ஹிஷாலினியின் அகோர மரணம்; வீட்டு வேலைக்கு அனுப்புவதில்லை என்ற தீர்க்கமான முடிவு எடுக்கப்பட வேண்டும் | தினகரன் வாரமஞ்சரி

ஹிஷாலினியின் அகோர மரணம்; வீட்டு வேலைக்கு அனுப்புவதில்லை என்ற தீர்க்கமான முடிவு எடுக்கப்பட வேண்டும்

எரியூட்டப்பட்ட நிலையில் சிகிச்சை பயனளிக்காததால் டயகம மேற்கு மூன்றாம் பிரிவைச் சேர்ந்த இஷாலினி என்ற சிறுமியின் மீது இழைக்கப்பட்டதாக வெளிவந்திருக்கும் தகவல்களை அடுத்து பரவலாக எல்லா இனப்பிரிவினரிடமிருந்தும் அனுதாபங்களும், மலையக சமூகத்தினரிடமிருந்து கூட்டு எதிர்ப்புணர்வும் வெளிப்படுவதுடன் மலையகத்திற்கு வெளியில் மட்டக்களப்பு, மன்னார், வவுனியா, யாழ்ப்பாணம், கொழும்பு போன்ற இடங்களிலும் ஆர்ப்பாட்டங்களும், பாராளுமன்றத்தில் விவாதங்களும் இடம்பெற்றுள்ளன.  

இவ்விடயத்தில் சமூக வலைத்தளங்களில் பதிவிடுபவர்கள் சிலரின் சுயவிளம்பரம், அதிமேதாவித்தனங்கள் ஒருபுறமிருக்க, பொதுவாக அவற்றினூடாக முன்னெடுக்கப்பட்ட பிரச்சார அழுத்தம் மலையக பாராளுமன்ற அரசியல்வாதிகளையும், சமூக செயற்பாட்டாளர்களையும் ஒதுங்கி இருக்க விடாமல் நெட்டித் தள்ளியிருக்கிறது.  

அந்த சிறுமி முன்னாள் அமைச்சரும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினருமான ரிசாட் பதியுதீனின் வீட்டில் வேலைக்கமர்த்தப்பட்டிருந்தார். கடந்த 3ஆம் திகதி உடலில் 70 சதவீதமான எரிகாயங்களுக்குள்ளாகி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அச்சிறுமி கடந்த 16ஆம் திகதி மரணமடைந்தார் என்பது தெரிந்ததே.  
அவரின் உடல் பிரேத பரிசோதனைக்குட்படுத்தப்பட்டதுடன், மோசமான எரிகாயங்களின் விளைவாக அவர் இறந்தார் என்றும் அவர்மீது பலவந்தமாக பாலியல் வன்கொடுமை புரியப்பட்டிருப்பதாகவும் அப்பரிசோதனை முடிவுகள் வெளிப்படுத்தியுள்ளதாக அறிய முடிந்தது.  

உடலில் தீப்பற்றிக்கொண்ட நிலையில் அவர் உறங்கிக் கொண்டிருந்த இடத்திலிருந்து ஓடிவந்ததாகவும், எரிந்து கொண்டிருந்த தீயை ரிசாட் பதியுதீனின் மனைவியும் அவரது வீட்டிலிருந்த இன்னொரு ஆண் வேலையாளும் தீயை அணைத்து சிறுமியை வைத்தியசாலையில் அனுமதித்ததாக கூறப்பட்டது.  

அச்சிறுமி உறங்கிக் கொண்டிருந்த இடத்தில் வைக்கப்பட்டிருந்த நுளம்புத்திரியின் தீ அவரது படுக்கையில் பற்றிக்கொண்டு அவரது உடலை எரித்துவிட்டதாக முன்னர் கூறப்பட்டது. அதாவது அவர் மீது யாரும் தீயை மூட்டவில்லை. தானாகவே நுளம்புத்திரியின் தீ தற்செயலாக அவரது நினைவிற்கும் அறிவுக்கும் அப்பால் அவரது உடலை எரித்துவிட்டது என்றே கூறப்பட்டது.  

