ஹிஷாலினி தொடர்பில் த.மு.கூட்டணி தனது கடமையை செய்யும் | தினகரன் வாரமஞ்சரி

ஹிஷாலினி தொடர்பில் த.மு.கூட்டணி தனது கடமையை செய்யும்

எவருக்காகவும் கைவிடமாட்டோம்--மனோ கணேசன் எம்.பி

சிறுமி ஹிஷாலினி தொடர்பாக நாம் கடமையை சிறப்பாக செய்துள்ளோம்.தமிழ் முற்போக்கு கூட்டணியாக நாம் (1)பொரளை பொலிஸ் விசாரணை ஆய்வு,  (2) பொலிஸ் தலைமையக விசாரணை மற்றும் விசேட பொலிஸ் குழுக்கள் ஆய்வு, (3)பாராளுமன்றத்தில் உரை மற்றும் நேரடியாக பொலிஸ் துறை அமைச்சர் சரத் வீரசேகரவிடம் கேள்வி, (4)மலையகத்தில் நேரடி ஆர்ப்பாட்டங்கள் (5)சிங்கள மொழி ஊடக மாநாடுகள், (6)சிங்கள தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சிகள் ஆகியவற்றை செய்த பின்னர்தான், 'சிறுமி ஹிஷாலினி' விவகாரம் தேசிய அரங்கில் சூடு பிடித்தது என்பதை கூப்பாடு போடும் அரசியல்வாதிகள் உணரவேண்டும்.

இது எமது கடமை. அதை தமிழ் முற்போக்கு கூட்டணி எவருக்காகவும் கைவிடாது. ஹிஷாலினி எமது இரத்தம். எமது மக்களுக்காக நாம் வாய் திறந்து பேசாவிட்டால், யார் பேசுவது?

நாம் போராடாவிட்டால், யார் போராடுவது? என்பதை நாடு முழுக்க வாழும் தமிழ் மக்கள், நல்லுள்ளம் கொண்ட முஸ்லிம், சிங்கள மக்கள் உணர்ந்து கொண்டுள்ளார்கள் என  தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்.பி கூறியுள்ளார்.

இது தொடர்பில் மனோ எம்.பி மேலும் கூறியதாவது,  

சிறுமி ஹிஷாலினி உட்பட, தோட்டத் தொழிலாளர்களின், பிள்ளைகள் நகரப்பகுதிகளுக்கு தொழில் தேடி வந்து ஆபத்தில் விழுவதற்கு பெருந்தோட்டத்துறையில் இன்று நிலவும் அதிமோசமான வறுமைதான் காரணம். இந்த அதிமோச வறுமைக்கு காரணம் என்ன?இன்று சிறுமி ஹிஷாலினி பற்றி பொய்யாக கூப்பாடு போடுபவர்கள் இதை உணர வேண்டும்.
இந்த பிரச்சினை தமிழ், முஸ்லிம், சிங்கள இனப்பிரச்சினை அல்ல. இது ஒரு சட்டம், ஒழுங்கு பிரச்சினை இதை நான் இலங்கை பாராளுமன்றத்தில், மிக நிதானமாகவும்,  மிக பொறுப்புடனும் தெளிவாக பலமுறை எடுத்து கூறி விட்டேன்.

ஹிஷாலினி வீட்டுக்கு சென்று மௌன அஞ்சலி செலுத்தியதை தவிர, அரசாங்கத்துக்கு உள்ளே இருப்பவர்கள் இந்த பிரச்சினை பற்றி கூறும்படியாக இதுவரை ஒன்றும் செய்யவில்லை. எதுவாயினும், இப்போது விசாரணை நடக்கின்றது.
அதற்கு அனைவரும் கண்காணிப்புடன் கூடிய பூரண ஒத்துழைப்பை வழங்குவோம்.  

வறுமை எல்லோருக்கும் பொதுவானதுதான். அதனால்தான், இலங்கையின் சிங்கள, தமிழ், முஸ்லிம் பெண்கள் தொழில் தேடி மத்திய கிழக்கு நாடுகளுக்கு சென்று சொல்லொணா துன்பங்களுக்கு முகம் கொடுக்கிறார்கள். இப்படிதான், மூதூரை சேர்ந்த ஏழை முஸ்லிம் சிறுமி றிசானா நபீக், சவுதி அராபியா சென்று அங்கே கொல்லபட்டார்.

Comments