மனம் | தினகரன் வாரமஞ்சரி

மனம்

வீட்டில்  ஒரு தூசி கூட கண்ணில் தெரியக்கூடாது. அவள் வந்தால் திட்டித்  தீர்த்துவிடுவாள். அழகாக வைத்து அவளுடைய கட்டிமுத்தம் ஒன்று வாங்கிவிட  வேண்டும். அவளுக்கு வீடு அழகாக இல்லாவிட்டால் தாம்தோம் என்று கத்தத்  தொடங்கிவிடுவாள் என்று தனக்குள்ளாகவே பேசிக் கொண்டு வீட்டைத் துப்பரவு  செய்கின்றான் இராகுலன். அலங்கோலமான கட்டில், தொலைக்காட்சிப் பெட்டி  முன்னேயுள்ள மேசையில் சிப்ஸ், நட்ஸ் என்று நொறுக்குத் தீனிகள், பூமரங்கள்  தண்ணீரின்றி வறண்டு போய்க் கிடக்கின்றன. சமையலறைப் பாத்திரங்கள் கழுவாமல்  போட்டது போட்டபடி கிடக்கின்றது. கழுவும் மெஷினினுள் இருக்கும் பாத்திரங்களை  வெளியே எடுத்துவிட்டு மற்றைய பாத்திரங்களை உள்ளே வைப்பதற்குப்  பொறுமையின்றி பாத்திரங்கள் நிரம்பிக் கிடக்கின்றன.

சுவேதா   பிறக்கப் போகும் பிள்ளைக்காக ஒரு அறையை அழகுபடுத்தி இருந்தாள். அந்த  சொர்க்கபுரிக்குள் இராகுலனை வரவிடமாட்டாள். ஏனென்றால், பிள்ளை  பிறந்தபின்தான் அதனை அவன் பார்க்க வேண்டும் என்பது அவளுடைய அன்புக் கட்டளை.  அதனால், அந்த அறையைத் துப்பரவு செய்ய அவன் விரும்பவில்லை.  அதனை அவள்  வந்து பார்த்துக் கொள்வாள் நான் கால் வைத்தால்தானே அது அழுக்காகும். நான்  தான் அதைப் பார்த்ததே இல்லையே என்று நினைத்தான்.
பொதுவாகவே  படுத்த படுக்கையைக் கூட மடித்து வைக்க நேரம் இல்லாமல் இராகுலன் ஓடிக்  கொண்டிருப்பான். இன்று சுவேதா வரவிற்கான மகிழ்ச்சியில் வேலைக்கு விடுப்பு  எடுத்து பரபரப்பாக துப்பரவு வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தான்.
அனைத்தையும்  பார்த்துப் பார்த்து தூசி தட்டுவதும். பூ மரங்களுக்கு வேளாவேளைக்கு நீர்  ஊற்றுவதும். இராகுலனுக்கு வேளை தவறாமல் அவனுக்குப் பிடித்தவைகளையெல்லாம்  சமைத்துப் போடுவதும், பணிவிடைகள் எல்லாம் முடிப்பதும் என்று எல்லாவற்றையும்  தன் தலைமேல் போட்டுச் செய்வாள் சுவேதா. பெண்கள் தம்மில் கணவர் தங்கி  இருக்க வேண்டும் என்று நினைப்பது காலம் காலமாக நடைபெற்று வரும் ஒரு  வழக்கமாக இருக்கிறது. இது பெண்களின் ஒரு சாமர்த்தியம் என்றே சொல்லலாம்.

காதலித்துத்  தான் திருமணம் செய்து கொண்டார்கள். ஆஹன் பல்கலைக்கழகத்தில் கட்டிடப்  பொருளியலாளராக இராகுலனும் மின் பொருளியலாளராக சுவேதாவும் கற்றுக்  கொண்டிருக்கின்ற போது காதல் மலர்ந்தது. அங்கங்கள் எப்படி இருந்தால் அழகு  என்று நினைக்கின்றோமோ அப்படியே அத்தனை அழகையும் அள்ளிக் கொண்டு வலம் வந்த  சுவேதாவை இராகுலன் கண்கள் கட்டிப் போட்டன.

