சர்வதேச நாணய சபையிடம் கடன் பெறுவதே புத்திசாலித்தனமானது | தினகரன் வாரமஞ்சரி

சர்வதேச நாணய சபையிடம் கடன் பெறுவதே புத்திசாலித்தனமானது

இலங்கை அரசாங்கத்தின் அரசிறைத் தொழிற்பாடுகள் நீண்டகாலமாக பலவீனமான நிலையிலேயே இருந்துள்ளன. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி அதிகரித்துச் சென்றுள்ள அளவுக்கு அரசாங்கத்தின் அரசிறை வருவாய்கள் அதிகரிக்கவில்லை என்ற குற்றச்சாட்டைப் பரவலாகக் கேட்க முடிகிறது. வரிமுறைமையின் குறைபாடுகள் வரிவிலக்களிப்புகள், வரிஏய்ப்புகள், வரித்தவிர்ப்புகள் போன்ற பல்வேறு குறைபாடுகள் காரணமாக அரசிறை வருவாய்கள் அவற்றின் இயலுமை மட்டத்தை விடக்்குறைந்த மட்டத்திலேயே இருந்துள்ளன.

வரி வருவாய்களின் 80% நேரில் வரிகள் மூலமும் 20% மட்டுமே நேர்வரிகள் மூலமும் திரட்டப்பட்டு வந்துள்ளன. இதனால் சமூகத்தின் கீழ்மட்டத்தில் உள்ள மக்களே அதிகளவு வரிச்சுமையை தாங்கும் நிலையும் ஏற்பட்டது. குறிப்பாக வெளிநாட்டு வர்த்தகம் மீதான வரிகள், பெறுமதி கூட்டப்பட்ட வரி, கலால் வரி என்பனவே இலங்கை அரசாங்கத்தின் பிரதான வரிவருவாய் மூலாதாரங்களாக இருந்துள்ளன. தேசிய வருமானங்கள் மற்றும் இலாபங்கள் மீதான வரிகளின் செயலாற்றம் குறைவாகவே இருந்துள்ளது.

கடந்த பாதீடுகளில் மேற்கொள்ளப்பட்ட வரித்திருந்தங்களின் பின்னர் வரிவருவாய்களில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளமையையும் அவதானிக்க முடிகிறது. குறிப்பாக 2019ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2020இல் வெளிநாட்டு வர்த்தகத்தின் மீது விதிக்கப்பட்ட வரிவருவாய்கள் தவிர ஏனைய வரிவருவாய்கள் அனைத்துமே வீழ்ச்சியைச் சந்தித்துள்ளன. மொத்த உள்நாட்டு உற்பத்தியின் சதவீதமாக 2019 இல் 12.6% ஆக இருந்த அரசிறை வருவாய் 2020இல் 9.1% ஆக வீழ்ச்சியடைந்தது. கோவிட் தொற்று நோய் காரணமாக இவ் வீழ்ச்சிநிலை அவதானிக்கப்பட்டதாகக் கூறப்பட்டாலும் வரிமுறைமையின் அடிப்படைப் பலவீனங்களை வெளிப்படுத்துவதாகவும் இது அமைந்துள்ளது. இலங்கை அரசாங்கத்தின் அரசிறை வருவாய்கள் அதன் அன்றாட (நடைமுறைச்) செலவினங்களைக்கூட ஈடுசெய்யும் அளவுக்குப் போதியதாக இல்லை.

நடைமுறைச் செலவின் இரு பிரதான கூறுகளாக அரச கடன்களுக்கான வட்டிச் செலுத்தல்களும் (6.5%) அரசதுறை ஊழியர்களுக்கான சம்பளங்களும் கூலிகளும் (5.3%) காணப்படுகின்றன. இவை இரண்டையும் செலுத்துவதற்குக் கூட அரசிறை வருவாய்கள் போதியதாக இல்லை. மொத்த உள்நாட்டு உற்பத்தியின் சதவீதமாக அரசிறை வருவாய் 9.1% ஆக இருக்க மேற்படி இரு செலவினங்களின் கூட்டுத்தொகை 11.8% ஆக இருந்துள்ளது.

