கசப்பும் இனிப்பும் | தினகரன் வாரமஞ்சரி

கசப்பும் இனிப்பும்

இனிப்பு-1

என் ‘கசப்பும் இனிப்பும்’ மூன்று நான்கு கிழமைகள் கிடைக்காத நிலையில் இன்று மீண்டும்!  ஒரு மகிழ்வுச் செய்தி, இன்று இனிப்பை மட்டுமே  சுவைக்கப் போகிறீர்கள்! 

ஏன் கசப்பு இல்லை என்போருக்கு விவரமும் சொல்ல வேண்டும். நானே கடந்த பல நாட்கள் அதிகமான கசப்பு வில்லைகளை விழுங்கித் தொலைத்து விட்டேன். ஒரு கிழமையாவது அபிமானிகளுக்குக் கொடுக்க வேண்டாமே என்று தோன்றி இனிப்பு மட்டும் வழங்குகிறேன். 

பிரசித்தி பெற்ற கொழும்பு-03 கொள்ளுப்பிட்டு, ‘டர்டன்’ மருத்துவமனையில் பத்துப் பன்னிரண்டு நாட்கள் தங்க வைக்கப்பட்டு, என் ‘நிழல்’ நிழலை நிகர்த்து, உறக்கம் தவிர்த்து என்னருகே வியாபித்துநிற்க, மருத்துவத் தாதியர் நேரம் காலம் இல்லாமல் கசப்பு வில்லைகளைக் கொடுத்து ஊசிகளை ஏற்றி, இரத்தம் இரத்தம் என்று பல பரிசோதனைகளுக்குக் குப்பிகளில் நிரப்பி வாழ்க்கையில் முதல் தடவையாக ஓர் அனுபவம்! 

புயல் வேகத்தில் கடந்த ஞாயிறு 11ம் திகதியுடன் ஒரு மாதம் பறந்தே பறந்து போனது. இப்போது பூரண நலத்தைத் தர பேனை முனை கடமைக்கு அழைத்து விட்டது.  

முதல் இனிப்பு மருத்துவமனையில் சந்தித்த ஒரு மாமனிதர் பற்றியது. 

என்னைச் சத்திரசிகிச்சைக்கு உட்படுத்திய அவர், ஒன்னரை மணி நேரம் சுய நினைவிலேயே வைத்து, ஆனால் ஒரு சிறு துளி வலியும் தெரியாமல் ‘விஷயத்தை’ வெற்றிகரமாக முடித்த நிபுணர்! 

இந்த மருத்துவரை என் ‘நிழல்’ தேர்வு செய்த விதமே அலாதி! 

டர்டனில் ஒரு நீண்ட பட்டியலைக் கொடுத்து ஒருவரைத் தேர்ந்தெடுக்க ‘நிழ’லிடம் கோரிய பொழுது அவர் சில நிடங்களை திரு திரு! கடைசியில் ஒரு வழியைக் கண்டார். அவர் தமிழராக இருக்க வேண்டும். பெயரும் கவரவேண்டும். 

அந்த வகையில், பட்டியலில் பட்டொளி வீசியது ஒரு சூரியன்! “ஆதவன்” என்று பதித்திருந்தார்கள்! மறுபேச்சின்றி, “இவரையே சத்திர சிகிச்சைக்கு அழையுங்கள்!” என்றவர் “அப்பாடா” என்று தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டார்! 

ஆக, ஆறே நாட்கள் ‘ஆதவன்’ என்கிற நிபுணர் என்னைப் பரிசோதிப்பதும், ஆங்கில உரையாடலை எங்கள் வேண்டுகோளில் தவிர்த்துத் தமிழில் பேசியும் நிலைமைகளை விளக்கினார். 

தான் ஒரு மருத்துவர், புகழ்பெற்ற சத்திரசிகிச்சை நிபுணர் என்ற பந்தா எதுவுமில்லாமல் ஒரு சாமான்ய மனிதர் போல் பழகினார். 