அவர் இறந்துவிட்டார் என்ற செய்தி வெளியாகிய பிறகு அவர் உறங்கிக் கொண்டிருந்த இடத்திலிருந்து மண்ணெண்ணெய் போத்தலும் லைட்டரும் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், அவற்றை பாவித்து தற்கொலை செய்துகொள்ளும் நோக்கில் தனக்குத்தானே தீமூட்டிக் கொண்டிருக்கலாம் என்றும் கூறப்பட்டது. ஆனால் அச்சிறுமி இறக்கும்வரை அவ்விடயத்திற்கு பொறுப்பான பொரளை பொலிஸார் யாரிடமிருந்தும் வாக்குமூலங்களை பெற்றுக் கொண்டிருக்கவுமில்லை; விசாரணைகளை மேற்கொண்டிருக்கவும் இல்லை.  

இறந்த பிறகும்கூட கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில் அவ்விடயம் பற்றிய புலனாய்வு அச்சிறுமி, யாரால் பாலுறவிற்கு அல்லது பாலியல் வன்கொடுமைக்கு உட்பட்டிருந்தார் என்பதை மையப்படுத்தி முன்னெடுக்கப்படுவதாகவே விளங்கிக்கொள்ள முடிந்தது. அதுவும் அவர் இறுதியாக வேலை செய்த வீட்டிற்கு வெளியில் பாலியல் உறவிற்கு அல்லது வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டாரா என்பது பற்றிய கூடிய கவனஞ்செலுத்தப்பட்டதாக தெரிகிறது.  

எவ்வாறெனினும் 22ஆம் திகதி சிறுமி இஷாலினி மரணம் தொடர்பாக ரிசாட் பதியுதீனின் மனைவியும், அவரின் மனைவியின் தந்தையும் கைது செய்யப்பட்டுள்ளதாக அறியமுடிந்தது.

அத்துடன் அவர்களது வீட்டில் வேலைக்கமர்த்தப்பட்டிருந்த இன்னொரு சிறுமியை துன்புறுத்திய குற்றச்சாட்டின் பேரில் ரிசாத்தின் மனைவியின் சகோதரனும் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிய முடிந்தது.

இது புலனாய்வின் இன்னொரு திருப்பமெனினும் இவ்விசாரணைகள் இறுதிவரை எவ்வாறு சரியாக நகர்த்தப்படும் என்பதிலேயே நீதி நிலைநாட்டப்படுமா என்பது தங்கியுள்ளது.  

இவ்விடயத்தில் தொடர்புடைய சட்டம் நீதி சம்பந்தப்பட்ட பிரச்சினையை வேறாகவும், சமூகம், பண்பாடு, பொருளாதாரம், அரசியல் சம்பந்தப்பட்ட விடயங்களை வேறாகவும் அணுகப்படுவது அவசியம்.  

16 வயதிற்கு குறைவாக எவரையும் வேலைக்கு அமர்த்தப்படுவது குற்றமாகும். 16 வயதிற்கு உட்பட்ட சிறுமியை பாலியல் உறவிற்குட்படுத்துவது நியதிச்சட்ட பாலியல் வன்கொடுமை குற்றமாகும். அங்கு சிறுமியின் சம்மதம் என்பது செல்லுபடியாகாது. வீட்டிலிருந்து வேலை செய்வோரின் அல்லது வதிவிட வேலையாட்களின் சேமநலன், பாதுகாப்பு போன்றவற்றுக்கு வேலைக்கு அமர்த்திய எஜமானரே பொறுப்பானவர்.

எனினும் இவற்றுக்கு சட்ட பாதுகாப்புகள், ஏற்பாடுகள் இல்லை. வீட்டு வேலையாட்கள் தொழிற் திணைக்களம், தொழில் ஆணையாளர், தொழிற்சட்ட பாதுகாப்புகளை பெற்ற பிரிவின் கீழ் வருவதில்லை.  

இலங்கையில் தொழில் செய்யும் இடங்களில் இடம்பெறும் துன்புறுத்தல்கள் வன்முறைகள் போன்றவற்றிலிருந்து எல்லா தொழிலாளர்களுக்கும் பாதுகாப்பளிக்க சட்ட ஏற்பாடுகள் இல்லை.

