மலையை அசைத்த மலர் | தினகரன் வாரமஞ்சரி

மலையை அசைத்த மலர்

ரிப்னா தன் வேலைகளையெல்லாம் முடித்துவிட்டு வாசலோரத்தில் நின்றுகொண்டு  தன் கணவனின் வருகையை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தாள். அந்த வீட்டில்  அவள் மீது உயிரையே வைத்திருக்கும் ஒரே ஒரு ஜீவனென்றால் அது அவள் கணவன்  ருஷைத் தான் .

“ரிப்னா ....அடியேய் ரிப்னா எங்கடி போய்  தொலைஞ்ச? எவ்வளவு நேரம்தான் ஒன்ன கூப்பிடுறது?” என்று எரிமலையாய் சீறிய  மாமியார் குரலைக் கேட்டு திடுக்குற்ற ரிப்னா “மாமி இதோ வந்துட்டேன்” என்று  கூறியவாறே ஓடிச் சென்றாள். “வாசல்ல நிண்டு பராக்கு பாக்கிறியா? இரவைக்கு  புட்டு அவிச்சு வைக்க சொன்னேனே, மறந்துட்டியா?” என்று மாமியார் சுபைதா  கர்ச்சித்தாள். “மாமி நீங்க தூங்கிட்டு இருந்த நேரமே அதெல்லாம் செஞ்சு  வச்சுட்டேன்” என்று அமைதியாக பதில் கூறினாள் ரிப்னா. “சமையல் முடிஞ்சா போல  ஒன் வேலயெல்லாம் முடிஞ்சதா அர்த்தமா? என்ட உடுப்புகளையெல்லாம் பாத்ரூம்ல  ஊறப் போட்டிருக்கேன். அதையெல்லாம் கழுவு” என்று மாமியார் மருமகள் ரிப்னாவை  ஒரு வேலைக்காரியை போலக் கருதி வேலையை ஏவிவிட்டு சென்றாள். இதுதான் அந்த  வீட்டில் வழக்கமாக இருந்தது.

மாமியார் சுபைதாவை  ஒரு பணத்தாசை பிடித்த பிசாசு என்றுதான் சொல்ல வேண்டும். அந்தளவிற்கு  பணம்..பணம்..பணம்.. அதுதான் அவளை இயக்கும் மூச்சுக் காற்றாக இருந்தது. பல  வருடங்களுக்கு முன்பே அவளது கணவன் காசநோயினால் பீடிக்கப்பட்டு மரணத்தை  தழுவிக்கொண்டார். ஒன்பது வயதும் பதினொரு வயதும் நிரம்பிய இரு மகன்களை  வைத்துக் கொண்டு விதவையான சுபைதா நாதியற்ற அநாதையாக வாழ வழியற்றுத்  தவித்தாள். இரண்டு மகன்களையும் வளர்த்துப் படிக்க வைத்து ஆளாக்க தனியாளாக  நின்று படாத பாடுபட்டாள். இடியப்பம் அவித்து விற்று அதிலிருந்து கிடைக்கும்  சொற்ப பணத்தை வைத்தே சீவியம் நடத்திய போதிலும் அரை வயிறும் கால்  வயிறும்தான் நிரம்பியது. வறுமையின் வேதனைகளை மனதில் சுமந்தவளாக சுபைதா இரு  மகன்களையும் ஒருவாறாக வளர்த்து ஆளாக்கினாள். கணவனை இழந்து நாதியற்ற அவள்  பணத்திற்காகப் பட்ட கஷ்டங்களும் வலிகளும்தான் அவளை நாளடைவில் பணத்தாசை  பிடித்தவளாக்கிவிட்டதோ என்னவோ.... 

