கற்பாறைகளிலும் ஏறி தமது ஒன்லைன் கல்வியை தொடரவேண்டியுள்ளது. 

இவ்வாறு வீட்டுக்கு வெளியில் செல்வதால் இவர்களுடைய பாதுகாப்புக்கு உத்தரவாதம் இல்லை. வீட்டிற்கு அருகே வந்து ஆடு மாடுகளை சிறுத்தைகள் வேட்டையாடிச் சென்ற சம்பவங்கள் அண்மைக்காலமாகவே நிகழ்ந்துள்ளன.

காட்டுப்பன்றிகள், அட்டைகள், குளவிகள் என பல்வேறு அச்சுறுத்தலுக்கு மத்தியில் இவர்கள் தமது ஒன்லைன் கல்வியை முன்னெடுக்கும் நிலையில். அண்மைக்காலமாக கடும்மழையும் பெய்து வருகின்றது. மழைக்காலங்களில் வழுக்கும் கற்பாறைகளிலும் மரங்களிலும் ஏறி வழுக்கி விழுந்து ஆபத்தை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. 

இதேவேளை வயதுக்கு வந்த பெண் பிள்ளைகளை தனியே காட்டுப்பகுதிக்கு பாதுகாப்பு இன்றி அனுப்புவது எப்படி? அவர்களுக்கு துணையாகச் செல்வதானால் தமது தொழிலை இழக்க வேண்டியுள்ளது.

இவ்வாறான நிலையில் அவர்களின் பொருளாதாரம் மேலும் பாதிக்கப்படுகின்றன. இவ்வாறு பல சிரமங்களுக்கு மத்தில் சூம் ஊடாக கற்றலை மேற்கொள்வோர் 15 சதவீதத்திற்கும் குறைவாகும்.

இவ்வாறு சூம் ஊடாக கற்பிக்கப்பட்ட பாட பரப்புக்கேற்ப பரீட்சை நடாத்தப்படுமா? அதிகமான மாணவர்கள் சூம் மூலமாக கற்காததால் மீண்டும் பாடசாலைகள் திறந்ததும் இவை மீள கற்பிக்கப்படுமா? என அங்கலாய்க்கின்றனர் மலையக மாணவர்கள்.   

தகவலும் படங்களும் :
தெல்தோட்டை ஆர்.நவராஜா

Comments