நேயர் உள்ளங்களில் 23 ஆண்டுகளாய் முதல்வன் சூரியன் | தினகரன் வாரமஞ்சரி

நேயர் உள்ளங்களில் 23 ஆண்டுகளாய் முதல்வன் சூரியன்

இலங்கை  வானொலி வரலாற்றில், புதுமை புகுத்தி காலத்தின் தேவையறிந்து  காத்திரமான  படைப்புக்களைத் தந்து, குறுகிய காலத்திலேயே மக்கள் மனதில் நீங்கா  இடம்பிடித்து சாதனை நிகழ்த்திய பெருமை, முதல்வன் சூரியனுக்கே சொந்தமெனலாம்.  இலங்கையின் முதலாவது 24 மணி நேரத் தமிழ் தனியார் வானொலியாக உதித்த சூரியன்  தனித்துவமும், தளராத நேயர் படையும் கொண்டு கொண்டாடும் 23வது அகவை இது.

தற்காலத்திற்கு மக்கள் மத்தியில் பேசப்படுகின்ற சமூக ஊடகங்களிலும் சென்று  அங்கேயும் தனியிடம் பிடித்து, எங்கும், எதிலும் முதற்தரம் என்ற சொல்லை  மீண்டும் மீண்டும் நிரூபித்துக்கொண்டிருக்கும் வானொலி  முதல்வன் சூரியன்  தன்னுடைய 22வது வெற்றி ஆண்டை கொண்டாடுகின்றான்.

1998 ஜுலையின் 25ம்  நாளில் வானொலி நேயர்களை முழுமையாக மகிழ்ச்சிப்படுத்த,நேயர்களை தன் உயிர்  உறவுகளாக அரவணைத்திட, புதுமையையும் விரைவையும் விரும்புவோர்க்கு விருந்தாக  பண்பலை ஆளும் வானொலியாக உதயமாகியது சூரியன். சந்தைப்படுத்தல்,  முகாமைத்துவம், படைப்பாற்றலில் தனித்துவ சிறப்பு ஆளுமை கொண்ட  நிறுவனத்தலைவர் ரேய்னோ சில்வாவின் எண்ணக்கருவில் சூரியன் முதல்  நாள் முதல் நாளுக்கு நாள் கூடிச் செல்லும் ரசிகர்கள் பட்டாளத்தின்  பலத்துடன் ஒவ்வொரு நிமிடமும் நேயர்களுக்கு தேவையானவற்றை அந்த நேர  ரசனையறிந்து தேடித் தருகிறான்.
வந்த வேகத்தில், காணாமல் போகும்  ஊடகப்பரப்பில், ஆழ வேரூன்றி, அகலக் கிளை பரப்பி பயனுள்ள அம்சங்களை  தன்னகத்தில் உருவாக்கி, சமூகத்தின் குரலாய்  சளைக்காமல் காலத்தை அறிந்து  தனது  சேவையை வழங்குவதில் சூரியனுக்கு நிகர் சூரியனே.

வெறும்  வர்த்தக வானொலியாய்  ஒரு வட்டத்தில் நின்றுவிடாமல், மக்களின் தேவைகளை  அறிந்து அவர்களின் பேசும் ஊடகமாகவும், சூரியன் தனித்து நிற்கிறான். இதுவே  சூரியனின் இத்தனை ஆண்டுகால நீட்சியின் நிலையான மகுடம்.
வானொலி  நிகழ்ச்சிகளை கடந்து இலத்திரனியல் உலகில் இன்றைய இளைய தலைமுறையின் தேடுதல்  மிகுந்த சமூக வலைத்தளங்களான Facebook,YouTube, instagram, Tik Tok, Twitter   வழியேயும் இலங்கை வானொலியொன்று முதற்தடவையாக பல சாதனைகளை படைத்து  வருகின்றது என்றால் அது சூரியன் மட்டுமே என்று சொன்னால் மிகையாகாது.
சூரியன்  எப்.எம் நிறுவனத் தலைவர் ரெய்னோ  சில்வாவின் வழிகாட்டலில்,   நிகழ்ச்சிப் பணிப்பாளர் ஏ.ஆர்.விலோஷன் தலைமையில் கலக்கும்  சூரியப்படையில், விதவிதமான நிகழ்ச்சிகளும், ஆளுமையான படைப்புகளும்   நாளாந்தம் அரங்கேறுகின்றன.