காலமெனும்  பரந்த வானில் வருடங்கள் எனும் பல நட்சத்திரங்கள் மின்னி மறைந்தன.  சுபைதாவின் இரு மகன்களும் திருமணப் பருவத்தை எட்டி விட்டனர். மூத்தவன்  ருஷைத் ஆசிரியராகவும் இளையவன் இல்ஹாம் கம்பனி ஒன்றில் மேனேஜராகவும்  பணிபுரிகின்றனர். சுபைதாவோ இரு மகன்களையும் பெரிய இடத்தில் சொத்து  சுகங்களோடும் சீர் சனத்திகளோடும் திருமணம் செய்து வைக்க வேண்டுமென்று  கங்கணம் கட்டிக்கொண்டு அலைந்தாள். அதற்காக பல திருமண தரகர்களை சந்தித்து  “எனக்கு வரப்போற மருமகள் பணக்காரியாக இருக்கணும். வீடு, காணி, நகை, நட்டு  எண்டு நெறைய சீதனத்தோடு வரணும். அப்படிப்பட்ட பொண்ண என்ட மகன் ருஷைத்துக்கு  பாருங்க” என்று கூறித் திரிந்தாள்.
ஒருநாள்  ருஷைத் வேலை விட்டு வீட்டுக்கு வந்ததும் சுபைதா கையிலொரு போட்டோவுடன் ஓடி  வந்தாள். “மகன், ஒனக்கொரு பொண்ணு பாத்திருக்கேன்டா. வடிவான வெள்ளப் பொண்ணு.  பணக்காரப் பொண்ணுடா. நல்ல சொத்துப் பத்தெல்லாம் இருக்காம். பெரிய வீடு,  காணி, நகையெல்லாம் தாராங்களாம். தேவையெண்டா வாகனமும் வாங்கித் தாராங்களாம்.  இந்தா போடோல பொண்ண பார்த்துட்டு நல்ல முடிவாச் சொல்லு” என்று பணத்தாசை  கண்களில் பளிச்சிட போட்டோவை நீட்டினாள். மகனோ தாயை அருவருப்பாக பார்த்தான்.  “உம்மா ஒங்களுக்கு என்ட குணம் தெரியாதா? சீதனம் சீர்வரிசை இதெல்லாம்  எனக்கு கொஞ்சமும் பிடிக்காது. சீதனம் வாங்குறதே நம்ம மார்க்கத்துக்கு  புறம்பான விஷயம். ஒரு பெண்ணை மஹர் (திருமணத்தின் போது மணமகன் மணமகளுக்கு  கொடுக்கும் கட்டாய நன்கொடை) கொடுத்து திருமணம் முடிங்க என்றுதான் இஸ்லாம்  கூறியிருக்கு. நானும் மஹர் கொடுத்து ஒரு மார்க்கப்பற்றுள்ள ஏழைப்  பொண்ணுக்கு வாழ்க்கை கொடுக்கணும் எண்டுதான் நெனச்சிருக்கேன்.” என்று ஒரு  குட்டிப் பிரசங்கத்தையே நடாத்தினான். சுபைதா கோபத்தில் சீறினாள் “அடேய்  மடையா, நீ சொல்றது பேச்சுக்கு நல்லா இருக்கும். வாழ்க்கைக்கு ஒத்துவராது.  சீதனம் இஸ்லாத்துக்கு புறம்பான விஷயமெண்டாப் போல ஊரு ஒலகத்துல சீதனம்  வாங்காமலா கல்யாமணம் பண்றாங்க. இல்லையே. இந்தக் காலத்தில பணம் இல்லாட்டி  கால் தூசிக்கு சமம்டா. பணமில்லாம ஒங்க ரெண்டு பேரையும் வளர்க்க நான் பட்ட  பாடு ஒனக்கு தெரியும்தானே. பணத்துக்காக நான் வேகாத நெருப்போடு போராடி பட்ட  பாடும் வலியும் இப்ப கூட என் மனசுல அப்படியே இருக்குடா.” என்று  நீலிக்கண்ணீர் வடித்தாள். “உம்மா பணம்..பணம்.. எண்டு ஏன் இப்படி  அலையிறீங்க. நம்ம சமூகத்துல எவ்வளவு பேர் ஒரு சதமும் சீதனம் வாங்காம மஹர்  குடுத்து திருமணம் செஞ்சு முன்மாதிரியாக இருக்காங்க. இதெல்லாம் ஒங்க  கண்ணுக்கு படல்லயா? நம்ம சமூகம் இன்றைக்கு எவ்வளவோ திருந்தியிருக்கு. நீங்க  மட்டும் ஏனும்மா இப்படியிருக்கீங்க? நீங்க சொல்ற மாதிரி ஒரு சில மார்க்கம்  தெரியாத, முதுகெலும்பில்லாத முட்டாளுங்க சீதனம் வாங்கி திருமணம்  செய்றாங்க. அவங்களுக்கு அல்லாஹ் மறுமையில தண்டனை குடுப்பான். அந்தத் தப்ப  என்னையும் ஏம்மா செய்யச் சொல்றீங்க.” என்று தாய்க்கு உபதேசம் செய்ய அது  அவளுக்குச்  சிறிதும் உறைக்கவில்லை. “சொத்து சுகத்தோட வார பொண்ண விட்டுப்போட்டு  தரித்திரம் புடிச்ச ஏழைப் பொண்ண முடிக்கப் போறியா? ஒருகாலமும் நடக்காது”  என்று சூளுரைத்தாள்.

நாட்கள் ஒன்றையொன்று விரட்ட  மாதங்கள் சில விரைந்தன. சுபைதா மகன் ருஷைத்தை தன் வழிக்குக் கொண்டு வர  எப்படியெல்லாமோ பாடுபட்டும் அவன் தன் வழிக்கு வராதது கண்டு மனம்  சோர்ந்தாள். பலகோடி சொத்து சுகங்கள் தன் கையை விட்டு நழுவிப் போவதை  நினைத்து அவளது பேராசை கொண்ட மனசு விம்மியழுதது. சோர்ந்து துவண்டு  போயிருந்த அவளுக்கு “உம்மா...உம்மா..” என்று அழைக்கும் குரல்  தெம்பூட்டியது. தன் இளைய மகன் இல்ஹாமின் குரலை இனங்கண்டு ஓடிச்சென்று  வரவேற்றாள். தான் வேலை பார்க்கும் கம்பனி விஷயமாக வெளியூர் சென்று  திரும்பியிருந்த அவனைக் கண்டதும் சூரியனைக் கண்ட தாமரையைப் போல சுபைதா  பிரகாசித்தாள். “உம்மா..ஏம்மா ஒரு மாதிரியா இருக்கிறீங்க..” என்று  அக்கறையுடன் விசாரிக்க சுபைதா தன் மனக்கிடக்கைகளை வஞ்சகமிலாமல்  கொட்டித்தீர்க்க அத்தனையையும் அமைதியாக செவிமடுத்த அவன் “உம்மா..ஒங்களுக்கு  நானாவப் பத்தி தெரியும்தானே..அவர்ட பிடிவாதக் குணத்த மாத்துறது இயலாத  காரியம். தொழுகை, இபாதத் (நற்காரியங்கள்) எண்டு ஊறியிருக்கிற அவர்  சீதனத்துக்கு மறுப்புக் கூறுவது நியாயம்தான். அவர அவர்ட வழியிலேயே  விடுங்கம்மா...” என்றதும் சுபைதா ஒரு கணம் விக்கித்து நின்றாள். “என்னடா  நீயும் அவனுக்கு வக்காலத்து வாங்குறா..அந்தப் பணக்கார சம்பந்தத்தை கைவிட  நான் முட்டாளில்லை” என்று அனல் பறக்க கத்தினாள்.

