பெருந்தோட்ட தரிசு நிலங்களை தோட்ட இளைஞர்களுக்கு பிரித்து வழங்குவதில் என்ன சிக்கல்? | தினகரன் வாரமஞ்சரி

பெருந்தோட்ட தரிசு நிலங்களை தோட்ட இளைஞர்களுக்கு பிரித்து வழங்குவதில் என்ன சிக்கல்?

அரசு மனம் வைத்தால் ஜனாதிபதியின் வர்த்தமானி அறிவித்தலே போதும் தரிசு  காணிகளை தோட்ட இளைஞர்களுக்கு குத்தகைக்கு வழங்க. கரைப்பவர் கரைத்தால் கல்லும் கரையும்என்பார்கள். கரைக்க வேண்டிய இடத்தில் உள்ளது இ.தொ.கா.  கரைக்குமா? கரைக்கத் தான் வேண்டும்

பெருந்தோட்டப் பிரதேசங்களில் சுமார் 38 ஆயிரம் ஹெக்டயர் தரிசு நிலங்கள் காணப்படுவதாக ஏற்கனவே ஆய்வுகள் முலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. இதேவேளை பெருவாரியான தேயிலை விளைநிலங்கள் பயன்படுத்தப்படாமல் காடுகளாகிக் கிடக்கின்றன. எனினும் இவ்வாறான நிலங்களைத் தோட்டத் தொழிலாளர் எவரும் தமது விவசாய தேவைகளுக்காக உபயோகப்படுத்த தோட்ட நிர்வாகங்கள் அனுமதிப்பது கிடையாது.  

அப்படி யாரும் நிலத்தைக் கையாண்டால் அவர்கள் மீது பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்படுகிறது, வழக்குத் தொடரப்படுகிறது. தோட்ட நிர்வாகங்கள் தொழிலாளர்கள் மீது அபாண்டமாக பழி சுமத்தி அவர்களை பலிவாங்க முற்படுகின்றன. பெருந்தோட்டங்களில் காணப்படும் தரிசு நிலங்கள் சில பெரும்பான்மை இன அரசியல்வாதிகளின் கவனத்தை ஈர்த்துள்ளன. அவற்றைக் கையகப்படுத்துவதில் அவர்கள் ஆர்வம் கொண்டுள்ளனர். இதனால் இக்காணிகளை மலையக இளைஞர்களுக்கு பகிர்ந்தளிப்பதில் உடன்பாடு காட்டுவது கிடையாது. 

பிரதமர் மகிந்த ராஜபக்ஷ பெருந்தோட்டகளில் வசிக்கும் தொழிலற்ற இளைஞர் யுவதிகளுக்கு தோட்டங்களில் காணப்படும் தரிசு நிலங்களை பிரித்து வழங்கி அவர்கள் காலநடை மற்றும் விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு ஊக்கமளிக்கப்படும் என சில வருடங்களுக்கு முன்பு தெரிவித்திருந்தார். அவரது கருத்து பெருந்தோட்டத்துறையைச் சார்ந்த தொழிலாளர்கள் மத்தியில் பாரிய எதிர்பார்ப்பினை ஏற்படுத்தத் தவறவில்லை. ஆனால் ஏனோ இதுவரை அதற்கான நகர்வுகள் எதுவும் இடம்பெறவில்லை. இவ்விடயத்தில் மலையக தொழிற்சங்கங்கள் போதிய அக்கறை காட்டுவது கிடையாது.  

முன்னைய ஆட்சியில் பலம் பெற்றிருந்த தமிழ் முற்போக்குக் கூட்டணி, இன்றைய ஆட்சியில் பங்காளிக் கட்சியாக பரிணமிக்கும் இ.தொ.கா இரண்டுமே இவ்விடயத்தில் கையாலாகாத நிலையிலேயே காணப்படுகின்றன. அமரர் ஆறுமுகன் தொண்டமான் போன்றவர்கள் பெருந்தொட்டக் காணிகளை தோட்டத் தொழிலாளர் குடும்பங்களுக்கு பிரித்துக் கொடுத்து உரிமையாக்க வேண்டும் என்று கூறி வந்தார்களே தவிர உருப்படியாக எவ்வித காய் நகர்த்தலையும் செய்யவில்லை என்பதே உண்மை. அழுத்தம் கொடுக்காமல் ஆட்சியில் அங்கம் வகிப்பதையே அக்கறையோடு செய்து வந்தார்கள். இல்லாவிட்டால் இவ்விடயம் எப்போதோ சாத்தியமாகி இருக்கும் மலையக இளைஞர் பால் அனுதாபம் கொண்டிருந்த அன்றைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவே அக்கைங்கரியத்தைச் செய்து முடித்திருப்பார். கிடைத்த வாய்ப்பை மலையகத் தலைமைகள் கைநழுவ விட்டு விட்டன. 

