பாவச் செயலுக்கு பலியாகி போன சிறுமி ஹிஷாலினி! | தினகரன் வாரமஞ்சரி

பாவச் செயலுக்கு பலியாகி போன சிறுமி ஹிஷாலினி!

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணியாற்றிய மலையகத்தின் டயகம பகுதியைச் சேர்ந்த 16 வயதுடைய  ஹிஷாலினி என்ற சிறுமி தீக்காயங்களுக்கு உள்ளாகி உயிரிழந்தமை பல்வேறு விதமான சந்தேகங்களை ஏற்படுத்தியிருப்பதுடன், இது குறித்து பல கோணங்களில் விசாரணைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

சிறுமி  ஹிஷாலினியின் பரிதாப மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், நீதியான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி நாடு முழுவதிலும் ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சட்டத்தை நிலைநாட்டும் பொருட்டு பொலிசார் இவ்விடயத்தில் அதிக அக்கறை எடுத்து விசாரணைகளை நடத்தி வருவதாகத் தெரிகிறது. விசாரணைகள் தொடர்பான ஆலோசனைகளை வழங்குவதற்கு சட்ட மாஅதிபர் விசேட குழுவொன்றையும் நியமித்துள்ளார்.

குடும்பத்தில் காணப்பட்ட வறுமை காரணமாக கடந்த வருடம் முதல் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் வீட்டில் பணிப்பெண்ணாக வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளார் சிறுமி ஹிஷாலினி. கடந்த சில நாட்களுக்கு முன்னர் இச்சிறுமி பலத்த எரிகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்திருந்தார்.

இச்சம்பவமானது ஆரம்பத்தில் தீவிபத்து எனச் சந்தேகிக்கப்பட்டாலும் பின்னர் அம்மரணத்தில் சந்தேகம் ஏற்படத் தொடங்கியது. முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணி புரிந்த இளைஞர் ஒருவர் தனது மகளைத் தாக்கியுள்ளதாக ஹிஷாலியினின் தாய், தந்தையர் ஊடகங்களுக்குக் கூறிய கருத்துக்களே சர்ச்சையைக் கிளப்பியிருந்தன.
சிறுமி தங்கியிருந்த அறையில் 5 ஆயிரம் ரூபா பணம் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் வாக்குவாதம் ஏற்பட்ட பின்னரே, சிறுமி மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இது தொடர்பில் ஹிஷாலினி தனது தாய்க்கு முறையிட்டிருப்பதுடன், தாய் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் மனைவியுடன் தொலைபேசியில் கதைத்திருப்பதாகவும் ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறித்த சிறுமி தற்கொலை செய்வதற்காக தனக்குத் தானே தீவைத்துக் கொண்டதாக கருதியே ஆரம்ப கட்டத்தில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பூச்சிகளுக்கு விசுறுவதற்காக ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் கொண்டு வரப்பட்ட மண்ணெண்ணெய் போத்தலைக் கொண்டே அச்சிறுமி தனக்குத் தானே தீவைத்துக் கொண்டிருப்பதாக முன்னர் நடைபெற்ற விசாரணைகளில் கூறப்பட்டது.

'சிறிய தீயைக் கண்டால் கூட அச்சப்படும் என்னுடைய மகள் தானாகவே தனக்கு தீமூட்டிக் கொள்ளுமளவிற்கு தைரியமானவள் அல்ல. எனவே அவருக்கு யாரேனும் தீவைத்திருப்பார்கள் என்று நூறு வீதம் சந்தேகிக்கின்றோம்' என ஹிஷாலினியின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