“நான்  சொல்றத முழுசாக் கேளுங்கம்மா...நானாவ அவர்ட வழியிலேயே விடுங்க... ஒங்க ஆசய  நிறைவேத்த நானிருக்கேம்மா...அந்த சம்பந்தத்த எனக்கு பேசுங்க” என்று  தட்டுத்தடுமாறி கூறினான். சுபைதா கண்களில் பிரகாசம் பளிச்சிட “மகன்,  உண்மையாவா சொல்றா.. இந்த யோசனை எனக்கு தோணாமப் போச்சு..” என்று அகமகிழக்  கூறினாள். நூலைப் போல சேலை தாயை போல பிள்ளை என்பது போல சுபைதாவின் பணத்தாசை  இளைய மகனையும் விட்டுவைக்கவில்லை.

காலச் சக்கரம்  கடிவாளமில்லாமல் சுழன்றது. மூத்தவன் ருஷைத் தன் நண்பனின் தங்கையான  ஏழைப்பெண் ரிப்னாவை மஹர் கொடுத்து கரம் பற்றினான். சுபைதா எவ்வளவோ  போராடியும் தோற்றுப் போனாள். இளையவன் இல்ஹாம் தாயின் ஆசைப்படி  பணக்காரப்பெண் ஷர்மிளாவை சொத்துப்பத்துகளோடு திருமணம் செய்தான். சுபைதா  மகன்மாரை பிரிய மனம் இல்லாமல் இரு மகன்களையும் மருமகள்களையும் வீட்டோடே  வைத்துக்கொண்டாள். அன்றிலிருந்து மூத்தவன் மனைவி ரிப்னா சுபைதாவுக்கு  வேண்டாத மருமகளாகிவிட்டாள்.

ரிப்னா ஏழைக்  குடும்பத்தை சேர்ந்த அடக்க, ஒடுக்கமான அழகான பெண். தொழுகை, ஓதல் போன்ற  எல்லா இபாததுக்களோடும் சமையல், வீட்டு வேலைகளில் கைதேர்ந்தவள். மாமியாரைத்  தாயாக மதிக்கும் குணவதியும் யாரையும் மனம் நோகும்படி எதிர்த்துப் பேசத்  தெரியாத அமைதியான சுபாவமும் கொண்டவள். இளைய மருமகள் ஷர்மிளாவோ பணக்காரி  என்ற திமிரோடு வீட்டில் உலா வந்தாள். வீட்டு வேலைகள் கூட செய்யத் தெரியாத  அவளை சுபைதா பணக்காரி என்ற ஒரே காரணத்துக்காக தலையில் வைத்துக்  கொண்டாடினாள். ஷர்மிளாவிடம் ஆடம்பரமும் பிடிவாத குணமும் ஒட்டிப்பிறந்த  குணங்களாக அவளிடம் குடிகொண்டிருந்தன. தன்னை விட ரிப்னா அழகாக இருந்ததினால்  அவள் மீது பொறாமை கொண்டாள். அப் பொறாமைக் குணமே நாளடைவில் ஷர்மிளாவுக்கு  ரிப்னாவின் மீது வெறுப்பை ஏற்படுத்தியது. ஷர்மிளாவும் மாமியாருடன்  கூட்டுச்சேர்ந்து ரிப்னாவுக்கு அடுக்கடுக்காக அநியாயங்களும் கொடுமைகளும்  செய்யத் தொடங்கினாள்.