அதனாலேயே சர்வதேச தொழிலாளர் மாநாட்டு பிரகடனமான வேலை இடங்களில் வன்முறை, துன்புறுத்தல்களிலிருந்து தொழிலாளர்களுக்கு பாதுகாப்பளிக்க ILO C190 என்ற ஏற்பாடு உள்நாட்டில் (இலங்கையிலும்) வேண்டுமென்ற கோரிக்கை வலுத்து வருகிறது.  

இஷாலினி, 16 வயதிற்கு குறைவாக இருந்தபோது வேலைக்கு அமர்த்தப்பட்டிருப்பதற்கும் பாலியல் வன்கொடுமைக்கும், வன்முறைகளுக்கும், துன்புறுத்தல்களுக்கும் உட்பட்டிருப்பதற்கும் ஆதாரங்கள் இருக்கின்றன. எனவே அவற்றை இழைத்தவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும்.  

இவ்விடயத்தில் இருக்கும் சட்டத்தினதும் நீதியினதும் கடமை, இஷாலினியின் மரணம் தற்கொலையா கொலையா எனக் கண்டறிவதும் தற்கொலையென கண்டறியப்படின் தற்கொலைக்கு காரணமான அல்லது தூண்டியவர்களை கண்டறிந்து தண்டிக்கப்படுவதுமாகும். கொலையென கண்டறியப்படின் கொலைக்கு காரணமானவர்களை அல்லது கொலைக் குற்றம் புரிந்தவர்களை தண்டிக்க வேண்டும்.  

சிறுமி எரியூட்டப்பட்ட 3ஆம் திகதியிலிருந்து பொலிஸார் முறையாக புலனாய்வை செய்ததாக திருப்தியடைய முடியாது. அதனால் குறித்த குற்றச் செயல்களை நிரூபிக்க இருந்த சாட்சியங்கள் அழிக்கப்பட்டிருக்கலாம் அல்லது அழித்திருக்கலாம். அச்சிறுமி மரணமடைந்த பிறகு ஊடகங்களுடன் உரக்க உரையாடி வரும் அவரது தாயார் அச்சிறுமியிடமிருந்து வேலை செய்யும் வீட்டாரின் துன்புறுத்தல் தொடர்பாக அறிய முடிந்த போதும் அதுபற்றி பொலிஸாருக்கு முறையிட்டு அச்சிறுமியை மீட்க அத் தாயார் நடவடிக்கை எடுக்கவில்லை. அச்சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பிறகு அவர்களின் குடும்பத்தினருக்கு சட்டரீதியான உதவிகளையும் வழிகாட்டல்களையும் வழங்க சில சட்டத்தரணிகள் சுயவிருப்பில் முன்வந்தபோதும் அவ்வீட்டார் அதுபற்றி கவனம் செலுத்தவில்லை.

தற்போதும் கூட அவர்கள் பிரசாரங்களின் பக்கம் மட்டுமே இழுத்து செல்லப்படுவதாகவே தெரிகிறது. சட்டரீதியான விடயங்கள் அவர்களது ஒத்துழைப்பின்றி முன்னெடுக்கப்படவும் முடியாது; நீதியை பெற்றுக்கொள்ளவும் முடியாது.  

மலையகச் சிறுமிகளும், சிறுவர்களும் பெண்களுமே பெரிய எண்ணிக்கையில் வீட்டு வேலைக்கு அமர்த்தப்படுகின்றனர். இதற்கு காரணம் மலையக சமூகத்தின் வறுமையும் விழிப்புணர்வின்மையும் என்று இன்றும் கூறப்படுகிறது.  

ஒப்பீட்டு ரீதியில் பொருளாதார பிரச்சினைகள் கூடிய சமூகமாக மலையக சமூகம் இருப்பதாக கூறுவதில் நியாயம் இருக்கலாம். ஆனால் நாளாந்த உணவிற்கு வழியை தேடிக்கொள்ள முடியாத அளவிற்கு வறுமைப் பிடிக்குள் மலையக சமூகம் இன்றும் இருப்பதாக ஒருவர் கூறுவதற்கு முன்பு அவரது கூற்று சரியானதா என பல தடவைகள் சிந்திப்பது நல்லது. ஏனெனில் அக்கூற்றில் கெளரவ குறைவை விட உண்மை இல்லை என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.  

