பலன் தரட்டும் பசிலின் வருகை | தினகரன் வாரமஞ்சரி

பலன் தரட்டும் பசிலின் வருகை

இலங்கையின் பொருளாதார நிலை வீழ்ச்சி அடைந்திருப்பதும் வெளிநாட்டு வருமானம் மிகவும் குறைந்து போயுள்ள நிலையில் பற்றாக்குறை நிலவுவதும் எதிர்க்கட்சிகளினால் அரசை எதிர்க்கும் ஒரு உபாயமாக பயன்படுத்தப்படுவதை அவதானிக்க முடிகிறது. ஜனநாயக நாடொன்றில் எதிர்க்கட்சிகள் இவ்வாறு செயல்படுவது இயல்பான ஒன்றுதான். ஆனால் இந்த வீழ்ச்சி கடந்த இரண்டாண்டு காலப்பகுதியில் நடைபெற்ற மாதிரி சித்தரிக்கப்படுவது மிகவும் தவறானது. கொரோனா இலங்கையை மட்டுமின்றி நூற்றுக்கும் அதிகமான நாடுகளைக் கடுமையாகத் தாக்கி அந்தந்த நாடுகளின் பொருளாதார மட்டங்களில் பெரும் சேதங்களை ஏற்படுத்தி உள்ளது. அதில் இலங்கை படுமோசமான பாதிப்பை அடைந்ததற்கான காரணங்கள் ஆராயப்பட வேண்டியவை. 

இந்த பாதிப்பு ஐம்பது ஆண்டுகாலமாகத் தொடர்ந்து வந்திருக்க வேண்டும். இலங்கை படிப்படியாக பொருளாதார வீழ்ச்சியை அடைந்து வந்திருப்பதாகவும், அரசியல் திட்டங்கள், உறுதிமொழிகள் வேறாகவும் நாட்டின் அபிவிருத்தி, பொருளாதார அபிவிருத்தி வேறாகவும் பார்க்கப்படாமல் இரண்டும் கலவையாக முன்னெடுத்துச் செல்லப்பட்டதன் விளைவாகத்தான் எதிர்பார்க்கப்பட்ட படிநிலை வளர்ச்சி நாட்டில் ஏற்படவில்லை என்று பொருளாதார ஆய்வாளர்கள் எடுத்துக் காட்டியுள்ளனர். அரசுகள் தாம் வகுக்கும் திட்டங்கள் நாட்டை நீண்ட கால நோக்கில் அபிவிருத்தி அடையச் செய்யுமா என்று சிந்திப்பதற்கு பதிலாக ஐந்து ஆண்டுகளுக்குள் பலன்தரக்கூடிய திட்டங்கள் எவை என்ற ரீதியில், அடுத்த தேர்தலை மனதில் கொண்டு தீட்டப்பட்டு வந்ததன் விளைவாகவே நாடு பின்னடைவை சந்திக்க நேர்ந்தது என்பது இவர்களின் வாதமாக உள்ளது. ஏழைகளுக்கு இலவச திட்டங்களை அறிவிப்பது நாட்டில் ஏழ்மையை குறைக்கும் ஒரு முயற்சியே தவிர அது அபிவிருத்தியாகாது. அபிவிருத்தி திட்டங்களை செம்மையாக நிறைவேற்றுவதன் மூலமே வறுமையை நாட்டில் குறைக்க முடியும். ஆனால் கட்சிகளின் தேர்தல் எதிர்பார்ப்புகளை இவ்வகையான திட்டங்கள் ஈடுசெய்யலாம்.