“மாமி நீங்க ஊறப்போட்ட  உடுப்ப கழுவி மொட்ட மாடியில விரிச்சிட்டன்” என்று அடக்கமான குரலில் ரிப்னா  கூற “நாளைக்கு நேரத்தோட எழும்பி ஷர்மிளாட உடுப்பையும் கழுவிடு” என்று  கட்டளையிட்டதும் அந்த அப்பாவி ஜீவனும் “சரி மாமி, விடிய தொழ எழும்பும் போது  கழுவிடுறேன்” என்று முகம் சுளிக்காமல் கூறிவிட்டு சென்றாள். மாமியும்  ஷர்மிளாவும் இவளை வேலைக்காரியாக மாற்றியிருந்த போதிலும் ரிப்னா தன்  கணவனிடம் இதுபற்றி ஒன்றுமே கூறுவதில்லை. சந்தோஷமாக இருக்கின்ற  குடும்பத்தில் தான் ஏன் குழப்பத்தை உருவாக்க வேண்டுமென நினைத்து தனக்கு  வீட்டில் நடக்கும் கொடுமைகளை கணவனிடம் ஒருமுறையேனும் அவள்  வாய்திறந்ததில்லை. இதையே இருவரும் தமக்கு சார்பாக பயன்படுத்திக்கொண்டு  மென்மேலும் அவளை துன்புறுத்தினார்கள்.  நாட்கள்  ஒன்றையொன்று விரட்ட மாதங்கள் சில உருண்டோடின. அன்று விடுமுறை தினம்  என்றபடியால் சுபைதாவின் உறவினர் சிலர் வீட்டுக்கு வருவதாக  அறிவித்திருந்தனர். விருந்து தடல் புடலாக ரிப்னாவின் கைப்பக்குவத்திலேயே  தயாராகிக்கொண்டிருந்தது. ஷர்மிளா தன்னைப் பணக்காரி என்று பறைசாற்றுவதற்காக  விலையுயர்ந்த அழகிய ஷல்வாரையும் நகைகளையும் அள்ளிப் போட்டுக்கொண்டு  மின்னினாள்.
ரிப்னாவும் தன்னிடமுள்ள நல்ல ஷல்வார் ஒன்றை அணிந்தவாறு சமையல்  வேலையில் மும்முரமாக ஈடுபட்டுக்கொண்டிருந்தாள். வஞ்சகம் பிடித்த ஷர்மிளாவோ  ரிப்னாவைப் பார்த்ததும் திகைத்தாள். ஷர்மிளாவின் பொன் நகைகளை விட  ரிப்னாவின் புன்னகை ஒன்றே அவளை தன்னை விடப் பேரழகியாகக் காட்ட பொறாமையால்  அவள் முகம் கடுகடுத்தது. பணக்கார மருமகளின் மனதைப் புரிந்துகொண்ட சுபைதா  ரிப்னாவை முறைத்துவிட்டு தன் கையிலிருந்த சூடான தேநீரை தெரியாமல்  தவறவிடுவது போல் ரிப்னாவின் மேல் ஊற்றிவிட அவளோ அனலில் விழுந்த புழுவை போல  துடிதுடித்தாள். கொதிக்கும் தேநீர் கழுத்து கைகளில் பட்டு உடல் எங்கும்  அனலாய்த் தாக்க “அல்லாஹ்வே......” என வாய்விட்டு கதறினாள். கல்நெஞ்சம்  கொண்ட ஷர்மிளாவும் மாமியும் தமது திட்டம் நிறைவேறியது கண்டு மகிழ்ந்தனர்.  வலியின் வேதனையால் “ஏன் மாமி தேநீரை ஊத்தினீங்க...கப்ப கவனமா  பிடிச்சிருக்கலாம்தானே...” என்று ரிப்னா சொன்னதுதான் தாமதம் சுபைதாவின்  முரட்டுக் கைகள் ரிப்னாவின் மென்மையான கன்னங்களைப் பதம் பார்க்க  “அடியே..பிச்சகார நாயே..என்னையே எதிர்த்து பேசுறியா..சோத்துக்கு  வழியில்லாதவள இங்க கொண்டு வந்து வச்சதுதான் தப்பாப்போச்சு..”என்று  வரிந்துகட்டிக்கொண்டு சண்டைக்குப் போனாள்.

அதுவரை காலமும் மாமியின்  அக்கிரமங்களுக்கு வாய் திறக்காத ரிப்னா “ஏன் மாமி இப்பிடி பேசுறீங்க..நான்  உங்களுக்கு என்ன அநியாயம் செஞ்சேன்..ஷர்மிளாவப் போல நானும் உங்களுக்கொரு  மருமகள்தானே...” என்று கண்ணீரோடு நியாயம் கேட்க “அந்த ராட்சசியோ  “அடியே...பத்துக் காசுக்குப் பெறுமதி இல்லாத நீயும் ஷர்மிளாவும் ஒன்றா...  அவ எவ்வளவு பெரிய பணக்காரி.. வீடு நிறைய சீர் சீதனத்தோட இங்க வந்து  வாழுறா..நீ வெறுங்கையும் வீசின கையுமா வந்து என் ஆசைல மண்ணை அள்ளிப்  போட்டியே பாவி..” என்றதும் “உங்க மகன்தான் என்ன சீதனமில்லாம கல்யாணம்  பண்ணிக்கிட்டாரு..” என்றதும் சுபைதா கொதித்தெழுந்து “என்னையா எதிர்த்து  பேசுறா...போடி வெளியே...” என்று ரிப்னாவின் மிருதுவான கன்னங்களில்  மிருகத்தனமாக மீண்டும் அறைந்து அவளை தள்ளிவிட்டாள். மெல்லிடையாள் ரிப்னாவோ,  இருவர் சுமக்கும் இராட்சத உடலை தனியாளாக சுமந்துகொண்டிருக்கும் சுபைதாவின்  தாக்குதலை தாங்காது அப்படியே சரிந்தாள். ருஷைத்தும் இல்ஹாமும் சத்தம்  கேட்டு ஓடிவர சுபைதா பதற்றத்துடன் “மருமக...மயக்கம் வந்து விழுந்துட்டா..”  என்று நிலைமையை திசை திருப்பினாள். தண்ணீர் தெளித்தும் மயக்கம் தெளியாததால்  ரிப்னா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டாள். சுபைதா பயத்தால் பேயறைந்தது  போல் ஆகிவிட்டாள்.

