சர்வதேச முதலீடுகளை ஈர்ப்பதற்கான வியூகங்களுக்கே முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் | தினகரன் வாரமஞ்சரி

சர்வதேச முதலீடுகளை ஈர்ப்பதற்கான வியூகங்களுக்கே முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும்

தற்போது அரசாங்கம் முதலீடுகள் நாட்டுக்குள் உள்வர வேண்டுமென்று வழிமேல்  விழிவைத்துக் காத்திருக்கும் சந்தர்ப்பத்தில் தரமிடல் நிறுவனங்களுடன்  கொம்புகளை பிணைத்து சண்டைக்குப் போவது புத்திசாலித்தனமான ஒரு  நடவடிக்கையல்ல. மாறாக தரமிடல் நிறுவனங்களுடன் தொழில்சார் ரீதியில்  தொடர்புகளைப் பேணி தம்மிடமுள்ள நாட்டின் பொருளாதாரம் குறித்த சரியான  உண்மைத் தன்மைகொண்ட தகவல்களை வெளிப்படுத்துவதன் மூலம் சாதகமான  பெறுபேறுகளைப் பெற அரசாங்கம் முயற்சிக்க வேண்டும் 

கொவிட் நிலைமை சுமுகமாகும்போது நாட்டுக்குள் உல்லாசப்பயணிகள் வருகை  மிகப்பெரிய பாய்ச்சலைக் காணுமெனவும் அதன்மூலம் தற்போதைய நெருக்கடிகளைச்  சமாளித்துவிடலாமெனவும் நம்பப்படுகிறது. ஆனால் கோவிட் நோய்த்தொற்று  விரைவாகத் தீரும், சுற்றுலா விரிவாகும் என்பதற்கான எந்தவிதமான சாதகமான  சமிக்ஞையும் இதுவரை இல்லை 

இலங்கைப் பொருளாதாரம் இப்போது எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு சர்வதேச நாணய நிதியத்திடம் உதவி பெறுவதன் மூலம் தீர்வு காண முடியாது என இலங்கை அரசாங்கத்தின் சார்பில் பேசவல்ல அதன் பொருளாதாரக் கொள்கை வகுப்பில் அதிக செல்வாக்கு செலுத்தும் முக்கிய மூத்த அதிகாரி ஒருவர் கடந்த வாரம் அறிவித்திருந்தார். 
அதன்படி இப்போதைக்கு சர்வதேச நாணய நிதியத்தின் உதவிகளைப் பெறும் சாத்தியம் தவிர்க்கப்பட்டுள்ளது என்பதை தெளிவாகப் புரிந்துகொள்ள முடிகிறது. அந்நிறுவனத்திடமிருந்து கடன்களைப் பெறுவதன் மூலம் நாட்டின் வளர்ச்சிக்கு முதுகெலும்பாக விளங்கும் சுற்றுலாத்துறை போன்ற துறைகளை விருத்தி செய்ய முடியாதெனவும் நாடு கோவிட் 19 நோய்த்தொற்றிலிருந்து விரைவாக மீட்சியடையும்போது சுற்றுலாத்துறை துரிதமாக வளர்ச்சியடையும் அதேவேளை, உள்நாட்டு விவசாயத்துறையை நிலைப்படுத்தி விருத்தி செய்வதன் ஊடாக பொருளாதார மீட்சியை ஏற்படுத்தலாம் என அரசாங்கம் நம்புவதாகவும் தெரிகிறது.  

கடன்களை விட முதலீடுகளே நாட்டின் முக்கிய தேவை என அரசாங்கம் கருதுவதில் தவறில்லை. ஆனால் சர்வதேச ரீதியில் அந்த முதலீடுகளைக் கவரும் அளவுக்கு கடந்த காலத்தில் முதலீட்டாளர்களின் விருப்பத்திற்குரிய தெரிவாக இலங்கை இருக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.  

