கசப்பும் இனிப்பும் | Page 2 | தினகரன் வாரமஞ்சரி

கசப்பும் இனிப்பும்

கசப்பு-1

அங்கே தமிழகத்திலும், இங்கே இலங்கையிலும் திரை அரங்குகள் வௌவால், எலிகள் வாசஸ்தலமாகவும் சிலந்தி வலைப் பின்னலாகவும் ஆகி சில மாதங்கள். 

பல படங்கள் பார்க்கப்படாமலேயே போய், நெட்ஃப்ளிக்ஸ் (Netflix) நவீன சாதனத்தில் மட்டும் வசதியுள்ள சீமான்கள் காண்கிற நிலைமை. 

அப்படி திரையிடப்பட்ட ஒன்று ‘ஜெகமே தந்திரம்!’ ‘தந்திர உலகம்’ என நல்ல தமிழிலும் சொல்லிப் பார்க்கலாம்.  
அலைகடலுக்கப்பால் ஆண்டுக்கணக்கில் வாழும் தமிழ்ச்சமூகம் குறிப்பாக லண்டன் சமூகம் – பார்த்து விட்டுத் தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டுள்ளது.  

அந்தளவுக்கு அங்கே வதியும் இலங்கைத் தமிழ்ச் சமூகம் இழிவுப்படுத்தபட்டுள்ளது. 

பிரிட்டனில் இலங்கைத் தமிழர்கள் நாள் முழுதும் வெயிலிலும், பனி மழையிலும் ஓடியோடி உழைத்து, சிறு சிறு இடங்களில் முடங்கி வாழ்ந்து, தங்கள் சந்ததியினருக்கு நல்ல கல்வியை வழங்கி, கண் முன்னே அவர்கள் உயர்வைப்பார்த்து மகிழ்ந்து உயிர் விடும் ஆத்மாக்கள், தங்கள் ஓய்வான நேரங்களில் கலையும் இலக்கியமுமாக வாழ்ந்து காட்டும் ஜீவன்கள். 

இத்தகையவர்கள், பிரிட்டனுக்கு அகதிகளாகி வந்து கடத்தல் செய்பவர்களாகவும், துப்பாக்கிதாரிகளாகவும் சித்தரித்து, முத்திரை குத்தி, பிரிட்டனிலேயே பெரும்பகுதி படமாக எடுக்கப்பட்டு “ஜெகமே தந்திரம்” எடுக்கப்பட்டுள்ளது. 

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் என்ற மதுரைக்காரராம் ஏற்கனவே ‘இறைவி’ – ‘பேட்டை’ என்றெல்லாம் படங்கள் தந்தவராம். அவை, தரமானவை தானாம். (நான் பார்க்காதவை). 

அப்படியானவர், ஒரு தனுஷையும், ஐஸ்வர்யா லட்சுமியையும், ஜேம்ஸ் காஸ்மோ, ஜோஜூ ஜோர்ஜ் போன்ற நினைவில் நிற்க முடியாத பெயர்களைக் கொண்ட புதுமுக நடிகர்களையும் வைத்து இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.  

படத்தில் காட்டப்படும் சிவதாஸ் என்ற இலங்கைத் தமிழருக்குத் தொழில், தமிழ் அகதிகளை தோணிகளில் ஏற்றிவந்து, இலண்டன் கடற்கரைகளில் இறக்கி விடுவது. பின்பு, தன் மீன்பிடி வள்ளங்களில் மீன் பிடித்தல் என்ற போர்வையில் பொஸ்னியா, உக்ரைன் போன்ற நாடுகளுக்குக் கூட்டிச் சென்று, இயந்திரத் துப்பாக்கிகள், குண்டுகள் மற்றும் தங்கம் முதலியவற்றை மீன் வட்டிகளில் மறைத்து மீண்டும் லண்டனுக்கே கொண்டு வந்து சேர்ப்பது! 
இதில் தொழில் போட்டி ஏற்பட்டு ஒரு வெள்ளைக்கார தாதா, இலங்கைத் தமிழன் சிவதாசனைக் கொல்ல, மதுரையிலிருந்து ஒரு ரவுடியை இறக்குமதி செய்வது படுவேடிக்கை! (அந்தப்பாத்திரத்தில் தனுஷ்!) 
ஆக, எல்லாவகையிலும் இலண்டன் வாழ் இலங்கைத் தமிழர்களைக் கேவலமாகச் சித்தரிக்கும் ஒரு கைங்கரியத்தில் இந்த இயக்குனர் இறங்கியிருப்பது இலகுவாகப் புரிகிறது.  

