ஒன்லைன் கல்வியில் காணப்படும் சிக்கல்கள் | தினகரன் வாரமஞ்சரி

ஒன்லைன் கல்வியில் காணப்படும் சிக்கல்கள்

'ஒரு பேராசிரியரை எழுதுவினைஞராகவும் பேப்பர் காவுபவராகவும் ஒரு பியோனாகவும்  மாற்றிவிட்டிருக்கிறது இந்த ஒன்லைன் முறைமை. ஓரு எழுதுவினைஞனின் வேலையையும்  ஒரு  பியோனின் வேலையையும் செய்ய நிர்ப்பந்திக்கும் அளவுக்கு தரம் தாழ்ந்து  விட்டிருக்கிறது பல்கலைக்கழகக் கல்வித்துறை. கல்வியாளர் மத்தியில் மேலே  சொல்லப்பட்ட தொற்றாநோய்கள் ஏற்பட இதைவிட வேறு என்ன காரணம் வேண்டும்?'

இந்தக் கொரோனா நோய்க்கால ஒன்லைன் கோலாகலங்கள் இதேபோன்று தொடர்ந்து நடக்குமாயின் வெகு விரைவில் கற்பித்தல் பணியில் உள்ளவர்கள் பலர் மனஅழுத்தம்,  நீரிழிவு, இருதய நோய்,  உயர் இரத்த அழுத்தம் போன்ற தொற்றா நோய்களால் வெகுவாகப் பாதிக்கப்படுவார்கள் என்பது தெரிகிறது. 

பாடசாலைகளில் ஆசிரியப் பணியில் உள்ளவர்கள் கற்றலை விரிவுபடுத்தி அறிவைத்தேடி அதனை மாணவர்களுக்கு வழங்கி அவர்களது வாழ்வில் நடத்தை மாற்றங்களை ஏற்படுத்தும் பணியை விடுத்து அதிகாரிகள் கேட்கும் படிவங்களை நிரப்புவதிலேயே தமது காலத்தின் பெரும் பகுதியை செலவிட நேர்ந்துள்ளது.

எல்லாவற்றிற்கும் ஆதாரம் வழங்கும் தேவைப்பாட்டை  பூர்த்திசெய்யவே நேரம் சரியாக இருக்கும்போது ஆர்வத்துடன் கற்பிக்க உரிய மனநிலை எங்கிருந்து வரும்? ஓன்லைனில் கற்பிக்க ஆரம்பித்த பின்னர் ஆசிரியர்களின் பணிச்சுமை வெகுவாக அதிகரித்துள்ளது.  

ஒன்லைன் கற்பித்தலுக்கு தயார்படுத்தல் இலகுவான ஒன்றல்ல. மறுபுறம் தெளிவான புகைப்படக் கருவியுடன் கூடிய கணிணி இணையத்தொடர்பு தரவுப்பொதிகள் போன்ற ஒன்லைன் கற்பித்தலுக்கு உரிய வளங்களையோ அதனூடாக கற்பித்தலை மேற்கொள்வதற்குரிய தொழிற் பயிற்சியையோ இந்த கொள்ளை நோய் ஆரம்பித்து ஒன்றரை வருடங்களாகியும் இற்றைவரையும் ஆசிரியர்களுக்கு வழங்கப்படவில்லை.

அவ்வாறு வழங்கப்படுவதற்கான எவ்வித அறிகுறியும் தென்படவில்லை. மறுபுறம் பெரும்பாலான மாணவர்களிடம் ஒன்லைன் கற்பித்தலை உள்வாங்கி கற்கும் வகையிலான கருவிகளோ, வசதிகளோ போதியளவில் இல்லை எனத்தெரிகிறது.  
விளிம்பு நிலையில், அன்றாடம் வாழ்க்கையை கொண்டு நடத்த உணவைப் பெறுவதற்கே அல்லல்படும் பெற்றோரால் ஸ்மார்ட் போன்களை கொள்வனவு செய்ய முடியாது. ஒன்றுக்கு மேற்பட்ட பாடசாலை செல்லும் பிள்ளைகள் உள்ள குடும்பங்களின் நிலைமை அதோ கதிதான். மறுபுறம் தொலைபேசிச் சமிக்ஞைகள் போதியளவு இல்லாத காரணத்தால் மரத்தின் மீதேறி அல்லது மலையுச்சிகளைச் சென்றடைந்து கற்கவேண்டிய நிலைக்கு மாணவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.  

