தமிழ்க் கைதிகள் விடுதலை: நல்லெண்ண சமிக்ஞையாக தமிழர் தரப்பு கருத வேண்டும்! | தினகரன் வாரமஞ்சரி

தமிழ்க் கைதிகள் விடுதலை: நல்லெண்ண சமிக்ஞையாக தமிழர் தரப்பு கருத வேண்டும்!

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதாகி பல வருட காலமாக சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ்க் கைதிகளின் விடுதலையில் நம்பிக்கை தருகின்ற சமிக்ஞைகள் இப்போது தென்படுகின்றன.

இக்கைதிகள் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் சந்தேகத்தின் பேரில் கைதாகி பல தசாப்த காலமாக சிறைகளில் உள்ளனர். புலிகளுடன் தொடர்பை வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள இவர்கள் ‘அரசியல் கைதிகள்’ என்ற பெயரால் அழைக்கப்பட்டு வந்தாலும், அச்சொல் பயன்படுத்தப்படுவதை பெரும்பான்மையின அரசியல்வாதிகள் ஏற்றுக் கொள்வதாக இல்லை.

அவர்கள் பயங்கரவாத சந்தேக நபர்கள் என்றே குறிப்பிடப்பட வேண்டுமென பெரும்பான்மையின அரசியல்வாதிகளில் சிலர் கூறி வருகின்றனர்.

அரசாங்கங்கள் மாறி மாறி வந்த போதிலும், இவர்களது விடுதலை இன்னுமே சாத்தியமாகாமலே இருந்து வந்தது. கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் இவர்கள் விடுவிக்கப்படுவார்களென்று தமிழர்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால் நல்லாட்சி அரசைத் தாங்குகின்ற பிரதான தூணாக விளங்கிய தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் இந்த விடயத்தில் உருப்படியாக எதனையுமே செய்யவில்லை. நல்லாட்சி அரசின் காலத்தில் அந்த வாய்ப்பு தவறிப் போனது.

2020ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுடன் புதிய அரசாங்கம் உருவான போது, தமிழ்க் கைதிகளின் விடுதலை மறக்கப்பட்ட விடயமாகவே தமிழர் தரப்பினரால் கருப்பட்டது. இக்கைதிகள் ஆயுள் முழுவதும் சிறைகளில் காலம் கழிக்க வேண்டுமென்றே பலரும் கருதினர்.

ஆனால் தமிழ் அரசியல் கைதிகளின் விவகாரத்தில் தற்போது ஏற்பட்டுள்ள திடீர் திருப்பம் ஒருபுறம் வியப்பையும், மறுபுறம் நிம்மதியையும் தோற்றுவித்துள்ளது. பல தசாப்தங்களாக விடுதலைக்காக ஏங்கிக் கொண்டிருக்கும் இக்கைதிகளுக்கு மாத்திரமன்றி, அவர்களது உறவினர்களுக்கும் இப்போது புதிய நம்பிக்கைகள் தோன்றியுள்ளன. 

புனித பொசன் நோன்மதி தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பொதுமன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்ட கைதிகளில் எல்.ரி.ரி.ஈ என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்து தடுத்து வைக்கப்பட்டிருந்த 16 தமிழ் அரசியல் கைதிகளும் உள்ளடங்குகின்றனர் என்பது நம்பிக்கை தருகின்ற செய்தியாகும்.

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு நீண்ட காலமாகத் தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்களே இவ்வாறு பொசன் தினத்தன்று விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி பாராளுமன்றத்தில் உரையாற்றி ஓரிரு நாட்களில் இந்த தமிழ்க் கைதிகளின் விடுதலை இடம்பெற்றுள்ளமை இங்கு முக்கியமான விடயமாகும்.

தமிழ்க் கைதிகள் விடுதலை விவகாரத்தில் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ எப்பொழுதும் சாதகமான நிலைப்பாட்டைக் கொண்டுள்ள ஒருவராவார். குறிப்பாக கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் அவர் வெலிக்கடை சிறைச்சாலையில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த போது, அங்கு தான் சந்தித்த தமிழ் அரசியல் கைதிகள் குறித்து கரிசனை கொண்டிருந்தார்.

