பொருளாதார அபிவிருத்தியின் முன்னோக்கிய பாய்ச்சலுக்கு பொருத்தமான செயல் வீரர்! | தினகரன் வாரமஞ்சரி

பொருளாதார அபிவிருத்தியின் முன்னோக்கிய பாய்ச்சலுக்கு பொருத்தமான செயல் வீரர்!

கொரோனா தொற்று தாக்கம் உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் பின்னடைவுகளைச் சந்தித்திருக்கும் நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் சரி செய்வதில் அரசாங்கம் தீவிரமான முனைப்பு காட்டி வருகிறது. பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதில் நன்கு அனுபம் மிக்கவரும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ஷ நிதி அமைச்சராகப் பொறுப்பேற்றிருப்பது அரசாங்கத்துக்கு மேலும் பலம் சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது என்றே கூற வேண்டும்.

பசில் ராஜபக்ஷ மீண்டும் அமைச்சராகப் பதவியேற்றிருப்பது அரசாங்கத்தின் அபிவிருத்தி முன்னகர்வுகளுக்கு பலம் சேர்க்குமென்பது ஒருபுறமிருக்க, அரசுக்கும் பெரும் ஆதரவாக அமையுமென்பதே ஆட்சியில் அங்கம் வகிக்கின்ற முக்கியஸ்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ முன்னர் ஜனாதிபதியாக இருந்த காலத்தில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராகக் கடமையாற்றி, அபிவிருத்தித் திட்டங்களில் பல்வேறு முன்னேற்றங்களை ஏற்படுத்திய ஒருவர் தற்போது புதிய நிதி அமைச்சராகப் பெறுப்பேற்றிருப்பதை நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மக்கள் கொண்டாடியிருந்தனர்.

பெரும்பான்மை மக்கள் மாத்திமன்றி வடக்கில் தமிழ் மக்கள் உட்பட சிறுபான்மையின மக்களும் பட்டாசுகள் கொளுத்தி மகிழ்ச்சிக் கொண்டாட்டம் நடத்தியிருந்ததை ஊடகங்கள் ஊடாக பார்க்க முடிந்தது.

கடந்த பொதுத் தேர்தலில் பொதுஜன பெரமுனை கட்சியின் சார்பில் தேசியப் பட்டியல் ஊடாக நியமிக்கப்பட்ட ஜயந்த கெட்டகொட தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்வதாக சில தினங்களுக்கு முன்னர் அறிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து அந்த பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கான வெற்றிடம் தொடர்பில் பாராளுமன்ற செயலாளர் நாயகத்தினால் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு அறிவிக்கப்பட்டது.

இந்த வெற்றிடத்துக்கு தமது கட்சி சார்பில் பசில் ராஜபக்ஷவை நியமிப்பதாக பொதுஜன பெரமுனவின் செயலாளர் நாயகம் அறிவித்திருந்தார். இதற்கமைய தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் பசில் ராஜபக்ஷவின் பெயரை வர்த்தமானி அறிவித்தலில் வெளியிட்டார். இந்த நிலையில், கடந்த வியாழக்கிழமை பசில் ராஜபக்ஷ பாராளுமன்றத்தில் எம்.பியாக பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் கிருவாபத்துவ கிராமத்தில் 1951 ஆம் ஆண்டில் பிறந்த பசில் ரோஹன ராஜபக்ஷ  இதற்கு முன்னர் இரண்டு தடவை பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார். 2007 செப்டம்பர் 17 ஆம் திகதி பாராளுமன்றத்துக்கு தேசியப் பட்டியல் ஊடாக தெரிவு செய்யப்பட்ட அவர், பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக  பணியாற்றியிருந்தார். அவரது அப்பதவிக் காலத்தில் நாட்டில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
அதனை அடுத்து 2010 ஆம் ஆண்டில் கம்பஹா மாவட்டத்தில் போட்டியிட்டு 425,861 விருப்பு வாக்குகளை பெற்று பசில் ராஜபக்ஷ பாராளுமன்றத்துக்குத் தெரிவாகினார். ஏழாவது பாராளுமன்றத்திலும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக அவர் பணியாற்றினார்.

பாராளுமன்றத்துக்கு பிரவேசிப்பதற்கு முன்னர் அவர் 2005 முதல் 2010 வரை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சிரேஷ்ட ஆலோசகராகவும் பணியாற்றியிருந்தார். பசில் ராஜபக்ஷ கொழும்பு இசிபதன கல்லூரியினதும், கொழும்பு ஆனந்தா கல்லூரியினதும் பழைய மாணவராவார்.