எனவே இந்த ஒன்லைன் கற்பித்தல் முறை கல்வியைப் பெறுவதில் மிகப்பெரிய சமூக ஏற்றத்தாழ்வை ஏற்படுத்தப் போகிறது. அதேவேளை இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி தனியார் ஆசிரியர்கள் ஒன்லைன் கல்வியை விற்று நாலு காசு பார்க்க முயல்கிறார்கள். ஆசிரியர்களில் மிகப்பெரும்பான்மையானோர் தம்மிடமுள்ள மிகக்குறைந்த வளமாகிய ஸ்மார்ட் போனையும் சொந்தச் செலவில் டேட்டாவையும் வாங்கி கற்பிக்க நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர். நிதிவளம் கொண்ட ஒருசில பாடசாலைகள் முறையான வசதிகளை ஏற்படுத்தி உரிய சாதனங்களை கொள்வனவு செய்து ஆசிரியர்களுக்கு உரிய பயிற்சியையும் வழங்கி தமது கற்பித்தல் நடவடிக்கைகளை மேற்கொள்வதையும் காணமுடிகிறது. எவ்வாறாயினும் விளிம்பு நிலையில் உள்ள சமூகத்தில் உள்ள நபர்களுக்கு இவை கிட்டுவதில்லை. தமது சொந்தப்பணத்தை செலவழித்து பகீரதப் பிரயத்தனம் செய்து தமது குழந்தைகளுக்கு கற்பித்தலைச் செய்யும் ஆசிரியர்களிடம் கற்பித்தமைக்கு ஆதாரம் காட்டக் கேட்பது அபத்தம்.  

பாடசாலைகளில் தான் இவ்வாறு பிரச்சினைகள் உள்ளதென்றால் பல்கலைக்கழக ஒன்லைன் கல்விமுறை அதைவிட மோசமான நிலையில் உள்ளது. திடீரென முளைத்த ஒரு அசாதாரண சூழலில் பல்கலைக்கழக மாணவர்களின் கல்வியைத்தொடர ஒன்லைன் முறைக்கு மாறுவதாகக் கூறப்பட்டாலும் ஒன்றரை வருடம் கடந்துள்ள நிலையிலும் அந்த முறைமையின் அடிப்படையில் கல்வியை கற்பிக்கவோ அல்லது கற்கவோ தேவையான அடிப்படை வசதிகள் கூட பல்கலைக்கழகங்களில் இன்னமும் ஏற்படுத்தப்படவில்லை.  

ஏற்கெனவே பல்கலைக்கழகங்களில் ஒன்லைன் அடிப்படையிலான கற்றல் முகாமைத்துவ முறைமை Learning Management System – (LMS) அறிமுகப்படுத்தப்பட்டிருந்தாலும் அது இன்னமும் குழந்தை நிலையிலேயே இருக்கிறது. அதை வைத்துக்கொண்டுதான் Zoom தொழினுட்பத்தைப் பயன்படுத்தி கற்பித்தலைச் செய்யுமாறு விரிவுரையாளர்கள் நிர்ப்பந்திக்கப்பட்டார்கள். டெஸ்க்டொப் கணணிகள் பல்கலைக்கழகங்களில் இருந்தாலும் ஒருசில விரிவுரையாளர்களிடம் மட்டுமே அவர்களது வீடுகளில் சொந்த மடிக்கணணிகளோ அல்லது டெஸ்க் டொப் கணணிகளோ இருந்திருக்கலாம். ஆனால் சாதாரண சந்தர்ப்பங்களில் விரிவுரையாளர்களில் பெரும்பாலானோர் தமது அலுவலகக் கணணிகளிலேயே விரிவுரைகள் மற்றும் ஏனைய தேவைகளுக்கான வேலைகளைச் செய்தனர்.  

நாடு திடீரென முடக்கப்பட்டபோது பலர் தமது தனிப்பட்ட கணணிகளைப் பயன்படுத்தியே கற்பித்தலைச் செய்ய வேண்டியேற்பட்டது. அது போதாதென்று தாம் கற்பித்தவற்றை வீடியோவாக LMS இல் பதிவேற்றம் செய்யவும் நிர்ப்பந்திக்கப்பட்டார்கள். இவை அத்தனையையும் செய்யத் தேவையான டேட்டாவை தமது சொந்தக்காசை செலவழித்துப் பெறவும் அறிவுறுத்தப்பட்டார்கள். சில விரிவுரையாளர்கள் தமது விரிவுரைகளுக்கு மடிக்கணணிகளையும் டேட்டா பக்கேஜ்களையும் பெற்றுத்தர துறைத்தலைவர்களை நடவடிக்கை எடுக்க கோரியபோதும் நேரடியாக உபவேந்தரிடம் எழுதிக்கேட்குமாறு கையை விரித்து விட்டார்கள்.  