எனவே அன்றாடச் செலவினங்களுக்குத் தேவையான வருமானத்தையே திரட்ட முடியாத நிலையில் அரசாங்க முதலீட்டுத் திட்டங்களுக்குத் தேவையான நிதியைப் பெற்றுக் கொள்வது எவ்வாறு? கடன்களைப் பெறுவதன் மூலமே இவ்வாறான குறைநிலைகளுக்குத் தேவையான நிதிகள் கடந்த காலங்களில் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. அல்லது பணத்தை அச்சிடுவதன் மூலம் அவை நிதிப்படுத்தப்பட்டுள்ளன.

இலங்கை அரசாங்கம் உள்நாட்டிலிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் கடன்களைப் பெற்றுக் கொள்கிறது. 2019 ஆம் ஆண்டில் மொத்த அரசாங்கக் கடன்களில் 48% வெளிநாட்டுக் கடன்களாகவும் 52% உள்நாட்டுக் கடன்களாகவும் காணப்பட்டன. 2020இல் இச்சதவீதங்கள் முறையே 40 வீதமாகவும் 60 வீதமாகவும் மாற்றமடைந்தன. அரசாங்கம் வெளிநாட்டுக்கடன்களில் தங்கியிருக்கும் நிலையை மாற்றியமைக்க விரும்பியமையால் இந்நிலைமை ஏற்பட்டது. அத்துடன் செலுத்த வேண்டியுள்ள வெளிநாட்டுக் கடன்களை மீளச் செலுத்தும் முயற்சியிலும் அரசாங்கம் ஈடுபட்டது.

2019இல் 5.8 பில்லியன் டொலர் கடன்கள் மீளச் செலுத்தப்பட்டன. 2020இல் 4.4 பில்லியன் டொலர்கள் மீளச்செலுத்தப்பட்டன. 2019 இறுதியில் வெளிநாட்டுக் கடன்களின் அளவு 54.8 பில்லியன் டொலர்களாகக் காணப்பட்டன. 2020 இறுதியில் இது 49.2 பில்லியன் அமெரிக்க டொலர்களாகக் குறைக்கப்பட்டது. ஏற்றுமதிகள் மற்றும் இறக்குமதிகளில் ஏற்படும் மாற்றம் காரணமாகவும் கடன் பெறல் மற்றும் மீளச்செலுத்தல் நடவடிக்கைகள் காரணமாகவும் வெளிநாட்டு சொத்து ஒதுக்குகளில் மாற்றங்கள் ஏற்பட்டன.
2020இல் 4.2 மாதங்களுக்கு தேவையான இறக்குமதிகளை மேற்கொள்ளப் போதுமான ஒதுக்குகள் காணப்பட்டன. 2021இல் இது 3.2 மாதங்களுக்குப் போதுமானதாக இருக்குமென மத்திய வங்கி எதிர்வு கூறுகிறது. 2020 டிசம்பரில் 5.6 பில்லியன் டொலர்களாக இருந்த மேற்படி ஒதுக்குகள் 2021 மார்ச் மாதத்தில் 4.05 பில்லியனாக வீழ்ச்சியடைந்தன.

இதே காலப்பகுதியில் இலங்கை அரசாங்கம் தொடர்ச்சியாகப் பணத்தை அச்சிட்டு தனது நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்து வந்துள்ளது. கடந்த காலங்களில் அரசாங்கம் தனது கடன்களை மீளச் செலுத்துவதில் சிறப்பாகச் செயற்பட்டுள்ள போதிலும் எதிர்காலத்தில் அதன் மீளச்செலுத்தல் இயலுமை பற்றிய எறிவுகளில் ஈடுபட்ட தரமிடல் நிறுவனங்கள் இறைமைக்கடன் தரமிடலில் இலங்கையை கீழ் நோக்கி நகர்த்தியுள்ளன.
இதன் காரணமாக நாட்டின் தனியார்துறை நிறுவனங்களின் கடன்பெறும் ஆற்றலும் உலக சந்தையில் குறைந்து போயுள்ளது. நாட்டில் அந்நியச் செலாவணிப் பிரச்சினை ஊடகங்களில் பெருப்பித்துக் காட்டப்படுவதைப் போல பூதாகரமானதாக இல்லை எனவும் எல்லாம் கட்டுப்பாட்டின் கீழ்தான் உள்ளதென்றும் மத்தியவங்கி ஆளுநரும் அதிகாரிகளும் கூறுகின்றனர். ஊகங்களும் ஊகங்களின் அடிப்படையிலமைந்த வணிக செயற்பாடுகளுமே நிலைமைகளை மோசமாக்குகின்றன என்பது அவர்களது வாதம். ஆனால் இலங்கையிலுள்ள பொருளியல் வல்லுநர்களில் மிகப்பலர் இக்கூற்றை ஏற்றுக்கொண்டதாகத் தெரியவில்லை.