வார நாட்களில், அருணோதயத்தோடு ஆரம்பிக்கும்  அதிகாலை  நிகழ்ச்சியை  மயூரன் தொகுத்தளிக்க, விறுவிறுப்பான உலகத்தின்  அத்தனை உடன் நிகழ்வுகளையும் மாற்றங்களையும் அங்குலமங்குலமாக  அலசும்  சூரிய  ராகங்களை, சூரிய பணிப்பாளர் ஏ.ஆர்.வி லோஷனும் சிரேஷ்ட அறிவிப்பாளர்  மனோஜும்  வழங்குகின்றனர். தொடர்ந்து வரும் நேரத்தில், கலகல என்று மூன்று  மணி நேரத்தை  இசையோடு நிரப்பும் இசைச்சமர், இளமைத்துடிப்புடன் ரிம்சான்,  தயானி ஆகியோரால் தொகுத்து வழங்கப்படுகிறது.

பசி கொண்ட மதியத்தை ருசியோடு  கொண்டாட இருமணி நேரம் ஜொலிக்கும்  மத்திய நேர இசை விருந்து நிகழ்ச்சி,  இரசிகர்களின் விருப்புக்கு பாத்திரமானது. உதவி நிகழ்ச்சி முகாமையாளர்  நிசாந்தன் மற்றும் பானுஷாவோடு இரு மணி நேரம்..

சுவையான தகவல்களைத்  தந்து உலக நடப்புக்களை பேசும் கும்மாளம், சசி & மதன் ஆகியோரது  இணைப்பில் களைகட்டுகிறது. தொடர்ந்து, மாலை நேரத்தின் மன மகிழ்ச்சிக்கு  நிகழ்ச்சி முகாமையாளர் எஸ்.என்.டிலான் & சிரேஷ்ட அறிவிப்பாளர்   கோபிகாவின்  கலகல பேச்சில் ஓய்வுக்கு வருகின்ற உள்ளங்களை உற்சாகத்தின்  உச்சிக்கு அழைத்துச் செல்லும் என்றென்றும் புன்னகை மக்களுக்குப்  பேரானந்தம். பின், அமைதியான இரவில் இதயங்களை ஆற்றுப்படுத்தும்  இதயத்தோடு  இதயம் உதவி முகாமையாளர் பிருந்தகனுடன் இனிய இசை ஆற்றுப்படுத்தலாக அமைகிறது.
நாளெல்லாம்  இசைத்து இணைத்து இரசித்த இதயங்கள் நள்ளிரவில்  கொண்டாட விடிய விடிய இரவுச்  சூரியன் & ரீங்காரம் என்பன  நேயர்களின்  இசைவிருந்து. ஷாஜஹானின்  தொகுப்பில் ரசனையுடன்.

வார நாட்களில் நாளெல்லாம் இனிக்கும்  நிகழ்ச்சிகளோடு, வார இறுதி நாட்களில் அதே சுவாரஸ்யம் குறையாமல்,  மக்களுக்கும், மாணவர்களுக்கும், இன்னும் பல தரப்பினருக்கும் பயன்படும்  நிகழ்ச்சிகளை சூரியன் தன்னகத்தே வரித்திருக்கிறான்.

