பெருந்தொற்றும் பொருளாதார வளர்ச்சியும் | தினகரன் வாரமஞ்சரி

பெருந்தொற்றும் பொருளாதார வளர்ச்சியும்

இந்நாடு 2020மார்ச் மாதத்துடன் முன்னெப்பொழுதுமே நிகழ்ந்திராத வகையில் கொவிட் பெருந்தொற்று காரணமாக பெரும் பொருளாதார சரிவை சந்திக்கத் தொடங்கி அது இன்றளவும் நீடித்துக் கொண்டிருக்கிறது. நாட்டு மக்கள் என்ற வகையில் பெருந்தொற்றுக்கு எதிராக போராடுவதைப் போலவே அதன் வழியாக ஏற்பட்டிருக்கும் பொருளாதார சீர்குலைவையும் நாம் கையாளத்தான் வேண்டும். அரசு தற்போது தடுப்பூசி வழங்குவதில் முழு வீச்சுடன் செயல்பட்டு வருகிறது. சைனோஃபாம் ஊசி மருந்து போதிய அளவு கையிருப்பில் உள்ள அதே சமயம் ஏனைய தடுப்பூசிகளும் அவ்வப்போது வரவழைக்கப்படுகின்றன.

கொரோனாவிடமிருந்து மீண்டு நாம் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப வேண்டுமானால் தடுப்பூசி மட்டுமே ஒரே மீட்சி. உலக நாடுகளுக்கும் இது மட்டுமே மந்திரம். தடுப்பூசியை  பள்ளி மாணவர் உட்பட முப்பது சதவீதமானோருக்கு நாடளவில் ஏற்றப்படுமானால் பழைய வாழ்க்கைக்கு நாம் திரும்பிச் செல்ல முடியும். அதன் பின்னரும் கொரோனா நம் மத்தியில் இருக்கத்தான் போகிறது என்றாலும் அது மரண ஆபத்தையோ மோசமான நோய் நிலைகளையோ ஏற்படுத்தாது என்பதால் ஏராளமான நோய்க்கிருமிகளுக்கு மத்தியில் நாம் வாழ்ந்து கொண்டிருப்பதுபோல கொரோனாவும் அவற்றில் ஒன்றாக இருந்துவிட்டுப் போகட்டும் என விட்டு விடலாம்.

நாம் எம் நாளாந்த வாழ்வில் கவனிக்க வேண்டிய விஷயம். தொடரச்சியாக கைகளை அவ்வப்போது கழுவிக் கொள்கிறோமா, பொது இடங்களில் முகக் கவசம் அணிந்திருக்கிறோமா என்பதைத்தான். இவை இரண்டும் கொரோனாவை பரவவிடாது என்பது போலவே தடுமன், சளி காய்ச்சல், வயிற்று உபாதைகள், இருமல், அலர்ஜி போன்ற பல உபாதைகள் நம்மை அண்டுவதையும் தவிர்க்கும்.

தற்போது நாட்டில் கொரோனா மரண எண்ணிக்கையும் தொற்றாளர்களின் எண்ணிக்கையும் சடுதியாக அதிகரித்து காணப்படுகிறது. இத்தனை மாதங்கள் கழிந்த பின்னரும் மக்கள் கொரோனாவுடன் எப்படி பாதுகாப்பாக வாழ வேண்டும் என்பதில் அக்கறையற்றிருக்கிறார்களா அல்லது தற்போது அறிவிக்கப்பட்டிருக்கும் தளர்வுகளை மக்கள் துஷ்பிரயோகம் செய்வதால் இந் நிலை ஏற்பட்டுள்ளதா என்பதை வைத்தே மேலும் தளர்வுகளை அறிவிக்கக் கூடுமா என்பது குறித்து ஆராய முடியும்.

தடுப்பூசி ஏற்றப்பட்டு வரும் அதேசமயம் படிப்படியாக தளர்வுகளையும் கொண்டு வருவதன் மூலம் பழைய நிலைக்கு படிப்படியாக செல்ல முடியும் என அரசு நம்புகிறது. ஆனால் மக்களின் ஒத்துழைப்பின்றி இதை சாதிக்க முடியாது. இங்கே மக்கள் குறிப்பாக மாதச் சம்பளம் பெறுபவர்கள், அரசு ஊழியர்கள், பெருமளவு பிரச்சினைகளின்றியும், குறைந்த அளவே பணி செய்ய வேண்டியிருப்பதால் சோம்பேறிகளாகியுமுள்ளனர். இன்னொரு பக்கம், அவர்கள் பெரும்பாலானவர்கள், மிகவும் சிரமப்பட்டு வாழ்வாதாரத்துக்காக அல்லாடும் நிலையில் காணப்படுகின்றனர். இம்மக்கள் பிரிவினர் கவனிக்கப்படாமல் விடப்பட்டால் அது நாட்டில் அமைதியின்மையைத் தோற்றுவிக்கலாம்.

