ரஷ்யாவின் சிர்கோன் ஹைபசொனிக் பரிசோதனை; மேற்கின் இராணுவ மூலோபாயத்தை முடிவுக்கு கொண்டுவருமா? | தினகரன் வாரமஞ்சரி

ரஷ்யாவின் சிர்கோன் ஹைபசொனிக் பரிசோதனை; மேற்கின் இராணுவ மூலோபாயத்தை முடிவுக்கு கொண்டுவருமா?

உலக அரசியலில் போரற்ற பொருளாதார வடிவம் எழுச்சியடைந்துவருகிற சூழலில் ரஷ்யா தொடர்ச்சியாக ஆயுத தளபாடங்களை பரிசோதித்து வருகிறது. மேற்கு நாடுகளுக்கு எதிராக ரஷ்யாவின்  பாரிய இராணுவ ஆயுத தளபாட வளர்ச்சி உலகளாவிய நெருக்கடியை ஏற்படுத்துமா என்ற சந்தேகத்தை உருவாக்கி வருகிறது. ஆனால் உலகம் அமைதியான பொருளாதார நலன்களை அடைவதற்கான முகாந்திரங்களை வகுத்துவருகிறது என்பது தெளிவாக தெரிகிறது. ஆயுத தளபாடங்களும் ஆயுதப் போட்டிகளும் என அச்சுறுத்தலை மட்டுமே இலக்காக கொண்டு நாடுகள் செயல்படுவது போல் தெரிகிறது. அந்த வகையில் ரஷ்யா அண்மையில் பரிசோதித்த ஹைப்பசொனிக்  ஆயுதம் ஏற்படுத்தக் கூடிய தாக்கங்களை தேடுவதாக இக்கட்டுரை அமையவுள்ளது.

21.07.2021 அன்று கருங்கடலில் ரஷ்யா மேற்கொண்ட பரிசோதனை வெற்றிகரமாக நிறைவடைந்தது என ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. ஒலியைவிட ஏழு மடங்கு அதிவேகமான  சிர்கோன் ஹைப்பசோனிக் (Zircon Hypersonic) துல்லியமாக இலக்கை தாக்கும் திறன் கொண்டது எனவும் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. குறிப்பாக கருங்கடலில் நிறுத்தப்பட்டிருந்த அட்மிரல் கோர்ஸ்கோவ் கப்பலிலிருந்து ஏவப்பட்ட ஏவுகணை 350 கீ.மீ. தூரம் சென்று இலக்கை தாக்கி அழித்துள்ளதாக ரஷ்யப் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. 3எம்22 என அழைக்கப்படும் சிர்கோன் ஏவுகணை கப்பல் எதிர்ப்பு ஏவுகணை எனவும் அழைக்கப்படுகிறது.

இதன் தாக்குதல் வேகம் மணித்தியாலத்திற்கு 98000 முதல் 11025 கி.மீ. இதன்  தாக்குதலுக்கான தளம் நீர்மூழ்கி போர்க்கப்பல்கள் மற்றும் தரைப்பகுதி என கடலிலும் தரையிலும் வைத்து தாக்கக் கூடிய திறன் கொண்ட ஏவுகணையாகும். இதன் தாக்குதல் தூரம் 1000-2000 கி.மீ. ஆகவுள்ளதுடன் 70 பாகை முதல் 90 பாகை கோணத்தில் செல்லும் ஆற்றலைக் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இவ் ஏவுகணை அணுவாயுதத்தை தாங்கிச் செல்லும் திறனைக் கொண்டதாகவும் தெரியவருகிறது.

