சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு விழா; சீன ஏகாதிபத்தியத்தை பிரகடனப்படுத்துகிறதா? | தினகரன் வாரமஞ்சரி

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு விழா; சீன ஏகாதிபத்தியத்தை பிரகடனப்படுத்துகிறதா?

உலக ஒழுங்கில் சீன அரசியல், பொருளாதார இராணுவ ஆதிக்கம் என்பது திடீரென உருவாக்கம் பெற்றதொன்றல்ல. அதன் ஒவ்வொரு கட்ட வளர்ச்சியும் படிப்படியாக உருவானது. இதற்கான மூலம் கம்யூனிஸக் கட்சியின் நூற்றாண்டு கால வரலாற்றை கொண்டது. சீனா அரசின் வல்லாதிக்க வளர்ச்சி என்பது அதன் அரசியல் கட்சியான சீனா கம்யூனிஸ்ட் கட்சியின் ஆற்றலிலேயே தங்கியுள்ளது. ஜூலை முதலாம் திகதி சீன கம்யூனிஸ்ட் கட்சி தனது நூற்றாண்டை வெகுவிமர்சையாக கொண்டாடியுள்ளது. சீன கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு விழாவில் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் ‘சீனா’ உலக வல்லாதிக்க சக்தி என்பதை பிரகடனப்படுத்தும் வகையில் சொல்லிலும் செயலிலும் ஈடுபட்டுள்ளதை வெளிப்படுத்தும் உரையை ஆற்றியுள்ளார்.. அதனடிப்படையிலேயே இக்கட்டுரை சீன கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு விழாவினை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது.

சீன கம்யூனிஸ்ட் கட்சி, சீனக்குடியரசு உருவாக்கத்திலிருந்து இன்றைய நவீன சீனா உருவாக்கம் வரை பல தேசிய பங்களிப்புகளைச் செய்துள்ளது. ஆளுமை மற்றும் நிர்வாகத்தின் புத்திசாலித்தனமான கொள்கை மற்றும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தத்துவவாதிகள் பொருளாதார மற்றும் அரசியல் கட்டமைப்புகளில் முன்வைத்த நவீன யோசனைகள் மற்றும் பகுத்தறிவு போட்டிக்கான அடித்தளங்களை அமைப்பதன் மூலம் கம்யூனிஸ்ட் கட்சி நவீன சீனாவின் பின்னால் உள்ளது என்பதை பல்வேறு பின்னணிகளைச் சேர்ந்த அரசியல் அறிஞர்கள் மற்றும் சீனாவின் எதிர்க்கூட்டணிகளும் ஒருமனதாக ஒப்புக்கொள்கிறார்கள். மாவோ சேதுங் தலைமையிலான புரட்சி மற்றும் சீர்திருத்தக்கொள்கை மற்றும் டெங் சியாவோப்பிங் பின்பற்றிய சாதனைகளின் சகாப்தம் வரை சீன முன்னேற்றத்தின் முக்கிய இயந்திரமாக மாறியுள்ளது. தற்போதைய ஜனாதிபதி ஜி ஜின்பிங்ன் தலைமையில் ஜூலை-1ஆம் திகதி சீன கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு விழா சீனாவின் தினமென் சதுக்கத்தில் பல்லாயிரக்கணக்கானோர் முன்னிலையில் நிகழ்ந்தது. அதன்பிரகாரம் ஜின் பிங்ன் உரையும் அந்த விழாவும் கோடிட்டுக் காட்டிய விடயங்களை நோக்குவோம்.

முதலாவது, உலகம் அச்சம் கொள்ளும் கொரோனாவை சீனா வென்று முன்மாதியாக உள்ளது என்ற செய்தியை உலகிற்கு பெருவிழாவாக எடுத்துக் காட்டியுள்ளார். உலகம் கொரோனா வைரஸ் திரிபுகளுக்குள் பயந்து முடங்கி கொண்டு இருக்கையில், கொரோனாவின் மூலம் கண்டறியப்பட்ட சீன தேசம் பெருவிழாவையே அரங்கேற்றி உள்ளது. மேற்கு ஏகாதிபத்தியத்திற்கு சவாலானவர்கள் என்ற செய்தியை உலகிற்கு சொல்ல எத்தனித்துள்ளார். கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கைகள் ஒழுங்குபடுத்தப்பட்ட போதிலும் ஒப்பீட்டளவில் உலக நாடுகள் கொரோனா வைரஸ் தொடர்பாக கொண்டுள்ள அச்சத்திலிருந்து சீனா முன்னோக்கிச் சென்றுள்ளது என்பதை நிகழ்வுகள் வெளிப்படுத்துகிறன. தினமென் அரங்கின் முன்றலின் பிரதான பகுதியில் மடிப்பு ஆசனங்கள் மிகவும் சமூக ரீதியாக தொலைவில் இல்லை. ஒவ்வொரு நாற்காலிக்கும் இடையில் 15 அங்குல இடைவெளிகளிலேயே பிரிக்கப்பட்டிருந்தன.

