ஹிஷாலினி மரணம் கற்றுத் தரும் பாடங்கள் | தினகரன் வாரமஞ்சரி

ஹிஷாலினி மரணம் கற்றுத் தரும் பாடங்கள்

முன்னாள் அமைச்சரும் மக்கள் காங்கிரசின் தலைவருமான ரிஷாட் பதியுதீன் கொழும்பு இல்லத்தில் வீட்டுப் பணியாளராக வேலை செய்துவந்த ஜூட் ஹிஷாலினி என்ற சிறுமி உடலில் தீப்பற்றிக் கொண்டதால் கடும் காயங்களுக்கு உள்ளாகி மரணமடைந்த சம்பவம் கடந்த வாரம் முழுவதும் பரபரப்பு செய்தியாக ஊடகங்களில் பேசப்பட்டது. எனினும் வீட்டுப்பணியாளர்கள் துன்புறுத்தப்படுவதும், முறையாக சம்பளம் வழங்கப்படாமையும், துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாகி மர்மமான முறையில் மரணிக்கும் சம்பவங்களும் இந் நாட்டுக்கு ஒன்றும் புதிதல்ல. சில வருடங்களுக்கு முன்னரும் வீட்டுப் பணிப்பெண்கள் மர்மமான முறையில் மரணமடைந்த சம்பவங்கள் இடம்பெற்றிருந்தபோதும் பொலிஸ் விசாரணைகள் முடுக்கிவிடப்படவில்லை. இம்மரணங்களுக்கு நியாயமும் நீதி விசாரணையும் கோரி மலையகத்தில் சில அமைப்புகள் ஆர்ப்பாட்டங்களை நடத்தியபோதும் அவை சம்பந்தப்பட்டோரினால் கவனத்தில் கொள்ளப்படவுமில்லை. மரணமடைந்த அப்பாவிப் பெண்களின் பெற்றோர் விசாரணைக்கு ஒத்துழைப்பு தரவும் இல்லை என்று இப்போராட்டங்களை ஏற்பாடு செய்தவர்கள் ஏமாற்றத்துடன் கூறியிருக்கிறார்கள். இப் பெண்கள் பணியாற்றிய வீடுகளைச் சேர்ந்தோர் பெற்றோரிடம் தொடர்புகொண்டு இழப்பீடாக ஒரு தொகைப் பணத்தைக் கொடுத்து அவர்களின் வாய்களை அடைத்துவிடுவதால் பெற்றோர் எம்முடன் ஒத்துழைப்பதில்லை என்பது இவர்கள் தரும் விளக்கம்.

இலங்கை, இந்தியா, பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் ஆகிய நாடுகளில்தான் வறிய குடும்பங்களைச் சேர்ந்த வயதானவர்களையும் சிறுவர் சிறுமியரையும் அந்நாடுகளில் செல்வந்த மற்றும் உயர் நடுத்தர குடும்பங்களால் வீட்டு வேலைகளைச் செய்வதற்காக அமர்த்தப்படுகிறார்கள். இத் தொழிலாளர்கள் இவ்வீடுகளில் அடிமைகள் போல நடத்தப்படுவதுடன் பல்வகையான துஷ்பிரயோகங்களுக்கும் பாலியல் ரீதியான துன்புறுத்தல்களுக்கும் ஆளாகின்றனர். மேற்கத்திய நாடுகளிலும், ஜப்பான் போன்ற கீழைத்தேய நாடுகளிலும் வீட்டு வேலைக்காரர் என்ற பேச்சுக்கே இடம்கிடையாது. சிறுவர் சிறுமியரை வீடுகளில் பணிக்கு அமர்த்துவது முற்றிலுமாக அந்நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளது. பெரும் பணக்காரர்கள் மட்டுமே அதற்கான சம்பளம் கொடுத்து தகுதியானவர்களை வீட்டு வேலைகளுக்கு பணிக்கமர்த்த முடியும். ஏனையோர் தமது பணிகளை – துவைத்தல், சுத்தம் செய்தல், செல்லப்பிராணிகள் வளர்த்தல் – தாமேதான் நேரம் ஒதுக்கி செய்து முடிக்க வேண்டும். வீட்டில் அல்லது வர்த்தக நிலையங்களில் பணிபுரிவோர் தொடர்பில் இந்நாடுகளில் கடுமையான சட்டங்கள் உள்ளன.