வைத்தியப்  பரிசோதனை அறை வாசலில் ருஷைத், சுபைதா உட்பட அனைவரும் பதற்றத்துடன்  நின்றுகொண்டிருந்தனர். சுபைதா பயத்துடன் டாக்டரின் வருகையை எதிர்பார்த்துக்  கொண்டிருந்தாள். உள்ளிருந்த வந்த டாக்டர் ருஷைத்தை பார்த்து “டோன்ட்  வொர்ரி..உங்க வைப் கர்ப்பமா இருக்கா..உடம்பு வீக்..அதான் இந்த  மயக்கம்..இன்ஜெக்ஷன் போட்டிருக்கேன்.மயக்கம் தெளிந்ததும் வீட்டுக்கு  கூட்டிபோங்க..விட்டமின் எழுதித் தாரேன் ..” என்றதும் ருஷைத்துக்கு இன்ப  அதிர்ச்சியாகிவிட்டது. ஆயிரம் பட்டாம்பூச்சிகள் அவனைச் சுற்றி பறப்பது போல்  ஓர் உணர்வு ஏற்பட அவன் பூரித்துப் போனான். அவன் பூரிப்பு இல்ஹாமையும்  தொற்றிக்கொண்டது. “நானா கங்ராஜூலேஷன்ஸ்....” என்று கைகுலுக்க ஷர்மிளாவுக்கு  பொறாமையால் மனம் கருகியது. சுபைதா எதுவும் பேசாது மௌனியாகிவிட்டாள்.  ரிப்னாவை ருஷைத் வாஞ்சையோடு அணைத்துக்கொண்டு வீடுவந்து சேர்ந்தான். ரிப்னாவுக்கு  தான் ஒரு குழந்தைக்குத் தாயாகப் போகின்றேன் என்ற குதூகலத்தில் அன்று  வீட்டில் நடந்த கொடுமையை மறந்தே போனாள். அதுபற்றி யாரிடமும் சொல்லவில்லை.  சுபைதாவோ நிம்மதிப் பெருமூச்சுவிட்டாள். விருந்தினரும் வந்து போயினர்.

காலமெனும்  கூண்டிலிருந்து மாதமெனும் சில பறவைகள் பறந்தோடின. ரிப்னா நான்கு மாதக்  கர்ப்பிணியாக குட்டி வயிற்றுடன் உலாவந்தாள். ருஷைத்தோ தன் வாரிசைச்  சுமக்கும் மனைவியை அன்போடு அரவணைத்தான். ஷர்மிளாவுக்கு குழந்தைப் பாக்கியம்  எட்டாக்கனியாக இருந்தது. பல வைத்தியர்களிடம் சென்று பணத்தைப் பஞ்சாகப்  பறக்கவிட்ட போதிலும் கூட பலன் பூச்சியம்தான். இதனால் மென்மேலும் ரிப்னாவின்  மீது பொறாமை கொண்ட ஷர்மிளா, மாமியுடன் சேர்ந்து ரிப்னாவுக்கு தொந்தரவுகளை  கொடுத்த வண்ணமே இருந்தாள்.

ஒருநாள் ஷர்மிளா  “மாமி.... ரிப்னாவை ருஷைத் மச்சானிடமிருந்து பிரித்துவிட்டு என் ப்ரென்ட்  நஸ்ராவை மறுமணம் செய்து வைப்போம்....நஸ்ரா பெரிய பணக்காரி...அவளுக்கும்  என்னைப் போல நிறைய சொத்து இருக்கு..” என்று மாமியாரின் பலவீனத்தை  அறிந்தவளாக அவள் மனதில் விஷத்தை விதைக்க, சுபைதாவின் கண்களில் பணத்தாசை  மின்னியது. “மருமக.. உண்மையாவா சொல்றீங்க..அவ அவ்வளவு பெரிய பணக்காரியா...  இந்தத் தரித்திரம் புடிச்சவள ருஷைத்திட்ட இருந்து எப்பிடியாவது பிரிச்சி  டைவர்ஸ் குடுத்திட்டு...அந்த நஸ்ராவையே மறுமணம் செய்துவைப்பம்” என்று  உற்சாக மொழி பேசிவிட்டு இருவரும் மதிமயங்கி சதிவேலையில் சுதியோடு  களமிறங்கினார்கள்.