மனிதர் ஒரு நாளில் ஒன்றுக்கு மேற்பட்ட மருத்துவ மனைகளில் சேவை புரிந்தும் தன் களைப்பு, கொரோனா கால கஷ்டங்கள் எதையும் காட்டிக் கொள்ளாமல். 

விசேடமாக “காசே தான் கடவுளடா” என்ற புகழ்பெற்ற சினிமாப் பாடலைப் பாடாமல் காரியத்தில் மட்டும் கண்ணாக இருந்து என்னை சுகதேகியாக்கினார். 

அவருடனான தொடர்புகள் சந்திப்புகள் அனைத்தும் ஜூன் 11ல் ஆரம்பித்து இந்த ஜூலை 11ல் முடிவுக்கு வந்தது.  

மருத்துவ நிபுணர் ஆதவன் ஒரு மறக்க முடியாத இனிப்பான மனிதர் என்று மட்டும் சொல்லி நிறுத்துகிறேன். எவ்வாறாயினும், நறுக்காக சில தகவல்களைத் தர வேண்டும். 

இந்த மருத்துவ நிபுணர் வடக்கின் கந்தரோடை (சுன்னாகம்) மண்ணின் மைந்தர். மலையகத்தில் பெற்றோர் ஆசிரிய மணிகளாய் திகழ்ந்ததால் அந்த மண்ணின் வாசமும் நுகர்ந்தவர். 

யாழிலும் கொழும்பு மருத்துவக் கல்லூரியிலும் பயின்று, MRCS பட்டத்தைப் பிரித்தானியாவிலும் பெற்று, போராட்டக் காலங்களில் வவுனியா போன்ற பிரதேசங்களிலும் சேவையாற்றி ஒரு மனிதாபிமானியாக மாறி ஜொலிப்பவர். 

‘சூரியனும் ஒரு தொழிலாளி, எனக்கவிஞர் பா யாத்தது போல, விடிந்து பொழுது போகும் மட்டும் மருத்துவத்துறையில் உழைக்கும் இந்த ‘ஆதவன்’ நீடு வாழ்க. அவர்தம் முழுப்பெயர். 

“புவனேந்திரநாதன் ஆதவன்” நிழற்படம் பிரசுரிக்க ஆர்வக் குறைவு. வருந்துகிறேன்.

இனிப்பு-2

எம் நாட்டைப் பொறுத்தவரையில், கலை – இலக்கியத்துறையின் ஓர் அங்கமான ஓவியம் – சித்திரம் வரைதலின் பிரகாசித்தவர்கள், பிரகாசிப்பவர்கள் மிகக் குறைவு விரல் விட்டெண்ணி விடலாம். 

அதிலும் தமிழ் வார வெளியீடுகளில் கைவண்ணம் காட்டுவோர் அரிது. அன்றும் இன்றும் இதே நிலைமை. 
பாடசாலைகளில் ஓவிய ஆசிரியர்களாகக் கடமை புரிந்தோர் புரிவோரைத் தவிர்த்து விட்டு ஆய்வு செய்தால் அரை நூற்றாண்டுக்கு முன்னால் ‘சானா’ சண்முகநாதன், ராசையா மாஸ்டர், ‘விகே’ என்ற கனகலிங்கம் “ரமணி”, “தவம்”, சந்தர் (“சிரித்திரன்” ஆசிரியர்) ஆகிய யாழ். மைந்தர்கள் அங்கும் கொழும்பிலும் தமிழ் வெளியீடுகளில் ஓவியமணிகளாகினர். 
கொழும்பிலேயே பரிணமித்தவர்களாக பல பகுதிகளையும் சார்ந்த ‘ஹூனா’ (ஹூசைன்) ‘சந்ரா’ (ராமச்சந்திரன்), ஸ்ரீஸ்கந்தராஜா, ஸ்ரீ காந்த், கௌசிகன், ஸ்ரீதர் பிச்சையப்பா, கனிவுமதி ஆகியோர். 