இலங்கையில், யாழ்ப்பாணத்துத் தமிழர் மத்தியிலும் இஸ்லாமிய சமூகத்தவர் மத்தியிலும் ஏழ்மை காரணமாக வீடுகளுக்கு சிறுவர் சிறுமியரை அனுப்பி வைக்கும் வழக்கம் அரிது. வறிய கிராமப்புற சிங்கள குடும்பங்கள் மத்தியில் இவ் வழக்கம் இருப்பினும் கூட நகர்ப்புற செல்வந்த குடும்பங்கள் பெரிதும் விரும்புவது மலையகத் தமிழ் சிறுவர் சிறுமியரையே. ஏனெனில் அவர்களின் அப்பாவித்தனத்தையும் ஏழ்மையையும் பயன்படுத்தி குறைந்த சம்பளம் வழங்கலாம் என்பது முதல் துஷ்பிரயோகங்களை அவர்கள் பெரும்பாலும் பொருட்படுத்துவதில்லை என்பதுவரை இவ்விருப்பத்தில் அடக்கம்.
ஹிஷாலினி விவகாரத்தில் பல கேள்விகள் எழுகின்றன. எல்லா வீட்டுப் பணியாளர் விவகாரங்களிலும் எழக் கூடிய அதே சந்தேகங்களும் வினாக்களும் தாம் இவை. முன்னர் இக் கேள்விகளுக்கு விடை கண்டுபிடிக்கப்படாமலேயே விசாரணைகள் மூடி வைக்கப்பட்டதைப் போலில்லாமல் இம்முறை விசாரணைகள் தன் போக்கில் நடைபெறுவதற்கு அரசு வழி விட்டிருப்பதால் வீட்டுப் பணியாளர்கள் தொடர்பான பல உண்மைகள் வெளியே தெரியவரும் என நம்பலாம். ஹிஷாலினி மரணத்தை சூழ்ந்துள்ள மர்மங்கள் துலங்கும் போது வீட்டுப் பணியாளர் தொடர்பான சட்டங்கள், அவர்கள் தெரிவு செய்யப்படும் விதம், தரகர்களின் தில்லுமுல்லு என்பனவும் விவாதத்துக்கும் விமர்சனங்களுக்கும் உள்ளாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்விவகாரத்தில் சட்டம் தன் கடமையைச் செய்ய வேண்டும். அரசியல், செல்வாக்கு, பணபலம் என்பனவற்றுக்கு ஏற்ப சட்டத்தை வளைப்பது இந்நாட்டில் சாத்தியமான ஒன்று. அவ்வாறில்லாமல், எந்தத் தராதரமும் பார்க்கப்படாமல் சட்டம் தன்கடமையைச் செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உதவ வேண்டும். இதே சமயம் இது போன்ற சம்பவங்கள் இனிமேலும் நடைபெறாவண்ணம் சட்டங்கள் வலுப்படுத்தப்பட வேண்டும். அவசியமானால் புது சட்டங்களையும் நடைமுறைக்குக் கொண்டு வரலாம்.

பெருந்தோட்டங்களில் ‘ஆள்’ பிடிக்கும் தரகர்களில் கணிசமானோர் தொழிற்சங்கங்களுடன் தொடர்புடையவர்களாக உள்ளனர் என்பது கவலைக்குரியது. பணத்துக்கு இல்லை என்றாலும் நட்பு, பயபக்தி அடிப்படையிலும் இதை இவர்கள் செய்து கொடுக்கிறார்கள். இவ்விடயத்தில் பெருந்தோட்ட தொழிற்சங்கள் இதுவரை ஆக்கபூர்வமான எந்த நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை. பெருந்தோட்டங்களிலும் அறுபது எழுபதுகளில் நிலவிய வறுமையும் பஞ்சமும் இப்போது இல்லை. நிலைமைகளில் பெரிய முன்னேற்றம் தென்படுகிறது. கேள்வி என்னவென்றால், பாடசாலை செல்ல வேண்டிய சிறுவர் சிறுமியரை ஏன் அற்ப சொற்ப வருமானத்துக்காக முன்பின் அறியாத செல்வந்த குடும்பங்களிடம் ஒப்படைக்கிறார்கள் என்பதாகும். மேலும் இந்த ஹிஷாலினி விவகாரம் சுடச்சுட பேசப்படும் விஷயமாகவும், சிலருக்கு வருமானத்தையும், ஊடக வெளிச்சத்தையும் தரும் மற்றும் சமூக ஊடகங்களில் பரபரப்பை கிளப்பி விடவும் பயன்படுவதாக மட்டும் முடிந்துவிடக்கூடாது. எல்லா பரபரப்புகளும் முடிந்து விட்ட பின்னரும், மலையகத்தில் இருந்து சிறுவர் சிறுமியரை வீட்டுப் பணியாளராக அனுப்பவும் மாட்டோம் அனுப்ப விடவும் மாட்டோம் என்ற குரல் உரத்தும், நீடித்தும் ஒலிக்க வேண்டும். அதற்கு அங்குள்ள படித்த சமூகம் உறுதுணையாக இருக்க வேண்டும் என்பதே எமது கோரிக்கை. இது மற்றொரு சம்பவமாக மட்டும் இருந்துவிடக் கூடாது.

Comments