“கொவிட் நெருக்கடி நிலைமையால் நான் பெரும் கடன் சுமைகளுக்கு உள்ளானேன். என்னுடைய கணவர் மற்றும் மகன் ஆகிய இருவருமே தொழில் இன்றியே காணப்பட்டனர். இதன் காரணமாக கடன் சுமைக்கு உள்ளானோம். மகளை அனுப்பி வைப்பதற்காக தங்க நகையை அடகு வைத்து 30,000 பணம் வைத்திருந்தேன். நீங்கள் பணிக்குச் சென்றால் பிள்ளைகளை பராமரிப்பதில்  சிக்கல் ஏற்படும் என்பதால் மகளை பணிக்கு அனுப்பி வைக்குமாறு, அவரை அழைத்துச் சென்ற நபர் கூறினார். நான் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்தா விட்டால் கடன் வழங்கியவர்கள் வீட்டு முற்றத்தில் வந்து கூச்சலிடுவார்கள். எனவே தான் தொழிலுக்குச் சென்று கடனை மீளச் செலுத்த உதவுவதாகவும், சகோதரனால் மாத்திரம் இதனைச் செய்ய முடியாது என்று கூறியே என்னுடைய மகள் தொழிலுக்குச் சென்றாள்” என ஹிஷாலினியின் தாய் ஆர்.ரஞ்சனி கூறியுள்ளார்.

பெருந்தோட்டப் பகுதியில் வாழும் மக்களில் வறிய நிலையில் உள்ளவர்களின் வறுமையை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வதில் பலரும் அக்களை காட்டுகின்றனர். மலையகச் சிறார்களை வேலைக்கு அமர்த்துவதன் மூலம் பணம் சம்பாதிப்பதில் பலரும் குறியாக உள்ளனர். ஹிஷாலினிக்கு ஏற்பட்ட சம்பவத்தின் மூலம் இந்த உண்மை மீண்டும் ஒரு தடவை உறுதியாகியுள்ளது.

கொழும்பிலும் நாட்டின் ஏனைய நகரங்களிலும் உள்ள தனவந்தர்களின் வீடுகளிலும், முக்கிய பிரமுகர்களின் வீடுகளிலும் வீட்டு வேலைகளுக்கு ஆட்கள் தேவைப்பட்டால் உடனே ஆட்களைத் தேடுவது மலையக தோட்டப் பகுதியில் உள்ள சிறார்களையே ஆகும். இது காலம் காலமாகத் தொடர்ந்து வரும் ஒரு அவல நிலையாகும். அங்குள்ள மக்களின் வறுமை இதற்கு துரும்பாகப் பயன்படுத்தப்படுகிறது. ஹிஷாலினி போன்று மேலும் பல அப்பாவி சிறுமியர்களும், சிறுவர்களும் குழந்தைத் தொழிலாளர்களாக்கப்படுகின்றனர். இதில் இடைத்தரகர்களாக இருப்பவர்கள் பலர் இலாபம் சம்பாதித்துக் கொள்கின்றனர்.

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் இடம்பெற்ற சம்பவமும் அவ்வாறானதொரு விடயமாகவே காணப்படுகிறது. முகவர் ஒருவர் ஹிஷாலினியை இவ்வீட்டு வேலைக்காக அழைத்து வந்து விட்டுள்ளார். இந்த நிலையில் உயிரிழப்பைத் தொடர்ந்து முகவர் உள்ளிட்ட பல தரப்பினரிடமும் விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளன. விசாரணைகளின் பின்னர் கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் மனைவி, மனைவியின் தந்தை மற்றும் ஹிஷாலினியை தொழிலுக்கு அழைத்து வந்த முகவர் ஆகியோர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். விசாரணைகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பான விசாரணைகள் ஒருபுறம் இடம்பெற்று வரும் நிலையில், இந்த உயிரிழப்புக்கு நீதி வேண்டியும், விசாரணைகள் நேர்மையாக நடத்தப்பட வேண்டுமெனவும் வலியுறுத்தி நாடு முழுவதிலும் பலர் குரல் கொடுக்கத் தொடங்கியுள்ளனர்.
குறிப்பாக மலையக மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் தலைவர்கள் பலரும் இதில் முனைப்புக் காட்டி வருகின்றனர். ஹிஸாலினியின் மரணத்துக்கு நீதி கிடைக்க வேண்டும், இதற்குக் காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்துக் கிடையாது. உண்மையில் சம்பந்தப்பட்டவர்கள் நீதியின் முன் நிறுத்தப்பட்டு உரிய தண்டனை பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும். எனினும், இது போன்ற ஏராளமான சம்பவங்கள் வெளிச்சத்துக்கு வராமல் காணப்படுகின்றன என்பதையும் இங்கு சுட்டிக் காட்ட வேண்டியுள்ளது.