இது பற்றிய தகவல்கள் வெளியாகிய பின்பு மேற்கு நாடுகளின் இராணுவ வல்லுனர்கள் கருத்து தெரிவிக்கும் போது நேட்டோவின் தாக்குதல் விமானங்களை எதிர் கொள்வதற்கான ரஷ்யாவின் நடவடிக்கை எனக் குறிப்பிட்டுள்ளன. ஆனால் அதன் தாக்குதல் தூரமும் வேகமும் உலக நாடுகள் மத்தியில் அதிக சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு ரஷ்யாவின் தயாரிப்பான சிர்கோன் ஹைபசொனிக் ஏவுகணை இராணுவ ரீதியில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் அதேநேரம் அரசியல் ரீதியிலும் பாரிய ஆபத்தினை தரக்கூடியதாக அமைய வாய்ப்புள்ளது. அதனை விரிவாக நோக்குவது அவசியமானது.
முதலாவது அமெரிக்க காங்கிரஸ்சும் பென்டகனும் ரஷ்ய தயாரிப்பான ஹைப்பசொனிக் ஏவுகணைகள் அமெரிக்காவின் பாதுகாப்புக்கு நெருக்கடியை ஏற்படுத்துவதாக மாறிவருவதாக தெரிவித்துள்ளன. குறிப்பாக அமெரிக்காவின் முன்னாள் ஜெனரல் ஜோன் ஹய்டன் இத்தகைய ஹைப்பசொனிக் ஆயுதங்கள் அமெரிக்காவின் பாதுகாப்புக்கு ஆபத்தினை ஏற்படுத்துவதுடன் நீண்டதூர இலக்குகளை அடையும் திறன் கொண்டதாகவும் அணுவாயுதங்களை காவிச் செல்லும் வலுவுடையதாகவும் அமையுமாயின் அதீத திறனுடையதாக எதிர்காலத்தில் மாறக் கூடியது. அதனால் அமெரிக்க பாதுகாப்பு அச்சுறுத்தலுக்குள்ளாகும் எனத் தெரிவித்துள்ளார். எனவே ரஷ்சயாவுக்கும் அமெரிக்காவுக்குமான நெருக்கடியை ரஷ்யா எதிர்கொள்ளும் விதத்தில் ஆயுத தளபாடங்களை உருவாக்கி வருகிறது. அண்மைய ஜெனீவா சந்திப்பும் இரு நாட்டுக்குமான ஆயுத பேரம் தொடர்பில் உரையாடப்பட்ட போதும் எத்தகைய முடிபும் எட்டப்படாது முடிந்தது. அதன் பின்' பான அமெரிக்காவின் ரஷ்யா மீதான இராணுவ மற்றும் பொருளாதார நகர்வுகளுக்கு பதிலளிக்கும் விதத்தில் ரஷ்யாவின் நடவடிக்கைகள் அமைந்துள்ளன.

இரண்டாவது, உக்ரையினை மையப்படுத்தி ரஷ்யாவை நெருக்கடிக்குள் தள்ளும் உபாயத்துடன் நேட்டோவின் நகர்வுகள் காணப்படுகின்றன. குறிப்பாக ஆளில்லாத விமானங்களையும் போர் விமானங்களையும் உக்ரையின் -ரஷ்ய எல்லைப்பகுதியில் நேட்டோ நகர்த்தி அச்சுறுத்தலை ஏற்படுத்த முனைகிறது. அதனை எதிர்கொள்வதற்கான நகர்ச்சியாகவே ஹைப்பசொனிக் பரிசோதனையை ரஷ்யா தீவிரப்படுத்தி வருகிறது. இத்தகைய ஆயுதம் நேட்டோவின் நகர்வுகளுக்கும் உக்ரையின் எல்லைகளில் நடவடிக்கைகளுக்கும் பெரும் ஆபத்தை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவின் புவிசார் பிரதேசத்தை பாதுகாக்கும் தளத்தில் இயங்கும் ரஷ்ய இராணுவத்திற்கு ஹைப்பசொனிக் ஆயுதம் அவசியமான புத்துணர்ச்சியை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. அதனால் உக்ரையின் மட்டுமல்ல இப்பிராந்தியமே ரஷ்யா தொடர்பான கொள்கைகளை சரியாக வகுக்க வேண்டிய நிர்ப்பந்த்திற்குள் தள்ளப்பட்டுள்ளன. நேட்டோ இலகுவான போர் ஒன்றுக்குள் ரஷ்யாவை தள்ளிவிடத் திட்டமிட்ட போதும் ரஷ்யா தனது இராணுவ உத்திகளால் அதனை இலகுவாகவே முறியடித்துவிட்டது.

மூன்று, அமெரிக்க காங்கிரஸ் மற்றும் பென்டகனது அறிக்கையின் பிரகாரம் சீனா மற்றும் ரஷ்யாவுக்கு நிகரானதாக அமெரிக்க ஹைப்பசொனிக் ஆயுத தொழில்நுட்பம் இல்லாதுள்ளது எனவும் அதனால் அந்நாடுகளுடன் போட்டிபோட முடியாத நிலைக்குள் அமெரிக்காவின் பாதுகாப்பு தள்ளப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது. இதன் மூலம் ரஷ்யாவினதும் சீனாவினதும் இராணுவ வலு ஓங்கியுள்ளது என்பதைக் காட்டுகிறது. இதுவே ரஷ்யாவின் பிரதான இலக்காகும். அதாவது ரஷசியாவின் ஆயுத பலம் மேலோங்குமாக இருக்குமாயின் அமெரிக்காவின் உலகளாவிய பலத்'தை மட்டுப்படுத்தி விட முடியும் என ஜனாதிபதி விளாடிமிர் புடின் கருதுகிறார். அதுமடட்டுமன்றி அண்மையில் சீனாவுடன் ரஷ்யா மேற்கொண்ட இருபது வருட உடன்பாட்டை நீடித்துள்ளமை இரு நாடுகளும் கூட்டாக அமெரிக்காவையும் மேற்கையும் எதிர்கொள்வதற்கான உபாயமாகவே தெரிகிறது. அதனால் இரு நாடுகளது ஆயுததளபாடத்தின் தொழிநுட்பத் திறன் அமெரிக்காவை விஞ்சுமளவுக்கு எழுச்சியடைந்து வருகிறது. அண்மையில் கடலில் ஆயுதம் ஒன்றினை ரஷ்யா பரிசோதித்து உலக நாடுகளை அச்சுறுத்தியது. அவ்வாறே ஒலியின் வேகத்தை விட ஏழுமடங்கு அதிகமான வேகத்தில் தாக்கும் திறனுடைய ஆயுதத்தை தற்போது தயாரித்துள்ளது.