முதன்  முதலாக இரயிலிலேதான் அவளைச் சந்தித்தான். நேரெதிரான இருக்கைகளில்  அமர்ந்திருந்தார்கள்.  வந்த இரயிலில் அவள் தன்னுடைய மடிக்கணனியில் ஏதோ  எழுதுவதும் சிந்திப்பதுமாக இருந்தாள். இடையில் மன்ஹைம் இரயில் நிலையத்தில்  இருந்து இராகுலன் இரயிலுக்குள் ஏறினான். அவளுக்கு அவனென்று நிச்சயப்படுத்தி  இருந்ததனாலோ என்னமோ சந்தர்ப்பவசமாக அவளுக்கு எதிரான ஆசனம்   இராகுலனுக்குக் கிடைத்தது.

இவனும்  அன்றைய வகுப்புப் பாடத்தை இரைமீட்டத் தொடங்கினான். நீண்ட பயணம் இரயில்  தரிப்பிடத்தின் போது கதவு திறக்கப்பட குளிர் காற்று முட்டி மோதிக் கொண்டு  உள்ளே நுழைகின்றது.

தொங்கவிடப்பட்டிருந்த தன்னுடைய  ஜெக்கட்டை எடுக்க முயலுகின்றாள் சுவேதா. அந்த நேரத்திலே மடிக்கணனி மடியை  விட்டு நிலம் நோக்கித் தாவுகிறது. திடீரென இராகுலன் கைகள் மடிக்கணனியைத்  தாங்கி தன் ஆயுளை முடித்துக் கொள்ள இருந்த மடிக்கணனிக்கு  வாழ்வளிக்கின்றான். பூரித்துப் போனாள் சுவேதா. எத்தனை பொக்கிசங்களை  அதற்குள் போற்றிப் பாதுகாத்து வைத்திருக்கின்றாள். தன்னுடைய உயிரையே அவன்  காப்பாற்றியது போன்ற உணர்வு ஏற்பட்டது.

எப்போதும் யாருடனும் அளவுக்கு அதிகமாகப் பேசாத சுவேதா
“டங்க, டங்க சூன் (நன்றி, மிக்க நன்றி) என்றாள்”
“கைன் புரொபிலம்( பறவாயில்லை). நீங்கள் ஆஹன் யூனிவர்சிட்டியா? என்று பேச்சைத் தொடங்குகின்றான்.
“ஆமாம். எப்படி அறிந்து கொண்டீர்கள்”
“எல்லாம் ஒரு ஞானம் தான்”
“ஓஹோ. உங்களுக்கு ஞானம் இருக்கிறதா?
“நீங்களும் ஆஹன் யூனிவர்சிட்டியா?
“ஓ உங்களுக்கும் ஞானம் இருக்கிறது போல்”
“இதற்கொன்றும் ஞானம் தேவையில்லை. முகத்திலேயே எழுதி ஒட்டியிருக்கிறது” என்று புன்முறுவலுடன் கூறினாள்.

இவ்வாறு  தொடர்ந்த உரையாடல் இரயில் பயணத்தைச் சுவாரஸ்யமாக மாற்றியது. காலப்போக்கில்  பலவித தொலைபேசி தொடர்புகளிலும் சந்திப்பிலும் இருவரின் நட்பும் காதலாக  மலர்ந்தது. சுவேதாவினுடைய இரசனைகளும் இராகுலனுடைய இரசனைகளும் ஒன்றாக  இருக்கும் போது அவர்களுக்கிடையில் அறிவும் அன்பும் காதலும் பெருகிக் கொண்டே  போனது. அது திருமணத்தில் முடிந்தது. சொந்தமாக ஒரு வீடு வாங்கி அதில்  ஆடம்பரமாகவும் அன்பாகவும் வாழ்ந்தார்கள்.