எம் வானொலியிலும் பி.பி. ஸியிலும் சிறந்த அறிவிப்பாளருள் ஒருவராகவும், நாடகங்களில் நடித்துப் புகழடைந்தும், தற்சமயம் கீர்த்திமிகு சட்ட ஆலோசகராக இலண்டனில் திகழும் விமல் சொக்கநாதன் அங்கே ஜெகமே தந்திரத்தை பார்த்துவிட்டு ஒரு பெரிய பதிவை வலைத்தளங்களில் இட்டிருக்கிறார். 

நான்கு பந்திகளை மட்டும் என் பத்தியில் வழங்குகிறேன். 

நாற்புறமும் கடலால் சூழப்பட்ட பிரிட்டனில் துப்பாக்கிகளையே அனுமதிப்பதில்லை. யாரும் அவற்றை பயன்படுத்தவே முடியாது. இது உங்கள் படத்திலுள்ள மாபெரும் ஓட்டை. துப்பாக்கிகளை கடத்திக் கொண்டு நாட்டிற்குள் கொண்டு வருவதே இங்கு வாழும் பிரிட்டிஷ் தமிழ் குடும்பங்கள்தான் என்று படத்தில் நீங்கள் காட்டியிருப்பது மதுரை தமிழரான உங்களுக்கு மிக இழுக்கு. பிரிட்டிஷ் வாழ் இலங்கைத் தமிழர்களுக்கு அவமானம்.
நீங்கள் செய்திருப்பது மாபெரும் துரோகம். 
பிரிட்டன் வாழ் இலங்கைத் தமிழர்கள் பற்றிய அடிப்படை அறிவு உங்களுக்கும் உங்களது படக் குழுவினருக்கும் சூனியம் என்பதால் தான் இலங்கைத் தமிழர்கள் மீது இவ்வளவு மோசமான அழுக்கை நீங்கள் பூசியிருக்கிறீர்கள். 

“அன்னை திரௌபதியை கொடிய கௌரவர்கள் துகிலுரிந்தது போல நீங்களும் செய்திருக்கிறீர்கள். எங்களை நிர்வாணப்படுத்தியிருக்கிறீர்கள். 
படமெடுத்திருப்பது வட இந்திய அதிகாரத் துறையின் சில இனத்துவேசவாதிகளின் ஆலோசனையின் பெயரிலா? என்று நான் கேட்க விரும்புகிறேன்.” 

என் கவலை, இந்த இழிவான படத்தை இலங்கைத் திரையரங்கு ஒன்றில் நம் கண்களால் கண்டு மிக நுணுக்கமான திறனாய்வு ஒன்றை செய்ய இயலாதிருப்பதே! 

கசப்பு-2

இங்கே, மூன்று தமிழ் நூல்களின் கண்ணைக் கவரும் அழகழகான அட்டைப் படங்கள் வழங்கி உள்ளேன். 

நவீனமாகவும், புதுமையாகவும், ஓவியம் வரையப்பட்டுள்ளது என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை. 

எனினும் ஒரு புதிர், ஒரு மர்மம் இவற்றில் இருப்பதாகக் கணிப்பு. 

ஒரு நல்ல படைப்பாளியாக உருவாகி இப்பொழுது நவீன – புதுமை ஓவியராகப் பரிணமித்துள்ள “அவர்” தென்னிலங்கையின் வெலிகமம் மைந்தர். “90களில் வாரமஞ்சரியில் கதைகள் எழுதி, ‘நம்ம’ எஸ்.டீ.சாமி சித்திரம்’ தீட்டி, பெயரையும் பதித்திருக்கிறார். (சென்ற கிழமை ‘இனிப்’பிலும் இடம்பெற்றுள்ளது. 

தாமதிக்காமல் இங்கே நானும் பெயரைப் பதித்து விடுகிறேன். அவர், ஆசிரியர் (ஓவிய ஆசிரியர்?) மும்தாஸ் ஹஃபீள் பெண் என நினைக்காதீர்கள். ஆணே! 

அவர் பெயரை நான் எப்படி அச்சொட்டாக பதிக்கிறேன் என்றால், அவரே தன்முகநூலில் படங்களைப் போட்டு” இவையெல்லாம் நானே” என இடுகை! 

பாராட்டுகள், வாழ்த்துகள்! 

ஆனால்...? ஆனால்...? 

அவர் அட்டைப்படங்களில் செய்திருக்கிற ஒரு காரியம் தான் கழுமை உதை உதைக்கிறது! 
‘அலைகடல் ஓடம்’ – குறுநாவல் படைப்பாளி யார்? 