இவ்வாறான ஒரு நிலைமை ஏற்படுவதைக் கட்டுப்படுத்தியிருக்க முடியும் முன்கூட்டியே அதைத் தவிர்த்திருக்க முடியும் அவ்வாறு அதைச் செய்திருக்க வேண்டும் என்பது அவர்களது கருத்து. அத்துடன் மத்தியவங்கியின் விரிவாக்கப்பணக்கொள்கையின் விளைவாக வட்டிவீதங்கள் குறைக்கப்பட்டுள்ளதுடன் அண்மைக்காலமாக மிகப்பெருந்தொகைப்பணம் நாட்டில் அச்சிட்டு வெளியிடப்படுவதும் பிரச்சினைகளுக்கு தீர்வாக அமைவதற்குப்பதிலாக அதனை மேலும் தீவிரமாக்கும் சாத்தியக் கூறுகளே அதிகம் உள்ளதாகக் கூறுகின்றனர்.

தொடர்ச்சியாக ஏற்படும் பண நிரம்பலின் விரிவாக்கம் நாட்டின் உற்பத்தி மட்டம் போதியளவில் அதிகரிக்காத பட்சத்தில் துரித விலைமட்ட அதிகரிப்பிற்கு இட்டுச் செல்லும். அத்துடன் அரசாங்கம் உள்நாட்டு வங்கித்துறையிடமிருந்து கடன்பெறும் போது தனியார் வங்கிகளிடமிருந்து கடன் பெறும் ஆற்றல் வெகுவாகக் குறைவடையும். அது மட்டுமன்றி அரசாங்கத்தின் விரிவாக்க பணக்கொள்கைகள் மூலம் நாட்டின் தனியார்துறை முதலீடுகளை அதிகரிக்கச் செய்யும் முயற்சிகள் இதுவரை வெற்றியடைந்ததாகத் தெரியவில்லை.

இப்போதுள்ள சூழலில் வட்டிவீதங்கள் குறைந்தாலும் கடன் பெற்று முதலீடுகளை மேற்கொள்ளுமளவுக்கு நாட்டின் முதலீட்டுச் சூழல் சாதகமானதாக இல்லை என்பதே யதார்த்தம். மறுபுறம் நாட்டின் வட்டிவீதங்கள் குறைக்கப்பட்டமையால் கணிசமானளவு வெளிநாட்டு பட்டியல் முதலீடுகள் நாட்டைவிட்டு வெளியேறியுள்ளன. பங்குச் சந்தையிலும் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் கொள்வனவுகள் வீழ்ச்சியடைந்து விற்பனைகள் அதிகரித்தமையினால் தேறிய வெளிப்பாய்ச்சல் இடம்பெற்றுள்ளமையைக் காணலாம். ஏற்றுமதி வருமான வீழ்ச்சி முதலீட்டு வெளிப்பாய்ச்சல்கள் கடன் மீளச்செலுத்தல்கள் என்று அதிகளவு அந்நியச் செலாவணி வெளிப்பாய்ச்சல்கள் இடம் பெற்றுள்ளமை தெளிவாகத் தெரிகிறது. மறுபுறம் முறைசார்ந்த மூலாதாரங்களிலிருந்து கடன் பெறும் ஆற்றலும் கீழ்நோக்கி நகர்த்தப்பட்ட தரமிடல் காரணமாக குறைவடைந்துள்ளது.

