தமிழர் அரசியல் தரப்பின் அரசியல் விவேகமற்ற அபத்தமான கருத்துகள்! | தினகரன் வாரமஞ்சரி

தமிழர் அரசியல் தரப்பின் அரசியல் விவேகமற்ற அபத்தமான கருத்துகள்!

தமிழ் அரசியல் கைதிகள் பதினாறு பேர் கடந்த பொசன் நோன்மதி தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டிருந்தனர். இவர்களுடைய விடுதலை தொடர்பில் பல தரப்பினராலும், பல்வேறுபட்ட நிலைப்பாடுகள் அல்லது கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன.

பல தசாப்தங்களாக விடுதலைக்காக ஏங்கிக் கொண்டிருந்தவர்கள் சுதந்திரமாக விடுவிக்கப்பட்டிருப்பது நிச்சயம் அவர்களுக்கு மகிழ்ச்சி தரும் விடயமாக இருந்த போதிலும் தமிழ் அரசியல் தரப்பில் உள்ளவர்கள் அவர்களது வழமையான சுபாவத்துடன் இதனையும் விமர்சன சிந்தனையுடனேயே பார்க்கின்றனர்.

எதிர்வரும் பத்து பதினொரு மாதங்களில் விடுவிக்கப்படவிருந்த தமிழ்க் கைதிகளை அரசாங்கம் விடுதலை செய்துள்ளது. இதில் பெருமைப்படும் விடயம் எதுவும் இல்லையென சில தமிழ் அரசியல்வாதிகள் விமர்சித்துள்ளதை கடந்த சில நாட்களுக்கு முன்னர் அவதானிக்க முடிந்தது.

அது மாத்திரமன்றி தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை, மரண தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டு ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் ஊடாக விடுதலை செய்யப்பட்ட அரசியல்வாதி துமிந்த சில்வாவின் விடுதலையுடன் சிலர் ஒப்பிட்டு தமிழ் அரசியல்வாதிகள் சிலர் தனது இனத்தின் மீதான பற்றுதலை மறந்த பொறுப்பற்ற முறையில் கருத்துகளை முன்வைத்துள்ளார்கள்.

எல்.ரி.ரி.ஈ சந்தேகநபர்களை விடுவிக்கின்றோம் என்ற போர்வையில் மரண தண்டனை கைதியான துமிந்த சில்வாவை விடுதலை செய்வதற்கு அரசாங்கம் நாடகமாடியுள்ளது என்றும் தமிழ்த் தரப்பில் சிலர் விமர்சித்துள்ளனர்.

இவ்வாறு தங்களது கருத்துக்களை முன்வைப்பதற்கான சுதந்திரம் அனைவருக்கும் இருக்கின்ற போதும், அனைத்து விடயங்களையும் அரசியல் நோக்கத்துடன் பார்ப்பது சில சந்தர்ப்பங்களில் பொதுமக்களுக்கு நெருடல்களைக் கொடுக்கின்றது என்பதை மறந்து விடலாகாது. இவ்வாறான விவேகமற்ற கருத்துகளால் பெரும்பான்மை இனத்தை வீணாக சீண்டி விடுவதற்கு முற்படலாகாது என்பதை இவர்கள் கவனத்தில் கொள்வது நல்லது.

தமிழ் அரசியல் கைதிகளைப் பொறுத்த வரையில் அவர்கள் பல தசாப்தங்களாக விடுதலைக்காக ஏங்கிக் கொண்டிருப்பவர்கள். சிறையிலிருந்து விடுதலை செய்யப்படுவது என்பது அவர்களுக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் நிம்மதியையும் மகிழ்ச்சியையும் கொடுக்கும் விடயம் என்பதை எவரும் மறுக்க முடியாது.
ஏறத்தாழ 70 இற்கும் அதிகமானவர்கள் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தமிழ் அரசியல் கைதிகளாக குறிப்பிடப்படுகின்றனர். அவ்வாற அவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் 16 பேர் மாத்திரம் விடுவிக்கப்பட்டுள்ளது என்பது எண்ணிக்கையில் சிறியதாக இருந்தாலும், விடுதலை தொடர்பில் அரசாங்கம் அதுவும் பெரும்பான்மை சிங்கள மக்களின் ஆதரவுடன் ஆட்சிக்கு வந்த அரசாங்கம் இவ்வாறான சிறந்த முடிவை எடுத்துள்ளது என்பது இங்கு நோக்கப்பட வேண்டியதாகும்.