குற்றங்கள் இழைக்காமல் சந்தேகத்தின் பேரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ்க் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும் என நாமல் ராஜபக்ஷ தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்து வந்தார். இவ்வாறான நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் விசேட கூற்றொன்றை முன்வைத்து உரையாற்றியிருந்த அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, சந்தேகத்தின் பேரில் கைதாகி தடுத்து வைக்கப்பட்டுள்ள மேற்படி  தமிழ்க் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியிருந்தார்.

அவர் உரையாற்றுகையில் தெரிவித்ததாவது: 'வழக்குகளில் ஏற்பட்டுள்ள தாமதம் மற்றும் வழக்குகளை நிறைவு செய்ய முடியாததால் பல இளைஞர்கள் இன்று சிறைச்சாலைகளில் இருக்கின்றனர். புலிகள் அமைப்புடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்களில், வழக்கு விசாரணை முடிவடைந்து தண்டனை அனுபவிப்பவர்களின் எண்ணிக்கை 35 ஆகும்.

இந்த 35 பேரிலும் பெரும்பாலானவர்கள், தமக்குக் கிடைத்த தண்டனைக் காலத்தை விடவும் அதிக வருடங்களை சிறைகளில் கழித்துள்ளனர். அத்துடன், மேலும் 38 பேருக்கு எதிராக மேல்நீதிமன்றத்தில் குற்றப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இவர்கள் தொடர்பான வழக்குகள்கூட 20 வருடங்களாக நடைபெற்றுள்ளன. இவர்கள் சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கும் நிலையில்தான் வழக்கு விசாரணை தொடருகின்றது.

அதே போல வழக்கு விசாரணை எதுவுமின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 13 ஆகும். வழக்கு விசாரணை முடிவடைந்து குற்றப் பத்திரம் தாக்கல் செய்யப்படாத 116 பேரும் சிறைகளில் இருக்கின்றனர்.

இவர்களுக்கு தவறான வரலாறு இருந்திருக்கலாம். சிலர் தெரியாமல் இவ்வாறான நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கலாம். ஆனால் அவர்கள் பல வருடங்களாக சிறைகளில் உள்ளனர். இவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். எனவே, ஒன்று வழக்கு விசாரணைகளை துரிதப்படுத்தி  குற்றப் பத்திரம் தாக்கல் செய்து அவர்களுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும். அவ்வாறு இல்லா விட்டால் மாற்று நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.

மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகமயப்படுத்தப்பட்டனர். அவர்களில் 3 ஆயிரத்து 500 பேருக்கு சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தில் அரசாங்க வேலை வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் இறுதிப் போரில் பங்கேற்றவர்கள். ஆனால் சிறைகளில் உள்ளவர்களில் சிலர் எனது வயதை விட அதிக காலம் சிறைத் தண்டனை அனுபவித்து வருகின்றனர். இதுதான் உண்மைக் கதையும்கூட.

உதாரணமாக பிரபுக்கள் கொலைக் குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தார். அவரின் கதையைக் கேட்ட போது, மரக்கிளையொன்றை வெட்டியதால் அவருக்கு சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. ஆனால் திட்டம் வகுத்த பிரதான சந்தேக நபர் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டு வீட்டுக்கு அனுப்பட்டுள்ளார். கிளை வெட்டியவர் குற்றவாளியாக உள்ளே இருக்கின்றார்’'

இவ்வாறு அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தனது உரையின் போது தெரிவித்தார்.

அமைச்சர் நாமல் ராஜபக்ஷவின் நிலைப்பாட்டை நீதி அமைச்சர் அலி சப்ரியும் ஆதரித்திருந்ததுடன், தமிழ்க் கைதிகளின் துரித விடுதலைக்கு நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்திருந்தார். அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சர்களின் இந்தக் கருத்தை பாராளுமன்றத்தில் உள்ள தமிழ் மக்களின் பிரதிநிதிகள் பலரும் வரவேற்றிருந்ததுடன், அவர்களின் விடுதலையைத் துரிதப்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தியிருந்தனர்.