கடந்த வியாழக்கிழமை பாராளுமன்ற உறுப்பினராகப் பதவிப் பிரமாணம் செய்து கொண்ட அதேவேளை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் அரசாங்கத்தின் நிதி அமைச்சராகவும் பசில் ராஜபக்ஷ கடமைகளைப் பொறுப்பேற்றிருந்தார்.

பாராளுமன்ற உறுப்பினராகப் பதவிப் பிரமாணம் செய்த பின்னர் சபையிலிருந்த ஆளும் தரப்பு உறுப்பினர்கள் அனைவரும் மேசையில் தட்டி தமது வரவேற்பைத் தெரிவித்ததுடன், சபையில் உரையாற்றிய பலரும் அவரின் வருகையைப் பாராட்டிப் பேசியிருந்தனர். அது மாத்திரமன்றி, நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் அவருடைய பாராளுமன்ற மீள்வருகை அரசாங்கத்தின் ஆதரவாளர்களினால் கொண்டாடப்பட்டிருந்தது.

மக்கள் நலன் கருதி எமது நாட்டுத் தலைவரும் சில விரும்பத்தகாத தீர்மானங்களை எடுக்க வேண்டிய சூழல் ஏற்படுவதாக நிதி அமைச்சராகப் பெறுப்பேற்ற பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ கூறியிருந்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், “எனக்கு வழங்கப்பட்டுள்ள பணி பெரிய, கடினமான பணியாகும். இந்தச் சவாலை ஏற்றுக் கொண்டு அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டிய தேவை உள்ளது. நான் அமைச்சர் என்பதை விட, உங்களுடைய உதவியாளராக செயற்படவே விரும்புகின்றேன். உழைக்கும் மக்களின் குறிப்பாக விவசாயிகள், மீனவர்கள், தொழிலாளர்கள், அரச ஊழியர்கள் மற்றும் தொழில் வல்லுநர்களின் ஆதரவு நாட்டின் பொருளாதார முன்னேற்றத்துக்கு அவசியம். ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசாங்கத்தில் உள்ள அனைவருக்கும் பிரச்சினைகள் என்ன என்பது குறித்து புரிதல் இருக்கின்றது. சில சமயங்களில் ஒரு தந்தையைப் போல நாட்டு நலனுக்காக சில விரும்பத்தகாத காரியங்கள் செய்யப்பட வேண்டியிருக்கும். எனினும் அவை மக்களுக்காக எடுக்கும் தீர்மானங்கள் என்றே நாம் கருதுகின்றோம்” எனக் கூறினார்.

அமைச்சர் பசில் ராஜபக்ஷவைப் பொறுத்த வரையில் பொருளாதாரத்தை சரியான பாதையில் கொண்டு செல்வதற்கு அவர் பொருத்தமான ஒருவர் என்பதே பொதுவான நம்பிக்கையாகும். அவரது வருகையானது இன்றைய நிலையில் பொருளாதார விடயங்களில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்துமென்ற எதிர்பார்ப்பு அனைத்து தரப்பிலும் நிலவுகின்றது.

இருந்த போதும், எவராலும் எதிர்பார்க்க முடியாதளவு பொருளாதாரத்தில் மாத்திரமன்றி அனைத்து விடயங்களிலும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் கொரானா தொற்றுநோய் பரவலினால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சீர்செய்வது என்பது இன்றைய காலகட்டத்தில் அவருக்கு இலகுவான பணியாக இருக்கப் போவதில்லை.

இருந்தபோதும் கடந்த காலத்தில் பசில் ராஜபக்ஷ கொண்டுள்ள அனுபவங்கள் நிச்சயம் அவருக்கு உறுதுணையாக இருக்கப் போகின்றது என்ற எதிர்பார்ப்பு அனைவர் மத்தியிலும் காணப்படுகிறது. குறிப்பாக கொரோனா தொற்று வேளையான இன்றைய காலப் பகுதியில் அதிகரித்துள்ள வாழ்க்கைச் செலவைக் குறைப்பதில் அவர் கவனம் செலுத்துவார் என்ற பரவலான எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்புக்கள் எதிர்வரும் நாட்களில் வெளியாகும் என்ற நம்பிக்கையும் பலரிடம் காணப்படுகிறது.