இஷாலினி வேலைக்கு அமர்த்தப்படும்போது அவரது தாயார் எனப்படுபவரால் அவருக்கு மட்டுமே தெரிந்த பெருந்தொகையொன்றை பணமாக பெற்றுக்கொண்டதாக கூறப்படுகிறது. அது அந்த தாயாரால் பட்ட கடனை அடைப்பதற்கு வாங்கப்பட்டதாக கூறப்படுகிறது. அது உண்மையாயின் அது வறுமையை போக்க வாங்கப்பட்டிருக்க முடியாது என்றும் அக்கொடுப்பனவு அச்சிறுமியை விற்றதற்கானதாகவே கொள்ளப்பட வேண்டும் என்றும் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றபோது வெறும் உணர்ச்சிவசப்பட்ட எதிர் கூவல்கள் சரியான பதிலாகாது. மாறாக மலையக சமூகத்தின் அக ரீதியான பண்பாட்டு சரிகட்டல்கள் அவசியமாகிறது என்பதையும் உணர வேண்டும்.  

மலையகத்தவர்கள் மலையகத்தவர்களால் வேலைக்கு அமர்த்தப்பட்டால் இவ்வாறான பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படலாம் என்று சில மெத்தப் படித்தவர்களின் முன்மொழிவுகள் முதிர்ச்சியானவை அல்ல. எல்லா மலையகத்தவர்களுக்கும் மலையகத்தவர்களால் வேலைக்கு அமர்தப்படுவது சாத்தியம் இல்லை. மலையக வேலை கொள்வோரால் வேலைக்கமர்த்தப்படுபவர்கள் எவ்வித சுரண்டல்களுக்கும் இதுவரை உட்படவில்லை என்றோ உட்படமாட்டார்கள் என்றோ கூறமுடியாது.  

வீட்டு வேலைக்கமர்த்தப்படுபவர்கள்தான் இவ்வாறு கொடுமையான சுரண்டல்களுக்கும், துன்புறுத்தல்களுக்கும் உள்ளாகும் நலிவடைந்தவர்களாக இருப்பதால், மலையக சமூகம் உட்பட எல்லோருமே வீட்டு வேலைக்கு செல்லக்கூடாது என்று பண்பாட்டு முடிவை எடுப்பதே சிறந்தது. எனினும் வீட்டு வேலைகள் வேலைவாய்ப்பாக இருக்கும்வரை பொருளாதார ரீதியாக அவற்றை தொழில்திறன் இல்லாதவர்களுக்கு இவ்வாறான வேலை வாய்ப்பே மீதமாக இருக்கிறது.

வளர்ச்சியடைந்த முதலாளித்துவ நாடுகளில் கூட வீட்டு வேலைவாய்ப்பு இருக்கிறது. ஆனால் அங்கு வீட்டு வேலையாட்கள் பெருமளவில் வேலையாட்களாக இருப்பதில்லை. அத்துடன் சட்டப் பாதுகாப்புகளும் இருக்கின்றன.  

இவற்றையெல்லாம் கணக்கில் எடுத்தே வீட்டு வேலைக்கமர்த்தப்படுபவர்கள் பற்றிய பொதுவானதும் குறிப்பானதுமான முடிவிற்கு வரமுடியும். மலையக வீட்டு வேலையாட்கள் குறித்து வீட்டு வேலைக்கு போவதில்லை என்ற கறாறான பண்பாட்டு ரீதியான முடிவை எடுப்பதற்கு மலையக சமூகத்தின் அரசியல் சமூக பொருளாதார பண்பாட்டு விடயங்களை தொடர்புபடுத்தி ஆராய்வதே பொருத்தமாக இருக்கும்.  

சிரேஷ்ட சட்டத்தரணி
இளையதம்பி தம்பையா  
பொதுச் செயலாளர்,  
இலங்கை கொம்யூனிஸ்ட் ஐக்கிய கேந்திரம்.   

Comments