சனிக்கிழமைகளில்,  அரசியல் பிரமுகர்களை சூரியன் செய்தி முகாமையாளர் விக்கி வினாக்களால்  துளைத்தெடுக்கும் விழுதுகள், சினி சில்லாக்ஸ், புத்தம் புதிய பாடல்கள்  போட்டியிடும் தங்கத் தேன் மழை, கலக்கலா சலசலா, கூத்துப் பட்டறை,  விளையாட்டுப் பிரியர்களின் விருப்பமான நிகழ்ச்சி அட்டகாசம், காலத்தால்  வென்ற கானங்களை  கொடுக்கும் காவிய அலைகள், அதன் பின்னர் வரும் விசை இசை  இரவு போன்ற கலக்கல் நிகழ்வுகளும், ஞாயிற்றுக்கிழமையில் குடும்ப உறவுகளோடு ரசித்து மகிழ,  காலைப்பொழுதில் அருணோதயம், அதன் பின்னர் நேயர்கள் ஆரவாரமாய்  போட்டியிடும்  சண்டே உதய ராகங்கள், இனிய ராகங்கள் அணிவகுக்கும் இஷ்டப்படி இசை, அதன்   பின்னர் வரும் காதலின் கானத் தொகுப்பாய்  பெட்டிக்கடை, வெற்றிப்படங்களின்  வெற்றிப்பாடல்கள் அணி வகுக்கும் ஞாயிறு வெற்றித் திரை, காதலும் கவிதையும்  சேரும் மாலைக்கு பொன்மாலைப் பொழுது, அது  கடந்து - மாலையின் உற்சாகத்துக்கு  போலாம் ரைட், காதலர்கள் பேசிக்கொள்ளும் இரவின் அசைவில் சந்திப்போமா என்று  இனிதே நாள் முழுதும் இசை நிரப்பி சூரியனோடு முடியும்.

வார இறுதி  நிகழ்ச்சிகளுக்கு என்று ராகவன், பிரசாந்த், மனோப்ரியா, வினுஜா ஆகிய  சூரியனின் செய்தி வாசிப்பாளர்களும் நிதா, புவனேஸ்வரி, அசாருதீன் ஆகிய  இளையவர்களும் சேர்ந்துகொள்கின்றனர்.

திசையெங்கும் நடக்கும் உடன்  செய்திகளை இடைவிடாமல் தரும் சூரியன் செய்திப்பிரிவும் 24  மணி நேரமும்  முந்திக்கொண்டு செய்தி வழங்குவதில் முழு மூச்சாக இயங்குகிறது. செய்திப்  பிரிவில் செய்தி முகாமையாளர் பரமேஸ்வரன் விக்னேஷ்வரன் தலைமையில் சிரேஷ்ட  செய்தி ஆசிரியர்களான மூத்த ஊடகவியலாளர் சிகாமணி, சதீப்குமார் ஆகியோருடன்  ஜெகதீஷ்வரன், கிஷோக், கிருபராஜா ஆகியோரும் செய்தியாசிரியர்களாக  கடமைபுரிகிறார்கள்.
இணைய செய்திப்பிரிவில் கிருஷ்ணகாந்த், பிரசாத், லக்ஷ் மீரா, நிவேதா ஆகியோர் பணியாற்றுகின்றனர்.
சூரியன்  பல சாதனைகளைத் தொட, சூரியனின் பல வெளிக்கள நிகழ்ச்சிகளை அறிமுகப்படுத்தி  அவை அனைத்திலும் சாதனை படைக்க முக்கிய காரணமாக இரவு - பகல் பாராது  உழைத்துக்கொண்டு, சூரியனின் உச்சத்திற்கு  தூண்டு கோலாக இருப்பவர்கள்  சூரியனின் திட்டமிடல் விரிவாக்கல் பிரிவினர்.

கள்ளமனத்தின்  கோடியில் என்ற நிகழ்ச்சியினூடாக பல தென்னிந்திய நட்சத்திரங்களை சந்திக்க  சூரியனின் பிரம்மாண்டமான Mega Blast இசை நிகழ்ச்சிகளுக்கும்  பெரும் பங்கு  வகிக்கும் அஷ்ரப், சூரியனின் திட்டமிடல் விரிவாக்கல் பிரிவின் பொது   முகாமையாளராக பணியாற்றுகிறார். உதவி முகாமையாளராக  அஜித்குமார் மற்றும்   கார்த்திக்,  சுரேன் ஆகியோரும்  சூரியன் வானொலியின்  விண்ணைத் தொட்ட  சாதனைப் பயணத்தில் கரம் கோர்க்கிறார்கள்.
வரைகலைஞராகவும் டிக் டொக்  காணொளிகளிலும் கலக்கும் ரஜீவனும் இசைக்களஞ்சியப் பொறுப்பாளராக  பார்த்தீபனும் கூட சூரியக் குடும்பத்தின் ஏனைய அங்கத்தவர்கள்.

