அரசுக்குள் பிளவு ஏற்பட்டதாக சித்திரிக்க எதிரணி பிரயத்தனம்! | தினகரன் வாரமஞ்சரி

அரசுக்குள் பிளவு ஏற்பட்டதாக சித்திரிக்க எதிரணி பிரயத்தனம்!

இலங்கையின் அண்மித்த அரசியல் வரலாற்றில் குறுகிய காலத்துக்குள் உருவாகி, ஆட்சி அதிகாரத்தை விரைவில் கைப்பற்றிய அரசியல் கட்சியெனப் பெயர் எடுத்துள்ளது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன. கடந்த பொதுத் தேர்தல் மாத்திரமன்றி, அதற்கு முன்னர் நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களிலேயே  இக்கட்சி வெற்றிக்கனிகளைப் பறிக்கத் தொடங்கியிருந்தது.

இந்த வெற்றிச் சூத்திரம் உள்ளூராட்சித் தேர்தலையடுத்து வந்த கடந்த பொதுத் தேர்தலிலும் அக்கட்சிக்கு சாதகமாகவே அமைந்தது. இந்த வெற்றியில் பங்காளிக் கட்சிகளுக்கும் கணிசமான பங்கு இருப்பதை நாம் முற்றாக மறுத்து விட முடியாது.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை வெற்றி பெறச் செய்வதற்கு பொதுஜன பெரமுன, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, விமல் வீரவன்சவின் தேசிய சுதந்திர முன்னணி, உதய கம்மன்பிலவின் பிவித்துரு ஹெல உறுமய, வாசுதேவ நாணயக்காரவின் ஜனநாயக இடதுசாரி முன்னணி, திஸ்ஸ வித்தாரணவின் கம்யூனிஸ்ட் கட்சி போன்றவை கைகோர்த்திருந்தன.

இந்தக் கூட்டணியானது ஜனாதிபதித் தேர்தலில் மாத்திரமன்றி கடந்த பொதுத் தேர்தலிலும் தொடர்ந்தது. கூட்டணிக் கட்சிகளுடன் கைகோர்த்தே பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் பொதுஜன பெரமுன ஆட்சி செய்து வருகிறது.

இவ்வாறான நிலையில், கூட்டணிக் கட்சிகளுக்கும் பொதுஜன பெரமுனவுக்கும் இடையில் முரண்பாடுகள் ஏற்பட்டு கூட்டணி பிளவுபடும் நிலையில் உள்ளது எனக் காண்பிப்பதற்கான முயற்சிகள் எதிர்த் தரப்பினரால் தற்போது தீவிரமாக மேற்கொள்ளப்படுகின்றன.

எரிபொருள் விலை அதிகரிப்பு விடயத்தில் அமைச்சர் உதய கம்மன்பில தனித்து முடிவு எடுத்திருப்பதாகக் காண்பித்து, அவரை அமைச்சுப் பதவியிலிருந்து விலக்குவதற்கான முயற்சிகள் கடந்த சில வாரமாக கடுமையாக மேற்கொள்ளப்பட்டன. இவருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றை பிரதான எதிர்க் கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்றத்தில் முன்வைத்துள்ளது.

இப்பிரேரணை நாளை திங்கட்கிழமையும், செவ்வாய்க்கிழமையும் பாராளுமன்றத்தில் விவாதிக்கப்படவுள்ளது. எரிபொருள் விலை அதிகரிப்பு விடயத்தில் அமைச்சர் உதய கம்மன்பிலவை பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகல காரியவசமும் விமர்சித்திருந்தார். மக்கள் கொரோனா சூழலில் கஷ்டப்படும் நிலையில், எரிபொருள் விலை அதிகரிப்புக்குப் பொறுப்பேற்று அமைச்சர் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை அவரால் முன்வைக்கப்பட்டிருந்தது.