நான்கு, ஹைப்பசொனிக் ஏவுகணையின் தாக்குதல் வலு ஏனைய ஏவுகணைகளிலிருந்து வேறானதும் தனித்துவம் மிக்கதுமாகவுள்ளது. குறிப்பாக தாக்குதல் இலக்கினை இயல்பான ஏவுகணைகளை விட துல்லியமாக நகர்த்துவதுடன் தடுப்பு அரண்களை இலகுவில் தாண்டிச் செல்லும் பாகை அமைப்பினைக் கொண்டுள்ளது. அதாவது தற்போது ரஷ்யா தயாரித்துள்ள ஹைப்பசொனிக் எழுபது பாகையிலும் தொண்ணூறு பாகையிலும் தாக்கும் திறன் கொண்டது. இதனை தனது தாக்குதல் இலக்கினை நோக்கி மாற்றிக் கொள்ளும் திறன் கொண்டது என இராணுவ வல்லுனர்கள் குறிப்பிடுகின்றனர். அதற்கு இன்னோர் வலுவான காரணம் ஏவுகணையின் வேகமானது கட்டமைக்கப்பட்டுள்ளது. அதனாலேயே இத்தகைய ஏவுகணைகளால் அமெரிக்காவின் இலக்குகளை இலகுவில் குறிவைக்க முடியும் என்ற செய்தியை ரஷ்யா வெளியிட்டுள்ளது. அதாவது இத்தகைய ஆயுதம் தாட் ஏவுகணையின் தொழில் நுட்பத்தினையும் தகர்த்து தாக்குல் இலக்கினை அடையும் எனக் குறிப்பிடப்படுகிறது.

ஐந்து அமெரிக்காவையும் நேட்டோவையும் மட்டுமல்ல ரஷ்யாவின்  பிற கண்டங்களை நோக்கிய நகர்வுக்கும் வழிவகுக்கும் உபாயத்தினை ஹைப்பசொனிக் கொண்டுள்ளது. தற்போது அந்தாட்டிக்கா நோக்கிய போட்டியில் ரஷ்யா சீனா முன்னணியிலுள்ளமையும் அமெரிக்கா மற்றும் நேட்டோ அணிகள் நெருக்கடியை அடைந்திருப்பதும் இத்தகைய ஆயுதங்களது பரிசோதனையை அடுத்து மேலும் அச்சுறுத்தலாக மாற்ற வாய்ப்புள்ளது. அதுமட்டுமன்றி ஆசியாவிலும் ஆபிரிக்காவிலும் அமெரிக்கா குவித்துள்ள இராணுவத்தின் தளங்களையும் இராணுவத்தினையும் பாதுகாக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் அமெரிக்காவுக்கு புவிசார் ரீதியான நெருக்கடியாகவே அமைந்திருந்தது. ஆனால் ஹைப்பசொனிக் வருகை அதனையும் கடந்த தொழில் நுட்ப போராக அமையவுள்ளது. இதனை ரஷ்யா பிரயோகிப்பது என்பதை விட அதனை வைத்துக் கொள்வதே ஆபத்தான செய்தியாக அமைய வாய்ப்புள்ளது.

எனவே ரஷ்யாவில் அடுத்தடுத்து மேற்கொள்ளும் ஆயுத தளபாட பரிசோதனைகள் அமெரிக்காவுக்கும் நேட்டோவுக்கும் மட்டுமல்ல உலக நாடுகளுக்கே ஆபத்தான விளைவுகளைத் தரக்கூடியதாகும்.

இதனை எதிர்கொள்ள அமெரிக்கா அத்தகைய தொழில் நுட்ப திறனை வளர்க்க திட்டமிட்டுள்ளதுடன் அதற்கான நகர்வுகளை ஆரம்பித்துள்ளது. இத்தகைய ரஷ்யாவின் நடவக்கைக்கு நிகரான தொழில் நுட்ப ரீதியான உருவாக்கம் ஒன்றினை நோக்கி அமெரிக்கா செயல்பட ஆரம்பித்துள்ளது. மறுபக்கத்தில் சீனா அமைதியாகவும் ரஷ்யாவை முன்னிறுத்திக் கொண்டும் நகர்கிறது. ரஷ்ய- − சீனக் கூட்டு திறன் என்பது மேற்கு நாடுகளுக்கு சவாலாக மாறிவிட்டது என்பதை காட்டுவதாக அமைந்துள்ளது.

பேராசிரியர்
கே.ரீ.கணேசலிங்கம்
யாழ். பல்கலைக்கழகம்

Comments