எமது சுதந்திரத்தின் பின்னரான அரசியல் வரலாற்றை கூர்ந்து அவதானிப்போமாயின் அடுத்த அரசை அமைக்கப்போகும் கட்சி எது என்பதை அரிசி விலையே தீர்மானித்தது. அரிசி ஒரு கொத்து 25சதத்துக்கும் அதை இலவசமாகத் தருவேன் என்ற கட்சி அடுத்த முறை இலவசமாக வழங்கியதையும் பார்த்துள்ளோம். 1970 தேர்தலில் பெருங்கோஷங்களாக விளங்கியவை, சந்திரனில் இருந்தாவது அரிசி கொண்டுவந்து தருவோம், சீனி இல்லாமல் பிளேன்டீ குடிப்போம் என்பதாக இருந்ததை வாசகர்கள் மறந்திருக்க மாட்டார்கள். இப்படி பொருளாதார வளர்ச்சி பற்றி கவலைப்படாமல் அரசுகள் இந் நாட்டை ஆட்சி செய்துள்ளன. ஒரு அரசு உள்ளூரில் மோட்டார் வாகனங்களையும் எலக்ட்ரோனிக் உபகரணங்களையும் தயாரிக்க ஒரு நிறுவனத்துக்கு அனுமதி அளித்தால் அடுத்து வரும் ஆட்சி அதற்கான அனுமதியை, எதிரிக் கட்சியின் ஆள் என்ற நியாயத்தின் பேரில், இரத்துச் செய்ததை நாம் கடந்த காலத்தில் கண்டிருக்கிறோம். அபிவிருத்தியை அபிவிருத்தியாக மட்டுமே, கட்சிச் சாயம் பூசாமல் பார்க்க இன்றைக்கும் நாம் கற்கவில்லை. எனவே இத்தகைய மனப்பான்மையால்தான் இந்நாடு படிப்படியாக பின்னடைவுகளை சந்திக்க நேர்ந்தது என்பது வெளிப்படையானது.

இன்று நாடு பெரும் சிக்கல்களை சந்தித்திருக்கும் நிலையில் நாம் மாற்று ஏற்பாடுகளை செய்தாக வேண்டும். யுத்தங்களில் உங்கள் நாடு எப்படி தொடர்ச்சியாக வெற்றிபெற முடிகிறது என்று ஒரு முறை இஸ்ரேலிய பிரதமர் கோல்டா மெயரிடம் கேட்கப்பட்டபோது அப் பெண்மணி, நாங்கள் வெற்றிபெற்றேயாக வேண்டும் என்ற உந்துதல்தான் காரணம். இல்லையேல் அழிக்கப்பட்டு விடுவோம் என்று பதில் தந்தாராம். அதுபோலத்தான் இலங்கையும். இந்தப் பாரிய பிரச்சினையில் இருந்து நாம் விடுபட்டேயாக வேண்டும்.

தற்போது திறமைசாலியாக வர்ணிக்கப்படும், ஏற்கனவே தன்னை அவ்வாறே நிரூபித்திருக்கும் பஸில் ராஜபக்ச தேசிய பட்டியல் வழியாக உள்வாங்கப்பட்டு நிதி அமைச்சு அவர் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பல அரச நிறுவனங்களும், திணைக்களங்களும், மத்திய வங்கியும் நிதி அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன. புதிய நிதியமைச்சரும், சில நடவடிக்கைகளை மேற்கொள்ளத்தான் வேண்டியிருக்கும் என்று கூறியுள்ளார். எனவே சில கசப்பு மாத்திரைகளை விழுங்க வேண்டியிருக்கலாம். எழுபது வருடங்களின் பின்னரும் கசப்பு மாத்திரைகளா என்று மக்கள் அங்கலாய்க்கலாம். ஆனால் தவறான அரசுகள், தவறான ஆட்சிகளை நடத்துவதற்கும் மக்கள்தானே அங்கீகாரமும் வழங்கியிருக்கிறார்கள் என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும்.

பஸில் ராஜபக்ச திறமைசாலி. அவரது சேவையை ஏன் பாராளுமன்றத்தின் ஊடாக பெற்றுக்கொள்ளாமல் அரசு காலம் கடத்தியது என்பது ஒரு நியாயமான கேள்வியே. நாடு வெகு சீக்கிரத்தில் தன் கதவுகளை உட்புறமாகவும் பின்னர் உலகத்துக்கும் திறந்து விடும் போது எமது பொருளாதார ரீதியான துரித வளர்ச்சி ஆரம்பமாக வேண்டும். அதற்கான உட்கட்டுமான பணிகளை பஸில் செய்து முடிப்பார் என எதிர்பார்க்கலாம். இங்கிருந்து ஆரம்பமாகவுளள பொருளாதார வளர்ச்சி, இனங்களையும், பல்வேறு மதங்களையும், நாட்டின் சகல பிரதேசங்களையும் உள்ளடக்கியதாக அமைய வேண்டியது முக்கியம். அப்போதுதான் அது முழுமையான வளர்ச்சியாக அமையும். பஸில் ராஜபக்ச இத்தகைய ஒருங்கிணைந்த ஒரு வளர்ச்சிக்கு தலைமை தாங்கும் வல்லமை கொண்டவரே.

Comments