அதியுச்ச சபையில் இந்த விவகாரம் குறித்த கருத்துப் பரிமாற்றங்கள் இடம்பெற்று இரண்டு தினங்களில் பொசன் நோன்மதி தினத்தை முன்னிட்டு 16 தமிழ் அரசியல் கைதிகளும் ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு விடுவிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் 2009ஆம் ஆண்டிற்குப் பின்னர் கைது செய்யப்பட்டு குற்றத்தை ஒப்புக் கொண்டு தண்டனை வழங்கப்பட்டவர்களாவர். இவர்களில் பலருக்கு இன்னமும் 11 மாத கால தண்டனைக் காலம் எஞ்சியிருக்கும் நிலையில் விடுதலை வழங்கப்பட்டுள்ளது.

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், சுமார் 74 பேர் நீண்டகாலமாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 16 பேரே விடுவிக்கப்பட்டுள்ளார்கள். இது தவிரவும் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படாத, வழக்குகள் முடிவுக்குக் கொண்டு வரப்படாத மேலும் சிலர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
தன்னைப் போன்று ஏனையவர்களும் விரைவில் விடுவிக்கப்பட வேண்டும் என கடந்த வியாழக்கிழமை விடுதலை செய்யப்பட்ட சூரியகாந்தன் ஜெயச்சந்திரன் என்பவர் தெரிவித்தார்.

'நான் 13 வருடங்களாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தேன். இந்த விடுதலை மகிழ்ச்சியளிக்கிறது. என்னைப் போன்று சிறையில் உள்ள ஏனையவர்களும் மகிழ்ச்சியடைய வேண்டும். எமது விடுதலைக்காகப் போராடிய மற்றும் ஒத்துழைப்பு வழங்கிய அனைத்துத் தரப்பினருக்கும் நன்றிகள்' என்றார் ஜெயச்சந்திரன்.

இவரும் தண்டனை பெற்று இன்னமும் 11 மாதங்கள் தண்டனைக் காலம் இருக்கும் நிலையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
தமிழ்க் கைதிகள் விவகாரம் குறித்து தமிழ் அரசியல்வாதிகள் தொடர்ச்சியாக அரசுக்கு அழுத்தங்களைக் கொடுத்து வந்திருந்ததையும் மறுக்க முடியாது. இந்நிலையில் பெரும்பான்மை சிங்கள மக்களின் அமோக ஆதரவுடன் ஆட்சியமைத்துள்ள இன்றைய அரசாங்கம், எல்.ரி.ரி.ஈ சந்தேநபர்கள் என அடையாளம் காணப்படும் தமிழ்க் கைதிகளுக்குப் பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய முன்வந்திருப்பதை நல்லிணக்கத்துக்கான சமிக்ஞையாகப் பார்க்க வேண்டியது முக்கியம்.

கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் தமிழ் அரசியல் கைதிகள் பலரை விடுவித்திருப்பதற்கான வாய்ப்புக்கள் காணப்பட்ட போதும் எதிர்த் தரப்பு போர்க்கொடி தூக்கும் என்ற பயத்திலேயே அன்றைய அரசு தைரியமாக முடிவுகளை எடுக்காமல் விட்டு விட்டதாக கூறுவோரும் உள்ளனர். ஆனால் நல்லாட்சி அரசுக்கு பிரதான தூணாகவிருந்து ஆதரவளித்து வந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு முயற்சித்திருந்தால் இக்கைதிகள் இலகுவாக விடுவிக்கப்பட்டிருக்க முடியும்.

நல்லாட்சியில் குழப்பம் ஏற்பட்டு குறுகிய காலத்துக்குப் பொறுப்பேற்ற அரசாங்கத்தின் போதும் தமிழ் அரசியல் கைதிகள் விடுதலைக்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. இதன் போதும் நாமல் ராஜபக்ஷ தனது ஒத்துழைப்பை இந்த விடயத்துக்கு வழங்கியிருந்தார்.