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை துமிந்த சில்வாவின் விடுதலையுடன் ஒப்பிடுவதில் தமிழ் இனத்துக்கு எந்தவிதமான பயனும் இல்லை. ஏனெனில் துமிந்த சில்வாவின் விடுதலை விவகாரம் என்பது தமிழர்களுக்கு எந்த விதமான தாக்கத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை.  துமிந்தவின் தடுத்து வைப்போ அல்லது அவரது விடுதலையோ தமிழ் இனத்துக்கு இத்தருணத்தில் அக்கறையற்ற விடயங்களாகும்.

நீண்ட காலமாக சிறைகளில் வாடும் தமிழர்கள் தொடர்பாகவே கவனம் செலுத்தப்பட வேண்டியது பிரதானமாகும். இவ்வாறான சாதகமான தருணத்தை நன்கு பயன்படுத்தி தமிழ்க் கைதிகளின் வாழ்வில் விடிவை ஏற்படுத்தவே தமிழ் அரசியல் தரப்பினர் இவ்வேளையில் சிந்திக்க வேண்டும். அதற்கு மாறாக அக்கைதிகளின் விடுதலைக்கு குந்தகம்  ஏற்படுத்தும் விதத்தில் அபத்தமான கருத்துகளை வெளியிடுவது விவேகமான செயல் அல்ல.

துமிந்த விவகாரம் தமிழினத்தின் முதன்மை பிரச்சினையல்ல. தமிழ்க் கைதிகளின் விடுதலையே கருணைக்குரிய பிரச்சினை ஆகுமென்பதை மறந்து விடலாகாது. தமிழ் அரசியல் தரப்பினர் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக அரசாங்கத்தைப் பாராட்டா விட்டாலும் அதனை அரசியலாக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதே தமிழ் மக்களில் பலருடைய நிலைப்பாடாக உள்ளது.

தமிழ் அரசியல் கைதிகள் என்று எவரும் இல்லை அரசாங்க தரப்பில் சிலர் இதுவரை கூறி வந்தனர். சட்டத்தில் காணப்படும் ஏதோ சிக்கல்களால் குற்றச்சாட்டுக்கள் கூட சுமத்தப்படாது பலர் சிறைகளில் உள்ளனர் என்பதையும், குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு தண்டனை வழங்கப்பட்டிருந்தாலும் அதனை விட கூடுதலான காலம் அவர்கள் சிறையில் கழித்து விட்டனர் என்பதையும் அரசாங்கத்தின் அமைச்சரும், ராஜபக்ஷ குடும்பத்தின் உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ  பாராளுமன்றத்தில் பகிரங்கமாக ஏற்றுக் கொண்டுள்ளார் என்பது நல்லிணக்கம் சார்ந்த பாராட்டும் கருத்தாகும். இது உண்மையிலேயே நன்றிக்குரிய விடயம்.

கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கும், அதற்கான அழுத்தங்களைக் கொடுப்பதற்கும் அப்போதைய அரசுக்கு  தோள் கொடுத்துக் கொண்டிருந்த தமிழ் தரப்பினருக்கு சந்தர்ப்பங்கள் கிடைத்திருந்தன. இந்த சந்தர்ப்பத்தை சரியாகப் பயன்படுத்த அவர்கள் தவறியிருந்ததுடன், நல்லாட்சி அரசாங்கமும் எதிர்த் தரப்பிலிருந்து எழக் கூடிய விமர்சனங்களுக்கு அஞ்சி இவ்விவகாரத்தில் அதிக அக்கறை காண்பிக்கத் தவறி விட்டது.