அபூர்வமாக மட்டக்களப்பில், ஸ்ரீ கோவிந்தசாமி (சுவைத்திரள்) மன்னாரில் கலைவாதி கலீல், தென்னிலங்ககை வெலிகாமத்தில் மும்தாஸ் ஹஃபீள் (கலீலும், ஹஃபீளும் சிறுகதை எழுத்தாளர்களுமாவர்) 

இவர்களைப் போன்றே சுப்பையா வையலட் தம்பதியினர் புத்திரர் துரைசாமி! 

ஆக மொத்தமாக இலங்கை இதழியல்துறை ஓவியர்கள் பதினேழே பேர் தான்.  

கடந்த 50- 60 ஆண்டுகளிலிருந்து இன்றுவரை இலக்கம் 17லில் நிற்கிறது! 

சரி. நிற்கட்டும்! இங்கே, இன்றைய இனிப்பில் இறுதியில் பதித்த பதினேழாவது ஆசாமியாகிய “துரைசாமி” பற்றியவரை வழங்க உத்தேசம். 

“துரைசாமி” என்ற இயற்பெயர் கொண்ட ஓவியர் எஸ்.டி. சாமி கொழும்பு மைந்தர். (திம்பிரிகஸ்யாய) பிறப்பு 1945 கடந்தாண்டு பவளவிழா கண்டவர் பம்பலப்பிட்டி, ரோமன் கத்தோலிக்கத் தமிழ்க் கலவன்’ பழைய மாணவர். 

இந்த மனிதர் தமிழ் இதழ்களின் சித்திரக்காரராகப் பரிணமித்ததே ‘ஒரு விபத்து’ என்பேன். 

அந்த விபத்தை அறிந்தும் அறியாமலும் ஏற்படுத்தியவர் ‘நம்ம’ தேசியப் பாடகர், கலாபூஷணம் வி. முத்தழகு! 
மருத்துவம் பார்த்து, நல்ல சுகதேகியாக்கி, இதழ்களில் ஜொலிக்கச் செய்தவர்கள், இருபெரும் இதழியல் வித்தகர்கள், ‘எஸ். டி. சிவநாயகம் அய்யா, ‘ஆர் சிவகுருநாதன்’ மச்சான்!  

(இந்த ‘மச்சான்’ எனக்கே எனக்கு மட்டுமே!) 

இந்த (துரை) ‘சாமி’ யைப்பற்றி முழுமையாகத் தெரிந்து கொள்ள இந்தப் பத்தி எழுத்துப் பக்கம் போகவே போகாது. 
எவ்வாறாயினும், ஒரு முக்கியத் தகவலை மட்டும் பதிவது அவசியத்திலும் அவசியம். 

மேற்குறிப்பிட்ட இதழ் ஓவியர்களின் (16) சந்ததியர் எவரும் செய்யாத ஒரு காரியத்தை இந்த எஸ்.டி. சாமியின் புதல்வி திருமதி கவிதா ஜெபநேசன் செய்திருக்கிறார். 

தன்னருமை அப்பாவின் பவள விழாவுக்காக ஒரு மலரை 2020ல் தொகுக்கத் தொடங்கி இந்த 2021ல் பூர்த்தி செய்து சுடச்சுட என்போன்ற, கரங்களுக்குக் கிடைக்கச் செய்திருக்கிறார். 

கண்களைக் கவரும் அம்மலரின் முகப்பு அட்டையையும் ஓவியர் கலாபூஷணம் சாமி, 1990களில் நம் வாரமஞ்சரி சிறுகதைகளுக்கு வரைந்த சித்திரங்கள் சிலவற்றையும் அபிமானிகள் ரசிக்க இப் பத்தியில் வழங்கியிருக்கிறேன். 
“கவிதா” என்ற ஒரு மகளார், தந்தையாருக்குப் புரிந்துள்ள கைங்கரியத்தைப் போற்றுகிறேன். புகழ்கிறேன். 
மேலும், என் அபிமானிகள் செய்ய வேண்டிய காரியம் ஒன்றுண்டு. 

