சந்தா நிறுத்தியதால் விழி பிதுங்கிய சங்கங்கள் அல்லாடும் நிலையில் சங்க ஊழியர்கள்! | தினகரன் வாரமஞ்சரி

சந்தா நிறுத்தியதால் விழி பிதுங்கிய சங்கங்கள் அல்லாடும் நிலையில் சங்க ஊழியர்கள்!

ஆயிரம்  ரூபா சம்பள அதிகரிப்பின் சாதகத் தன்மையை தொழிலாளர்கள் முழுமையாக  அனுபவிப்பதற்கு பல்வேறு முட்டுக்கட்டைகளைப் போட்டுவரும் கம்பனி தரப்பு  செக்ரோல் மூலம் சந்தா அறவிடுவதை கைவிட்டுள்ளது. இதன்மூலம் தொழிற்சங்கத்  தரப்பை பலவீனப்படுத்துவதே அதன் நோக்கம்

செந்தில் தொண்டமான் இ.தொ.காவிற்கு கிடைக்கும் சந்தாப் பணத்துக்குக் கணக்கு  காட்டப்பட வேண்டும் என்று அதிரடியாக போட்ட குண்டு அது. அத்துடன் இனி  சந்தாப்பணம் அறவிடப்படக்கூடாது என்றும் அவர்  தெரிவித்தார். இது சலசலப்பை  ஏற்படுத்தியது. சுதாகரித்துக்கொண்ட ஜீவன் தொண்டமானும் எதிர்காலத்தில்  இ.தொ.கா        சந்தாப்பணத்தை அறவிடாது என்று கூறிவைத்தார்

மலையகத்தில் தொழிற்சங்க கட்டமைப்பு பலம் பெற்றிருந்த ஒரு காலம் இருக்கவே செய்தது. அன்றைய தலைமைத்துவங்களின் வழி நடத்தலும் போராட்ட உணர்வுகளும் வர்க்கரீதியிலான சிந்தனைகளும் உத்வேகத்தினை ஏற்படுத்தின. முதலாளித்துவ சக்திகளை தட்டுத்தடுமாற வைத்தன. சர்வதேச ரீதியிலான தொழிலாளர் போராட்ட வரலாறுகள் தொழிலாளர்களுக்கு முறுக்கேற்றமாக அமைந்தன. ஆனால் அந்த நிலை இன்று இல்லை. முதலாளிமார்  தலைமை தாங்கும் தொழிற்சங்க கட்டமைப்பு பெருந்தோட்டப் பிரதேசங்களைப் பொறுத்தவரை இன்று சிதைவடைந்து  கொண்டிருக்கிறது. இன்னும் சொல்லப் போனால் சந்தாப் பணத்துக்காகவே தொழிற்சங்கங்கள் என்னும் நிலைமை காணப்படுகின்றது.  
எனினும் அதற்கும் சாவுமணி அடிக்கும் கைங்கரியத்தை பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம் இன்று முடுக்கி விட்டுள்ளது. தோட்ட நிர்வாகங்கள் மூலம் சந்தா அறவிட்டு அதனை தொழிற்சங்கங்களுக்கு அனுப்பி வைக்கும் முறைமையைக் கைவிட்டதன் மூலம் தொழிற்சங்கங்களுக்கு சங்கடத்தை எற்படுத்தியுள்ளது. கடந்த நான்கு மாதங்களாக தொழிலாளர்களிடம் இருந்து சந்தா சேகரிப்பதை தோட்ட நிர்வாகங்கள் நிறுத்தியுள்ளன. கூட்டு ஒப்பந்தம் இன்று நடைமுறையில் இல்லை. எனவே தொழிற்சங்களால் எதனையும் செய்ய முடியாது!    ச்சீச்சீ.. இந்தப் பழம் புளிக்கும் என்னும் போக்கில் அவை திக்குமுக்காடவே செய்கின்றன. 
தொழிற்சங்கங்கள் அன்றைய ஆங்கிலேய ஆட்சியால் சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டு சிலகாலம் கழித்தே சந்தா சேகரிக்கும் பழக்கம் நடைமுறைக்கு வந்தது. தொழிலாளி ஒருவர் மாதாந்தம் 25 சதத்தை சந்தாவாக செலுத்தினரர். இதை தொழிற்சங்க உத்தியோகத்தர்கள் நேரடியாகவே சென்று தொழிலாளர்களிடம் இருந்து அறவிட்டு வந்தனர். இதன் பின்னர் தோட்ட நிர்வாகங்களுக்கும் தொழிற்சங்கங்களுக்கும் இடையிலான புரிந்துணர்வின் அடிப்டையில் செக்றோல் (பதிவேடு) மூலம் சந்தா அறவிடும் முறை பயன்பாட்டுக்கு வந்தது. எத்தனை முரண்பாடுகள் வந்தாலும் சந்தா அறவிட்டு அனுப்பவதை தோட்ட நிர்வாகங்கள் செவ்வனே செய்துவந்தன. இதற்கு கூட்டு ஒப்பந்த ஷரத்துக்களும் உறுதுணை செய்தன. 