ஒருநாள் ருஷைத் வீட்டுக்கு  வரும் நேரம் பார்த்து சுபைதா வாசலோரத்தில் உட்கார்ந்துகொண்டு கண்ணீர்  சிந்திக்கொண்டிருந்தாள். தாயின் கண்ணீரைக் கண்டு கலங்கிய ருஷைத் “ஏனும்மா  அழுறீங்க...உடம்புக்கு என்னாச்சு..” என்று பதறினான். “உடம்புக்கு  ஒண்ணுமில்ல எல்லாம் மனசுக்குத்தான். ஒன் பொண்டாட்டி இப்ப முந்தி மாதிரி  இல்ல. எதுக்கெடுத்தாலும் என்ன எதிர்த்துப் பேசுறா... ஷர்மிளாவ மலடி எண்டு  குத்திக்காட்டுறா.. இப்ப பக்கத்து வீட்டு மாமி முன்னால கூட என்ன  எதிர்த்துப் பேசிட்டா” என்று பொய்க் கதை கூறி நீலிக்கண்ணீர் வடித்தாள்  வஞ்சகி சுபைதா.
தாயின் பேச்சை நம்பிய ருஷைத்  அப்பாவி ரிப்னாவிடம் சண்டை போட்டான். ஷர்மிளாவும் சுபைதாவும் சேர்ந்து இது  போன்ற பல நாடகங்களை நாளுக்குநாள் அரங்கேற்றிக் கொண்டிருந்தனர். இவர்களது  நாடகங்கள் வெற்றிநடை போட்டுக்கொண்டிருந்தது. ருஷைத்தும் தாயின் பேச்சை  மூர்க்கத்தனமாக நம்பி ரிப்னா மாறிவிட்டாள் என்று நினைத்து அவளை வெறுக்கத்  தொடங்கினான். ரிப்னாவோ வயிற்றில் குழந்தையை சுமந்தவாறு கவலை தோய்ந்த  முகத்துடன் அவ்வீட்டில் ஒரு நடைப்பிணமாகிப் போனாள். கணவனின் அன்புக்காக ஏங்கி  இறைவனிடம் அனுதினமும் அழுதழுது கையேந்திப் பிரார்த்தித்தாள்.

மாதங்கள்  சில பிறந்து மடிந்தன. இவர்களது நாடகத்தின் இறுதிக் கட்டமும்  வந்துவிட்டது. ஷர்மிளாவோ பதறியபடி “மாமி என்ட அஞ்சு பவுண் நெக்லசை காணல.  வீடு முழுக்க தேடியாச்சு. எங்கேயுமில்ல” என்றதும் அக்கபட நாடகத்தின்  “குணச்சித்திர நாயகியான மாமி” தன் பங்கிற்கு முழு வீட்டையும் இழுத்துப்  போட்டுக்கொண்டு தேடினாள். இறுதியில் அந்த நெக்லஸ் ரிப்னாவின் அலுமாரியிலேயே  கண்டெடுக்கப்பட்டது. “அடியே திருட்டு நாயே ...வீட்டுக்குள்ள இருந்துகொண்டே  திருடுறியா...” என்று சுபைதாவின் குரல் போரொலியாய் முழங்க தொழுதுவிட்டு  வந்த ருஷைத்தின் காதில் அச்செய்தி இடியாய் வந்துவிழ அவன் அப்படியே  கற்சிலையாகிப் போனான். அவன் இதயத்தில் எங்கோ ஒரு மூலையில் வலித்தது.
“மாமி  என்ன நம்புங்க..நா அத எடுக்கைல... என் அலுமாரில அது எப்பிடி வந்ததெண்டே  தெரியாது..அல்லாஹ் மீது ஆணையா சொல்றேன்..” என்று ருஷைத்தின் பக்கம்  திரும்பினாள் ரிப்னா. ருஷைதோ கோபத்தில் அனல் பறக்க “இந்த திருட்டு புத்தி  எப்படி வந்தது ஒனக்கு?..ஒன்ன நல்லவள் என்டு நெனச்சேனே..நம்பிக்கை துரோகி  ..சீ ..என் முகத்தில முழிக்காத ..வீட்ட விட்டு போய்டு” என்று வெறுப்பை  கக்கினான். ரிப்னாவின் நெஞ்சம் எனும் அணைக்கட்டு உடைந்து காட்டாற்று  வெள்ளம் போல கண்ணீர் பெருக்கெடுத்தோட கணவனிடம் எவ்வளவோ கெஞ்சி மன்றாடிப்  பார்த்தாள். பலனில்லை. ஷர்மிளாவும் மாமியாரும் ஒருவரையொருவர் பார்த்து  ரகசியமாக வெற்றிப்புன்னகையை பரிமாறிக்கொண்டனர்.

அழுதழுது வீங்கிய முகத்துடன் வயிற்றில் குழந்தையையும் மனதில் சோகச்  சுமையையும் கைகளில் துணிமணிப் பையையும் சுமந்தவளாக கணவனை விட்டுப் பிரிய  மனமின்றி நடைப்பிணமாக வீட்டை விட்டு வெளியேறியது அந்த அப்பாவி ஜீவன்.
நாட்கள்  ஒன்றையொன்று விழுங்கி மாதங்கள் கொழுத்தன. ரிப்னாவை தாய் வீட்டிற்கு  விரட்டிய ருஷைத் அவளின் பிரிவைத் தாங்க முடியாது சுடுநெருப்பில் வீழ்ந்த  சுள்ளிகளாய் கருகினான். அவளின் செயலை நினைத்து மனம் வெதும்பினான். சுபைதாவோ  தன் கனவு நனவாகப் போகிறது என்று எண்ணி சந்தோஷப்பட்டாள்.