வெளிச்சத்துக்கு வராமல் இடம்பெறுகின்ற ஏராளமான சம்பவங்களுக்கும் நீதி பெற்றுக் கொடுக்கப்பட வேண்டியது கட்டாயமாகும்.

இதில் உள்ள முக்கிய கேள்வி என்னவெனில், மலையக சிறுவர் சிறுமியர் குழந்தைத் தொழிலாளர்களாக வர்த்தகர்களின் வீடுகளிலும், முக்கிய பிரமுகர்களின் வீடுகளிலும் வேலைக்கு அமர்த்தப்படும் விடயம் இதுவரை இந்த மலையக மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல்வாதிகளுக்குத் தெரியாமலா உள்ளது? ஏதாவது ஒரு சம்பவம் இடம்பெற்றால் மாத்திரம் அதனை முன்னிலைப்படுத்தியபடி அவர்கள் குரல் கொடுக்கின்றனர், போராடுகின்றனர். அசம்பாவிதங்கள் இடம்பெற முன்னர் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கையான போராட்டங்களை ஏன் அவர்களால் முன்னெடுக்க முடியாதுள்ளது?

மறுபக்கத்தில், முன்னாள் அமைச்சராக இருந்த ஒருவர் நாட்டின் அடிப்படைச் சட்டம் பற்றி சிந்திக்காமலா சிறுமி ஒருவரை தனது வீட்டில் பணிக்கு அமர்த்தியுள்ளார் என்ற கேள்வியும் இங்கு காணப்படுகிறது. பொதுமக்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டியவர்கள் இவ்வாறான சட்டத்தை மீறும் பாரதூரமான தவறுகளுக்கு இடமளிக்கும் வகையில் நடந்து கொள்வது எந்தளவுக்கு நியாயமானது?

அதேநேரம், தற்பொழுது குரல் கொடுக்கும் சிவில் சமூக அமைப்புக்களும், சமூக ஆர்வலர்களும் இது போன்று மற்றுமொரு துன்பியல் சம்பவம் இடம்பெறும் வரை காத்துக் கொண்டிருக்காமல் சிறுவர்களை வேலைக்கு அமர்த்துவதற்கு எதிராக பாடுபட வேண்டும். குறிப்பாக மலையகப் பகுதியிலிருந்து அழைத்து வரப்படும் சிறுவர் சிறுமியரை பணிக்கு வைத்திருப்பவர்களுக்கு எதிராகவும் குரல் கொடுக்க முன்வர வேண்டும்.

அது மாத்திரமன்றி, மலையக மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல்வாதிகள் அங்குள்ள மக்களின் பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்கு குறிப்பாக இளைஞர், யுவதிகள் தமது வாழ்வாதாரத்தை அதிகரிப்பதற்கான திட்டங்களை அறிமுகப்படுத்த வேண்டிய கட்டாயமும் காணப்படுகின்றது. தாம் வசதிக்கும் பகுதியில் உரிய கல்வி வசதிகள் மற்றும் தொழில்வாய்ப்புக்கள் காணப்பட்டால் பணிப்பெண்களாகவும், கூலித் தொழிலாளர்களாகவும் மலையக இளைஞர், யுவதிகள் மற்றும் சிறுவர்கள் ஏனைய இடங்களுக்கு வர வேண்டிய தேவை இருக்காது.

எதிர்காலத்தில் இந்த நிலையை மாற்றுவது குறித்து சிந்திக்கும் அதேநேரம், உயிரிழந்த ஹிஷாலினிக்கு நீதியைப் பெற்றுக் கொடுப்பது அனைவரினதும் பொறுப்பாகும். மலையகத்தைப் பொறுத்த வரையில் பெற்றோரும் பெரும் தவறு இழைக்கின்றனர். வறுமை என்றாலும் கூட தமது பிள்ளைகளை வீட்டில் வைத்து பராமரிப்பதே முறையாகும். அதனை விடுத்து தமது பிள்ளைகளை அடுத்தவர் வீடுகளில் வேலைக்கு அனுப்புவது பாவச் செயல் என்பதை அவர்கள் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

Comments