இனிமேலாவது வேலைக்காரர் விநியோகத்தை மலையக சமூகம் நிறுத்துமா? | தினகரன் வாரமஞ்சரி

இனிமேலாவது வேலைக்காரர் விநியோகத்தை மலையக சமூகம் நிறுத்துமா?

ஹிஷாலியின் மர்ம மரணம் :

'முதலில் கொழும்பு போன்ற நகர வீடுகளில் 18 வயதுக்கும் குறைந்த வயதுடைய  ஆயிரக்கணக்கான 'சிறுவர்
சிறுமியர் வேலைக்காரர்களாக கண்ணீர் வடித்துக்  கொண்டிருக்கிறார்கள். அவர்களை அங்கிருந்து மீட்டாக வேண்டும். அதற்காக தோட்டங்கள் தோறும் கணக்கொடுப்பு நடத்தப்படுவது உசிதமானது'

'பெருந்தோட்ட மக்களை மையமாக 'வைத்து இயங்கிக் கொண்டிருக்கும் தன்னார்வ தொண்டு  நிறுவனங்கள் நுவரெலியா மாவட்டத்திலேயே அதிகம். இவற்றுள் அநேகமானவை சிறுவர் நலன் குறித்துப் பேசுபவை. இருந்தும் இங்குதான் அதிக அதிகமான சிறுவர்  துஷ்பிரயோகங்கள் இடம்பெறுகின்றன'

வறுமையினால் என்ன செய்ய முடியும்? அதனால் அனைத்தையுமே செய்யமுடியும் என்பதற்கு ஏரராளமாகவே உதாரணங்கள் உள. ஆனால் விபரீதம் என்று தெரிந்து கொண்டே வீட்டில் பூச்சிகளாய் பால்ய வயது பிள்ளைகளை பணிப்பெண்களாக அனுப்புவது எத்தனை அபாயகரமானது என்பதை தன் உயிரைவிட்டு உணர்த்தி இருக்கிறாள் ஒரு பாலகி.  

15 வருடம் 11 மாதங்கள் வயது. கடந்த வருடம் நவம்பர் மாதம் வீட்டு வேலைக்காக பொரளைக்குப் போனவள் பின்னர் பிணமாகவே வீடு வரமுடிந்துள்ளது. ஆம்! நுவரெலியா மாவட்டத்தின் டயகம தோட்டப்பகுதியைச் சேர்ந்த ஜெயராஜ் ஹிஷாலினிதான் அந்த அபாக்கியவதி. 

முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியுதீன் வீட்டுவேலைக்காரியாக சென்ற அந்த பிஞ்சு  பாலியல் ரீதியாக  துஷ்பிரயோகம் செய்யப்பட்ட தகவல் பிரேத பரிசோனை மூலம் தெரியவந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதுவும் இந்த அவலம் தொடர்ச்சியாக அரங்கேறி வந்திருப்பதை பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன உறுதிப்படுத்தியுள்ளார். அவள் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு  தற்கொலை செய்து கொண்டாள் என்று சாட்டுக் கூறும் ரிசாட் பதியுதீன் வீட்டார் அவள் துஷ்பிரயோகத்துக்கு ஆளாக்கப்பட்டது யாரால் என்று கூறவில்லை. கடந்த சில காலமாக வேறு காரணம் நிமித்தம் சிறையில் இருக்கிறார் முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியுதீன். ஆனால் அவராது கட்சியினால் முன்னாள் அமைச்சரின் கெளரவத்தை காப்பாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறதே தவிர நடந்த அசம்பாவிதத்துக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று எண்ணுவதாகத் தெரியவில்லை. 

பிள்ளைக்கு வேலைக்குச் சென்ற வீட்டில் ஏதோ நடக்கிறது என்ற தகவல் முன்னதாகவே கிடைத்திருந்தமையை அவரது தாயாரின் சாட்சியம் கூறுகின்றது. பிள்ளையை வேலைக்கு அனுப்பியதோடு அவரது சம்பளத்தைவிட அதிகமாகவே பணத்தை தாம் பெற்றதாக பெற்றோர் தெரிவித்துள்ளார்கள். இதற்கு வறுமைதான் காரணம் என்று சாக்குப் போக்கும் சொல்லி இருக்கின்றார்கள்.  

இங்கே மூன்று தரப்பு பிழை செய்திருக்கிறது. 18 வயதுக்கும் குறைந்த வயதுடையோர் குழந்தைகளாகவே கருதப்பட்ட வேண்டும் என்று ஐ.நா பொதுச் சபை சாசனம் உறுதிப்படுத்துகின்றது. இது சிறுவர் பாதுகாப்புக்கான உரிமைப் பிரகடனம், 1989 ஆண்டு நிறைவேற்றம் கண்டது. இலங்கை 1991 ஆம் ஆண்டு இதை உள்வாங்கிக் கொண்டது. அதனடிப்படையில் 1998 ஆம் ஆண்டு பிரத்தியேகமாக ஒரு சிறுவர் சாசனத்தை உருவாக்கி நடைமுறைக்குச் கொண்டு வந்தது அரசாங்கம். தெற்காசிய நாடுகளுக்கே முன்மாதிரியான இந்த ஏற்பாடு இன்னும் அமுலில் இருக்கின்றது. சிறுவர் பராமரிப்பு திணைக்களம் மற்றும் அதற்கொரு அதிகாரி என்று சிறப்பாகவே இயங்கிக் கொண்டிருக்கின்றது. 