வீட்டுக்கு  வந்தால் வேலை விடயங்கள் பேசக்கூடாதென்பது இருவரினதும் எழுதப்படாத சட்டம்.  சாதாரண குடும்ப நிகழ்வுகளே பரிமாறப்படும். அணைப்பும் கலகலப்பான  பேச்சுக்களும் வீட்டுச் சுவர்களிலே பட்டுத் தெறிக்கும். இரண்டு வருடத்  திருமண வாழ்க்கையில் வேலை நேரம் தவிர இருவரும் பிரிந்து வாழ்ந்ததே இல்லை.

தம்முடைய  திட்டங்களில் ஒன்றான விடுமுறைக்கு துபாய், தாய்லாந்து என்று சுற்றித்  திரிந்தார்கள். எல்லாம் முடிந்து அடுத்த திட்டமான குழந்தை பெறுவதிலும்  வெற்றி கண்டு சுவேதா 6 மாதங்களாக இராகுலனின் கருவைச் சுமக்கின்றாள். இந்த  சூழ்நிலையில் இராகுலனின் மகிழ்ச்சி விவசரிக்க இயலாததாக  இருந்தது.
அன்று ஒருநாள்

சிநேகிதனே  சிநேகிதனே. ரகசிய சிநேகிதனே சின்னச் சின்னதாய் கோரிக்கைகள் செவிகொடு  சிநேகிதனே|| இந்தப் பாடலை தனது தொலைபேசியில் ஒலிக்கவிட்டாள் பிரேமா.  தொலைக்காட்சியின் முன்தான் அமர்ந்திருந்தாள்.  பக்கத்தில் இருந்த சோபாவில் அமர்ந்திருந்து தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தான். கடைக்கண்ணால்  அவளைப் பார்த்தான். தன்னை அழைப்பதற்குத்தான் இப்படி சமிக்ஞையை சுவேதா  அனுப்புகின்றாள்  என்று உணர்ந்து மெல்லிய புன்னகையை உதிர்த்தபடி அவளுக்கு  அருகே வந்தான். அவன் தன்னருகே வந்து அமர்ந்தவுடன் தன்னுடைய போர்வையை  எடுத்து அவனையும் சேர்த்துச் சுவேதா போர்த்தினாள். இறுக்கமாக அவளை  அணைத்தான் இராகுலன்.
“ஐயோ உங்கள் மகன் என்னை இடிக்கிறான். தள்ளி இருங்கள்” என்று செல்லமாகக் கடிந்து கொண்டாள்.
“அப்ப என்னத்துக்கு இந்த அம்மா எனக்கு சமிக்ஞை கொடுத்தாவாக்கும்”
“இராகுலன்  நாளைக்கு ஹில்டாக்கு வெடிங். என்ன டரெஸ் போடுறதென்று தெரியல்ல. போய்  செலக்ட் பண்ணி வச்சிடுங்களேன். அதுக்கு பொருத்தமா உங்களுக்கும் எடுத்து  வையுங்க. பிறகு அது சரியில்ல இது சரியில்ல என்று என்னைத் தொல்லை கொடுக்க  வேண்டாம். காருக்கு ரின்னும் கட்ட வேண்டும் ” என்று சொல்லிக்  கண்ணடித்தாள்.
“பிள்ளை வயிற்றில் வந்ததும் வந்தது. என்னை நல்லா வேலை வாங்கிறா. பார்ப்பம் பார்ப்பம்” என்று சொல்லி எழுந்து சென்றான் இராகுலன்.

திருமணவீட்டுக்குப்  போகின்றவர்களின் வாகனத்திற்கு ஜெர்மனியில் ஒரு விசேடம் இருக்கிறது.  பதிவுத் திருமண அலுவலகத்தில் இருந்து அவர்களுடைய வாகனத்தின் பின்புறம்  வீதியில் இழுத்துக் கொண்டு வரும்படி ரின்கள் கட்டுவார்கள். அது பார்ட்டி  நடைபெறும் இடம் வரைத் தொடரும்.

