ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படை விலகல்: சரிந்துவிடுமா அமெரிக்காவின் அதிகார சமநிலை? | தினகரன் வாரமஞ்சரி

ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படை விலகல்: சரிந்துவிடுமா அமெரிக்காவின் அதிகார சமநிலை?

கடந்த இருபது ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில் தந்திரோபாய ரீதியில் குவிக்கப்பட்ட அமெரிக்க இராணுவம் முழுமையாக விலக ஆரம்பித்துள்ளது. புவியியல் ரீதியில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாகவும் இயற்கை அரணைக் கொண்ட பிரதேசமாகவும் மலைசார்ந்த பகுதியாகவும் உள்ள ஆப்கானிஸ்தான் மத்திய ஆசியாவையும்,  கிழக்காசியாவையும் மேற்காசியாவையும்,  தென்னாசியாவையும் ஊடறுத்து செல்லும் மையப்பகுதியில் அமைந்துள்ளது. 1979 முதல் சோவியத் யூனியன் படைகளும் பின்பு அமெரிக்கா உட்பட நேட்டோப் படைகளும் குவிக்கப்பட்ட பிரதேசமாக விளங்கியது.

தலிபான்களின் எழுச்சியும் அமெரிக்காவின் முதல்தர வல்லரசுப் பிரகடனமும் ஆப்கானிஸ்தானிலேயே நிகழ்ந்தது. சோவியத் வீழ்ச்சிக்கும் தற்போது அமெரிக்காவின் இஸ்லாமிய நாடுகள் மீதான கொள்கைத் தோல்விக்கும் ஆப்கானிஸ்தானே காரணமாக அமைந்தது. இக்கட்டுரையும் அமெரிக்க படை விலகலுக்குப் பின்னாலுள்ள காரணங்களை தேடுவதாக அமையவுள்ளது.

ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கா தனது படைகளைத் திரும்பப் பெறப் போவதாக கடந்த ஏப்ரல் மாதம் அறிவித்தது. இதைத் தொடர்ந்து நேட்டோ நாடுகள் தங்கள் படைகளைத் திரும்பப் பெறப் போவதாக அறிவித்துள்ளன. ஆப்கானிஸ்தானில் ஏறக்குறைய அந்நிய நாட்டுப் படைகள் 9,500 பேர் உள்ளனர். இதில் 2,500 பேர் அமெரிக்கப்படையினர்.  மீதம் 7,500 பேர் அதன் நேட்டோ கூட்டணி நாடுகளை சேர்ந்த படைகளைச் சேர்ந்தவர்கள். (2021) மே முதலாம் திகதி தொடங்கி செப்ரெம்பர் 11ம் திகதிக்குள் படைகள் விலக்கப்படும் என ஜோ பைடன் அறிவித்துள்ளார். இரட்டைக் கோபுரத் தாக்குதலின் இருபதாவது நிறைவு ஆண்டு முடிவதற்குள் படிப்படியாக படைகள் திரும்பப் பெறப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஜூலை இரண்டாம் நாள் அமெரிக்கப் படைவீரர்கள் ஆப்கானிஸ்தானில் அமெரிக்க செயல்பாடுகளின் மையமான காபூலுக்கு வடக்கே பரந்து விரிந்திருக்கும் விமான நிலையமான பாக்ராமிலிருந்து வெளியேறியுள்ளனர்.. எனினும் தற்போதும் அமெரிக்கப் படைவீரர்கள் காபூலைச் சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு நோக்கங்களுக்காக நிறுத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. அமெரிக்கப் படைவீரர்களின் நகர்வின் மையமான பாக்ராம் விமானப் படைத்தளத்திலிருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறியது என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர். ஆப்கானிஸ்தான் தேசிய பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு படையினரிடம் பாக்ராம் விமானப்படை தளம் முழுமையாக ஒப்படைக்கப்பட்டது என்றும் அவர்கள் கூறினார்கள். ஆனால் அமெரிக்க துருப்புக்கள் வெளியேறுவதாக எந்த தகவலும் தெரியப்படுத்தாமல் முகாமை கைவிட்டு சென்றுள்ளதாக ஆப்கானிஸ்தான் படைகள் தெரிவித்துள்ளன. பாக்ராம் விமானப்படைத் தளம் சுமார் 20 ஆண்டுகளாக அமெரிக்காவிற்கான  பிரதானமாக விநியோக மையமாக விளங்கியது மட்டுமன்றி. தாலிபான் பயங்கரவாதிகளை எதிர்த்து சண்டையிடும் மையமாகவும் அமைந்திருந்தது. அமெரிக்காவின் வெளியேற்றத்தை அடுத்து பிரித்தானியாவும் தனது படைவீரர்களை ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேற்றப் போவதாக அறிவித்துள்ளது.