ஆனால் பெருந்தோட்டப் பிள்ளைகள் மட்டும் இந்தச் சிறப்பு ஏற்பாட்டினால் இதுவரை எவ்வித பயனையும் பெறவில்லை என்பதுதான் பெருங்கவலை. சிறுவர் துஷ்பிரயோகத்தைக் கட்டுப்படுத்துவதில் ஏன் இந்த புறக்கணிப்பு? ஆய்வாளர்களின் பதிவுகளின்படி உயர்மட்ட ரீதியிலான உரிமைமறுப்பு என்று இதனை எடுத்துக் கொள்ளலாமா? யோசிக்க வேண்டியுள்ளது. 18 வயதுக்கும் குறைந்த சிறார்களை வீட்டு வேலைக்கு மட்டுமின்றி பொதுவாகவே வேலைக்கே அமர்த்துவது சட்டப்படி குற்றம் என்கிறது சிறுவர் சாசனம். அறியாமையினால் சிறார்களை வேலைக்கு அனுப்புகிறார்கள் என்றாலும் பெற்றோர்களும் குற்றம் செய்பவர்களே! இதுபோலவே பணத்துக்காவும் அன்பளிப்புகளுக்காகவும் பிள்ளையைப் பெற்றவர்களுக்கு ஆசைவார்த்தைக் கூறி நாதாறி பிழைப்பு நடத்தும் பொன்னையா போன்ற இடைத் தரகர்களும் குற்றவாளிகளே. 

இதைவிட படித்த நாகரிகமான சட்டத்திட்டங்களை தெரிந்த ரிஷாட் பதியுதீன் போன்ற மக்கள் பிரதிநிதிகள் இளம் பிஞ்சுகளை வீட்டு வேலைக்கு அனுமதிப்பது என்பதை எந்த வகையிலும் எற்றுக்கொள்ள முடியாது.   பாரிய குற்றம். சட்ட மீறல். வறுமை காரணமாகவே படிப்பை பாதியில் கைவிட்டு வேலைக்காரர்களாக செல்கிறார்கள் என்றால் இதற்காக வெட்கப்பட்ட வேண்டியது மலையகத் தலைமைகளே. இன்று 82ஆவது அகவையில் காலடிவைக்கும் இ.தொ.கா. இம்மக்களின் வறுமையைப் போக்குவதற்கு உருப்படியான திட்டங்கள் எதனையாவது செயல்படுத்தியிருக்கின்றதா என்ற கேள்வி எழாமல் இல்லை.  
தொண்டமான் ஞாபகார்த்த மன்றம், பிரஜாசக்தி மூலம் பெருந்தோட்ட சிறார்களைப் பாதுகாப்பதற்கான வேலைத் திட்டங்களை இ.தொ.கா ஆரம்பிக்கும் என்று கடந்த 20ஆம் திகதி இடம்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கூறி இருக்கின்றார் இ.தொ.கா. பொதுச் செயலாளரும் இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான். எப்போதோ செய்திருக்க வேண்டியது என்றாலும் இப்போதாவது உணர்வு வந்திருப்பது நல்லதே. வெறும் வாக்குறுதியோடு நின்று விடமால் காரியத்தை உடனே ஆரம்பிக்க வேண்டும். அதற்கு முன்னேற்பாடுகள் அவசியம். முதலில் கொழும்பு போன்ற நகர வீடுகளில் 18 வயதுக்கும் குறைந்த வயதுடைய ஆயிரக்கணக்கான சிறுவர் சிறுமியர் வேலைக்காரர்களாக கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

