சஜித் அணியின் எம்.பிக்கள் சிலர் ரணிலுடன் இணையும் சாத்தியம்! | தினகரன் வாரமஞ்சரி

சஜித் அணியின் எம்.பிக்கள் சிலர் ரணிலுடன் இணையும் சாத்தியம்!

பிரித்தானிய காலனித்துவத்தில் இருந்து எமது நாடு சுதந்திரம் பெற்றதற்குப் பின்னரான இலங்கையின் கட்சி அரசியலில்,  ஐக்கிய தேசியக் கட்சியின் பிரசன்னம் தொடர்ச்சியாக இருந்து வந்துள்ளது. அந்தக் கட்சி அவ்வப்போது சவால்கள் மற்றும் உட்கட்சிப் பூசல்கள், தலைமைத்துவப் போட்டிகளைச் சந்தித்திருந்த போதிலும் பாராளுமன்றத்தின் பிரதிநிதித்துவத்தை இழந்திருக்கவில்லை.

எனினும், கடந்த பொதுத் தேர்தலில் மக்களின் வாக்குகளால் எந்தவொரு ஐ.தே.க உறுப்பினரும் தெரிவு செய்யப்படாதமை மிகுந்த அதிர்ச்சிக்கும், வியப்புக்கும் உரியதாகும். ஐ.தே.கவின் அதல பாதாள வீழ்ச்சியாகவே இந்தத் தோல்வி நோக்கப்படுகின்றது. தேர்தலில் மக்களின் வாக்குகளால் நேரடியாக ஐ.தே.கவிலிருந்து எவருமே தெரிவு செய்யப்படாத போதிலும், விகிதாசார தேர்தல் முறையின் அடிப்படையில் கட்சிக்கு கிடைத்த மொத்த வாக்குகளுக்கு அமைவாக ஒரேயொரு தேசியப் பட்டியல் ஆசனம் கிடைத்தது. இந்த ஆசனமே ஐ.தே.கவுக்கு கிடைத்த ஒரேயொரு வெற்றி.

இவ்வாறு கிடைத்த ஒரேயொரு ஆசனத்துக்கு யாரை அனுப்புவது எனத் தீர்மானிப்பதற்கு அக்கட்சியினருக்கு சுமார் ஒன்பது மாதங்களாகி விட்டன. இறுதியாக ஐ.தே.கவின் தலைவரும், முன்னாள் பிரதமருமான ரணில் விக்சிரமசிங்கவையே பாராளுமன்றத்துக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

கடந்த புதன்கிழமை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன முன்னிலையில் பாராளுமன்ற உறுப்பினராகப் பதவிச் சத்தியப் பிரமாணம் செய்து கொண்ட ரணில் விக்கிரமசிங்க, பாராளுமன்ற செயலாளர் நாயகத்திடம் உள்ள உறுப்பினர்களுக்கான பத்திரத்திலும் கையொப்பமிட்டு உத்தியோகபூர்வமாகப் பதவியேற்றுக் கொண்டார்.

அவருக்கு எதிர்க் கட்சித் தரப்பில் முன்வரிசையில் 13வது ஆசனம் ஒதுக்கப்பட்டிருந்தது. இந்த ஆசனத்துக்கு ஒரு பக்கத்தில் மனோ கணேசனும், மறுபக்கத்தில் இரா.சம்பந்தனும் உள்ளனர். ரணில் விக்கிரமசிங்க பதவிச் சத்தியப் பிரமாணம் செய்து விட்டு தனது ஆசனத்துக்குச் செல்லும் போது, ஆளும் தரப்பில் உள்ள சிலர் மாத்திரம் மேசையில் தட்டி வரவேற்பைத் தெரிவித்திருந்தனர்.

வழமையாக புதிய உறுப்பினர் ஒருவர் பாராளுமன்றத்துக்கு வந்தால் ஏனைய உறுப்பினர்கள் சிலர் அவருடைய ஆசனத்துக்குச் சென்று வாழ்த்துக்களைத் தெரிவிப்பர். எனினும், ரணில் விக்கிரமசிங்க தனது ஆசனத்தில் அமர்ந்த பின்னர் கூட, எவரும் அவரைத் தேடிச் சென்று வாழ்த்துத் தெரிவிக்கவில்லை. அருகில் இருந்த பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசனுடன் மாத்திரம் ரணில் விக்கிரமசிங்க ஏதோ பேசிக் கொண்டிருந்ததைக் காண முடிந்தது.

1977 ஆம் ஆண்டில் ஐக்கிய தேசிய கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி பாராளுமன்றத்துக்குத் தெரிவான விக்கிரமசிங்க, கடந்த 08 வது பாராளுமன்றம் வரை தொடர்ந்து 42 வருடங்களாக பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தினார்.