"இலக்கம் 312/1 பிரீதிபுர, ஹெந்தல, வத்தளை” முகவரியுடன் தொடர்பு கொண்டு அந்த மகள் கவிதாவைப் பாராட்டி இரு மலரைப் பெற்றுக் கொள்ளுங்கள் (தொ. பே 011 2940369) பக்கங்கள் 108, விலை ரூ 250/= நன்றி. 

இனிப்பு-3

சமீபத்திய தமிழகத் தேர்தலில் தி.மு.க. வுடன் கூட்டு சேர்ந்த பழம்பெரும் முஸ்லிம் லீக் கட்சி அதிரடி தோல்வியைச் சந்தித்தது. 
ஏற்கனவே கொரோனாவால் முடங்கிப் போன லீக் தொண்டர்கள், எதிர்பாராத தோல்வியால் நன்றாகவே முடங்கி அடங்கிப் போனார்கள். 

முதல்வராகி விட்ட கலைஞர் முத்துவேல் கருணாநிதி மகனாரோ தோல்வி கண்ட கட்சியைத் “தூரப் போய் விடுங்கள்’ என விரட்ட வில்லை. மேலும் மேலும் அன்பும் ஆதரவும் காட்டினார். 

அதற்கு முக்கிய காரணம், முஸ்லிம் லீக் பெருந்தலைவர், பேராசிரியர், பெருந்தகை காதர் முகையதீன் மீது கொண்டுள்ள மதிப்பு தந்தைக்கு ஒப்பான மரியாதையைக் காட்டி கௌரவிக்கும் பண்பு. 

அதனால் தான், தேர்தலின் இறுதிப் பொழுதுகளின் பொழுது தலைவரது திருச்சி வாசஸ்தலுக்கே போய் ஆசிகளையும் வாழ்த்துகளையும் வேண்டி நின்றார். 
பேராசிரியர் பெருந்தகையும் அளந்து ஆய்ந்து இரண்டே வார்த்தைகள் தான் உதிர்த்தார்கள். 

“கலைஞரின் மகனாரே! கலக்கமோ கவலையோ வேண்டாம்! தமிழகத்தின் தானைத் தலைவர் நீங்களே எங்களின் எதிர்கால முதல்வர்!”  

ஒரு சில மாதங்களுக்குப் பின் இதையெல்லாம் ஏன் பதிக்கிறேன் என்றால், தமிழக முதல்வர் 03, 04 நாட்களுக்கு முன் ஓர் இனிப்பான காரியத்தை ‘தோற்றுப் போன’ கட்சிக்கு செய்திருக்கிறார். 

அது, முக்கியத்துவம் மிக்க “வக்பு வாரிய” பொறுப்பான பதவிகள் இரண்டினை முஸ்லிம் லீக் பிரபலங்கள் இருவருக்கு வழங்கியிருப்பது! 

ஒருவர், முத்தான முத்துப் பேட்டை மைந்தர், மேனாள் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர், எம். அப்துல் ரஹ்மான். தற்சமயம் இவர், முஸ்லிம் லீக்கின் மாநில முதன்மைத் துணைத்தலைவர். 

மற்றவர், ஆரம்பகால முஸ்லிம் லீக் தலைவரும், ஒப்பற்ற இலக்கிய இதழ் ‘மணிவிளக்கு’ பொறுப்பாசிரியருமான சிராஜூல் மில்லத் ஆ.கா. அப்துஸ்ஸமத் மகளார் ஃபாத்திமா முஸப்பர். 

சிறப்பான முடிவெடுத்து சிறந்துவிட்ட தமிழக முதல்வரையும் எனதினிய இரு முக்கியங்களையும் பாராட்டி வாழ்த்தி இனிப்புச் சுவைக்கிறேன் நான்! 

(இங்கே படத்தில், மற்றொரு இனியவர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநிலச் செயலர் மில்லத் இஸ்மாயிலுடன் நியமனம் பெற்ற இருவரும் உங்களுக்குக் காட்சி தருகிறார்கள்). 

Comments