அதேபோல்  இன்னும் ஒரு சலுகையும் இருக்கிறது. ஜெர்மனி வீதிகளில் வாகனங்களில்  தேவையில்லாது ஹோர்ன் அடிக்கக் கூடாது. முக்கியமான தேவைக்கு மட்டுமே அடிக்க  வேண்டும். இல்லாவிட்டால் உதைப்பந்தாட்டத்தில் ஐரோப்பிய ரீதியில் அல்லது உலக  உதைப்பந்தாட்டப் போட்டியில் வெற்றியீட்டினால், தொடராக வாகனத்தில் கொடியைக்  கட்டிக் கொண்டு விசிரிகள் ஹோர்ன் அடித்துக் கொண்டு வருவார்கள். அடுத்து  யாருக்காவது திருமணம் என்றால் மட்டுமே தொடர்ந்து வாகனத்தில் வரும்  விருந்தினர்கள் ஹோர்ன் அடித்துக் கொண்டு வருவார்கள். ஹோர்ன் சத்தம்  தொடராகக் கேட்கின்றது என்றால் யாருக்கோ திருமணம் என்று அறிந்து விடலாம்.

அதனாலேயே ஹில்டா கல்யாணத்திற்கு ரின்கள் எடுத்து வைக்கும் படி சுவேதா கூறினாள். 

அடுத்த  நாள் காலை கல்யாணத்திற்குப் போகும் முன் சுவேதா அழகாகத் தன்னை  அலங்கரித்தாள். “அப்பா  சுவேதா என்ன இது. பிள்ளை வயிற்றில் வளர வளர  உனக்கு இளமை அளவுக்கதிகமா கூடுது. நீயெல்லாம்  இப்பிடி மேக்கப் பண்ணாத  தாயே.

எனக்குப் பயமா இருக்கு” என்றான் இராகுலன்.
“நான் அழகாக இருந்தால் உங்களுக்குத் தானே லெவல்”
“கேட்க  நல்லாத்தான் இருக்கு உன்ர கதை. ஜெர்மனியில 2 வருஷம் குடும்பங்கள் தாக்குப்  பிடிக்கிறதே அபூர்வம். இதில நீ வேற கண்ணுக்கு குளிரா இருக்கிறா”
“சரி நான் வரல்ல. நீங்க மட்டும் போங்க”
“வேண்டாம்  வேண்டாம் ராசாத்தி. ஆர் அங்க என்னை எதிர்பார்க்கப் போறாங்க? வோ இஸ்ற்  சுவாதி? வோ இஸ்ற் சுவாதி? (எங்கே சுவாதி) என்று உன்னத்தான் தேடுவாங்க. ஒரு  பேச்சுக்கு சொன்னா அதப் பெரிசா எடுப்பியா செல்லம்” என்று அவளை அணைத்தான்  இராகுலன்.

சிரித்தபடி  இருவரும் வாகனத்தினுள் ஏறினார்கள். அப்போது ஐயய்யோ கெசெங்க்கை (அன்பளிப்பு)  மறந்து விட்டேனே. பொறுங்கள் எடுத்துக் கொண்டு வாறன்; என்று வீட்டுக்குத்  திரும்ப நினைத்தவளை இராகுலன் மறித்தான். “பொறு சுவேதா வந்தபிறகு திரும்பிப்  போக வேண்டாம் இரு நான் போய் எடுத்து வருகின்றேன் என்று இராகுலன் போய்  எடுத்து வந்தான்”

“இது என்ன சாத்திரம். நீங்களும் தானே வர்றீங்க இராகுலன்” என்றாள்.
“பறவாயில்ல.  எனக்கு என்ன நடந்தாலும் பறவாயில்ல. உனக்கு ஒன்றும் நடக்கக் கூடாது”  என்றான். பெரிதாக இந்த நம்பிக்கைகள் எல்லாம்  இராகுலன் மனதில் எடுப்பது  கிடையாது. ஆனாலும் சுவாதி விடயத்தில் எல்லாவற்றையும் கடைப்பிடிப்பான். அந்த  அளவில் அவளில் பைத்தியக் காதல் வைத்திருந்தான்.