பல தசாப்தங்களாக விடுதலைக்காக ஏங்கிக் கொண்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளும் உள்ளேயிருந்து சாத்விகமாகப் போராடிக் களைத்து விட்டனர். கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் மீது அவர்கள் அதிகளவு நம்பிக்கை வைத்திருந்த போதும், அது பலனளிக்காத நிலையில் எவரும் எதிர்பாராத தருணத்தில் தற்போதைய அரசாங்கம் கைதிகள் விடுதலை விடயத்தில் சாதகமான நிலைப்பாட்டை எடுத்துள்ளது.

அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தமிழ் அரசியல் கைதிகள் விவகாரம் குறித்து பாராளுமன்றத்தில் முன்வைத்த கருத்துகளை ஆமோதிக்கும் வகையில் நீதி அமைச்சர் அலி சப்ரியும் கருத்துகளை முன்வைத்திருந்தார். இது நிலைமைகளில் ஒரளவுக்கு மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை எடுத்துக் காட்டுகிறது.

பதினாறு பேரின் விடுதலையுடன் நின்று விடாது ஏனைய தமிழ் அரசியல் கைதிகளையும் அரசாங்கம் நல்லெண்ணத்தின் அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் என்பதே சிறையில் உள்ளவர்களின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது. அமைச்சர் நாமல் ராஜபக்ஷவின் முயற்சியால் அவர்கள் மத்தியில் புதியதொரு நம்பிக்கைக் கீற்று துளிர் விடத் தொடங்கியுள்ளது. அமைச்சர் நாமல் ராஜபக்ஷ மாத்திரமன்றி முன்னாள் இராணுவத் தளபதியும் பாராளுமன்ற உறுப்பினருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா உள்ளிட்டவர்களும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் சாதகமான கருத்துக்களை முன்வைத்துள்ளனர்.

ஆளும் கட்சி மற்றும் எதிர்க் கட்சி தரப்பில் இவ்விவகாரத்தில் ஒருமித்த நிலைப்பாடு காணப்படும் சூழ்நிலையில், ஏனையவர்களின் விடுதலையிலும் அரசாங்கம் அக்கறை செலுத்த வேண்டும் என்பதே தமிழ் மக்களின் கோரிக்கையாக உள்ளது.

நீண்ட காலக் கோரிக்கையான கைதிகள் விடயத்தில் அரசாங்கம் தீர்க்கமான முடிவினை வழங்குமாயின், தமிழர் தரப்பு அரசுக்கு சாதகமான நிலைப்பாட்டை எடுப்பதற்கான வாய்ப்புக்களும் காணப்படுகின்றன. சிங்கள பெரும்பான்மை மக்களின் ஆதரவினால் தெரிவு செய்யப்பட்டிருந்தாலும் அனைத்து நாட்டு மக்களின் பிரதிநிதியாகச் செயற்படுவேன் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது பதவியேற்பு நிகழ்வின் போது கூறியிருந்தார் என்பதை தமிழ் அரசியல் தரப்பினர் இத்தருணத்தில் புரிந்து கொண்டு நல்லிணக்க அடிப்படையில் நடந்து கொள்வது அவசியம்.

இவ்வாறான நிலையில், தமிழர்களின் அபிலாஷைகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றுவதில் கவனம் செலுத்துவது இரு தரப்புக்கும் வெற்றியான சூழ்நிலையை வழங்கும்.

அதேநேரம், தமிழ் அரசியல் பிரதிநிதிகள் எப்பொழுதும் போல எதிர்ப்பு அரசியலை மேற்கொள்ளாது தமது மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு கைகோர்க்க வேண்டிய சந்தர்ப்பமும் இதுவாகும். அவர்கள் சார்பு அரசியலை மேற்கொள்வதிலும் தவறில்லை. படிப்படியாக அரசியல் தீர்வு விடயம் குறித்த பேச்சுகளையும் அரசாங்கத்துடன் மேற்கொள்வதற்கான முயற்சிகளையும் அவர்கள் எடுக்க வேண்டும். அதுவே விவேகமாகும்.

பி.ஹர்ஷன்

Comments