அன்றொரு  நாள் சுபைதாவின் பருத்த உடலை தாங்க முடியாத அவளது பாதங்கள் குளியலறையில்  வைத்து சரிய சுபைதா அப்படியே கீழே சாய்ந்தாள். வைத்தியசாலைக்கு  கொண்டோடினார்கள். அவளிடம் குடிகொண்டிருந்த பிரஷரும் கொலஸ்ட்ரோலும் அவளை ஒரு  பாரிச வியாதிக்காரியாக ஆக்கிவிட்டது. எத்தனையோ வைத்தியர்களிடம் சென்று  பணத்தை அள்ளி இறைத்தும் அது விழலுக்கு இறைத்த நீராகிவிட்டது. ஐயோ பாவம்...  இராட்சசி சுபைதா இறுதியில் சப்த நாடிகளும் அடங்க, ஒரு சக்கர நாற்காலியுடன்  ஐக்கியமாகிவிட்டாள். தன் சொந்தத் தேவைகளை நிறைவேற்றக் கூட அடுத்தவர்களின்  தயவையே நாடினாள். வேலைவெட்டி செய்து பழக்கமில்லாத ஷர்மிளாவோ மாமியாருக்கு  பணிவிடை செய்வதிலிருந்து நழுவலானாள். சுபைதாவை ஒரு சுமையாக கருதி அவளை  வெறுத்தொதுக்கி மாமியாருக்கு செய்தே ஆகவேண்டிய பணிவிடைகளை கூட செய்ய  மறுத்தாள். இறுதியில் தன் கணவனை அழைத்துக்கொண்டு தனிக்குடித்தனம் போய்விட  முடிவுசெய்தாள். மனைவியின் பேச்சுக்கு மறுமொழி பேசாத இல்ஹாம் தாயிடம் வந்து  “உம்மா ஷர்மிளா அவ வீட்டுல செல்லமா வளந்தவ....அதால தனியாளா ஒங்களையும்  பார்த்து வீட்டு வேலைகளையும் செய்ய கஷ்டமா இருக்காம். ஒங்களுக்கு பணிவிடை  செய்ய அருவருப்புப்படுறா...அதால தனிக்குடித்தனம் போக அவ  முடிவெடுத்திருக்கா..எனக்கு வேற வழி தெரியல்ல...நானும் போறேன்...நானா  ஒங்களோட இருந்து ஒங்கள கவனிப்பாரு” என்று ஒருவாறு தட்டுத் தடுமாறி  கூறிமுடித்தான். மறுப்புக் கூறாத சுபைதாவின் கண்களிலிருந்து கண்ணீர்  மட்டும் தாரை தாரையாக வழிந்தோடியது.
சுபைதாவும்  ருஷைத்தும் அவ்வீட்டில் அநாதைகளாகிப் போனார்கள். சுபைதாவின் முழுப்  பொறுப்பையும் ருஷைத்தே கவனித்து வந்தான். சுபைதாவோ தான் ரிப்னாவுக்கு செய்த  கொடுமைகளுக்கு அல்லாஹ் தந்த தண்டனைதான் இது என்றுணர்ந்து தினம் தினம்  கண்ணீர் வடித்தாள். மனசாட்சி அவளைக் குத்திக்கொன்றது. தன் பணத்தாசை  ருஷைத்தை தனி மரமாக்கிவிட்டதே என்ற குற்ற உணர்ச்சி மேலும் தாக்க உண்மைகள்  அனைத்தையும் மகனிடம் சொல்லி மன்னிப்பு கேட்போமென்று முடிவு செய்தாள்.

