எதிரணியை நிலைகுலைய வைத்துள்ள பசில் வருகை! | தினகரன் வாரமஞ்சரி

எதிரணியை நிலைகுலைய வைத்துள்ள பசில் வருகை!

பல தசாப்தங்களாக பலம் மிக்க இரு கட்சிகளே இதில் ஆதிக்கம் செலுத்தி வந்துள்ளன. எனினும் இந்த பாரம்பரியத்தை முற்றாக மாற்ற முடியும் என்பதை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனை கட்சி நிரூபித்துள்ளது. கட்சி ஆரம்பிக்கப்பட்ட ஒரு சில வருடங்களிலேயே பெரும்பாலான உள்ளூராட்சி சபைகள் மற்றும் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலமாக எடுத்த எடுப்பிலேயே அக்கட்சி மக்கள் ஆதரவை வெளிப்படுத்தியுள்ளது.

மக்களின் மனநிலையை சரியாகப் புரிந்து கொண்டு பொருத்தமான முன்னோடி அபிவிருத்தித் திட்டங்களை முன்வைத்ததன் காரணமாகவே இது சாத்தியமாகியுள்ளது. இந்த வெற்றிக்கு வித்திட்டவர் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ என்றால் அது மிகையாகாது.

தற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த இரண்டு ஆட்சிக் காலத்திலும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் என்ற முக்கிய பதவியை வகித்த பசில் ராஜபக்ஷ, 2015 ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவின் தோல்விக்கும் பொறுப்பேற்றுக் கொண்டிருந்தார்.

2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் ஏற்பட்ட தோல்வியையே தமது வெற்றிக்கான படிக்கல்லாக எடுத்துக் கொண்டவர் பசில் ராஜபக்ஷ. தன்னால் ஏற்பட்ட தோல்வியை சரி செய்து மீண்டும் ஆட்சியதிகாரத்தைப் பெற்றுக் கொடுப்பேன் என சபதமிட்ட அவர், திரைமறைவில் மேற்கொண்ட ஒருங்கிணைப்புக்களால் உருவானதே ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எனும் கட்சி ஆகும்.

மஹிந்த ராஜபக்ஷ என்ற பிரபல பிம்பத்தை முன்னிலைப்படுத்தியதாகக் கட்சி உருவாக்கப்பட்டிருந்தாலும், அதனைத் திரைமறைவிலிருந்து உருவாக்குவதற்கு மூளையாகவும், ஒருங்கிணைப்பாளராகவும் முக்கிய பங்காற்றியது என்னவோ பசில் ராஜபக்ஷ ஆவார். அரசியலில் ‘கிங் மேக்கர்’ எனக் கூறும் அளவுக்கு சிறந்த திட்டமிடல் மற்றும் ஒருங்கிணைப்புத் திறனை அவர் கொண்டிருப்பதை பாராட்டாமல் இருக்க முடியாது.

கட்சி அரசியல் ஒருங்கிணைப்புக்கு அப்பால் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் என்ற ரீதியில் நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கும் வறுமை ஒழிப்பிற்கும் அவர் வழங்கிய ஒத்துழைப்புகளும் குறிப்பிடத்தக்கவையாகும். குறிப்பாக திவிநெகும அல்லது வாழ்வின் எழுச்சி வேலைத் திட்டத்தினால் நன்மை பெற்றவர்கள் ஆயிரக்கணக்கானவர்கள்.

தெவிநெகும வேலைத் திட்டமானது குறைந்த வருமானத்தைப் பெறும் குடும்பங்களின் வாழ்வாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கான வழிகளை ஏற்படுத்திக் கொடுத்தல், சுயதொழிலாளர்களுக்கு வசதிகளை வழங்குதல் என்பவற்றை உள்ளடக்கியிருந்தது. திவிநெகும வேலைத் திட்டத்தின் ஊடாக அப்போது ஆட்சியிலிருந்த அரசாங்கத்துக்கு அடிமட்டத்தில் ஆதரவு திரட்டப்படுகிறது என்ற குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்த போதும் இதனால் நன்மை அடைந்தவர்களின் எண்ணிக்கை என்னவோ அதிகமாகவே உள்ளது.

இவ்வாறான சூழ்நிலையில் ஆட்சி மாற்றத்தை வேண்டி 2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் வாக்களித்த போது தோல்விக்கான பொறுப்பையும் அவரே ஏற்றுக் கொண்டிருந்தார். இவ்வாறான பின்னணியிலேயே ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தோற்றமும், அதன் பின்னரான அதன் விஸ்வரூப வெற்றியும் அமைந்தன.
கட்சி உருவாகி குறுகிய காலத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்ட போதும், எவ்வித தடுமாற்றமும் இன்றி தனித்துப் போட்டியிட்டு பெரும்பாலான உள்ளூராட்சி சபைகளை அக்கட்சி வெற்றி கொண்டமை பசில் மீதான நம்பிக்கையை உறுதிப்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து அக்கட்சிக்கு தொடர்ந்து ஏறுமுகமாகவே அமைந்தது. கடந்த ஜனாதிபதித் தேர்தல் மற்றும் அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற பொதுத் தேர்தலுக்கான திட்டங்களை வகுப்பது, பங்காளிக் கட்சிகளுடன் கூட்டணி அமைப்பது உள்ளிட்டவற்றில் பசில் ராஜபக்ஷவின் பங்களிப்பு கணிசமாகவிருந்தது.

கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியமைத்த இக்கட்சி, 20வது அரசியலமைப்புத் திருத்தத்தையும் எவ்வித சிக்கலின்றி நிறைவேற்றியது. புதிய அரசாங்கத்தின் பொருளாதாரம் குறித்த செயலணியின் தலைவர் பதவியும் அவருக்கு வழங்கப்பட்டது. நாட்டின் பொருளாதாரம் தொடர்பில் எடுக்கப்படும் முடிவுகளில் இந்த செயலணியே அதிக பங்கு வகிக்கிறது.

பொதுஜன பெரமுன கட்சி சார்பில் பாராளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்பட்டிருந்த அனைத்து உறுப்பினர்களும் பசில் ராஜபக்ஷவின் பங்களிப்பு மற்றும் அவரின் பாராளுமன்ற வருகை அவசியம் என்பதை பல தடவைகள் பாராளுமன்றத்தில் வலியுறுத்தியிருந்தனர். அண்மைய சில நாட்களாக பசில் ராஜபக்ஷ பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக சட்டவாக்க சபைக்கு வரவிருப்பதாக செய்திகள் பரவத் தொடங்கியுள்ளன.

இது பொதுஜன பெரமுன கட்சியைச் சேர்ந்தவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாக இருக்கும் நிலையில், எதிர்க் கட்சிக்கு இது அச்சத்தை ஏற்படுத்தியிருப்பதாகவே தெரிகிறது.  இன்றைய அரசாங்கம் தோல்வியுற்றிருப்பதாகக் காண்பிக்க எதிர்க் கட்சிகள் முயற்சித்து வரும் நிலையில், பசில் ராஜபக்ஷ பாராளுமன்றத்துக்கு வருவது அவர்களுக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தும் என்பதே இதற்குக் காரணமாகும்.

கொவிட் 19 சூழலால் இலங்கை மாத்திரமன்றி உலக நாடுகள் பலவும் பல்வேறு சவால்களுக்கு முகங் கொடுத்திருக்கும் நிலையில், அரசுக்குப் பல சுமைகள் காணப்படுகின்றன. தொற்றுநோய் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக அறிமுகப்படுத்தப்படுகின்ற பயணத் தடைகளால் மக்களின் அன்றாட வாழ்வாதாரம் பாதிக்கப்படுகின்றமை, இதிலிருந்து அவர்களைப் பாதுகாப்பது, பாதிக்கப்படும் துறைகளைக் கட்டியெழுப்புவது என பரந்துபட்ட விடயங்கள் குறித்து கவனம் செலுத்த வேண்டிய நிலைமை அரசாங்கத்துக்கு உள்ளது. இதற்கிடையில் எரிபொருள் விலையை அதிகரிக்கும் அரசாங்கத்தின் அண்மைய தீர்மானம் எதிர்க் கட்சியினருக்கு வாய்ப்பாக அமைந்து விட்டது.

இது விடயத்தில் ஆளும் தரப்பில் உள்ள பலர் பசில் ராஜபக்ஷ மீது நம்பிக்கை வெளியிட்டிருந்தனர். எரிபொருள் விலை அதிகரிக்கப்படும் போது அவர் வெளிநாடு சென்றிருந்தார். அவர் நாட்டில் இருந்திருந்தால் எரிபொருள் விலை அதிகரிப்புக்கு இடமளித்திருக்க மாட்டார் என இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா பகிரங்கமாகக் கருத்துத் தெரிவித்திருந்தார்.

நாட்டின் பொருளாதாரத்தை சரியான பாதைக்குக் கொண்டு செல்வதில் பசில் ராஜபக்ஷ கொண்டிருக்கும் அனுபவம் நாடு எதிர்கொண்டுள்ள இக்கட்டான சூழ்நிலையில் உறுதுணையாக இருக்கும் என பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் பலரும் நம்பிக்கை கொண்டிருப்பதை இது எடுத்துக் காட்டுகிறது ஏற்கனவே பொருளாதார அமைச்சர் பதவியை வகித்திருந்த அவர், நாட்டை பொருளாதாரத்தின் வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வார் என்பது அவர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாகக் காணப்படுகிறது.

பசில் ராஜபக்ஷ எதிர்வரும் நாட்களில் பாராளுமன்ற உறுப்பினராக வரவிருப்பதாகவும், அவருக்கு முக்கிய அமைச்சுப் பொறுப்பு வழங்கப்படவிருப்பதாகவும் செய்திகள் வெளியாகி வருகின்றன. இது தொடர்பில் அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர் கெஹலிய ரம்புக்வல, இது கட்சியின் உள்ளக விவகாரம் எனப் பதில் வழங்கியிருந்தார்.
பசில் ராஜபக்ஷவின் பாராளுமன்ற வருகையினால் எதிர்க் கட்சி அச்சமடைந்துள்ளது. இதனாலேயே சமூக ஊடகங்களில் தேவையற்ற பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுவதாக பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் சுட்டிக் காட்டியிருந்தார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருக்கு பசில் ராஜபக்ஷவின் பாராளுமன்ற நுழைவு நிச்சயமாக பலம் சேர்ப்பதாகவே அமையும் என அரசியல் அவதானிகள் பலரும் சுட்டிக் காட்டுகின்றனர்.

Comments