சுற்றுலாத்துறையை மீட்டெடுத்தல் | தினகரன் வாரமஞ்சரி

சுற்றுலாத்துறையை மீட்டெடுத்தல்

கொரோனா தொற்று இலங்கையில் ஓரளவுக்கு குறைந்துள்ளது போலத் தெரிகிறது. இத் தோற்றத்தை வைத்து நாம் இப் பெருந்தொற்றின் வீச்சை குறைத்து மதிப்பிட்டு சுதந்திரமாக செயல்பட முடியாது. அவ்வாறு செயல்பட முனைந்ததில்தான் இரண்டாம், மூன்றாம் அலைகளை நாம் எதிர்கொள்ள வேண்டியதாயிற்று. இத் தொற்று ஏற்படுத்தியிருக்கும் பிரச்சினையே, நாடுகளை இருதலைக் கொள்ளி எறும்பாக வைத்திருப்பதேயாகும். தொடர்ந்தும் நாட்டை முடக்கி வைத்திருப்பது சாத்தியம் அல்ல. அது பொருளாதார வீழ்ச்சியை தேசிய மட்டத்தில் மட்டுமின்றி தனி மனித மட்டத்திலும் ஏற்படுத்துகிறது. அதாவது பொருளாதார செயற்பாடுகளுக்காக நாட்டை திறக்கவும் வேண்டும்; தொற்று பரவாமல் பார்த்துக் கொள்ளவும் வேண்டுமென்பது மிகவும் சிரமமான ஒரு பணி.

இலங்கை தற்போது அத்தகைய ஒரு சந்தியிலேயே நின்று கொண்டிருக்கிறது. நாட்டின் டொலர் இருப்பு குறைந்து விட்டது என்பது ஒன்றும் இரகசியம் அல்ல. எமக்கு வெளிநாட்டு வருமானம் தந்த முக்கிய தளங்கள் ஏறக்குறைய மூடப்பட்ட நிலையில் உள்ளன. சுற்றுலாத்துறை மூலம் பெருமளவு வருமானம் கிடைத்தது. லட்சக்கணக்கானோருக்கு வேலை வாய்ப்பை அளித்தது. சுற்றுலாத்துறை என்பது, ஹோட்டல்கள், சுற்றுலாத்தளங்கள், வழிகாட்டிகள், கடற்கரைப் பையன்கள், பயணிகள் விரும்பும் பொருட்களை உற்பத்தி செய்பவர்கள், உணவகங்கள், வாகன சாரதிகள், விநியோகத்தர்கள், சிறிய குடில்ரக விடுதிகள் எனப் பல பிரிவினரையும் அடக்கியது. கொரோனா இவர்களை மிகமோசமாக தெருவுக்கே கொண்டு வந்திருக்கிறது. வெளிநாட்டு பண வருகையும் கணிசமாக குறைந்துள்ள நிலையில் சுற்றுலாத் துறையை மீட்டெடுக்க வேண்டிய அவசியம் எழுந்துள்ளது.
இந்த வகையில் தான் சுற்றுலா பயணிகளை இலங்கை வர அனுமதிப்பது தொடர்பாக அரசு எடுத்துள்ள தீர்மானத்தைப் பார்க்க வேண்டும். கொவிட் – 19 தொற்றுக்கு எதிரான இரண்டு தடுப்பூசிகளையும் ஏற்றிக்கொண்ட, 72 மணித்தியாலயங்களுக்கு முன்னர் எடுத்துக்கொண்ட ‘நெகடிவ்’ விளைவை உறுதிப்படுத்தும் பத்திரத்தைக் கொண்ட சுற்றுலாப் பயணிகளை இலங்கை வர அனுமதிக்கலாம் என முடிவு செய்யப்பட்டிருப்பதாக சுற்றுலா அதிகாரசபை அறிவித்துள்ளது. அத்தகையோர் இலங்கையில் எப்பகுதிக்கு வேண்டுமானாலும் செல்லலாம் என்றும் அவர்கள் இலங்கையில் தங்கியிருக்கும் காலப்பகுதியில் இரண்டு பி.சி.ஆர் பரிசோதனைகள் செய்யப்படும் என்றும் இச் சபை தெரிவித்துள்ளது. இதே சமயம் சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, தான் சவூதி அராபியாவுடன் சுற்றுலாப் பயணிகள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் இரு நாடுகளும் இணைந்து சுற்றுலாத்துறையைக் கட்டியெழுப்புவது தொடர்பாக கூட்டுத் திட்டமொன்றை செயற்படுத்துவதில் ஆலோசனை செய்யப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

