நம்பிக்கையில்லா பிரேரணை முறியடிக்கப்படும் அறிகுறிகள் | தினகரன் வாரமஞ்சரி

நம்பிக்கையில்லா பிரேரணை முறியடிக்கப்படும் அறிகுறிகள்

எரிபொருள் விலை அதிகரிப்பை அடிப்படையாகக் கொண்டு வலு சக்தி அமைச்சர் உதயகம்மன்பிலவுக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை எதிர்வரும் 19ஆம் 20ஆம் திகதிகளில் பாராளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

கடந்த திங்கட்கிழமை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் இது தொடர்பான தீர்மானம் எடுக்கப்பட்டது. அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராக இருக்கின்ற போதும், பொறுப்புடன் செயற்படத் தவறினார் எனக் கூறி பத்துக் குற்றச்சாட்டுகளை முன்வைத்து ஐக்கிய மக்கள் சக்தியின் 43 உறுப்பினர்கள் கையொப்பமிட்டு இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையை சபாநாயகரிடம் கையளித்திருந்தனர்.

இதற்கு ஆதரவு திரட்டும் முயற்சிகளில் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் முயற்சிகளை எடுத்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், நெருக்கடியில் உள்ள அரசாங்கத்தைக் காப்பாற்றும் முயற்சியாகவே இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை நாடகம் அரங்கேற்றப்படுவதாக மற்றுமொரு எதிர்க் கட்சியான தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க விமர்சித்துள்ளார்.

கொரோனா தொற்றுநோய் பாதிப்பினால் மக்களின் வாழ்க்கைச் சுமை அதிகரித்திருக்கும் சூழ்நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்னர் அமைச்சரவைத் தீர்மானத்துக்கு அமைய எரிபொருட்களின் விலைகளை அதிகரிப்பதாக அமைச்சர் கம்மன்பில அறிவித்திருந்தார்.

பயணத் தடை விதிக்கப்பட்டிருந்த காலகட்டத்தில் வெளியான இந்த அறிவிப்பு மக்கள் மத்தியில் மாத்திரமன்றி, அரசியல் கட்சிகளுக்கிடையேயும் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த எரிபொருள் விலை அதிகரிப்புக்கு எதிராக முதலில் குரல் எழுப்பியது ஆளும் பொதுஜன பெரமுன கட்சியாகும்.  எரிபொருள் விலை அதிகரிப்புக்கு முழுப்பொறுப்பையும் ஏற்று அமைச்சர் பதவி விலக வேண்டும் என பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகல காரியவசம் ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் தெரிவித்திருந்தார்.

இந்த அறிவிப்பைத் தொடர்ந்து ஆளும் கட்சியின் கூட்டணிக்கிடையில் முரண்பாடுகள் ஏற்பட்டிருப்பதாக பல்வேறு செய்திகள் வெளியாகியிருந்தன.

எனினும், எரிபொருள் விலையில் மாற்றம் ஏற்படுத்துவது தொடர்பில் தான் தனித்து முடிவெடுக்கவில்லையென்றும், அமைச்சரவை உபகுழுவின் தீர்மானத்துக்கு அமைச்சரவை கூட்டுப்பொறுப்புடன் இணக்கம் தெரிவித்திருந்ததாகவும் அமைச்சர் மீண்டும் விளக்கமளித்திருந்தார்.

அப்போது நிதி அமைச்சர் என்ற ரீதியில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் இத்தீர்மானத்தில் கையொப்பமிட்டிருந்தமையையும் அமைச்சர் நினைவுபடுத்தினார். அமைச்சரின் இந்தக் கூற்றுக்கு வலு சேர்க்கும் வகையில் ஜனாதிபதி ஊடகப் பிரிவினால் அறிக்கையொன்றும் வெளியிடப்பட்டிருந்தது.

உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலையில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பு, அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கைப் பெறுமதியின் வீழ்ச்சி போன்ற காரணங்களால் எரிபொருள்களின் விலைகளை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாக அமைச்சர் தெரிவித்திருந்தார். வாழ்க்கைச் செலவு தொடர்பான அமைச்சரவை உபகுழு வழங்கிய அனுமதிக்கு அமைய எரிபொருட்களின் விலைகளில் திருத்தம் மேற்கொள்ளப்படுவதாகவும், எரிபொருளை குறைந்த விலையில் விற்பனை செய்வதால் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு ரூ. 331 பில்லியன் (ரூ. 33,100 கோடி) நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக் காட்டியிருந்தார்.