அத்  தருணத்தில் மாமியாரின் நிலையை கேள்விப்பட்ட ரிப்னா பதறிக்கொண்டு  மாமியாரைப் பார்க்க ஓடோடி வந்தாள். சோகமே உருவாக வெறிச்சோடிப் போயிருந்த  அந்த வீட்டில் “மாமி..மாமி..” என்று கூப்பிட்டவாறே உள்ளே நுழைந்தவள்  மாமியாரின் நிலை கண்டு திகைத்துப் போனாள். ஒரு கையும் ஒரு காலும் இழுத்து  வாயும் ஒரு பக்கமாக கோணி சக்கர நாற்காலியில் தஞ்சமடைந்திருந்த சுபைதாவின்  பரிதாப நிலை அவளை கண்கலங்க வைத்துவிட்டது. ரிப்னாவை கண்ட சுபைதா  கூனிக்குறுகிப் போனாள். “ரிப்னா வாம்மா..சுகமா இரிக்கிரியா.... உனக்கு நா  செய்த கொடுமைகளுக்கு அல்லாஹ் தந்த தண்டனையிது... என்ன மன்னிச்சிடும்மா.. என்  பாழாய்ப்போன பணத்தாசையால உனக்கு நா எவ்வளவோ அநியாயம் செய்துட்டேன்..”  என்று கண்ணீர் விட்டழுதாள். அவளது கோணிப் போன வாயால் சிரமப்பட்டு  வார்த்தைகளை உதிர்த்தாள். “அழாதீங்க மாமி ... பழசெல்லாம் மறந்திடுங்க..”  என்றதும் “இல்ல ரிப்னா... நா பாவி ..அப்பாவியான உன்ன என் மகனோட வாழவிடாம  ஷர்மிளாவோட சேர்ந்து நாடகமாடி அநியாயமா திருட்டுப் பழி சுமத்தி உன்ன  விரட்டினேனே...நா பாவி..நா பாவி ...” என்று கோணிப் போன வாயால் கதறினாள்.  கலங்கிய ரிப்னா “அழாதீங்க மாமி.. அழுவுறத முதல்ல நிறுத்துங்க..நா உங்கள  ஒருநாளும் வெறுக்கல்ல ..உங்கள என் உம்மா ஸ்தானத்தில வச்சுத்தான்  பார்த்தேன்.. தாய் ஒரு தவற தெரியாத்தனமா செய்துட்டா மகள் அத மறந்து  மன்னிக்கிறதில்லையா?..அதே போல நானும் எல்லாத்தையும் மறந்து  மன்னிச்சுட்டேன்... நீங்க அழுதழுது உடம்ப வருத்தாதீங்க மாமி...” என்றாள்  ரிப்னா.

இவர்களது உரையாடலை கதவோரத்தில் நின்று  செவிமடுத்துக்கொண்டிருந்த ருஷைத் பேரதிர்ச்சியால் திக்பிரமை பிடித்தவன்  போலானான். அவன் தலையில் யாரோ சம்மட்டியால் ஓங்கி அறைவது போன்றிருந்தது.  ரிப்னாவை தப்பா நினைத்துக்கொண்டு குழந்தையை சுமந்திருந்த அந்த அப்பாவி  ஜீவனை உண்மை தெரியாமல் விரட்டி விட்டேனே என்ற எண்ணமே அவனை கலங்க வைத்து  கண்ணீரை வரவழைத்துவிட்டது. “ரிப்னா..” என்று வாய் அவனை அறியாமலே உச்சரிக்க  அதுவரையிலும் அவனின் வருகையை அறியாத இருவரும் திடுக்குற்றனர்.

தன் கபட  நாடகத்தை ருஷைத் அறிந்துவிட்டான் என்ற வெட்க உணர்வில் சுபைதா ஒரு கணம்  கூனிக்குறுகிப் போனாள். “மகன்.. என்ன மன்னிச்சிடு.. என் பணத்தாசையால இந்த  அப்பாவிப் பொண்ண உன்னட்ட இருந்து பிரிச்சதுக்கு அல்லாஹ் எனக்கு சரியான  தண்டனை தந்துட்டான்” என்றதும் “போதும்மா.. எனக்கு எல்லாம் இப்பதான்  தெளிவாப் புரிஞ்சுட்டு...ஏனும்மா இப்பிடி செய்தீங்க... சீதனம் எடுக்காம  திருமணம் செய்தது அவ்வளவு பெரிய தப்பா..” என்று சீறினான். சுபைதா  வாயடைத்துப் போய் தன் தப்பை உணர்ந்து கண்ணீரையே பதிலாக்கினாள்.  நிலைமையை  சமாளிக்க முயன்ற ரிப்னா “மாமி மேல கோபப்படாதீங்க.. அவவே நொந்து  போயிருக்கா..எல்லாம் நடக்கணும் என்ற விதி...” என்று கூறிய மனைவியை  அணைத்துக்கொண்டு “என்னை மன்னிச்சிடும்மா..” என்று கூறிக் கண்ணீர் விட்டான். காலங்கள்  விரைந்தோடின.
நிறைமாத கர்ப்பிணியான ரிப்னா ருஷைத்துடன் சந்தோஷமாக வாழ்க்கை  நடத்தினாள். மாமியாரின் சகல பணிவிடைகளையும் தானே செய்து ஒரு குழந்தையைப்  போல மாமியாரை ஆதரவோடு பராமரித்தாள்.
தன் மலசலங்களைக் கூட அருவருப்பின்றி  தன் கைகளாலேயே சுத்தம் செய்யும் இந்த அப்பாவி ஜீவனுக்கு அநியாயம்  செய்துவிட்டதை நினைத்து சுபைதா சதா வேதனைப்பட்டுகொண்டே இருந்தாள். அவளுக்கு  கண் மூடினால் கடந்தகாலக் கறைகளும் கண் திறந்தால் நிகழ்கால நிஜங்களும்  நிழற்படமாக அவள் மனத்திரையில் ஒன்றன்பின் ஒன்றாக ஓடிக்கொண்டே இருந்தன. தன்  பாழாய்ப்போன பணத்தாசையால் ஒரு நல்ல பண்பான குணவதிக்கு அநியாயம் செய்த தன்  மடத்தனத்தை எண்ணி வெட்கப்பட்டாள். வேதனைப்பட்டாள்.

பரீட் இக்பால் 
யாழ்ப்பாணம்

Comments