நிகழ்வில் கலந்து கொண்ட ஒரு பெண் பேராசிரியர் டோனி லி நிகழ்வு ஒழுங்கமைப்பு பற்றி குறிப்பிடுகையில், “நாற்காலி ஏற்பாடு முந்தைய ஆண்டுகளிலிருந்த கூட்டத்தின் அடர்த்தியைக் குறைத்துவிட்டது. ஆனால் பெய்ஜிங்கில் பல மாதங்களாக எந்த வைரஸ் தொற்றுக்களும் இல்லை என்பதால், நான் அதைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை எனக் கருதுகிறேன். அது இங்கே பாதுகாப்பானது" என்று கூறினார்.

இரண்டாவது, சீன ஜனாதிபதி தனது உரையில், உலகின் ஏகாதிபத்திய சக்தியாய் சீனா வளர்ச்சி பெற்றுவிட்டது என்பதை பிரகடனப்படுத்த முயன்றுள்ளார். நீண்ட காலமாகவே அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு இடையிலான வர்த்தகப்போர் சர்வதேச அரசியலில் பெரும் பூதாகரமான அரசியல் செயற்பாடாய் அவதானிக்கப்பட்டு வருகிறது.
கொரோனா வைரஸ் அமெரிக்க சீனா வர்த்தகப்போரை உலக ஏகாதிபத்திய போராக பரிணமிக்க செய்ததுடன் கொரோனாவிற்கு பின்னரான உலக ஒழுங்கு சீனா வசம் என்பது அரசியல் ஆய்வாளர்களின் ஆய்வுகளின் மையப்பொருளாகவும் மாறியது. இதற்கு வலுச்சேர்க்கும் வகையிலேயே சீன மற்றும் அமெரிக்க அரசியல் உரையாடல்களும் காணப்பட்டன. இந்நிலையிலேயே சீன கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு விழா உரையில் ‘சீனா உலகில் அமைதிக்கான ஒரு சக்தியாக இருந்தது’ எனக்கூறுவது சீனா அரசு உலகை நெறிப்படுத்தக்கூடிய ஆளுமை கொண்டது என்பதைக் காட்டுவதாகவே தெரிகிறது.

மூன்றாவது, அமெரிக்காவுக்கான எச்சரிக்கையை போர்க்குணத்துடனேயே ஜி ஜின்பிங் வெளிப்படுத்துவது இராணுவ ரீதியிலும் நிகரானது என்ற செய்தியை தெரிவிப்பதாக உள்ளது. அமெரிக்கா தலைமையிலான மேற்குலகு இன்று சீனா மீது முன்வைக்கும் பாரிய குற்றச்சாட்டு, சிக்கலான கடன்பொறிமுறையூடாக சர்வதேச நாடுகள் மீதான ஆக்கிரமிப்பு என்பதாகும். அதற்கு கடுந்தொனியில் தனது எதிர்ப்பை ஜி ஜின்பிங் வெளிப்படுத்தியுள்ளார். “சீன மக்கள் ஒருபோதும் மற்ற நாட்டு மக்களை கொடுமைப்படுத்தவோ, ஒடுக்கவோ அல்லது அடிமைப்படுத்தவோ இல்லை. கடந்த காலங்களிலும் அவ்வாறு இல்லை, இப்போதும் இல்லை, எதிர்காலத்திலும் அவ்வாறு இருக்காது. அதே நேரத்தில், சீன மக்கள் ஒருபோதும் வெளிநாட்டு சக்திகள் தங்களை கொடுமைப்படுத்தவோ, ஒடுக்கவோ அல்லது அடிமைப்படுத்தவோ அனுமதிக்க மாட்டார்கள் அதைச் செய்வதற்கான தைரியம் யாரிடமாவது இருப்பின், அவர்கள் 1.4 பில்லியன் சீன மக்களின் சதை மற்றும் இரத்தத்தால் கட்டப்பட்ட பெரிய இரும்புச் சுவரில் இரத்தம் சிந்தவைப்பார்கள்" எனு ஜின்பிங்ன் உரைத்துள்ளார். சீன அதிபரின் இந்த கடுமையான எச்சரிக்கைகள் அமெரிக்காவை குறிப்பிட்டுப் பேசுவது போல தெரிகிறது.