இவருடைய அரசியல் வாழ்க்கையில் பல தடவைகள் பிரதமராகப் பதவி வகித்தவர் என்ற பெருமையைப் பெற்றிருந்த போதிலும், அவர் நீண்ட காலம் அப்பதவியில் நீடிப்பதற்கான அதிர்ஷ்டம் இல்லாதவராவே நோக்கப்படுகின்றார். இந்த நான்கு தசாப்தத்துக்கும் மேலாக காலப் பகுதியில் கபினட் அமைச்சர், பாராளுமன்ற எதிர்க் கட்சித் தலைவர், பாராளுமன்றத்தின் சபை முதல்வர் உள்ளிட்ட பதவிகளை ரணில் வகித்துள்ளார்.

இளமையான வயதில் அமைச்சுப் பொறுப்பை ஏற்றிருந்த அவர், கல்வி அமைச்சராக இருந்த காலத்தில் அறிமுகப்படுத்திய பல திட்டங்கள் இன்னமும் நடைமுறையில் உள்ளன.

1980 முதல் 88 வரை கல்வி அமைச்சராக தொலைதூர ஆங்கில ஆசிரியர் பயிற்சி எனப்படும் ‘டெலின்’ ஆசிரியர் பயிற்சி, பூரண கால தொலைதூர சேவை ஆசிரியர் பயிற்சி, பாடசாலைகளுக்கான பகலுணவு, மீப்பே அழகியல் நிறுவனத்தை ஆரம்பித்தல், முறைசாரா கல்வியை விரிவாக்குதல், ஆசிரியர் பற்றாக்குறைக்கு தீர்வாக மாவட்ட ஆசிரியர் சேவையை ஆரம்பித்தல், ஆசிரியர் சேவையை 60 வயது வரை நீடித்தல், பிக்குகளுக்கான ஆசிரியர் பயிற்சி, பாடசாலை அபிவிருத்தி சங்கங்களை ஆரம்பித்தல், பாடசாலை மேற்பார்வை அலகுகளை உருவாக்குதல், பாடசாலை திட்டமிடல் அலகு, இலவச பாடப்புத்தக விநியோகம், வலயக்கல்வி அலுவலகங்களை நிறுவுதல், தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் மற்றும் மாணவர் ஆலோசனை சேவையை ஆரம்பித்தல் என்பனவற்றை அவரது கல்வி மறுமலர்ச்சிகளாகக் குறிப்பிட முடியும். 

அதற்கு மேலதிகமாக ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்குவதற்கு கல்விக் கல்லூரி முறைமையை ஆரம்பித்த ரணில் விக்கிரமசிங்க, 1988 இல் 09 தேசிய கல்விக் கல்லூரிகளை ஆரம்பித்தும் மற்றும் கல்வி ஆய்வுக்காக தேசிய கல்வி நிறுவகத்தை  நிறுவியுமிருந்தார். இவ்வாறு பல்வேறு துறைகளில் அவர் பங்களிப்புக்களை வழங்கியிருக்கின்றார்.

தனது மாமனாரான ஜே.ஆர்.ஜயவர்த்தனவுடன் அரசியலை ஆரம்பித்ததாலோ என்னவோ அவர் இன்னமும் அரசியல் சாணக்கியம் மிக்கவராகவே அறியப்படுகிறார். அவருடைய பாராளுமன்ற வருகை தற்போதைய எதிர்க் கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியையே ஆட்டம் காண வைத்து விடும் என்றும் கருத்துகள் தற்போது அரசியல் களத்தில் முன்வைக்கப்படுகின்றன.

பாராளுமன்றத்தில் ஒரு ஆசனத்தை மாத்திரம் வைத்துக் கொண்டு பெரும் சாதனை நிகழ்த்தக் கூடிய திறமை அவருக்கு இருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சி நம்பிக்கை கொண்டுள்ளது.

ரணில் விக்கிரமசிங்க பதவிச் சத்தியப் பிரமாணம் செய்த பின்னர் விவாதத்தில் பங்கேற்று உரையாற்றுகையில், அரசாங்கத்தின் செயற்பாடுகளை, குறிப்பாக கொரோனா கட்டுப்பாட்டுச் செயற்பாடுகளை கடுமையாகச் சாடியிருந்தார்.
கொரோனா கட்டுப்பாடு செயற்பாடுகளை இராணுவத்தினர் ஊடாக மேற்கொள்வது அரசமைப்புக்கு முரணானது. இது இராணுவமயமாக்கலுக்கு வழிகோலும் என்று அவர் சுட்டிக் காட்டியிருந்தார்.