பயங்கரவாதத்துக்கு எதிரான உலகப் போர் இரண்டாயிரமாவது  ஆண்டின் முதல் போர் என்றும் பிரகடனப்படுத்திய  அமெரிக்க ஆட்சியாளர்கள் தற்போது வரலாற்றின் நீண்ட போரை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளனர். அமெரிக்க ஜனாதிபதி பைடன்  குறிப்பிடும் போது ஆப்கானிஸ்தான் போரை நடத்தும் நான்காவது ஜனாதிபதி தான் என்றும் ஐந்தாவதாக ஒரு ஜனாதிபதியின் கையில் அதை ஒப்படைக்கப் போவதில்லை எனவும் அமெரிக்க படைகள் தங்கள் தாயகம் திரும்ப வேண்டிய காலம் வந்துவிட்டது எனவும் தெரிவித்துள்ளார். இங்கு பிரதான கேள்வி ஏன் அமெரிக்கா படைகளை ஆப்கானிஸ்தானிலிருந்து விலக்கிக் கொள்கிறது.

முதலாவது, தலிபான்களின் போர் உத்திகள் உபாயங்களோடு ஒப்பிடுகையில்  பாரிய அழிவுகளை அமெரிக்க படைகள் எதிர்கொள்வதாகவே அனேக ஊடகங்கள் குறிப்பிடுகின்றன. தலிபான்களின் வளர்ச்சியில் ஆப்கானிஸ்தானின் தரையமைப்பும் அதன் தோற்றமும் பிரதான காரணமாக தெரிகிறது. அது மட்டுமன்றி தாலிபான்களின் வளர்ச்சிக்கு ஆப்கானிஸ்தானில் விளையும் அபின் உற்பத்தி முக்கிய பங்காற்றும் ஏற்றுமதிப் பொருளாக உள்ளது.  அமெரிக்கப் போருக்கு பின் ஏற்பட்ட பின்னடைவை சரிசெய்த தாலிபான் தலைவர்கள் சிலர் ஆப்கான் கிராமப்புறப் பகுதிகளைக் கைப்பற்றிக் தம்மை வளப்படுத்திக் கொண்டனர். அப்பிரதேசங்களில் அபின் பயிரிடுவதை பிரதான நடவடிக்கையாக கைக்கொண்டனர். உலகின் மொத்த சட்டவிரோத அபின் உற்பத்தியில் 80 சதவீதம் ஆப்கானிஸ்தானில் உற்பத்தி செய்யப்படுவதாக தெரியவருகிறது. இவ் உற்பத்தி மூலம் கிடைக்கும் வருவாயை தாலிபான்கள்  ஆயுதங்களை வாங்கிக் குவிப்பதற்கு பயன்படுத்துகின்றனர்..

பாகிஸ்தான், ஈரான் வழியாக மேற்குலக நாடுகளுக்கு அபின் ஏற்றுமதியாவதுடன் கிழக்காசிய சந்தைகளில் ஆயுதக் கொள்வனவுக்கும் வாய்ப்புக் கிடைத்துள்ளது. இத்தகைய அபின் கடத்தல் சாம்ராஜ்யத்துக்கு தங்கப் பிறை  நடவடிக்கை என பெயரிட்டுள்ளனர். பாகிஸ்தானின் உளவு அமைப்பு மற்றும்  ஈரானிய இராணுவ அதிகாரிகள் இஸ்லாமிய தீவிரவாத அமைப்புக்கள் எனப் பலருக்கும் இந்தக் கடத்தல் இலாபத்தில் பங்கு உண்டென்பதால்  இதனை இலகுவில் தகர்க்க முடியவில்லை. ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறிக் கொண்டிருக்கும் நிலையில், இந்த அபின் சாம்ராஜ்யம் மேலும் விரிவடையும் என ஐ.நாவின் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  இது பற்றி ஐ.நாவிற்கான போதைப்பொருள் மற்றும் குற்றங்கள் தடுப்பு அலுவலகத்தின் இயக்குநர் காடா வலி,  குறிப்பிடும் போது 2020 இல் மட்டும் ஆப்கானிஸ்தானில் 37 சதவீதமான அபின் உற்பத்தி நிகழ்ந்ததாகவும் இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 11 சதவீத அதிகரிப்பெனவும் குறிப்பிட்டுள்ளார்.

இரண்டாவது ஆப்கானிஸ்தானிலிருந்து தன் படைகளைத் திரும்பப் பெறுவது மத்திய ஆசியப் பகுதி மட்டுமன்றி முழு ஆசியாவிலும் அமெரிக்காவிற்கு மிகப் பெரிய பின்னடைவே  ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது. அதாவது அமெரிக்காவின் உலக மேலாதிக்கத்திற்கு மிகப்பெரிய பின்னடைவாகவே உள்ளது. அமெரிக்காவால் தனது படைகளை பாதுகாக்க முடியாதுள்ளதுடன் ரஷ்யாவுக்கும் தலிபான்களுக்குமான நெருக்கமே முக்கிய காரணமாகத் தெரிகிறது. எவ்வாறு அமெரிக்கா சோவியத் படைகள் இருந்த போது தலிபான்களை பயன்படுத்தியதோ அவ்வாறே தற்போது ரஷ்யாவும் தலிபான்களை பயன்படுத்தி அமெரிக்காவை வீழ்த்தியுள்ளது.