அந்தக் கூட்டு ஒப்பந்தத்தை இரு தரப்பும் கேள்விக்குறியாக்கி விட்டுள்ளன. எல்லாம் 1000 ரூபா நாட்சம்பள விவகாரத்தால் வந்த வினை. கூட்டு ஒப்பந்தப் பேச்சுவார்த்தை மூலம் இதனைச் சாதிக்கமுடியாமல் போனது. இதனால் அரசு தலையீட்டின் மூலம் சம்பள நிர்ணய சபை பிரச்சினையைக் கையேற்றது. கம்பனி தரப்பு 900 ரூபாவும் அரசு தரப்பு 100 ரூபாவும் மொத்தம் 1000 ரூபா வழங்க வேண்டும் என்று அதிரடியாக உத்தரவிட்டது சம்பள நிர்ணய சபை. இதுதான் கம்பனி தரப்பின் காட்டத்துக்கு காரணம். நீதிமன்றம் போனது கம்பனி தரப்பு. இன்னும் தீர்ப்பு வரவில்லை. ஆனால் கூட்டு ஒப்பந்தத்தில் இருந்து தாம் வெளியேறுவதாக முறைப்படி அறிவிப்புச் செய்தது அது. இதுவரை கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் அந்தஸ்து கொண்ட தொழிற்சங்கங்கள் இதுபற்றி அறிவிப்பு ஏதும் விடவில்லை. சட்டென ஒரு தீர்மானத்துக்கு வரமுடியாமல் இந்தத் தொழிற்சங்கங்கள் மதில்மேல் பூனைகளாக இருப்பதாகவே தெரிகின்றது.  

எனினும் 1000 ரூபா சம்பள அதிகரிப்பின் சாதகத் தன்மையை தொழிலாளர்கள் முழுமையாக அனுபவிப்பதற்கு பல்வேறு முட்டுக்கட்டைகளைப் போட்டுவரும் கம்பனி தரப்பு செக்ரோல் மூலம் சந்தா அறவிடுவதை கைவிட்டுள்ளது. இதன்மூலம் தொழிற்சங்கத் தரப்பை பலவீனப்படுத்துவதே அதன் நோக்கம்.  

இ.தொ.கா, இ.தே.தோ.தொ. சங்கம், தொழிலாளர் தேசிய சங்கம், மலையக மக்கள் முன்னணி, பெருந்தோட்டத் தொழிற்சங்க கூட்டமைப்பு, இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணி, அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம், (ஜே.வி.பி) விவசாய தோட்டத் தொழிலாளர் காங்கிரஸ், ஐக்கிய தோட்டத் தொழிலாளர் சங்கம், செங்கொடிச் சங்கம், புதிய செங்கொடிச் சங்கம், மக்கள் தொழிலாளர் காங்கிரஸ் என்பவை பெயர் குறிப்பிடத்தக்கவை. இவற்றைத் தவிர வாசுதேவ நாணயக்கார, டிலான் பெரேரா, கே.கே. பியதாசா, சி.பி. ரத்நாயக்க, மஹிந்தானந்த அளுத்கமகே போன்றோரும் மலையக மக்களின் பெயரால் தொழிற்சங்கங்களை வைத்திருக்கின்றார்கள். மொத்தமாக 75 இற்கு மேற்பட்ட தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களைக் கூறுபோட்டு வைத்திருக்கின்றன. 