இவ்வாறான பாதகமான சூழல்களை எதிர்கொள்ளும் நாடுகளுக்கு உதவும் பொருட்டே சர்வதேச நாணய நிதியம் (IMF) உருவாக்கப்பட்டது. நீண்டகால அனுபவமுள்ள நிபுணத்துவ ஆலோசனைகளுடன் நிதிவசதிகளையும் நெருக்கடியான காலங்களில் இந்நிறுவனம் வழங்கி வருகிறது. நீண்டகால ரீதியில் நாடுகள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை விதந்துரைப்பதுடன் நிபந்தனைகளின் அடிப்படையில் கடன்களை வழங்கும். இலங்கையை விட மோசமான நிதி நெருக்கடிகளை எதிர்நோக்கிய நாடுகள் பல இதன் உதவியுடன் அவற்றிலிருந்து மீண்டிருக்கின்றன.
எல்லாவற்றுக்கும் மேலாக (IMF) உடன் ஆலோசனையில் உள்ள ஒரு நாடு என்ற அந்தஸ்து கிடைத்தால் கடன் தரமிடல் நிறுவனங்கள் அதனை சாதகமான ஒரு விடயமாகப் பரிசீலிக்கும். இதனால் சர்வதேச கடன் சந்தையில் புதிய கடன்களைப் பெறக்கூடிய ஆற்றலும் அதிகரிக்கும். சுருக்கமாகச் சொன்னால் (IMF) இன் உறுதிச்சான்று (seal of approval) இன்றி முறைசார்ந்த சர்வதேச சந்தையில் ஒரு நாடு கடன் பெறுவது கடினம். IMFI வெறுக்கின்ற தற்போதைய அரசாங்கம் இதனை எவ்வாறு கையாளப்போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

ஒரு வங்கியிடம் கடன் பெறச்செல்லும்போது பல்வேறு நிபந்தனைகளைப் பூர்த்தி செய்ய வேண்டியேற்படும். கடன் பெறச்செல்பவருக்கு அது எரிச்சலையும் அசெளகரியத்தையும் ஏற்படுத்துவது உண்மைதான். மாறாக அருகில் உள்ள கந்துவட்டிக்காரனிடம் சென்றால் நிபந்தனைகள் இன்றி கடன் பெறலாம். ஆனால் அவன் கடன் பெறுபவனது சொத்துக்கள் தன்வசம் வருமாறு காட்சிகளையும் சம்பவங்களையும் அமைத்துக் கொள்வான். கடன் நிபந்தனைகளுக்குப் பயந்து கந்துவட்டிக்காரனிடம் சென்றவன் ஈற்றில் உள்ளதையெல்லாம் இழந்து நிற்கவேண்டி ஏற்படும்.

சாதாரண ஒரு விவசாயிக்கும் புரியக் கூடிய இந்த விடயம் பொருளியலில் கலாநிதிப்பட்டம் பெற்று பேராசியர்களாக இருந்து இப்போது அரசாங்கத்தின் நிறைவேற்றுப் பொறுப்புகளில் இருப்பவர்களுக்கு ஏன் புரியவில்லை என்பது தான் விந்தையாக உள்ளது. ஒருவேளை மலேஷியப் பிரதமர் மஹதிர் முகம்மத் ஒரு தடைவை IMFI நிராகரித்து செயற்பட்டதை நினைவில் இறுத்திச் செயற்படுகிறார்களோ தெரியவில்லை. ஆனால் இலங்கை ஒரு மலேஷியா இல்லை என்பது மட்டுமன்றி மகதிர் முகமதுகளும் இங்கில்லை என்பதையும் நினைவிற்கொள்ள வேண்டியுள்ளது.
இன்றைய சூழலில் நாட்டின் எதிரே உள்ள ஒரு பகுத்தறிவான தெரிவு சர்வதேச நாடுகளின் அங்கீகாரம் பெற்ற ஒரு நிறுவனத்தின் ஆலோசனைகளையும் நிதி வசதிகளையும் பெற்றுக்கொள்வதேயாகும். இப்போது வங்கியிடம் செல்வதா அல்லது கந்துவட்டிக்காரனிடம் செல்வதா என்பதை ஆட்சியாளர்களே தீர்மானிக்க வேண்டும்.
ஆட்சியாளர்களுக்கு அருகில் நெருக்கமாக உள்ள பொருளியல் மற்றும் நிதித்துறைசார்ந்த அறிவுகொண்டவர்கள் அவர்களை இதுபற்றித் தெளிவுபடுத்த முயற்சிக்க வேண்டும். இப்போது எடுக்கப்பட வேண்டிய இந்தத் தீர்மானம் எதிர்காலச் சந்ததியின் வாழ்க்கையைத் தீர்மானிப்பதாக அமையும். அதைச் செய்ய வேண்டியவர்கள் செய்வார்களா?  

கலாநிதி எம்.கணேசமூர்த்தி
பொருளியல்துறை
கொழும்பு பல்கலைக்கழகம்

Comments