‘புன்னகை தேசம்’ – காதல் காவியம் வழங்கியவர் ஒரு ‘மர்மயோகி’யா?  

‘நிலவே மலரே’ குடும்ப நாவல் அளித்தது ஆண்சிங்கமா? பெண் சிங்கமா?  

மும்தாஸ் ஹஃபீள் முகப்பட்டைகளில் எழுத்தாளர் பெயரைத் தூரிகையில் தூர் வார்க்காமல் விட்டதற்கு ஒரு காரணம் இருக்கவே வேண்டும். 
அதைத் தெளிவுப்படுத்தினால் தலை சுற்றல் உடனே நின்றுவிடும் நன்றி. 

இனிப்பு-1
 
உத்தரபிரதேசம் வட – இந்தியாவில் பிரசித்தி பெற்ற பகுதி. கோயில்களும், பள்ளிவாசல்களும் நிறைந்த இடம். 

‘மீரட்’ – தொழில் நகரமே முக்கியமானது.
இங்கே முகாலாய மாமன்னன் நஸ்ருத்தீன், ஷா, 1306ல் கட்டிய ஜாமியா மஸ்ஜித் கண்கவர் வனப்புடையது.  

அப்பவே சலவைக்கற்களில் (மார்பில்) நிறைய சித்திரவேலைப்பாடுகள் அறபு எழுத்துக்களை மையப்படுத்தி செதுக்கப்பட்டுள்ளன. அல்- குர்ஆனின் அருமையான வாசகங்கள் பல அலங்கரிக்கின்றன. 

இப்பொழுது மீண்டும் புதுப்புது வண்ணக் கலவை கொண்டு நவீன மயப்படுத்தும் வேலைகள் கிருமி ஊடாட்டத்திற்கு மத்தியிலும் நடக்கிறது. நடக்கவும் வேண்டும். பல சலவை கற்களில் பதியப்பட்டுள்ள அறபு எழுத்துகள் சிதிலமடைந்துள்ளன. 
இவற்றைச் செப்பனிட இப்பிரதேசத்தில் பரத்பூர், ஹிந்தவன் பகுதியின் இந்து சிற்பிகளாலேயே இயலும் ஆம்! இந்து சிற்பிகள்! அவர்களாலேயே இயலக் கூடிய காரியம்! 

இது குறித்து, ஹிந்த்வன் மூத்த சிற்பி தரம் வீர் ஒரு கருத்து சொல்கிறார்: 

“எங்கள் பணி மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக் காட்டானது. ஆனால் இந்தச் சிற்ப வேலை உயிருக்கு ஆபத்தை விளைவிப்பது. செதுக்கும் போது சலவைக் கற்களில் இருந்து பறக்கும் தூசு உடலில் நுழைந்து சிலுகாஸிஸ் நோயை உருவாக்கும் வாய்ப்பு உண்டு.  கடந்த பத்து ஆண்டுகளில் ஐம்பது பேர்வரை இறந்துள்ளனர். இருந்தாலும் எங்களது ஐந்தாவது தலைமுறை இப்பணியைத் தொடர்கிறது!” 

இந்த ஹிந்த்வன் பகுதிச் சிற்பிகள், இந்தியா முழுவதிலும் உள்ள ஐம்பது பள்ளிவாசல்களில் அல் – குர்ஆன் அருள்மறை வாசகங்களை வடிவமைத்து.  “போங்கடா போங்க உங்க துவேசமும் நீங்களும்” என இன விரோதிகளைத் தலைகுனியச் செய்துள்ளார்கள்! சபாஷ்!  தகவலும் படமும் "தினத்தந்தி" நன்றி

இனிப்பு-2
 
நடந்த தமிழகத் தேர்தலில் தோற்றுப்போன ஒரு பழம்பெரும் கட்சியிலிருந்து ஒருவர் முக்கிய வக்ஃபு வாரிய உயர் பதவிக்கு நியமனம். கலைஞர் கருணாநிதி ஆட்சியில் கவிக்கோ அப்துர் ரஹ்மான் வகித்த பதவி!

இப்போது மகனார் முதல்வர் நிலையில், முஸ்லிம் லீக் கட்சி மாநில முதன்மைத் துணைத்தலைவர் எம். அப்துர் ரஹ்மான் கரங்களில் ஒப்படைப்பு! வழங்கியவருக்குப் பாராட்டு! பெற்றவருக்கு வாழ்த்து!

Comments