ஸ்திரமான நிலையில் அரசாங்கம் | தினகரன் வாரமஞ்சரி

ஸ்திரமான நிலையில் அரசாங்கம்

எரிபொருள் விலை அதிகரிப்பைக் காரணம் காட்டி வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக எதிர்க் கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியால் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையானது, 91 மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டது. இந்தப் பிரேரணைக்கு ஆதரவாக 61 வாக்குகளும், எதிராக 152 வாக்குகளும் அளிக்கப்பட்டன. பிரேரணை தோற்கடிக்கப்பட்டதன் மூலம் அரசாங்கம் ஸ்திரமுள்ளதாக விளங்குகின்றதென்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

கடந்த திங்கள் மற்றும் செவ்வாய் ஆகிய இரு தினங்கள் முழுவதும் பாராளுமன்றத்தில் இப்பிரேரணை விவாதிக்கப்பட்டு செவ்வாய் மாலை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இப்பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்திருந்தன.

மறுபக்கத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளும், ரிஷாட் பதியுதீனின் கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களான இஷாக் ரஹ்மான், முஷாரப், அலி சப்ரி ரஹீம் ஆகியோருடன் வணக்கத்துக்குரிய அத்துரலிய ரத்ன தேரர் ஆகியோர் அமைச்சர் கம்மன்பிலவுக்கு ஆதரவாக வாக்களித்திருந்தனர்.

எரிபொருள் விலை அதிகரிப்பு உள்ளிட்ட 10 குற்றச்சாட்டுக்களை முன்வைத்தே இந்தப் பிரேரணை கொண்டு வரப்பட்டது. இந்தப் பிரேரணை மீதான விவாதத்தை ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் ஆரம்பித்து வைத்தார். பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் வழிமொழிந்து உரையாற்றினார்.

விவாதம் ஆரம்பிக்கும் போது ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இப்பிரேணைக்கான திருத்தமொன்றை முன்வைத்தார். அமைச்சர் உதய கம்மன்பில என்ற பெயருக்குப் பதிலாக ஒட்டுமொத்த அமைச்சர்களும் உள்ளடக்கப்பட வேண்டும் என்பது அவர் முன்வைத்த திருத்தமாக இருந்தது.

எனினும், இந்தத் திருத்தத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என சபாநாயகர் மறுநாள் அறிவித்திருந்தார். இந்தத் திருத்தமானது சமர்ப்பிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையின் ஒட்டுமொத்த அர்த்தத்தையும் மாற்றும் வகையில் இருப்பதால் இதனை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும், அதனை தனியானதொரு பிரேரணையாகவே முன்வைக்க வேண்டும் என்றும் சபாநாயகர் சுட்டிக்காட்டியிருந்தார்.

எதிர்க் கட்சி உறுப்பினர்கள் அனைவரும் எரிபொருள் விலை அதிகரிப்புக்கு அமைச்சர் உதய கம்மன்பிலவே முழுமையான பொறுப்பு என்ற தோரணையில் உரையாற்றியிருந்தனர். எனினும், எரிபொருள் விலை அதிகரிப்பை மேற்கொள்வதற்கான காரணங்கள் பற்றி ஆளும் கட்சியில் உள்ளவர்கள் தெளிவாக விளக்கியிருந்தனர்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாஹல காரியவசம், அமைச்சர் உதய கம்மன்பில பதவி விலக வேண்டும் எனக் கூறிய கருத்தை அடிப்படையாகக் கொண்டு ஆளும் கட்சிக் கூட்டணிக்குள் பிளவை மேலும் அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே எதிர்க் கட்சி இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டு வந்திருந்ததாக அரசாங்க தரப்பினர் குற்றம் சாட்டுகின்றனர்.