இரசனையான  அம்சங்கள், தற்கால நடப்புக்கள், பல துறைகள் பற்றிய பகிர்வுகள், காலை,  கலாசாரம் எம் பண்பாட்டின் பறைசாற்றல்கள் என்று அனைத்தையும் அலசி,  விலாவாரியாக நேயர்களுக்கும் - இணைய பிரியர்களுக்கும் கொடுப்பதில்,  முதல்தரமே. சரியான தகவல்களும், இரசனை பிசகாத தொகுப்புக்களுமென்று சூரியனின்  youtube  தளம் வெள்ளிப் பட்டயம் வென்ற சாதனையோடு பயணிக்கிறது.

இயற்கை  அனர்த்தங்களின் போது சமூக நலன் சார்ந்த விடயங்களையும் முன்னெடுத்து  நாட்டின் பல பகுதிகளிலும் பாரபட்சமில்லாத சேவை புரிந்து, வானொலி ஒன்று  மக்களோடு மக்களாக களத்தில் நின்ற பெருமையும் சூரியனுக்கே. சூரியன் கேட்கும்  நேயர்களுக்கு கை நிறைந்த பரிசுகளை வழங்கி, சூரியன் கேட்கும் இடமெல்லாம்  காசையும் அள்ளி வழங்கும் திட்டமான சூரியன்னா காசுதான்,  உங்களூரில் சூரியச் சுற்றுலா, நகருக்குள் நகரும் இசைவாகன இசை நிகழ்ச்சி  மற்றும் இலங்கையின் மிகப் பிரம்மாண்டமான  மெகா பிளாஸ்ட் போன்ற தனித்துவமான  சிறப்பு நிகழ்ச்சிகள் அனைத்துமே சூரியனின்  எண்ணவொலிகளே !!

இப்போது  மணித்தியாலம் தோறும் பத்தாயிரம் ரூபாய் மழை, சூரியனின் 23வது  பிறந்தநாளுக்காக ஒவ்வொரு மணித்தியாலமும் 23,000 ரூபாய் என்று அன்பு  நேயர்களை மகிழ்விப்பதிலும் சூரியன் முதல்வனே.

இந்த சூரிய  வளர்ச்சியில், சூரிய நிகழ்ச்சிப் பிரிவு, சூரியனின் செய்திப்பிரிவு, இணையத்  தள பிரிவு, திட்டமிடல் விரிவாக்கம் பிரிவு, சந்தைப்படுத்தல் பிரிவு  ஆகியவற்றின் பங்களிப்போடு, சூரியனின் மகத்தான வெற்றிகளுக்கெல்லாம்  மிகப்பெரிய பக்கபலமாக விளங்கும் நேய சொந்தங்களின் ஆதரவும், அன்பும்  முக்கியமானது.

ஒவ்வொரு ஆண்டும் கடக்கையில், சூரியனோடு  இன்னுமின்னும் நேயர்களின் பெரும்படை ஒட்டிக்கொள்கிறது. அந்த பெரும்படையின்  தனித்துவமான ஆதரவில் சூரியனின் மவுசும், மகிமையும் இன்னுமின்னும் ஏற்றம்  கொள்கிறது. அதற்கு இந்தப் பாசப் பெரும்படையின் அசாத்திய அன்பும் முக்கிய  காரணம் என்பது சிறப்பு.   பாமர  மக்கள் முதல் படித்தவர்கள் வரைக்கும் விரும்பி கேட்கும் படைப்புக்களைத்  இன்று வரைக்கும் தெவிட்டாத வானொலியாய் புதுமையும் இனிமையும் சேர்த்து எம்  மக்கள் அதிகம் விரும்பி கேட்கும் முதற்தரம் இது மட்டுமே. வானொலி  நிகழ்ச்சிகள் கேட்க ஆரம்பித்தால் எங்குமே செல்ல விடாது சூரியன், நேயர்களை  கட்டியணைத்துக்கொள்கிறது.

22  வருடங்களின் அனுபவப்பலத்துடன் புது அகவையில் புதுமைகள் படைத்து,  தனித்துவமாய் இன்னுமின்னும் மக்களுக்குப் பிடித்த வானொலியாய் சூரியன்  பண்பலை ஜொலிக்க, நேயர்கள், இரசிகர்கள், ஆர்வலர்கள் சார்பாக இனிய  வாழ்த்துக்கள்.

Comments