அவர்களை அங்கிருந்து மீட்டாக வேண்டும். அதற்காக தோட்டங்கள் தோறும் கணக்கொடுப்பு நடத்தப்படுவது உசிதமானது. அதன்மூலம் சேகரிக்கப்படும் விபரங்களின் அடிப்படையில் சட்டரீதியிலான அணுகுமுறைகள் மூலம் மட்டுமே இந்தப் பிஞ்சுகளைப் பாதுகாக்க முடியும். ஏனெனில் வீட்டு வேலைக்காக அனுப்பியிருக்கும் உங்கள் பிள்ளைகளைத் திரும்பவும் கூட்டி வாருங்கள் என்று சொன்னால் அப்படியே நடக்கும் என்று சொல்ல முடியாது. ஹிஷாலினி போன்ற எத்தனை பாலகிகளின் பெற்றோர் பிள்ளைகளை அடகு வைத்து சம்பளத்தைவிட மேலதிகமாக பணம் வாங்கி இருக்கிறார்களோ, தெரியாதல்லவா ! 
அது மட்டுமின்றி உங்கள் வீடுகளில் பணிபுரியம் பால்ய வயதுகாரர்களை உடனடியாக பெற்றோர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தால் மட்டும் காரியம் ஆகப்போவது கிடையாது. எனவேதான் சட்டத்தின் அழுத்தம் அவசியமாகின்றது. குறிப்பாக சிறுவர் பராமரிப்புத் திணைக்களத்தின் கடைக்கண்ணையாவது திறக்க வேண்டியது முக்கியம். இதற்கான அழுத்தங்களைப் பிரயோகிக்க வேண்டியது இ.தொ.காவினதும் தமிழ் முற்போக்குக் கூட்டணியினரின் கடப்பாடு. 
மலையக பாராளுமன்ற உறுப்பினர்கள் பொறுப்புடன் கருத்துக்களை கூறுவது நல்லது. மலையக சிறுவர்கள் ஏற்கனவே விட்டு வேலைக்குக் போய் உயிரிழந்த பல சம்பவங்கள் இருக்கின்றன. பல தவறுகளும் துஷ்பிரயோகங்களும் பணக்காரர்களின் பண பலத்தாலும் அரசியல் செல்வாக்கினாலும் மூடி மறைக்கப்பட்டுள்ளன. அவ்வாறு ஒரு அவலம் இந்த ஹிஷாலினி விடயத்திலும் நடந்து விடக்கூடாது என்பதே புத்திஜீவிகளின் கவலை.  

உண்மையில் இன்று பெருந்தோட்டப் பிரதேசங்களில் சிறுவர் சிறுமியர் உடல் உளவியல் ரீதியிலான தாக்கங்களுக்கு உள்ளாக்கப்படும் சூழ்நிலையே காணப்படுகின்றது. போஷாக்கு குறைபாடு, சுகாதார பின்னடைவு, பிள்ளைகளின் கல்வி விருத்தி சம்பந்தமான ஆர்வம் குறைந்த பெற்றோர், கரிசனையற்ற பாடசாலை நிர்வாகம், குறைந்த அளவிலான சமூக பங்களிப்பு என்பனவே இதனை தீர்மானிப்பதாகவே ஆய்வுகள் சுட்டுகின்றன.  

நெல்சன் மண்டேலா பெற்றோர்களிடம் உருக்கமான வேண்டுகோள் ஒன்றை விடுத்திருந்தார். அவர் சொல்கிறார், நீங்கள் உங்கள் குழந்தைகளைக் கைவிட்டால் எமது நாட்டையே கைவிடுகிறீர்கள் என்று அர்த்தம் என்று. குழந்தைகளைச் கைவிடுவது என்பது இரண்டு அம்சங்களை உள்வாங்கி நிற்கின்றது. ஒன்று பலவீனமான பராமரிப்பு. அடுத்தது அறிவுூட்டலில் ஆர்வம் இன்மை. 

இதனால் குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகின்றது. அவர்கள் எல்லாவகைளிலும் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக நேரிடுகின்றது. 18 வயதிற்கும் குறைந்த பிள்ளைகளை வேலைக்கு அமர்த்துவது போலவே அனுப்புவதும் குற்றமே! 
கொள்கை ரீதியிலான இந்த ஏற்பாடு பெருந்தோட்டப் பிரதேசங்களைப் புறக்கணிப்பதன் பாதிப்பையே தற்போதைய நிகழ்வுகள் உணர்த்துகின்றன. சிறுவர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள் இனம் காண்பதில் சமூக விழிப்புணர்வு அவசியம். பெருந்தோட்ட மக்களை மையமாக வைத்து இயங்கிக் கொண்டிருக்கும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் நுவரெலியா மாவட்டத்திலேயே அதிகம். இவற்றுள் அநேகமானவை சிறுவர் நலன் குறித்துப் பேசுபவை. இருந்தும் இங்குதான் அதிக அதிகமான சிறுவர் துஷ்பிரயோகங்கள் இடம்பெறுகின்றன.

வீடுகளில், பாடசாலைகளில், வேலை செய்யும் இடங்களில், பிரத்தியேக வகுப்புகளில் இவ்வாறான தவறுகள் தொடர்ச்சியாகவே நடக்கின்றன. பயம், ஏன் வீண்வம்பு என்னும் அலட்சியம், எனோதானோ போக்கு போன்ற காரணங்களால் பல தவறுகள் மூடி மறைக்கப்பட்டு விடுகின்றன.

இதனால் பலவீனமான சிறுவர் கூட்டமொன்றைத் தாங்கிய ஒரு சமூகமாக பெருந்தோட்டச் சமூகம் மாறிவரும் அபாயம் எற்பட்டுள்ளது. பெற்றோர் சிந்தித்து செயற்பட வேண்டிய நெருக்கடியான நிலையினை செல்வி ஹிஷாலியின் அகால மரணம் உணர்த்தி நிற்கிறது. அதனை எத்தனை பெற்றோர் உள்ளபடியே உள்வாங்கிக்கொள்ளப் போகிறார்களோ?    

பன். பாலா

Comments