இதனால்தான் அரசு பெருமளவு தளர்வுகளை அறிவிப்பதற்கு எத்தனிக்கிறது. ஆனால் சிறிதளவு தளர்வு அறிவிக்கப்பட்டதுமே மக்கள் பெருமளவில் வெளிக்கிளம்பி வழமைபோல நடமாடத் தொடங்கி விடுகிறார்கள். புதுப் புது வைரஸ் திரிபுகள் உலவும். போது மிகுந்த எச்சரிக்கை அவசியம். இத் தொற்றுப் பரவலை இருதலைக் கொள்ளி எறும்புடன் ஒப்பிடலாம். மக்கள் தமது வாழ்வாதாரத்தைத் தக்க வைத்துக் கொள்வதற்காக வெளியே பணிகளைச் செய்ய செல்லவும் வேண்டும் கொரோனா தொற்றுக்கு ஆளாகமலும் இருக்க வேண்டும் என்ற நிலை இருதலைக் கொள்ளி எறும்பைப் போன்றதுதான்.

இச் சூழலில் பெருந்தொற்றை கட்டுப்படுத்தவும் வேண்டும் பொருளாதார வளர்ச்சிக்கான மற்றும் தனிமனித வருமானத்துக்கான முயற்சிகளை மேற்கொள்ளவும் வேண்டும் என்பதில் அரசு மேற்கொள்ளும் திட்டங்களுக்கு மக்கள் உடன்பட வேண்டிய அவசியம் உள்ளது. முன்னர் அமெரிக்காவிலும் பின்னர் அவுஸ்திரேலியா சிட்னியிலும் முழு அடைப்பை எதிர்த்து மக்கள் ஆர்ப்பாட்டங்களில் இறங்கினர். அவர்களது வருமானத்துக்கான வழிகள் அடைக்கப்படுவதாகக் கருதியே போராட்டங்களில் ஈடுபட்டனர். இலங்கையில் தற்போது பல போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அவை அனைத்துமே அரசியல் எதிர்பார்ப்புகளைக் கொண்டவை. நாங்கள் வேலைகளுக்கு போக வேண்டும். எங்களை பணிசெய்ய விடுங்கள் என்ற போராட்டம் நடைபெறுமானால் அது வரவேற்கக் கூடியதாக இருக்கும்.

நாட்டில் டொலர் பற்றாக்குறை, நிதி கையிருப்பில் வீழ்ச்சி, வெளிநாட்டு முதலீடுகளில் வீழ்ச்சி போன்ற கடுமையான சூழலில் இருந்து வெளிவருவது குறித்து ஒரு விழிப்புணர்வு எம்மிடையே ஏற்பட வேண்டும். இரண்டாவது உலகப் போரின் முடிவில் ஜெர்மனும் ஜப்பானும் துவம்சம் செய்யப்பட்ட நிலையில் காணப்பட்டன. மேற்குலக நாடுகளின் உதவியுடன் அவை வெகு விரைவிலேயே எழுந்து நின்றன. நாம் எவ்வாறேனும் எழுந்து நிற்க வேண்டும் என்ற விழிப்புணர்வு மக்களிடம் ஏற்பட்டமையே இதற்கான முதல் காரணம். ஹிட்லரையும் நாஸிக் கட்சியையும் அவர்கள் குற்றம் குறை சொல்லிக்கொண்டு மதகுகளின் மேல் ஏறி அமர்ந்து கதையளக்கவில்லை. ஜெர்மனியரும் ஜப்பானியரும் கடுமையாக உழைத்ததன் காரணமாகவும், அரசியல் முரண்பாடுகளுக்கு அப்பால் அந்த அரசுகளின் பொருளாதார மீள்எழுச்சித் திட்டங்களுக்கு ஆதரவாக செயற்பட்டதாலுமே பெரும் பொருளாதார வல்லரசுகளாக அவை எழும்பி நின்றன.

கடந்த வெள்ளிக்கிழமை கொழும்பில் நடைபெற்ற பட்டய கணக்காளர் காலை போசன கருத்தரங்கில் கலந்து கொண்ட இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால், எல்லாம் சரியாக இருப்பதுபோல காட்டப்படுவது வேறு உண்மை நிலைவேறு என்பதால் நிலைமைகளை சீர்செய்வதற்கு, பெருந்தொற்றை காரணம்காட்டி முடங்கிக் கிடக்காமல் எமது பொருளாதார செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டியதே இப்போது நாம் ஆற்ற வேண்டிய பணி எனறு குறிப்பிட்டார்.

இக் கஷ்ட நிலை இலங்கைக்கு புதியதல்ல. 1962 இராணுவ புரட்சி சதி, 1971 ஜே.வி.பி. கிளர்ச்சி, 89 ஜே.வி.பி. கிளர்ச்சி, 30 வருடகால யுத்தம் எனப் பொருளாதார நடவடிக்கைகளை நசுக்கும் பல விஷயங்களுக்கு மத்தியில் பொருளாதார வளர்ச்சி எட்டப்பட்டது. தனியார்த்துறைக்கு தேவையானவற்றை செய்து தர அரசு அதிகாரிகள் பேதம் பார்க்காமல் முன்வரவும் வேண்டும். அரசு, தனியார்த்துறை மற்றும் உண்மையாகவே உழைக்கு விரும்பும் மக்கள் என இந்த மூன்றும் இணைந்து செயல்பட்டால் மாத்திரமே பெருந்தொற்று நீங்கும்; நாடுபொருளாதாரத்தில் வீறுநடைபோடும்!
 

Comments