மூன்றாவது உலக அரங்கில் தனக்குப் போட்டியாக வளர்ந்து வரும் சீனா, ரஷ்யா, மற்றும் ஈரான் ஆகிய நாடுகளின் கூட்டு அமெரிக்காவின் இருப்பினை தகர்த்துள்ளதுடன் தொடர்ச்சியாக இழப்புக்கள் அமெரிக்காவின் பாதுகாப்பினை கேள்விக்குறியாக்கியுள்ளதோடு படைகளையும் அச்சத்திற்கு தள்ளிவருகிறது. அதனால் படைகளை விலக்கிக் கொள்வது தவிர்க்க முடியாததாகவுள்ளது எனலாம். உண்மையில் ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப்படைகள் இருப்பதன் மூலம் சீனாவைக் கட்டுப்படுத்தலாம் என்று அமெரிக்க புலனாய்வுத் துறை குறிப்பிட்டுள்ளது. ஆனால் அத்தகைய போக்குக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவே தெரிகிறது..

நான்காவது சீனாவின் புதிய பட்டுப்பாதைத் திட்டத்தின்படி மேற்காசியாவையும் ஐரோப்பாவையும் இணைக்கும் முக்கிய பகுதியாக சீனாவின் ஜியாங் மாநிலம் அமைந்துள்ளது. எனவே இம்மாநிலத்தில் வாழும் உய்குர் முஸ்லிம்களின் பிரச்சினையை பயன்படுத்தி அங்குள்ள இஸ்லாமிய ஆயுதக்குழுக்களை பலப்படுத்தி சீனாவிற்கு நெருக்கடியை கொடுக்க அமெரிக்கா திட்டமிட்டிருந்தது. இதனை முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் ஆட்சிக் காலத்திலிருந்தே அமெரிக்கா திட்டமிட்டிருந்தது. அமெரிக்காவின் இத்திட்டத்திற்கு ஆப்கானிஸ்தான் தான் கேந்திரமான தளமாக இருந்தது. அதனை இழப்பதென்பது அமெரிக்காவின் பலவீனத்தைக் காட்டுவதாகவே தெரிகிறது.

ஐந்தாவது கடந்த 20 ஆண்டுகளில் அமெரிக்கா ஒரு பெரிய புலனாய்வு வலையமைப்பை ஆப்கானிஸ்தானை மையப்படுத்தி நிறுவியிருந்தது. ஆப்கானிஸ்தானின் பாதுகாப்புப் படையில் 17,000க்கும் மேற்பட்டோரை பாதுகாப்பு ஒப்பந்தக்காரர்களாக அமர்த்தியுள்ளது. அவர்களையும் தற்போது அமெரிக்கா அழைத்து செல்வதாக ஜனாதிபதி பைடன் தெரிவித்துள்ளார். எனவே அமெரிக்காவின் படைவிலகலுக்கு வலுவான காரணமாக புலனாய்வுக் கட்டமைப்பின் தோல்வி அமைந்திருக்க வாய்ப்புள்ளது.
ஆறாவது ஆப்கானிஸ்தானில் நாம் இராணுவ ரீதியாக ஈடுபாடு காட்டமாட்டோம் எனறும் அமெரிக்கா இராஜதந்திர ரீதியாகவும் மனிதாபிமான பணிகளையுமே மேற்கொள்ளுவதாக அமெரிக்க ஜனாதிபதி பைடன் அறிவித்துள்ளார். இதன் மூலம் ஆப்கானிஸ்தானின் அரசுக்கு தொடர்ந்து ஆதரவு அளிப்போம். ஆப்கானிஸ்தானிலும் பிராந்தியத்திலும் பயங்கரவாத அபாயத்தைத் தொடர்ந்து அமெரிக்கா கண்காணிக்கும். பயங்கரவாதத்திற்கு எதிராக தொடர்ந்து சண்டையிடும் என்றும் பிடன் கூறியுள்ளார்.

எனவே அமெரிக்கப் படைவிலகல் பெரும் நெருக்கடியாக அமைந்தாலும் அமெரிக்கா வேறு மார்க்கங்களை நோக்கி நகர ஆரம்பிக்கும் என்ற சந்தேகங்களும் நிலவுகிறது. எதுவாயினும் ஆப்கானிஸ்தான் அமெரிக்காவின் இருப்புக்கு ஆபத்தான மையமாக மாறியுள்ளது. அதுவே அதன் வெளியேற்றத்திற்கு காரணமாகிறது. இது ரஷ்யாவினதும் சீனாவினதும் இருப்பிற்கான வாய்ப்பினை அதிகரித்துள்ளது.

பேராசிரியர்
கே.ரீ.கணேசலிங்கம்
யாழ். பல்கலைக்கழகம்

Comments