இவ்வாறான பின்னணியில் அமைச்சர் கம்பன்பிலவுக்கு எதிராக பத்துக் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து ஐக்கிய மக்கள் சக்தி நம்பிக்கையில்லாப் பிரேரணையை சமர்ப்பித்துள்ளது. அதேநேரம், அமைச்சர் கம்மன்பில எரிபொருள் விலை அதிகரிப்புக்குப் பொறுப்பேற்று தனது பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் என்ற தமது கட்சியின் நிலைப்பாட்டில் எந்தவித மாற்றமும் இல்லையென பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகல காரியவசம் கடந்த சில நாட்களுக்கு முன்னரும் கூறியுள்ளார்.

நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவு வழங்குவதா இல்லையா என்பது தமது கட்சியின் உள்விவகாரம் என்பதால் உரிய நேரத்தில் உரிய முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் சுட்டிக் காட்டியதாக ஊடகங்கள் அறிக்கையிட்டுள்ளன.

இதேபோன்ற கருத்தை அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவும் கூறியிருந்தார். அரசாங்கத்தின் உள்ளக விவகாரம் சம்பந்தப்பட்டதால் உரிய நேரத்தில் உரிய முடிவு எடுக்கப்படும் என அவர் சுட்டிக் காட்டியிருந்தார்.
ஒரு அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையைக் கொண்டு வருவது கடந்த காலங்களில் பல்வேறு சந்தர்ப்பங்களில் இடம்பெற்றுள்ளது. அண்மைய உதாரணமாக கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் அப்போது அமைச்சராகவிருந்த ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்பட்டதைக் குறிப்பிடலாம். இருந்த போதும் ஆளும் கட்சி என்ற ரீதியில் இது முறியடிக்கப்பட்டிருந்தது.

இவ்வாறான நிலையில் தற்பொழுது ஆளும் கட்சிக்கு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை இருப்பதால் உதயம் கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை இலகுவில் தோற்கடிக்கப்பட்டு விடும் என்பது நன்றாகவே தெரிகின்றது. இப்பிரேரணைக்கு ஆதரவாக பொதுஜன பெரமுன கட்சியினர் செயற்படுவதற்கான வாய்ப்புக்கள் இல்லையென்றே கூற வேண்டும்.

இருந்தபோதும், எரிபொருள் விலை அதிகரிப்பை அடிப்படையாகக் கொண்டு பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் முன்வைத்த கருத்துகள் ஆளும் கட்சியின் பங்காளிக் கட்சிகள் மத்தியில் ஒரு நெருடலை ஏற்படுத்தியிருப்பதையும் காணக் கூடியதாகவுள்ளது.

ஜனாதிபதி மற்றும் பிரதமர் எடுத்த தீர்மானத்தை சவாலுக்கு உட்படுத்துவதன் மூலம் பொதுஜன பெரமுனவின் பிரதம செயலாளர் அரசாங்கத்திற்குள், குழு ரீதியிலான பிளவை ஏற்படுத்துவதற்கு முயல்கின்றாரா என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது எனவும் பங்காளிக் கட்சிகள் தெரிவித்துள்ளன.

அதேநேரம், பசில் ராஜபக்ஷ நாட்டில் இல்லாத போதே எரிபொருள் விலை அதிகரிப்புக் குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தது. அவர் நாட்டில் இருந்திருந்தால் இவ்வாறான தீர்மானத்தை எடுப்பதற்கு இடமளித்திருக்க மாட்டார் என இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா கடந்த சில வாரங்களுக்கு முன்னர் கூறியிருந்தார்.

இவ்வாறான பின்னணியில் பசில் ராஜபக்ஷ தற்பொழுது புதிய நிதி அமைச்சராகப் பதவியேற்றுள்ளார். எனவே நிதி அமைச்சர் என்ற ரீதியில் எரிபொருள் விலை விடயத்தில் சரியான முடிவொன்றை எடுக்கும் பட்சத்தில் அமைச்சர் கம்மன்பிலவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லா பிரேரணை வலுவற்றதாவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் காணப்படுகின்றன.

பி.ஹர்ஷன்

Comments