இது வரைக்கும் ஒன்லைன் கற்பித்தலை முறையாகச் செய்வதற்கான வளங்களை விரிவுரையாளர்களுக்குப் பெற்றுத்தரவோ அதற்குரிய முறையான உட்கட்டுமானங்களை பல்கலைக்கழகங்களில் உருவாக்குவது பற்றியோ எவ்விதமான கவனமும் எடுக்கப்படவில்லை. மாறாக ஒன்லைனுக்கு மாறிவிட்டோம் என்று போலியாக தமக்குத் தாமே வெல்டன் சொல்லிக் கொள்கிறார்கள். ஒன்லைன் செயற்பாட்டிற்குரிய எவ்வித வசதியையும் செய்து தராதது மட்டுமன்றி போதாக்குறைக்கு ஒடிட்காரன் கேட்கும்போது காட்டுவதற்கு செய்த வேலை பற்றிய அத்தனை ஆதாரங்களை வைத்திருக்குமாறும் பயமுறுத்தப்பட்டார்கள்.

சாதாரண நேருக்கு நேர் விரிவுரையில் ஒரு மணித்தியாலம் கற்பித்தலும் ஒன்லைனில் ஒரு மணித்தியாலம் கற்பிப்பதும் சமமானதல்ல. இதை ஒடிட்காரன் எப்படிப்பார்ப்பானோ தெரியாது. இன்னொரு வேடிக்கை என்னவென்றால் Zoom இல் விரிவுரையை பதிவு செய்தபின்னர் வேலை அத்துடன் முடியாது. LMS இல் அதை ஏற்றவேண்டும்.  ஒரு மணித்தியால விரிவுரை சுமார் 150 மெகாபைட் அளவில் இருக்கும் LMS இல் 64 மெகாபைட்டுக்கு மேல் பதிவேற்ற முடியாது. ஆக வீடியோவை மூன்றாகப் பிரிக்க வேண்டும். இதற்கு மென்பொருள் வேண்டும். அதையும் விரிவுரையாளரே தேடிப்பெறவேண்டும். இரண்டுமணிநேர விரிவரை என்றால் அதோகதிதான் பிரித்த வீடியோ பைல்களை LMS இல் பதிவேற்ற வேண்டும் அதற்கு டேட்டாவை மீண்டும் செலவழிக்க வேண்டும்.  

விரிவுரைகள் இவ்வாறு என்றால் பரீட்சை மதிப்பீடுகள் அதைவிடக் கொடுமையானது. ஓன்லைனுக்கு பொருத்தமான வினாப்பத்திரங்களைத்தயார் செய்ய வேண்டும். ஆனால் அதுபற்றிய பயிற்சி எதுவும் கிடையாது. வினாப்பத்திரத்தை தயார்செய்த பின்னர் அதை LMV பதிவேற்றி உரிய நேரத்தில் திறக்கும்படி கட்டளை கொடுக்கவேண்டும். அதில் ஒரு கொப்பியை பல்கலைக்கழக பரீட்சைத் திணைக்களத்திற்கு அனுப்ப வேண்டும். அவர்களை அதை பைலில் போட்டு வைப்பார்களாம். பரீட்சையன்று விரிவுரையாளர் LMS இல் மாணவர்கள் வந்திருக்கிறார்களா என்று பார்க்க வேண்டும். இதிலுள்ள முக்கியமான வேடிக்கை என்னவென்றால் பரீட்சை எழுதும் நேரம் இரண்டு மணிநேரம் தான் என்றாலும் மாணவர்கள் தாம் எழுதிய விடைத்தாள்களை LMS இல் பதிவேற்றம் செய்ய 24 மணிநேரம் வழங்கப்படும். இக்காலப்பகுதியில் மாணவர்கள் உண்டு குளித்து உறங்கி நண்பர்களோடு அளவளாவி வேண்டுமென்றால் அவர்களைக் கொண்டே குதிரையோடி பரீட்சை எழுதுவித்து பதிவேற்றம் செய்யவும் முடியும். 24 நேரகால இடைவெளியிலும் பதிவேற்ற முடியாமல் போன சில கேசுகளையும் காணமுடிகிறது. 