முன்னைய ஆட்சியின்போது சில அமைச்சர்கள் பெருந்தோட்டங்களில் காணப்படும் தரிசு நிலங்களை தோட்ட இளைஞர்கள் சுயதொழிலுக்காக பயன்படுத்த முடியும் என்று அறிவித்தர்கள். இதனை நம்பி காணியில் கை வைத்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுத்தன தோட்ட நிர்வாகங்கள். வீட்டுத் தோட்டம் செய்தவர்களும் விவசாயம் செய்தவர்களும் விரட்டப்பட்டார்கள். காவல் நிலையம் கொண்டு செல்லப்பட்டார்கள். வழக்குகளும் போடப்பட்டன. அன்று நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி தரிசு நிலங்களைத் தருவேன் என்றார். இளைஞர்கள் கனவு கண்டார்கள். அது கலைந்த கனவானது. பின் வந்தவர்கள் பேச்சைக் கேட்டு செயலில் இறங்கிய இளைஞர்கள் அவதிப்பட்டார்கள். 

பெருந்தோட்டக் காணிகள் கம்பனி வசம் இருக்கின்றன. எனினும் அக்காணிகள் யாவும் காணி சீர்திருத்த ஆணைக்கழுவின் கட்டுபாட்டிலேயே உள்ளன. எனவே அவற்றின் அங்கீகாரத்தைப் பெறுவதற்காக சட்ட ரீதியிலான அணுகுமுறைகள் அவசியமாகின்றன. அதற்கான அமைச்சரவை ஒப்புதல் பாராளுமன்றத்தில் அங்கீகாரம் என சட்ட முலம் தேவைப்படுகின்றது ஆனால் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி வர்த்தமானி அறிவித்தல் மூலம் அதனைச் செய்து விடலாம். அந்த வாய்ப்புகள் ஏற்கனவே இருந்தன. ஆனால் அழுத்தமோ கவனயீர்ப்போ கொடுக்கமுடியாத தலைமைகள் கண்டு கொள்ளாமலே விட்டுவிட்டன. இதனைப் பயன்படுத்த வேறு சக்திகள் தவறவில்லை. பெருந்தோட்ட தரிசு நிலங்களில் மீள காடு வளர்ப்பதும் மரநடுகைச் செய்வதும் இவைகளின் நோக்கம். இது, தேசிய ரீதியிலான ஒரு திட்டம். இத்திட்டம் முழுவீச்சுடன் நடைமுறைப்படுத்தப்படும் பட்சத்தில் தரிசு நிலங்கள் எஞ்சப்போவதில்லை என்பதே சமூக ஆர்வலர்களின் கவலை.  

பெருந்தோட்டக் கம்பனிகள் தோட்டங்களைச் சிறப்பாக பராமரிப்பது கிடையாது. விளை நிலங்கள் பல கைவிடப்பட்டு வருகின்றன. பல தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. இவற்றை தோட்ட இளைஞர்களுக்கு பயன்படுத்த வாய்ப்பளித்தால் தொழில் முயற்சிகளில் ஈடுபட உதவும். பொருளாதார ரீதியில் தோட்ட இளைஞர்கள் தன்னம்பிக்கை மிக்கவர்களாக தலைநிமிர முடியும். கைத்தொழில் முயற்சிகள், விவசாயம், கால் நடை வளர்ப்பு என்று சுயதொழிலை ஆரம்பிக்கலாம். தரிசு நிலங்களை சுவீகரித்து அதனைக் கிராமப்புற இளைஞர்களுக்கு பிரித்துக் கொடுத்து விடலாம் என்னும் அச்சம் சிலருக்கு உண்டு. தரிசு நிலங்களைப் பெருந்தோட்ட இளைஞர்களுக்குப் பகிர்ந்தளிப்பதன் மூலம் கால்நடை விவசாயத்தை அதிகரித்து. தேசிய ரீதியான பொருளாதாரத்திலும் தமது பங்களிப்பினை வழங்கக்கூடிய வாய்ப்புகள் கிட்டும். இன்று தோட்ட மக்களில் அதிகமானோர் மரக்கறி பயிர்ச்செய்கையில் ஈடுபட்டு வருகின்றார்கள். இதன்மூலம் மேலதிக வருமானம் கிடைக்கின்றது. சிலருக்கு இதுவே முழுநேர வருமானம் கிடைக்கும் தொழிலாகவும் காணப்படுகின்றது. 