அவர் தனது உரையில் 'நான் கடந்த காலங்களைப் பற்றிப் பேச விரும்பவில்லை. இந்த அரசாங்கம் தற்போது வரிச்சலுகைகளை வழங்கியுள்ளது என்பதை நானும் ஏற்றுக் கொள்கிறேன். ஆனால், அந்த வரிச்சலுகை பணக்காரர்களுக்கும் மேல்தட்டு மக்களுக்குமே வழங்கப்பட்டுள்ளது. கீழ்த்தட்டு மக்களுக்கு வெறும் பசியை மட்டும்தான் இந்த அரசாங்கம் வழங்கியுள்ளது.

வணிக வங்கிகள், வெளிநாடுகள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் நாம் கடன்களைப் பெற்று வருகிறோம். இதன் ஊடாக எவ்வாறு நாம் எமது பொருளாதாரத்தை வலுப்படுத்துவது? இதற்கான திட்டமொன்றை அரசாங்கம் வகுத்துள்ளதா?
கொள்கையொன்றை வகுக்காகமல் புள்ளிவிபரங்கள் குறித்து பேசுவதில் பலன் இல்லை. கொரோனா ஒழிப்பு செயலணியொன்று உருவாக்கப்பட்டது. ஆனால், இது முற்றிலும் தோல்வியடைந்த ஒன்றாகும். நாளுக்கு நாள் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், இதற்கான பொறுப்பை அமைச்சரவைக்கு வழங்க வேண்டும். அரசமைப்பிலும் இதற்கான சரத்துக்கள் உள்ளன.

இராணுவத் தளபதியால் எவ்வாறு இந்தச் செயற்பாட்டை மேற்கொள்ள முடியும், இதற்கான தலைமையை சுகாதார அமைச்சர் ஏற்க வேண்டும். இராணுவத்தினர் ஊடாக இதனைக் கட்டுப்படுத்த முடியாது. எனக்கும் இராணுவத் தளபதிக்கும் இடையில் எந்தவொரு பிரச்சினையும் கிடையாது. ஆனால், இந்த செயற்பாட்டை ஏற்றுக் கொள்ள முடியாது. இது இராணுவமயமாக்கலுக்குதான் வழிவகுக்கும்' எனக் கூறியிருந்தார்.

ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்ற உறுப்பினராவதற்கு முன்னரும் அரசாங்கத்தின் கொரோனா ஒழிப்பு நடவடிக்கைகளை கட்சியொன்றின் தலைவர் என்ற ரீதியில் விமர்சித்து வந்திருந்தார். அது மாத்திரமன்றி, பொதுவான பொறிமுறையொன்றைத் தயாரித்து விரைவில் இந்நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அரசுக்கு ஆலோசனை வழங்கியிருந்தார்.

இந்த நிலையில் அவர் தற்பொழுது பாராளுமன்ற உறுப்பினராகி இருப்பதால் அரசியல் அரங்கத்தில் சில மாற்றங்கள் ஏற்படலாம் என்ற பேச்சுக்கள் பரவலாக இடம்பெறுகின்றன. குறிப்பாக சஜித் அணியில் இருக்கும் சிலர் ரணிலுடன் இணைந்து கொள்வரென்றும், அதன் மூலம் ஐ.தே.க மீண்டும் பலப்படுத்தப்படும் என்றும் அரசியல் வட்டாரங்களில் பேச்சுகள் உலவுகின்றன. அவ்வாறா எதிர்பார்ப்புக்களும் அரசியல் நோக்கர்களால் முன்வைக்கப்பட்டுள்ளன.

ஐக்கிய தேசியக் கட்சியின் அக்கால முக்கியஸ்தர்களில் அநேகர் தற்போது சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியில் அங்கம் வகித்து பாராளுமன்ற உறுப்பினர்களாக உள்ள போதிலும், அவர்களில் அனைவருமே சஜித்துக்கு விசுவாசமானவர்களாக இல்லையென அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகின்றது.

அன்றைய தேர்தல் கால அரசியல் களநிலைவரத்தை கருத்தில் கொண்டு சஜித் அணிக்குச் சென்ற பலர் இன்னும் அதிருப்தியாளர்களாகவே உள்ளனர். அவ்வாறானோர் ரணில் அணியுடன் இணைந்து கொண்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்பதே அரசியல் அவதானிகளின் எண்ணமாக இருக்கின்றது.
அரசியலில் எதுவுமே நிரந்தரமில்லை என்ற கூற்றை ஒருபோதுமே மறக்க இயலாது என்பதே உண்மை.

பி.ஹர்ஷன்

Comments