மாணவர் விடைத்தாள்களை அனுப்பிய பின்னர் விரிவுரையாளர் கொம்பியூட்டர் யுனிட்டில் உள்ள ஒரு நபரிடம் சென்று வரிசையில் நிற்கவேண்டும். அவர் அதை டவுண்லோட் செய்து நாம் கொண்டு போகும் பென் ட்ரைவில் போட்டுத்தருவார் அல்லது கூகுள் டரைவ் லிங்கை அனுப்புவார். மிகப்பெரிய அளவு  டேட்டாவை செலவழித்து விரிவுரையாளர் அதை பதிவிறக்கம் செய்ய வேண்டும். பின்னர் எல்லா மாணவர்களும் அனுப்பியிருக்கிறார்களா என்று செக் பண்ண வேண்டும். ஓரிருவர் அவற்றை மின்னஞ்சலில் அனுப்பியிருக்கலாம். அதற்காக இன்னொருவரைத் தொடர்பு கொண்டு அவற்றைப் பெறவேண்டும். சரி இது முடிந்ததென்றால் அடுத்தது விடைத்தாள்களை பிரிண்ட் பண்ணும் படலம். அதையும் விரிவுரையாளரே செய்ய வேண்டும்.  
பேராசிரியர் பிரிண்டரின் முன் அமர்ந்து பிரிண்ட் எடுத்துக்கொண்டிருப்பார்.  காரியாலய உதவியாளன் அதாவது பியோன் அடுத்த அறையில் அமர்ந்து தொலைபேசியை நோண்டிக் கொண்டிருப்பான். எடுத்த பிரிண்டுகளைக் கொண்டுபோய் திருத்த வேண்டும். 

இறுதி மதிப்பீடு தொடர் மதிப்பீடு புள்ளிகளை கூட்டி கவனமாக இறுதிப் புள்ளிகளைத்தயார் செய்ய வேண்டும். அதில் துறைத்தலைவரின் ஒப்புதலைப் பெறவேண்டும் அதன் பின்னர் அவற்றை எடுத்துக் கொண்டு மாணவர்   தகவல் முறைமை (Student Information System) என்ற தளத்திற்கு சென்று கடவுச் சொல்லைக் கொடுத்து அங்கு விரிவுரையாளரின் பெயரின் மீது பதிவு செய்யப்பட்டுள்ள பாடத்தின் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள மாணவர் அட்டவணையில் புள்ளிகளை பதிந்து பதிவேற்றம் செய்ய வேண்டும்.  

அத்தோடு ஒன்லைன் முறையின்படி விரிவரையாளர் புள்ளிகளை சமர்ப்பித்து விட்டார் என்று பொருள்கொள்ள வேண்டும். ஆனால் குளறுபடியான ஒன்லைன் முறையின்படி விரிவுரையாளர் அவ்வாறு புள்ளிகளைச் சமர்ப்பித்த பின் அதில் இறுதியாக வரும் புள்ளி அட்டவணையை பிரிண்ட் செய்து அதில் மீண்டும் கையொழுத்திட்டு துறைத்தலைவரின் ஒப்பம் பெற்று பரீட்சைக்கு பொறுப்பான துறைப்பிரதிநிதியின் கையெழுத்தையும் பெற்று அதனை பரீட்சைத்திணைக்களத்திடம் சென்று சமர்ப்பிக்க வேண்டும்.

அதாவது ஒன்லைனிலும் சமர்பிக்க வேண்டும் காகிதத்திலும் சமர்ப்பிக்க வேண்டும். முன்னர் காகிதத்தில் மட்டும் சமர்ப்பிக்கப்பட்டது. பரீட்சைத்திணைக்களத்தார் இறுதிப்பள்ளிகளை வைத்து முடிவை அறிவிப்பார்கள். அத்தோடு அந்தப்பாடத்திற்குரிய விரிவுரையாளரின் பணி முடியும். ஓன்லைன் முறையில் புள்ளிகளை சமர்ப்பிக்கிறோம் பேர்வழி என்று ஒரு தடவை செய்ய வேண்டிய வேலையை இரண்டு தடவை செய்ய வைத்து வினைத்திறனை மேலும் குறைத்து விட்டிருக்கிறார்கள்.  

விரிவுரையாளர்களின் பொன்னான நேரம் இது போன்ற சில்லறை வேலைகளில் வீணாகக் கழிந்து கொண்டிருக்கிறது. ஒரு பேராசிரியரை எழுதுவினைஞராகவும் பேப்பர் காவுபவராகவும் ஒரு பியோனாகவும் மாற்றிவிட்டிருக்கிறது இந்த ஒன்லைன் முறைமை. ஓரு எழுதுவினைஞனின் வேலையையும் ஒரு பியோனின் வேலையையும் செய்ய நிர்ப்பந்திக்கும் அளவுக்கு தரம் தாழ்ந்து விட்டிருக்கிறது பல்கலைக்கழகக் கல்வித்துறை. கல்வியாளர் மத்தியில் மேலே சொல்லப்பட்ட தொற்றாநோய்கள் ஏற்பட இதைவிட வேறு என்ன காரணம் வேண்டும்?  

கலாநிதி எம். கணேசமூர்த்தி
பொருளியல்துறை
கொழும்பு பல்கலைக்கழகம்

Comments