எனினும், உலக எரிபொருள் சந்தையின் தற்போதைய நிலைமையால் எரிபொருள் விலை அதிகரிப்பை மேற்கொள்ள வேண்டிய தேவை ஏற்பட்டதாக ஜனாதிபதி செயலகமும் விளக்கமளித்திருந்தது. எனினும், அரசாங்கத்துக்குள் பிளவு இருப்பதாகக் காண்பிக்க எதிர்க் கட்சிகள் இப்போது முயற்சிப்பது நன்றாகவே தெரிகின்றது. இதனாலேயே அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வரப்பட்டுள்ளது என்பதுதான் அரசாங்க வட்டாரங்கள் வெளியாகின்ற தகல்கள் ஊடாக தெரியவருகின்றது.

இவ்வாறான நிலையில் அரசாங்கத்தின் மற்றுமொரு பங்காளிக் கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் பொதுஜன பெரமுனவுக்கும் இடையில் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளது எனக் காண்பிக்க கடும் பிரயத்தனங்கள் மறுபுறத்தில் மேற்கொள்ளப்படுகின்றன.

இராஜாங்க அமைச்சரும் சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளருமான தயாசிறி ஜயசேகர அண்மையில் கூறிய கருத்தை அடிப்படையாகக் கொண்டே இவ்வாறு கூறப்படுகிறது. இராஜாங்க அமைச்சு உருவாக்கம் தொடர்பில் அவர் கருத்துக் கூறியிருந்தார். களிமண் அமைச்சர் போன்று இராஜாங்க அமைச்சுப் பதவிகளை உருவாக்கியிருப்பதால், அது மக்கள் மத்தியில் நகைப்புக்கிடமாகி இருப்பதாகவும், தான் உள்ளிட்ட சிலருக்கு இவ்வாறு அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட்டு ஓரங்கட்டப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

இதற்குப் பதிலளிக்கும் வகையில் கருத்துக் கூறியிருந்த பொதுஜன பெரமுன தரப்பினர் ‘விரும்பம் இருந்தால் அமைச்சுப் பதவியில் நீடிக்க முடியும். இல்லாவிட்டால் பொறுப்புக்களைக் கையளித்து விட்டு வெளியேறி விட முடியும்’ எனக் கூறியிருந்தனர்.

இந்த கருத்துப் பரிமாற்றங்களை அடிப்படையாகக் கொண்டே கூட்டணிக்குள் பிளவு ஏற்பட்டுள்ளது எனக் காண்பிக்க அரசுக்கு விரோதமான தரப்புகள் முயல்கின்றன என்பது தெளிவாகத் தெரிகின்றது. கொவிட் 19 உள்ளிட்ட பல்வேறு சவால்களுக்கு நாடு முகம் கொடுத்திருக்கும் இன்றைய நிலையில், குழப்பிய குட்டையில் மீன்பிடிப்பதற்கு எதிர்க் கட்சி முயற்சிப்பதாக தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

அதேநேரம், இவ்வாறான கருத்துகளைக் கூறி அரசாங்கத்தைப் பலவீனப்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தரும் அமைச்சருமான மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். சுதந்திரக் கட்சியின் அடிமட்ட உறுப்பினர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் பொதுஜன பெரமுனவுடன் கலந்துரையாடி முடிவுகள் எடுக்கப்படும் என்றார் அவர்.

'உண்மையில் பிரச்சினை உள்ளது. குறிப்பாக அரசாங்கத்தின் பங்காளர்களாக நாம் நடத்தப்படுவதில்லை என்ற பிரச்சினை சுதந்திரக் கட்சி குழுவிடம் காணப்படுகிறது. பல்வேறு குழுக்கள் பல்வேறு விடயங்களைக் கூறக் கூடும். எனினும் கட்சியின் தலைமைத்துவம் அவ்வாறான எதனையும் கூறவில்லை. ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரில் யாராவது ஒருவர் இந்த விடயத்தில் கலந்துரையாடுவார்கள் என நம்புகின்றோம். இதற்காக அரசிலிருந்து வெளியேறி எதிர்க்கட்சியைப் பலப்படுத்த நாம் தயாராகவில்லை' என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