வாகனம்  கிளம்பியது. பயணக் களைப்பை மறக்க இருவரும் சிரிப்பும் கும்மாளமுமாகப்  போய்க் கொண்டிருந்தார்கள். திடீனெ நெடுஞ்சாலை வழியிலே ஒரு டுமுறு (பாரிய  வாகனம்) ஒன்று இவர்களின் வாகனத்துடன் பெரிய சத்தத்துடன் மோதியது. இராகுலன்  இருக்கையின் முன்னிருந்த பலூன் ஸ்டியரிங்கை விட்டு வெளியே வந்தது. சுவேதா  பக்கக் கண்ணாடி, முன் கண்ணாடி எல்லாம் உடைந்து அவள் பக்கக் கதவும்  நொறுங்கிப் போனது.

இருவரும்  உணர்விழந்தனர். அந்த இடத்திற்கு யார் அழைத்து மருத்துவ அவசர ஊர்தி  அங்கு வந்ததோ தெரியாது. இருவரையும் ஏற்றிக் கொண்டு வைத்தியசாலை நோக்கிப்  பறந்தது வாகனம். சுக்குநூறாகிய வாகனத்தை நெடுஞ்சாலையிலிருந்து அகற்றும்  பணியில் பலரும் ஈடுபட்டனர்.

போகும்  போதே இருவருக்கும் சிகிச்சை அளித்தபடி மருத்துவ அவசர ஊர்தி துரித  வேகத்தில் பறந்தது. இதன் அலாரச் சத்தம் கேட்டவுடன் முன்னே செல்லும்  வாகனங்கள் எல்லாம் வழிவிட்டு ஒதுங்கின. மருத்துவமனை அடைந்தவுடன்  ஸ்ரெச்சரில் இருவரையும் ஏற்றினர். அப்போது உணர்வு திரும்பிய இராகுலன்  அடுத்த ஸ்ரெச்சரில் தூக்கிப் போகும் சுவேதாவைக் காண்கிறான். அவளுடைய கைகள்  கீழே தொங்கிக் கிடந்தன. அவனுடைய மோதிரம் இரத்தக் கறை படிந்து  சிவப்பு நிறமாக காட்சியளித்தது. அவளைக் கூப்பிட வாயைத் திறந்து கத்தினான்  வார்த்தைகள் வெளிவர முன் கண் மூடிவிட்டான்.
இப்போது  கண் விழித்துப் பார்க்கின்றான். கழுத்துப் பட்டி அணியப்பட்டிருந்தது.  அடிபட்ட வலி உடலெங்கும். அங்காங்கே கட்டுக்கள். எழும்ப  எத்தனிக்கின்றான். முடியவில்லை. அயர்ந்து மீண்டும் உறக்கம். ஆழ்ந்து பல  மாதங்கள் உறங்கிப் போனான். இவ்வாறு நடந்த விபத்திலிருந்து இராகுலன் சுகமாகி  வீடு திரும்பி வந்து விட்டான்.

இன்று  சுவேதா வருகின்றாள் என்னும் பூரிப்பில் இவ்வாறு துப்பரவு தொழிலில்  ஈடுபட்டிருக்கும் போது அழைப்புமணி அடிக்கின்றது. அவனுடைய சிநேகிதன்  ஸ்ரெபான் வந்திருந்தான். வந்திட்டியா நான் ரெடி. எல்லாம் கிளீன்  பண்ணிட்டன். ஹொஸ்பிட்டலுக்குப் போவோமா?

