விசாரணையில் வெளிவரும் திடுக்கிடும் தகவல்கள்! | தினகரன் வாரமஞ்சரி

விசாரணையில் வெளிவரும் திடுக்கிடும் தகவல்கள்!

வீட்டுப் பணிக்கு அமர்த்தப்பட்ட சிறுமி ஹிஷாலினி யின் உயிரிழப்பு மற்றும் அச்சிறுமிக்கு இழைக்கப்பட்டதாக கூறப்படும் பலவிதமான கொடுமைகள் தொடர்பான தகவல்கள் நாளும் பொழுதும் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. சிறுமி ஹிஷாலினிக்கு நடந்துள்ள கொடுமைகள் தொடர்பாக பொலிஸ் விசாரணையில் வெளிவருகின்ற தகவல்கள் பெரும் அதிர்ச்சியை தருகின்றன. இவ்வாறும் ஒரு சின்னஞ்சிறு பெண்ணை கொடுமைப்படுத்துவதற்கு எப்படியெல்லாம் மனம் வருகின்றது என்று எண்ணத் தோன்றுகின்றது.

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதினீன் வீட்டில் இதற்கு முன்னர்   பணிப்பெண்களாக இருந்தவர்களும் அங்கு துன்புறுத்தப்பட்டதாகவும், அப்பெண்கள் மீது பாலியல் கொடுமை இழைக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளிவருகின்றன. இவ்வாறான தொடர்ச்சியான குற்றச்சாட்டுக்கள் அரசியல் பிரபலமான மேற்படி குடும்பத்தின் மீது சுமத்தப்பட்டு வருகின்றன.

பொலிஸ் விசாரணைகளில் நாளுக்கு நாள் வெளிவரும் புதிய தகவல்கள் நாடு முழுவதிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றன. பாதிக்கப்பட்டவர்களுக்கு எதிராக நீதி கிடைக்க வேண்டும் என்ற கோஷம் நாடெங்குமிருந்து ஓங்கி ஒலிக்கின்றது.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணியாற்றிய டயகம பிரதேசத்தைச் சேர்ந்த 16 வயதுடைய ஹிஷாலினி என்ற சிறுமி எரிகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்த சம்பவம் கடந்த இரு வாரங்களாக நாடெங்கும் பெரும் துயரத்தையும். அதிர்வலைகளையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் குடும்ப உறுப்பினர்கள் மூவர் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டிருப்பதுடன், இதுவரை 30 இற்கும் அதிகமானவர்கள் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். உயிரிழந்த சிறுமி பாலியல் கொடுமைகளுக்கு உள்ளாகியிருப்பது தொடர்பில் நாளுக்கு நாள் புதிய தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

கைதானவர்களில் ரிஷாட் பதியுதீனின் மனைவியும் அடங்குகின்றார். சிறுமியை கொடுமைப்பத்தியதாக அவர் மீது குற்றச்சாட்டு உள்ளது. சிறுமி ஹிஷாலினி தும்புத்தடியினால் கடுமையாகத் தாக்கப்பட்டு வந்துள்ளதாக தகவல்கள் வெளிவருகின்றன. இக்குற்றச்சாட்டுக்களெல்லாம் ஆதாரபூர்வமாக நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்ட பின்னரே அவை பற்றிய முழுமையான தகவல்களை நாம் அறிந்து கொள்ள முடியும்.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் விசாரணைகளுக்காக குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் ரிஷாட் பதியுதீன் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில், ஹிஷாலினியின் உயிரிழப்பு விவகாரத்தில் ரிஷாட் பதியுதீனின் மனைவி, மனைவியின் தந்தையார், ரிஷாட் பதியுதீனின் மைத்துனர் மற்றும் குறித்த சிறுமியை வேலைக்கு அழைத்து வந்த தரகர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக தொடர்ச்சியான விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதை போன்று ஹிஷாலினி விடயத்தில் விசாரணைகளை ஆழப்படுத்தும் போது குறித்த வீட்டில் இதற்கு முன்னர் இடம்பெற்ற பல்வேறு சம்பவங்களும் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. இதற்கு முன்னர் வீட்டு வேலையாட்களாக பணியமர்த்தப்பட்ட அதிகமான இளம் பெண்கள், அதே வீட்டில் உடல் ரீதியான தண்டனை மற்றும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார்கள் என்பது இப்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளதாக பொலிஸ் விசாரணைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. விசாரணைக்காக தொடர்ந்தும் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருக்கும் அரசியல்வாதிக்கு இப்புதிய விடயங்கள் மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளன என்றே கூற வேண்டும்.

ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணியாற்றி உயிரிழந்த ஹிஷாலினி தற்கொலை செய்து கொண்டதாக ஆரம்பத்தில் கூறப்பட்டாலும், பின்னர் இது பலத்த சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த சிறுமியின் பெற்றோர் தங்களது மகளின் உயிரிழப்பில் சந்தேகம் எழுப்பியுள்ளனர். இதனைத் தொடர்ந்து விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டிருப்பதுடன், தொடர்ச்சியாக பலரிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.    இவ்விடயத்தில் சட்ட ஆலோசனைகளை வழங்க சட்டமா அதிபர் தனியான குழுவொன்றையும் நியமித்துள்ளார். அது மாத்திரமன்றி, நீதிமன்றத்தின் உத்தரவுக்கு அமைய ஹிஷாலினியின் உடல் மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டு புதிதாக பிரேத பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. தொடர்ச்சியான விசாரணைகள் மேலும் புதிய தகவல்களைக் வெளிப்படுத்தலாம்.

இதேவேளை சிறுமி ஹிஷாலினியின் உயிரிழப்பு சம்பவம் ஏற்பட்டு இரண்டு நாட்களில் குற்றப் புலனாய்வுப் பிரிவின் தடுப்புக் காவலில் இருந்த ரிஷாட் பதியுதீன் திடீர் சுகவீனமுற்று தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். ஒரு வாரத்தின் பின்னர் மீண்டும் அவர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரின் தடுப்புக் காவலுக்குத் திரும்பியிருந்தார். வைத்தியசாலையில் இருந்த காலத்தில் அவருக்கு வழங்கப்பட்ட மருந்துகள் மலசலகூடத்தின் ஜன்னல்கள் ஊடாக வெளியே வீசப்பட்டதாகவும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

இவ்வாறான நிலையில், ரிஷாட் பதியுதீனின் மனைவி உள்ளிட்ட கைது செய்யப்பட்ட நபர்கள் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். 2015-2019 காலப் பகுதியில் குறித்த வீட்டில் பணியாற்றிய 22 வயது பெண் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் ரிஷாட் பதியுதீனின் மனைவியுடைய சகோதரர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவ்வீட்டில் பணியாற்றிய 11 பெண்கள் இது போன்ற துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாகியிருப்பதாக இதுவரையான விசாரணைகளில் தகவல்கள் வெளியாகியுள்ளன. பாதிக்கப்பட்ட பெண்கள் வாக்குமூலங்கள் அளித்து வருவதாகவும் கூறப்படுகிறது. அவ்வீட்டில் பணியாற்றும் பெண்கள் சரியான முறையில் வீட்டு வேலைகளை மேற்கொள்ளா விட்டால் குறித்த அரசியல்வாதியின் மனைவி மோசமான முறையில் நடந்து கொள்வார் என அங்கு பணியாற்றியவர்கள் விசாரணைகளில் வாக்குமூலம் அளித்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஹிஷாலினியை வேலைக்கு அழைத்து வந்த தரகரே குறித்த வீட்டுக்கு 11 பெண்களையும் வேலைக்கு அழைத்து வந்துள்ளார். அந்தத் தரகர் இது போன்று திட்டமிட்ட செயற்பாடுகளில் ஈடுபட்டு வருபவரா என்ற ரீதியிலும் விசாரணைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. ஹிஷாலினியின் உயிரிழப்புச் சம்பவத்தைத் தொடர்ந்து குறைந்த வயதில் வீடுகளில் பணிக்கு அமர்த்தப்படும் சிறுவர் சிறுமியர் குறித்து அதிகாரிகளின் கவனம் திரும்பியுள்ளது. கொழும்பு உள்ளிட்ட பகுதிகளில் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ள 16 வயதுக்குக் குறைவானவர்களை மீட்பதற்கான விசேட திட்டமொன்று பொலிஸாரால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதற்கான தேடுதல்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

குறைந்த வயதுடையவர்களை வேலைக்கு அமர்த்துவது சட்டரீதியாகத் தடை செய்யப்பட்டதொன்றாகக் காணப்பட்டாலும், சட்டத்தை மீறும் நடவடிக்கை தொடர்ச்சியாக இடம்பெற்றே வருகிறது. குறிப்பாக கொழும்பிலும் புறநகர் பகுதிகளிலும் உள்ள தனவந்தர்கள், அரசியல் பிரமுகர்களின் வீடுகளில் பணியாற்றுவதற்காக விசேடமாக மலையகப் பகுதிகளிலிருந்தே சிறுவர் சிறுமியர் அழைத்து வரப்படுகின்றனர். அங்குள்ள மக்கள் மத்தியில் நிலவும் கடுமையான வறுமையை தரகர்கள் தமக்கு சாதகமாகப் பயன்படுத்துகின்றனர். அது மாத்திரமன்றி அவர்களிடம் காணப்படும் அப்பாவித் தனத்தை சிலர் தமது துர்நோக்கங்களுக்காக துஷ்பிரயோகம் செய்கின்றனர். இந்த நிலைமை மாற்றப்பட வேண்டும் என்பதில் எவருக்கும் மாற்றுக் கருத்து இல்லை.

எவ்வாறு இருந்தாலும் மக்களின் பிரதிநிதியாக, சட்டவாக்க சபையில் மக்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் ஒருவர் வயது குறைந்த சிறுமி ஒருவரை வேலைக்கு அமர்த்தக் கூடாது என்ற அடிப்படை விடயத்தைக் கூட மதிக்காமல் நடந்து கொண்டிருப்பதே இங்கு நோக்கப்பட வேண்டியதாகவுள்ளது.