பொதுவாக அரசியல் கட்சிகளின் கூட்டணிகளுக்கிடையில் கருத்து முரண்பாடுகள் ஏற்படுவும், பின்னர் அவை சரிசெய்யப்படுவதும் வழமையாக இடம்பெறக் கூடிய செயற்பாடுகளாகும். கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சிக் காலம் இதற்கு சிறந்ததொரு உதாரணமாகும். இதற்கு முன்னரும் இதுபோன்ற பல்வேறு முரண்பாடுகள் இடம்பெற்றுள்ளன.

கொவிட் 19 தொற்று காரணமாக நாட்டின் பொருளாதாரத்துக்கு ஏற்பட்டுள்ள பின்னடைவு மற்றும் ஏனைய சவால்களுக்கு மத்தியில் அரசாங்கத்தின் ஸ்திரத்தன்மையையும் கேள்விக்கு உள்ளாக்குவது அரசைப் பலவீனப்படுத்தும் என்பது எதிர்க் கட்சியின் கணிப்பாக இருக்கலாம். இதன் மூலம் தாம் ஆட்சிக்கு வந்து விட முடியும் என அவர்கள் போடக் கூடிய கணக்கு சரியானதாக இருக்கப் போவதில்லை என்பதுதான் அரச தரப்பின் நம்பிக்கையாக உள்ளது. பலம் வாய்ந்த அரசாங்கமொன்றை அசைப்பது சாத்தியமில்லை என்கின்றனர் அரச தரப்பினர்.

குறிப்பாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் மீள்வருகை பிரதான எதிர்க் கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியையே ஆட்டம் காணச் செய்வதற்கான வாய்ப்புக்கள் இருக்கும் நிலையில், அவர்கள் தம்மை முதலில் காப்பாற்றிக் கொள்ளப் பார்க்க வேண்டும். ஐக்கிய தேசியக் கட்சி ஏற்கனவே இது விடயத்தில் அதிரடியைக் காட்டத் தொடங்கியுள்ளது. குறிப்பாக ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் உள்ளூராட்சி மன்றங்களுக்குத் தெரிவு செய்யப்பட்டு பின்னர் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து செயற்பட்ட உறுப்பினர்கள் பலரை நீக்கி அவ்வெற்றிடங்களுக்குப் புதியவர்களை நியமித்துள்ளது அக்கட்சி.

இவ்வாறான பின்னணியில் ஐக்கிய மக்கள் சக்தி தம்மிடம் இருக்கும் உறுப்பினர்களைப் பாதுகாப்பதிலேயே தற்பொழுது கவனம் செலுத்த வேண்டும் என்பதுதான் அரசியல் அவதானிகளின் கருத்தாகும்.

அதேநேரம், கடந்த சில நாட்களாக உள்ளூராட்சி மன்றங்கள் சிலவற்றின் தலைவர்கள் பதவியிழக்க, புதியவர்கள் வருகின்ற நிலை ஏற்பட்டுள்ளது. பொதுஜன பெரமுனவிடமிருந்த உள்ளூராட்சி மன்றமொன்று சுதந்திரக் கட்சியின் வசம் சென்றுள்ளது. மற்றுமொரு உள்ளூராட்சி மன்றம் பொதுஜன பெரமுனவின் வசமாகியுள்ளது. இவ்வாறான ஒரு சில மாற்றங்கள் உள்ளூராட்சி மன்ற மட்டத்தில் ஏற்பட்டிருந்தாலும் இது மத்திய அரசாங்கத்தில் பாரிய தாக்கம் எதனையும் செலுத்தாது என்பதே அரசியல் அவதானிகளின் கருத்தாகவுள்ளது.

Comments