நான்காவது, பிராந்திய அரசியலையும் ஜின்பிங்கின் உரை முன்னிறுத்தியுள்ளது. ஒரு ஏகாதிபத்திய அரசு உலக அரசுகளின் எஜமானாகுவதற்கு முன்னர் பிராந்திய ரீதியில் கூட்டிணைவு அவசியமாகிறது. இது தொடர்பில் சீனா மீது கடுமையான விமர்சனங்கள் காணப்படுகிறது. ​ெஹாங்காங்கில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வருவதாகவும் அங்கு ஜனநாயக ஆதரவுக்குரல்கள் ஒடுக்கப்படுவ தாகவும் தைவான் மீதான ஆக்கிரமிப்பு தொடர்பிலும் உலக அளவில் பரவலாக விமர்சனங்கள் முன்வைக்கப்படுகிறன. இவ்வேளையில், தங்களுடைய தேச இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை பாதுகாக்கும் சீனர்களின் ஆற்றலை எவரும் குறைத்து மதிப்பிடவோ மத்தியஸ்தம் செய்யவோ முயலக்கூடாது. சீன உள்விவகாரங்களில் எப்படி நாங்கள் செயல்பட வேண்டும் போன்ற போதனைகள் வழங்கப்படுவதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்று சீன அதிபர் ஜி ஜின்பிங் எச்சரித்துள்ளார். இது சீனாவின் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைக்கும் உலக அரசுகளுக்கும், சர்வதேச நிறுவனங்களுக்குமான எச்சரிக்கையாக அமைந்துள்ளது.

ஐந்தாவது, சீன கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு விழாவில் பனிப்போர் அரசியலை ஜின்பிங் மீள நினைவுபடுத்துகின்றார். அமெரிக்க-, சீனா ஏகாதிபத்திய மோதலில் அண்மைக்காலமாக பனிப்போர் அரசியல் அதிகமாகவே உரையாடப்பட்டு வருகிறது. கடந்த ஜூன் மாத நடுப்பகுதியில் நடைபெற்ற நேட்டோ நாடுகளின் தலைவர்களின் மாநாட்டிலும் சீனாவை கையாள்வதற்கு பனிப்போர்க்காலத்தில் ரஷ்யாவை கையாள உருவாக்கப்பட்ட நேட்டோவை அமெரிக்கா பயன்படுத்துவதற்கான உரையாடல்கள் மேலேழுந்துள்ளன. இந்நிலையிலேயே அமெரிக்க-, ரஷ்ய பனிப்போர்க்காலத்தில் முன்னெடுக்கப்பட்ட விண்வெளி போரை நினைவூட்டி சீனா விண்வெளிப்போரை ஆரம்பித்து, அமெரிக்காவின் பனிப்போர் சமிக்ஞையை ஏற்றுள்ளது. ஜூலை-1 அன்று சீன கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு விழாவுடன் இணைந்து சீனா விண்வெளி நிலையத்திற்கு மூன்று விண்வெளி வீரர்களுடன் ‘ஷென்சோ-12’ மனிதர்களைக் கொண்ட விண்கலத்தை ஏவியது. அதன் கட்டுமானம் 2022ஆம் ஆண்டின் இறுதிக்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மனிதர்களை அதன் சொந்த ஆற்றலுடன் விண்வெளிக்கு அனுப்பும் உலகின் மூன்றாவது நாடு என்ற பெருமையை சீனா பெறுகிறது.

அமைதியும் கொதிநிலையும் கலந்த சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்ன் உரை முன்னைய உரைகளிலிருந்து மாறுபட்டு, ஓர் ஏகாதிபத்திய தலைமைத்துவத்திற்கான அடையாளத்தை வெளிப்படுத்துவதாக தெரிகிறது. மேற்கு ஏகாதிபத்தியம் அதிர்ந்து போயுள்ள காலத்தில் சீனாவின் கம்யூனிஸ வரலாறு எழுச்சியடைந்துள்ளது. மாவோ சேதுங்கினால் கட்டப்பட்ட கப்யூனிஸக் கட்சியையும் சீன தேசத்தையும் நவீன வரலாற்றுக்குள் நுழைத்தவர் டெங்-ஷியாவோ- பிங் எனும் அரசியல் பொருளாதா சிற்பி. அதன் பின் சீனா ஆட்சிப் பொறுப்பினை ஏற்ற ஜியாங்-ஷேமின் ஹூ ஜின்டாவோ வரிசையில் ஜின்பிங் தனித்துவமான தலைவராகவும் எழுச்சிமிக்க தலைமையாகவும் காணப்பட்டார். இத்தகைய வரலாற்றை கொண்ட சீன தேசம் வர்த்தக குண்டு என அழைக்கப்படும் ஏகாதிபத்தியத்தால் அரணமைக்கப்பட்டுள்ளதுடன் உலகத்தை win-win மற்றும் soft power எனும் உபாயங்களால் வென்று நிமிர்ந்துள்ளது. ஆனால் சீனா மேற்கு கருதும் கம்யூனிஸத்தை கொண்டுள்ளதாகவோ ஜனநாயகத்தை கொண்டதாகவோ கருத முடியாது. சோசலிஸமும் புதிய ஜனநாயகமும் உலகத்திற்கு புதிய வீச்சை ஏற்படுத்தும் எனக்கருத வேண்டிய உலக ஒழுங்குக்குள் நகர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. டிரகனின் ஏகாதிபத்திய கனவு மேற்கு ஏகாதிபத்தியத்தையும் மிஞ்சுவதாக அமையப் போகிறது.

பேராசிரியர்
கே.ரீ.கணேசலிங்கம்
யாழ். பல்கலைக்கழகம்

 

Comments