எரிபொருள் அதிகரிப்பு விடயத்தில் சாஹல காரியவசம் கூறிய கருத்துகளைத் தொடர்ந்து அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகளுக்கிடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டிருந்தது. எனினும், இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையின் மூலம் அவர்களுக்கிடையிலான கருத்து வேறுபாடுகள் நீங்கப் பெற்று மீண்டும் ஒற்றுமை உருவாகியுள்ளதை அவதானிக்க முடிகின்றது. அரசாங்கக் கூட்டணியை மீண்டும் பலப்படுத்துவதற்கு இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை வாய்ப்பை வழங்கியுள்ளது என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது குறிப்பிட்டிருந்தார்.
அது மாத்திரமன்றி, பல்வேறு சவால்கள் இருந்தாலும் ஆளும் அரசாங்கம் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை விட அதிகமான பலத்துடன் உள்ளது என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது. நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு 152 பேர் எதிராக வாக்களித்திருந்தாலும், உண்மையில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகம் என்றே கூற வேண்டும்.

அரசியலமைப்பின் 20வது திருத்தச் சட்டம், வரவுசெலவுத் திட்டம் என்பவற்றுக்கு ஆதரவாக வாக்களித்த முஸ்லிம் காங்கிரஸின் நான்கு உறுப்பினர்கள் நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. இது தவிரவும், ஆளும் கட்சியில் உள்ள மேலும் சில உறுப்பினர்கள் தனிப்பட்ட காரணங்களினால் சபைக்கு சமுகமளித்திருக்கவில்லை.
இவற்றையும் சேர்த்துப் பார்க்கும் போது 155 இற்கும் அதிகமான வாக்குகள் ஆளும் கட்சிக்கு பாராளுமன்றத்தில் காணப்படுகின்றன. அரசு மீது என்னதான் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும், அரசாங்கம் பலமான நிலையில் தான் உள்ளது என்பது மீண்டும் ஒரு தடவை நிரூபிக்கப்பட்டுள்ளது.

பிரதான எதிர்க் கட்சி வெறுமனே அரசியல் நோக்கத்துக்காக இதனைக் கொண்டுவந்துள்ளது என்பதும் நிரூபணமாகியுள்ளது. உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலை அதிகரிப்பின் காரணமாகவே உள்நாட்டிலும் எரிபொருளின் விலையை அதிகரிக்க வேண்டி ஏற்பட்டதாக அமைச்சர் கம்மன்பில தனது உரையில் சுட்டிக் காட்டியிருந்தார்.

யாரேனும் அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டு வர வேண்டுமென்றால் குற்றச்சாட்டுகள் இருக்க வேண்டும். ஆனால் கொண்டு வரப்பட்டுள்ள பிரேரணையில் எனக்கு எதிராக குற்றச்சாட்டுகள் இல்லை. இதனால்தான் நான் ஆரம்பத்திலேயே இதனை சிறுபிள்ளையின் கடிதம் போன்றது என்றேன் என்றார் அவர்.
முதலாவது குற்றச்சாட்டில் நான் எரிபொருள் விலையை அதிகரித்துள்ளதாக குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.

எரிபொருள் விலை அதிகரிப்பை அமைச்சர் செய்ததில்லை. அடுத்த குற்றச்சாட்டில் அடிப்படை முறைமையை பின்பற்றவில்லை என்று கூறியுள்ளனர்.

ஆனால் அவர்கள் அரசியலமைப்பை சரியாக படிக்கவில்லை என்றே கூற வேண்டும். அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை குறைத்து எரிபொருள் விலை குறைப்பின் நன்மையை மக்களுக்கு வழங்குவதாக கூறியதாக குறிப்பிட்டுள்ளனர். ஆனால் நான் எங்கேயும் அப்படி கூறியதில்லை.

நாங்கள் 21 மாதங்களின் பின்னரே எரிபொருள் விலைகளை அதிகரித்துள்ளோம். நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டு வந்தவர்களால் இதுவரையில் எரிபொருள் விலையேற்றத்தை தவிர்க்க மாற்று வழியை முன்வைக்க முடியவில்லை. இதனால் அரசாங்கத்திற்கும் விலை அதிகரிப்பதை தவிர வேறு வழியில்லை என்பதனையும் எதிர்க் கட்சியினர் ஏற்றுக் கொண்டுள்ளனர் என அமைச்சர் தனது பதில் உரையில் சுட்டிக் காட்டியிருந்தார்.

கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட எரிபொருளுக்கான விலைச் சூத்திரம் தொடர்பிலும் விவாதத்தின் போது பிரஸ்தாபிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

பி.ஹர்ஷன்

Comments