இவர்களுக்கு மேலதிகமான காணி கிடைக்குமாயின் தமது முயற்சிகளை விரிவுபடுத்தக் கூடியதாயிருக்கும். விவசாய முயற்சிகளுடன் தேனீ வளர்ப்பு, காளான் வளர்ப்பு போன்ற சுயதொழில் வாய்ப்புகளையும் உருவாக்கிக் கொள்ள முடியும். பெருந்தோட்டப் பகுதிகளில் மூடப்பட்டுக் கிடக்கும் தொழிற்சாலைகளை இளைஞர் யுவதிகள் தொழில் பயற்சிகளைப் பெறுவதற்கோ தொழில் வாய்ப்புகளை உருவாக்குவதற்கோ மாற்றியமைக்க முடியும்.

இதேவேளை பெருந்தோட்ட தொழிலாளர்களை குறிப்பாக இளைஞர்களை தொழில்தேடி இடப்பெயர்வு மேற்கோள்ளாமல் தடுக்கலாம். அத்துடன் தொழிலாளர் குடும்பங்களுக்குத் தரிசு நிலங்களை பகிர்ந்தளிப்பதன் மூலம் அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தக் கூடியதாக இருக்கும் பெருந்தோட்டக் கம்பனிகளைப் பொறுத்தவரை தொழிலாளர் சமூகத்தை அடிமைகளாவே எடைபோடும் மனோபாவத்தைக் கொண்டிருக்கின்றன. அவர்களின் உரிமைகளை மறுதலித்து வருகின்றன. தற்போது 1000 ரூபா சம்பள அதிகரிப்பினை முழுமையாக பெற்று விடக்கூடாது என்று திட்டமிட்டு அவை முட்டுக்கட்டைகள் போட்டு வருகின்றமை நல்ல சான்று. எனவே கம்பனி தரப்பு தொழிலாளர்களது வாழ்நிலை அபிவிருத்தியடைக் கூடிய எதனையும் செய்யப்போவது கிடையாது.

எனவே தரிசு நிலங்கள் விடயத்திலும் அவை தொழிலாளர்களுக்குச் சாதகமாக இருக்கப் போவது இல்லை.    எனவே கோரிக்கைகளோ அறிக்கைகளோ பலனேதும் விளைவிக்கப் போவது கிடையாது.

அரசாங்கத்தின் நேரடி கவனம் இதன்பால் ஈர்க்கப்பட வேண்டும். பெருந்தோட்டங்களில் காணப்படும் தரிசு நிலங்களைப் பிரித்துக் கொடுத்து மலையக இளைஞர் யுவதிகள் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட உதவுவேன் என்று 2014களில் உறுதியளித்த அன்றைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, இன்றைய அரசாங்கத்தில் பிரதமராக இருப்பது சாதகமான சங்கதி.

ஜனபதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் பிரதமர் மகிந்தவும் ஓரே கட்சியைச் சேர்ந்தவர்கள். எனவே மலையக தொழிற்சங்கங்களுக்கு இதுவொரு மகத்தான வாய்ப்பு. குறிப்பாக இ.தொ.காவிற்கு. கரைப்பவர் கரைத்தால் கல்லும் கரையும் என்பார்கள். இ.தொ.கா அழுத்தம் கொடுக்குமாயின் நல்லது நடக்கலாம்.  

பன். பாலா

 

Comments