ஹிஷாலினியின் விவகாரத்துக்கு நீதி வேண்டியும், இவ்வாறான சம்பவங்கள் எதிர்காலத்தில் தடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியும் நாடு முழுவதிலும் குரல் எழுப்பப்படுகிறது. இருந்த போதும், மலையக மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துபவர்களும், சிறுவர்களுக்காக குரல்கொடுக்கும் அரசசார்பற்ற அமைப்புக்களின் முக்கியஸ்தர்களும் காலம் தாழ்த்தியே குரல்கொடுக்கத் தொடங்கியுள்ளனர். ஆகக் குறைந்தது மலையகத்திலிருந்து அழைத்து வரப்படும் சிறுவர் தொழிலாளர்களைத் தடுப்பதற்கு தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையினரின் உதவியுடன் இதற்கு முன்னர் இவர்கள் நடவடிக்கை எடுத்திருக்கவில்லை.

அதேநேரம், குழந்தைத் தொழிலாளர் தொடர்பான அனைத்து முக்கிய சர்வதேச சமவாயங்களையும் இலங்கை அங்கீகரித்துள்ளது. 1999ஆம் ஆண்டு நடைபெற்ற சர்வதேச தொழிலாளர் அமைப்பின் குழந்தைத் தொழிலாளர்களின் வடிவங்கள் என்ற மாநாடும் ஒன்றாகும். ஆபத்தான அல்லது ஆரோக்கியமற்ற சூழ்நிலைகளில் வேலை செய்யும் குழந்தைத் தொழிலாளர்களின் அபாயகரமான வடிவங்களை இது வரையறுக்கிறது, இதனால் ஒரு குழந்தை கொல்லப்படலாம், காயமடையலாம் அல்லது நோய்வாய்ப்படலாம், உடல் ரீதியாகவோ அல்லது மனரீதியாகவோ பாதிக்கப்படலாம் என்ற பட்டியலில் இலங்கை 52 வகை தொழில்களை உள்ளடக்கியுள்ளது, ஆனால் வீட்டு வேலை என்பது விதிவிலக்காக உள்ளது.

இந்த வெற்றிடத்தை உணர்ந்த பின்னர், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை, தொழில் திணைக்களத்துடன் இணைந்து பட்டியலில் தேர்ந்தெடுக்கப்பட்ட பல வகை ஆக்கிரமிப்புகளை, மிக முக்கியமாக வீட்டுத் தொழிலாளர்களைச் சேர்ப்பதற்கான ஒரு சக்திவாய்ந்த சட்டத்தை உருவாக்கி வருகிறது, இதன் மூலம் சிறார்களை (பெண்கள் மற்றும் சிறுவர்கள்) வீட்டு ஊழியர்களாக வேலைக்கு அமர்த்துவதைத் தடுக்க முடியும்.
தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவர் பேராசிரியர் முதிதா விதானபத்திரண இது பற்றிக் குறிப்பிடுகையில், சட்டவரைஞர் திணைக்களத்தில் உள்ள இந்த விடயம் சமீபத்திய சம்பவங்களை அடுத்து முன்னுரிமை பெற்று செயற்பாடுகள் துரிதப்படுத்தப்படும் என்றார். இதன் ஊடாக பெரும்பாலான வேலைவாய்ப்பு பிரிவுகளுக்கான குறைந்தபட்ச வயது 18 ஆக உயர்த்தப்படும். சிறுவர் தொழிலாளர் விடயத்தை கட்டுப்படுத்துவதற்கு அரசியல்வாதிகளுக்கு இது நல்லதொரு சந்தர்ப்பமாக அமையும்.

எதுவாக இருந்தாலும், சட்டம் இயற்றப்பட்டாலும் அதனை அனைத்துத் தரப்பினரும் சமமாக மதிக்க வேண்டும். ஹிஷாலினி விடயத்தைப் பொறுத்த வரையில் அவர் பணிக்கு அமர்த்தப்பட்டமை உள்ளிட்ட அனைத்து சம்பவங்களும் சட்டம் பற்றிய அறிவு இல்லாதவர்களால் மேற்கொள்ளப்படவில்லை. அது மாத்திரமன்றி குறித்த அரசியல் பிரமுகருக்கு எதிராக கடந்த காலத்திலும் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் காணப்படுகின்றன. இதில் பிரதானமாக வில்பத்து சரணாலய பகுதியில் காடுகளை அழித்து, பெறுமதி வாய்ந்த மரங்களை வெட்டியமை குறித்த குற்றச்சாட்டு காணப்படுகிறது.

இவ்வாறான பின்னணியில் அரசியல் அதிகாரங்கள் பயன்படுத்தப்படாமல் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைப்பதற்கு சட்டத்தை நிலைநாட்டும் தரப்பினர் செயற்பட வேண்டும். அது மாத்திரமன்றி எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாது தடுப்பதற்கான கூட்டுப் பொறுப்பு அனைவருக்கும் உள்ளது என்பதையும் மறந்து விடக் கூடாது.

Comments