பசில் ராஜபக்ஷ கடந்த காலத்தில் அமைச்சராக சிறந்த பணியாற்றியதுடன், அரசியலில் சிறந்ததொரு ஒருங்கிணைப்பாளர் என்பதையும் நாம் மறந்து விட முடியாது. 2015ஆம் ஆண்டு தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஏற்பட்ட தோல்வியையடுத்து, அந்த வீழ்ச்சியில் இருந்து எழுந்து மீண்டும் ஆட்சியைப் பிடிப்பது என்ற திடசங்கற்பத்துடன் செயற்பட்டவர் அவர். அதன் பின்னர் குறுகிய காலத்துக்குள் பொதுஜன பெரமுன என்ற கட்சியை உருவாக்கி உள்ளூராட்சி சபைகள், அதனைத் தொடர்ந்து பாராளுமன்றம் என அனைத்துத் தேர்தல்களிலும் தமது புதிய கட்சியின் வெற்றியையும், அதன் பெரும்பான்மை ஆதரவையும் உறுதிப்படுத்திய செயல் வீரர் அவர் என்றால் அது மிகையாகாது.

கட்சி அரசியல் ஒருங்கிணைப்புக்கு அப்பால் பொருளாதார அமைச்சர் என்ற ரீதியில் அன்றைய அரசாங்கத்தில் நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கும், வறுமை ஒழிப்பிற்கும் அவர் வழங்கிய ஒத்துழைப்புக்களும் குறிப்பிடத்தக்கவையாகும். குறிப்பாக திவிநெகும அல்லது வாழ்வின் எழுச்சி வேலைத்திட்டத்தினால் நன்மை பெற்றவர்கள் ஆயிரக்கணக்கானவர்கள்.

திவிநெகும வேலைத் திட்டமானது குறைந்த வருமானத்தைப் பெறும் குடும்பங்களின் வாழ்வாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கான வழிகளை ஏற்படுத்திக் கொடுத்தல், சுயதொழிலாளர்களுக்கு வசதிகளை வழங்குதல் என்பவற்றை உள்ளடக்கியிருந்தது. திவிநெகும வேலைத் திட்டத்தின் ஊடாக அப்போது ஆட்சியிலிருந்த அரசாங்கத்துக்கு அடிமட்டத்தில் ஆதரவு திரட்டப்படுகிறது என்ற குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்த போதும் இதனால் நன்மை அடைந்தவர்களின் எண்ணிக்கை என்னவோ அதிகமாகவே உள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தில் பசில் ராஜபக்ஷ தற்பொழுது நிதி அமைச்சராக நியமிக்கப்பட்டிருந்தாலும் ஆரம்பம் முதலே நாட்டின் பொருளாதார விடயங்களில் அவருடைய வகிபாகம் அதிகமாகவே காணப்பட்டது. பொருளாதாரம் தொடர்பான ஜனாதிபதியின் செயலணியின் தலைவராக அவர் செயற்பட்டுள்ளார். குறிப்பாக கொரோனா தாக்கத்துக்கு மத்தியிலும் பொதுமக்களின் வாழ்வாதாரத்துக்குப் பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் தீர்மானங்களை எடுப்பதில் இந்த செயலணியின் பங்கு அதிகமாகவே இருந்தது. நாட்டை முடக்குவது உள்ளிட்ட தீர்மானங்களை எடுக்கும் போது பொருளாதாரத்தின் பக்கம் அதிகம் சிந்திப்பதற்கு இந்த செயலணி நடவடிக்கை எடுத்திருந்தது.

இவ்வாறான பொறுப்பை வகித்த செயல்வீரரான ஒருவர் நிதி அமைச்சராக தற்போது நியமிக்கப்பட்டிருப்பதால் நாட்டின் பொருளாதார அபிவிருத்தி மீதான நம்பிக்கை மக்கள் மத்தியில் வலுவடைந்துள்ளது என்றே கூற வேண்டும்.
இதேசமயம் பசில் ராஜபக்ஷவின் மீள்வருகையானது எதிர்க் கட்சி மத்தியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளதையும் இங்கு குறிப்பிடுவது அவசியம். நாட்டில் ஏற்பட்டுள்ள விலைவாசி அதிகரிப்பை காரணமாக வைத்து மக்கள் மத்தியில் பிரசாரத்தை முன்னெடுத்து வருகின்ற எதிர்க் கட்சியினர் தற்போது அவர்களது பிரசாரத் துரும்பை இழந்து விட நேரிடலாமென அஞ்சுவதாகத் தெரிகின்றது. ஏனெனில் பொருளாதார சரிவை சரிசெய்து, விலையேற்றத்தை குறைக்கும் திட்டங்களை முன்னெடுக்கக் கூடியவர் பசில் என்பது பொதுவான நம்பிக்கையாக உள்ளது.

 

Comments