“ஒவ்வொரு நாளும் தானேடா போறாய். இன்டைக்கு வேணாமே.

“நைன்  (இல்லை) இண்டைக்கு எப்படியும் அவளைக் கூட்டிற்று வரவேணும். எத்தனை  நாளைக்கு ஏமாற்றுவார்கள். அந்த ஹொஸ்பிட்டலில ஏதோ பிரச்சினை இருக்குது.  போனால் என்னை ரெஸ்ட் பண்ணுறாங்கள். நீயும் வந்து பேசாமல் நிற்கிறாய்.  எப்பிடியும் இன்றைக்குக் கூட்டிவந்து அவளை வீட்டில வச்சு ரீற்மன்ட்  கொடுப்பம். இல்லாட்டி டுசில்டோப் கிரன்கன் ஹவுசுக்கு(மருத்துவமனை) கூட்டிக்  கொண்டு போவம்” என்று கூறியபடி ஜக்கட்டை அணிந்தான் இராகுலன்.

வழமைபோல்  இருவரும் வாகனத்திற்கு செல்வதற்குக் கதவைத் திறந்தபோது ஸ்ரெபானி கதவின்  முன்னே வந்து நின்றாள். எனக்கு இப்போது நேரம் இல்லை. ஸ்ரெபானி. திரும்பத்  திரும்ப என்னுடைய நேரத்தை எடுக்காதீர்கள். இன்றைக்கு சுவேதா வந்துவிடுவாள்.  பிறகு பேசுவோம். பின்னேரம் வாருங்கள் என்று சொல்லியபடி வாகனத்திற்குள்  ஏறினான் இராகுலன். ஸ்ரெபான் பின் தொடர்ந்தான். அவர்களுக்குப் பின்னே  ஸ்ரெபானி தன்னுடைய வாகனத்தை எடுத்துக் கொண்டு வருவதை இராகுலன் கண்டு  விட்டான்.

“எதுக்காக இவ பின்தொடருகிறா  ஸ்ரெபான்”

“தெரியாது இராகுலன் சிலவேளை அவளும் சுவோதவைப் பார்க்கப் போகிறாவோ? என்று ஸ்ரெபான் கூறினான்.
மருத்துவமனைக்குள்  இராகுலன் நுழைந்ததும் இவனைக் கவனித்த அலுவலர்கள் இராகுலன் என்ன பேசப்  போகின்றான் என்று தெரிந்தவர்கள் போல் விருந்தினர் அறைக்குள் இருக்கச்  சொன்னார்கள். அதற்குள் அங்கு வந்த ஸ்ரெபானி
“இராகுலன்  இன்றைக்கு எப்படியும் சுவேதாவைப் பார்க்கலாம். வாருங்கள் போவோம் என்றாள்.  ஏன் இந்த ஹொஸ்பிட்டலில் இல்லையா மாத்திப் போட்டார்களா? இதெல்லாம் எனக்கு  அறிவிப்பது இல்லையா? என்று கேட்டான் இராகுலன்”
பொதுவாகவே  ஒரு மருத்துவமனையில் சிகிச்சை அளித்துப் பலனளிக்கவில்லை என்றால், அந்த  நோய்க்கு விசேடமான மருத்துவமனைக்கு நோயாளியை மாற்றுவது வழக்கம். அதனால்  அங்கு தன்னைக் கேட்காமல் மாற்றிவிட்டார்கள் என்று ஆத்திரம் கொண்டு  மருத்துவமனை அலுவலகத்திற்குப் போவதற்கு  கோபத்துடன் எழுந்தான்

“பொறுங்கள்  இராகுலன். என்னோடு வாங்கள் போய்ப் பார்ப்போம். இப்போது கோபம் கொண்டு  ஒன்றும் ஆகப் போவது இல்லை” என்று கூறி அவனை ஸ்ரெபானி அழைத்தாள்.