பொதுவாக இவற்றுள் அநேகமானவை சந்தாப்பணத்தை இலக்காகக் கொண்டவை. இதற்கும் தற்போது வைக்கப்பட்டுள்ளது ஆப்பு. மாதாந்த சந்தா மூலம் கோடிக்கணக்கான பணம் புரட்டப்படும் நிலையில் அது செலவழிக்கப்படும் விபரம் ஏதும் தொழிலாளர்களுக்குத் தெரிவிக்கப்படுவது இல்லை. கணக்கு வழக்கு எல்லாமே வெறும் கண் துடைப்புச் சமாச்சாரம். தொழிலாளரின் சந்தாப்பணத்தில் தொழிற்சங்கத் தலைமைகள் சொகுசு வாழ்க்கை வாழ்வதாகவே தகவல்கள் இருக்கின்றன. தொழிலாளர்களின் சந்தாப்பணத்தை வாங்கிக் கொண்டு அவர்களின் சம்பள விடயம், தன்னெழுச்சிப் போராட்டங்களின்போது இத்தொழிற்சங்கங்கள் நடந்து கொண்ட முறைமைப் பற்றி விமர்சனங்கள் இருக்கவே செய்கின்றன. இத்தொழில் சங்கங்களில் பத்து வரையிலானவை அரசியல் கட்சிகளாகவும் இயங்குகின்றன. 

இந்த இலட்சணத்தில் இத்தொழிற்சங்கங்களுக்கு சந்தாப்பணம் அவசியம் தானா என்ற கேள்வி எழாமல் இல்லை. அமரர் ஆறுமுகன் தொண்டமான் மறைவுக்குபின் இடம்பெற்ற இ.தொ.கா.வின் நிர்வாகிகள் கூட்டத்தில் அதன் உபதலைவர் ஒரு குண்டை  தூக்கிப் போட்டிருந்தார். செந்தில் தொண்டமான் இ.தொ.காவிற்கு கிடைக்கும் சந்தாப்பணத்துக்குக் கணக்கு காட்டப்பட வேண்டும் என்று அதிரடியாக போட்ட குண்டு அது. அத்துடன் இனி சந்தாப்பணம் அறவிடப்படக்கூடாது என்றும் அவர்  தெரிவித்தார். இது சலசலப்பை ஏற்படுத்தியது. சுதாகரித்துக்கொண்ட ஜீவன் தொண்டமானும் எதிர்காலத்தில் இ.தொ.கா சந்தாப்பணத்தை அறவிடாது என்று கூறிவைத்தார்.  

இவ்வாறான பின்புலத்திலேயே கம்பனி தரப்பு சந்தாப் பணம் அறவிடுவதைத் தவிர்த்துக் கொண்டுள்ளது. எனவே இ.தொ.கா சந்தாப்பணம் அறவிடப்படாமை குறித்து இனி அலட்டிக் கொள்ளாது என்று எதிர்பார்க்கலாமா? 

சந்தாப்பணத்தை விட தொழிலாளர்களின் நலனே முக்கியம். தோட்டத் தொழிலாளர்களின் சந்தாப்பணத்தை நிறுத்துவதன் ஊடாக தொழிற்சங்கங்ளையோ, தொழிலாளர்களையோ அச்சுறுத்த முடியாது. சந்தாப்பணம் கிடைக்காவிட்டாலும் எமது தொழிற்சங்கப் பணிகள் என்றும்போல் தொடரும் என்று தொழிலாளர் தேசிய சங்கம் சார்பில் பாராளுமன்ற உறுப்பினர் எம். உதயகுமார் கருத்துக் தெரிவித்திருந்தார். இவ்விரு அமைப்புகளுமே பலமான அரசியல் பின்புலம் கொண்டவை. எனவே இதன் தீர்மானங்கள் அரசியலில் முக்கியமானவை.  