இது ஒருபுறமிருக்க, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை இரத்துச் செய்யும் வரை ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை இடைநிறுத்துவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானித்துள்ள சூழ்நிலையில், அரசாங்கம் தமிழ்க் கைதிகள் விவகாரத்தில் சாதகமான சமிக்ஞைகளை வெளிக்காட்டியுள்ளதையும் இங்கு அவதானிக்க வேண்டியுள்ளது.

‘பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டிருந்த தமிழ்க் கைதிகள் 16 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். பௌத்த விகாரைகளை இலக்கு வைத்தவர்கள் பொசன் நோன்மதி தினத்தில் பொது மன்னிப்பளித்து விடுவிக்கப்பட்டுள்ளனர்’ என்ற அபத்தமான இனவாத கருத்துக்களை சிலர் சமூக ஊடகங்களில் வெளியிடுவதையும் காணக் கூடியதாக இருக்கிறது. இருந்த போதும் இந்த அரசாங்கத்தைப் பொறுத்த வரையில் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைக் கொண்டிருப்பதுடன், பெரும்பான்மை சிங்கள மக்களின் ஆதரவைக் கொண்டுள்ள அரசாங்கமாகவும் உள்ளது.

எவ்வாறிருந்தாலும் பெரும்பான்மை கடும்போக்காளர்களின் கருத்துகளை பொருட்படுத்தாமல் அரசு மேற்கொண்ட முடிவை தமிழ் மக்கள் நிட்சயம் பாராட்டாமலிருக்க முடியாது. இதனை நல்லெண்ண சமிக்ஞையாகவே கொள்ள வேண்டும்.
இந்த அரசாங்கம் எடுக்கும் நல்லெண்ண நடவடிக்கைகள் இனவாதத்தைத் தூண்டுகின்ற சில தரப்பினருக்குத் தீனியிடுவதாக அமைந்து விடுமோ என்ற கவலையும் தமிழ் மக்களுக்கு உண்டு. அரசின் இந்த நல்லெண்ண செயற்பாட்டுக்கு எதிராக எவரும் செயற்படக் கூடாதென்ற கருத்தை பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த சமாதான விரும்பிகள் முன்வைத்துள்ளதையும் காண முடிகின்றது.

அதேநேரத்தில், எப்பொழுதும் ‘தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதற்கு முயற்சிகளை எடுத்துள்ளோம்’ என வெற்றிக்கு உரிமை கொண்டாட முயற்சிக்கும் தமிழ் அரசியல்வாதிகளுக்கும் இந்த விடயத்தில் உரிமை கொண்டாட முடியாது போயுள்ளது.

இருந்த போதும் ஆளும் கட்சியில் இருக்கும்  தமிழ்ப் பிரதிநிதிகளும், எதிர்க் கட்சியில் உள்ள தமிழ் பிரதிநிதிகளும் தமிழ்க் கைதிகள் விவகாரத்தை கடந்த காலங்களில் அரசாங்கத்தின் உயர் மட்டங்களுக்குக் கொண்டு சென்றிருப்பதையும் நாம் மறுத்து விட முடியாது.

ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நீதி அமைச்சரை பாராளுமன்றத்தில் சந்தித்து தமிழ் அரசியல் கைதிகளின் விவகாரத்தை தீர்ப்பதற்கு அமைச்சரின் தலைமைத்துவத்தைக் கோரியிருந்தனர்.
அதேநேரம், எதிர்க் கட்சியில் உள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் உள்ளிட்ட தமிழ் மக்களின் பிரதிநிதிகள் அண்மையில் அமைச்சர் தினேஷ் குணவர்த்தனவை சந்தித்து கைதிகள் விடயத்தில் தீர்வொன்றை வழங்குமாறு கோரியிருந்தனர்.

இந்த நிலையில் தமிழ்க் கைதிகளின் விடுதலை வரவேற்கத்தக்கதாக இருப்பதுடன், எஞ்சியுள்ளவர்களும் விடுவிக்கப்பட்டு அரசாங்கத்தின் நல்லெண்ணம் மேலும் வலுப்படுத்தப்பட வேண்டும் என்பதே தமிழ் மக்களின் எதிர்பார்ப்பாகவுள்ளது.

Comments