“இராகுலன்  எமக்கு இன்றைக்கு எப்படியும் சுவேதாவை வீட்டுக்குக் கூட்டிப் போக வேண்டும்  இல்லையா? அதால ஸ்ரெல்லா சொல்றதுபோல கேட்போம் என்றான்.

வாகனத்தை  அங்கேயே விட்டுவிட்டு ஸ்ரெபானியின் வாகத்தில் மூவரும் பயணமானார்கள்.  வாகனம் சுடலைக்குள் நுழைகிறது. மூவரும் இறங்கினார்கள். அங்கே சுவேதாவின்  சமாதிக்கு முன் இராகுலனைக் கொண்டு நிறுத்தினார்கள்.
“பாருங்கள்  இராகுலன் இங்கேதான் சுவேதா படுத்திருக்கிறாள். சுவேதா இறந்து போனாள். இதை  நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும்” அவளுடைய பெயர் எழுதப்பட்ட சமாதியைக்  காட்டுகின்றார்கள்.

அங்கு  தோற்றம் மறைவு எழுதப்பட்ட சமாதி அவன் கண்முன்னே தெரிகிறது. விபத்து நடந்த  இடத்தில் அங்கங்கள் ஒவ்வொன்றாக தெரிவு செய்து எடுக்கப்பட்ட பெட்டியைத்தான்  நண்பர்கள் உறவினர்களால் பார்க்க முடிந்தது. குற்றுயிராய்க் கிடந்த  இராகுலனுக்கு அவள் உருவம் எல்லாம் பிரமையே. மருத்துவசாலையில் எழுந்தமை  எல்லாம் பிரமையே. அவன் மூளை தானாகத் தயார் பண்ணிய பிரமையே அவளைக் கண்டமை.  அவள் இருக்கின்றாள் என்று மருத்துவமனையில் வாதிடுவது போன்ற சகல  நிகழ்வுகளும் பிரமை பிரமை. இதனை மருத்துவர்கள் நிறுவி நாளாகி விட்டது.
ஆனால், அவனுடைய மனம்!!!!!!!!!!!!!!

“மைன்கொட்  (என்ர கடவுளே) எத்தனை தடவைதான் எனக்கு இதை நிறுவப் பார்ப்பீர்கள். நீங்கள்  எத்தனை தடவை சொன்னாலும் நான் இதை நம்பப் போவதில்லை. அந்த ஹொஸ்பிட்டலில்  அவளை வைத்து என்ன செய்கின்றார்களோ தெரியாது. எல்லாரும் சேர்ந்து நாடகம்  ஆடுறீங்களா? இப்ப ரெண்டில் ஒன்று பார்க்க வேணும். இன்றைக்கு சுவேதாவைத் தர  வேண்டும்.

இல்லையென்றால் இந்த மருத்துவமனைக்கு வழக்குப் போடுவேன்” என்று  கூறியபடி வாகனத்துக்குள் போய் ஏறி இருந்து விட்டான்.

ஸ்ரெபான்  கண்களில் இருந்து கண்ணீர் அவனை அறியாமலேயே ஆறாகப் பெருக்கெடுத்தது.  தன்னுடைய நண்பனை எப்படியும் சுவேதா நினைவுகளில் இருந்து மீட்டுவிட வேண்டும்  என்று ஸ்ரெபான் துடியாய்த் துடித்தான். 
எத்தனையோ  முனைப்புக்களில் ஈடுபட்ட போதும் மனநில வைத்தியர் ஸ்ரெபானியினால்  இராகுலனுடைய மூளைக்குச் சுவேதா இறந்த செய்தியைப் பதிய வைக்க முடியவில்லை.  ஹோமா நிலையில் இருந்து எழுந்த இராகுலன் இன்னும் சுவேதா மருத்துவமனையிலேயே  இருக்கின்றாள். அவர்கள் அவளை வைத்து ஏதோ செய்கின்றார்கள் என்று தான்  நினைக்கின்றான்.

கௌஸி
ஜேர்மனி

Comments