ஆக,  மலையக தொழிற்சங்கங்கள் எல்லாமே சந்தாப் பணத்தை ஒரு பொருட்டாகக் கருதவில்லை என்று யாரும் அவசரப்பட்டு ஒரு முடிவிற்கு வந்துவிடக்கூடாது. தமது சங்கட நிலையை மறைத்து வெளியில் வீராப்பாக பேசினாலும் உள்ளுக்குள் புலம்பல் இல்லாமல் இல்லை. தொழிலாளியிடமிருந்து வேறு எதாவது ஒரு வழியில் சந்தாப்பணத்தை அறவிட ஆராய்ந்து வருவதாக தகவல்.  

உண்மையில் சந்தா அறவிடல் தடை காரணமாக உண்மையாகவே பாதிக்கப்பட்டு பரிதவிப்போர் ஒரு 5000 பேர் வரை இருக்கவே செய்கின்றார்கள். இவர்கள் தான் தொழிற்சங்க பணிமனைகளில் பணிபுரியும் தொழிற்சங்க உத்தியேகத்தர்கள். இவர்களுக்கு  வழமையாக கிடைத்து வந்த நல கொடுப்பனவுகள் நிறுத்தப்பட்டுள்ளனவாம். சம்பளத்தை மட்டும் நம்பி சம்சாரியாகிவிட்ட இந்த தொழிற்சங்க உத்தியோகத்தர்களின் விடாமுயற்சியின் அறுவடையாக அதிகரிப்பதே சந்தாப்பணம். இவர்களின் வியர்வை வேக்காட்டின் அர்ப்பணிப்புகளிலேயே தொழிற்சங்கங்களின் வளர்ச்சியும் அரசியல் கட்சிகளின் எழுச்சியும் அமைந்திருக்கின்றன. 

ஆயினும் இவர்களுக்குக் கிடைப்பதோ சொற்ப சம்பளம். இதனால் பற்றாக்குறை வாழ்க்கை. பரிதாபகரமான குடும்ப நிலைமை. சந்தாவை சேகரித்து தந்தால் மட்டும் உங்களுக்குக் சம்பளம் என்று சொல்லாமல் செல்லப்பட்டுள்ளதாக செய்திகள் வந்துள்ளன. இதனால் பழைய குருடி கதவைத்திறவடி கதைக்குப் போக தயாராகும்படி கட்டளைப் போடப்பட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன. 

இது என்ன பழைய குருடி கதை அதுதான் முன்னைய காலத்தைப் போல தோட்டங்களுக்குச் சென்று நேரடியாகவே தொழிலாளர்களிடம் இருந்து சந்தாவை அறவிடும் முறைமை. அதுவும் நான்கு மாத சந்தாவை ஒரே தடைவையில் சேகரித்து வர உத்தரவாம். உருப்படியாக 1000 ரூபா கைக்கு வராத நிலையில் தொழிலாளர்களிடம் போய் மாத சந்தாவைத் தாருங்கள் என்று எந்த முகத்தை வைத்துக்கொண்டு கேட்பது என்று புரியவில்லை என்கிறார்கள் இந்த அப்பாவி தொழிற்சங்க உத்தியோத்தர்கள். தொழிலை விட்டுவிடவும் வழியில்லை. உடனடியாக வேறு தொழிலைத் தேடிக்கொள்வது லேசுப் பட்டக் காரியமல்லவே. கைவசம் பிறதொழில் பயிற்சியும் இல்லை. ஆக,  சந்தாப்பணப் பிடித்தம் நிறுத்தப்பட்ட நிலையில் தங்கள் வயிற்றில் தான் அடி விழுந்திருக்கின்றது என்று ஆதங்கப்படுகிறார்கள். 

இவர்களது நிலைமையை மாற்றுவதற்கு இந்தத் தொழிற்சங்கங்கள் வேறு ஏற்பாடு ஏதாவது செய்தால் நல்லது. இவர்களைக் கைவிடுவதோ கட்டளைகளைப் போட்டு கலங்க வைப்பதோ சரியல்ல. இதேநேரம் அவசரப்பட்டு கருத்துக்ளை சொல்லிவிட்டுக் கடைசியில் கையை பிசைந்து கொண்டிருக்கும் போக்கை தொழிற்சங்கங்கள் திருத்திக் கொள்வதே கெளரவம் காக்கும் வழி.   

பன். பாலா

Comments