சுற்றுலாப் பயணிகள் அழைத்து வரப்படுவதற்கு சில தரப்பு வழமை போல எதிர்ப்பு தெரிவிக்கலாம். ஆனால் நாம் இத்துறையோடு சம்பந்தப்பட்ட பல்லாயிரக்கணக்கான குடும்பங்களின் பொருளாதார நிலையை யோசித்துப் பார்க்க வேண்டும். புதிய நிதியமைச்சர் பசில் ராஜபக்சவும் கடந்தவாரம் ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளின் இலங்கைத் தூதுவர்களுடன் பொருளாதார ஒத்துழைப்பு தொடர்பாக பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளார். உல்லாச பிரயாணதுறை என்பது நமது நாட்டுக்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட்ட ஒன்றல்ல. அது உலகளாவியது. எனவே அனைத்து நாடுகளுமே சுற்றுலாவுக்கு தமது நாடுகளைத் திறந்துவிடவே விரும்புகின்றன. வெளிநாட்டு பண வருவாயை எந்த நாடுதான் விரும்பாது.’
எனவே சுற்றுலாத்துறையை மீளவும் திறப்பது, இயங்கச் செய்வது, அடுத்த கட்டத்தை நோக்கி நகர்த்துவது என்பனவற்றை நாம் சாதகத் தன்மையுடன் தான் பார்க்க வேண்டும். வெளிநாட்டவர் வருகையுடன் தொற்று இலங்கையில் அதிகரித்துவிடலாம் என்பதில் உண்மை இருந்தாலும் இந்த சவாலை உலக நாடுகள் எதிர்கொள்வதைப்போல நாமும் எதிர்கொள்வதே புத்திசாலித்தனமே தவிர சாதகத்தன்மையற்ற வகையில் சிந்தித்துக்கொண்டு நாட்டை மென்மேலும் பாதாளத்தில் தள்ளிக் கொண்டிருக்க முடியாது.

இப் பெருந்தொற்றில் இருந்து மீண்டுவர வேண்டுமென்றால் உலக நாடுகள் எதிர்கொண்டிருக்கும் சவால்களையும், பிரச்சினைகளையும், தீர்வுகளையும் நடைமுறைப்படுத்தும் துணிச்சலை நாமும் பெற்றாக வேண்டும். கொவிட் விஷயத்தில் நாம் ஒரு தீவாக செயல்பட முடியாது. சுற்றுலாத்துறையை இங்கே மீளவும் உயிர்ப்பெறச் செய்வதில் தடுப்பூசி முக்கிய பங்கை வகிக்கிறது. தடுப்பூசி ஏற்றுதலை மேலும் வேகப்படுத்துவதோடு மக்களிடம் தடுப்பூசி தொடர்பாகக் காணப்படும் கவலைகளையும், தயக்கங்களையும் விழிப்புணர்வூட்டுதல் மூலம் களைய முயற்சிகள் மேற்கொள்வது அவசியம். ஏனெனில் இரண்டு தடுப்பூசிகளையும் ஏற்றிக்கொண்டதற்கான சான்றிதழை கையில் வைத்திருப்பது அடையாள அட்டையைப் போன்ற ஒரு ஆவணமாக எதிர்காலத்தில் கருதப்படலாம் என்பதை உணர்த்துவதன் மூலம் தயங்குபவர்களை தடுப்பூசி போட்டுக் கொள்ள வைக்க முடியும். நவம்பருக்கு முன்னர் நாற்பது சதவீதமானோருக்கு தடுப்பூசிகள் போடப்படுமானால், கொரோனா தொடர்பாக மேற்கொள்ளப்படும் எதிர்ப்பு அரசியலையும் வெற்றி கொள்ளலாம்.

Comments