கடந்த 27.07.2021 திகதி இலங்கை முதிர்வடைந்த தனது இறைமைக் கடன்களில் மேலும் ஒரு பில்லியன் ரூபாவை மீளச்செலுத்தியது. இது இலங்கையின் வெளிநாட்டுச் சொத்து ஒதுக்குகளை மேலும் குறைவடையச் செய்திருக்கிறது. சர்வதேச கடன் தரமிடல் நிறுவனமான மூடீஸ் இலங்கை அரசாங்கத்தின் இறைமைக் கடன் மீளச்செலுத்தும் ஆற்றலை மீளாய்வுக்குட்படுத்தி வருவதாக இதே காலப்பகுதியில் அறிவித்திருந்தது. இலங்கை அரசாங்கத்தின் இறைமைக் கடன் தரமிடலை மேலும் கீழ்நோக்கி நகர்த்துவதே இதன் நோக்கமாகும். இதன் மூலம் இலங்கை அரசாங்கம் தான் பெறும் கடன்களை மீளச் செலுத்தும் ஆற்றல் மதிப்பீடு செய்யப்படுகிறது.  

அரசாங்கம் சர்வதேச இறைமைக் கடன் முறிகளை (International Sovereign Bonds) வெளியீடு செய்ய எதிர்பார்த்துள்ள சூழலில் இத்தரப்படுத்தல் வெளியிடப்படுவதால் அதில் முதலீடு செய்ய விரும்புபவர்களின் முதலீட்டுத் தீர்மானங்களில் அது கணிசமாக செல்வாக்குச் செலுத்தும். இதனால் இந்நடவடிக்கை அரசாங்கத்தின் கடுமையான விமர்சனங்ளைச் சந்தித்திருக்கிறது. தங்களிடம் எவ்வித பேச்சுவார்த்தைகளும் நடத்தாமல் எங்கிருந்து பெற்ற தகவல்களை அடிப்படையாக வைத்துக்கொண்டு அந்த மீளாய்வு செய்யப்படுகிறது.  

இலங்கை அரசாங்கம் தான் பெற்ற எந்தக் கடனையும் தவறாமல் மீளச் செலுத்திவரும் நிலையில் இப்போது இந்த அறிக்கை தேவையற்ற ஒன்று எனவும் அது வெளியிடப்பட்ட காலம் குறித்து நோக்குமிடத்து உள்நோக்கமுடையதாகத் தெரிவதாகவும் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் காட்டமாக எதிர்வினை காட்டப்பட்டுள்ளது. ஆனால் கடன் தரமிடல் நிறுவனங்கள் இதற்கு முன்னரும் அவ்வாறான மீளாய்வுகளை செய்ததும் இப்படியான பதிலடிகளை அரசாங்கம் முன்னரும் வழங்கியதும் ஆனால் அந்நிறுவனங்கள் தமது தரமிடலை மாற்றிக்கொள்ளாததும் புதிதான ஒன்றல்ல.  

மேற்குலக நாடுகளில் தலைமையகங்களைக் கொண்ட மேற்படி நிறுவனங்களை வேண்டுமென்றே இலங்கையை தேவையற்ற விதத்தில் சீண்டிப்பார்ப்பதாக அரசாங்கம் கருதுவதாக அதன் எதிர்வினையின் வீரியத்தைப் பார்க்கும் போது தோன்றுகிறது. ஆனால் இவ்விதமான தரமிடல்களை இலங்கை ஏற்றுக் கொண்டாலென்ன ஏற்றுக் கொள்ளாவிட்டாலென்ன இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ள எதிர்பார்க்கும் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் முதலீட்டுத் தீர்மானங்களில் தரமிடல் பெறுபேறுகள் முக்கிய செல்வாக்குச் செலுத்தி வருகிறது.  

ஒரு அரசாங்கம் தனது நாட்டின் முதலீட்டுச் சூழல்பற்றி சிலாகித்துப் பேசுவதை நம்புவதைவிட சர்வதேச முதலீட்டாளர்கள் கடன் தரமிடல் நிறுவனங்களின் தரப்படுத்தல்களையே தொழில்சார் ரீதியில் அங்கீகரிப்பார்கள். அத்துடன் இலங்கையில் முதலீடு செய்ய விரும்பும் ஒவ்வொரு தனியார் முதலீட்டாளரிடமும் அரசாங்கம் தனது நாட்டின் முதலீட்டுச் சூழலின் தரம் பற்றி தனித்தனியே விளக்கமளித்துக் கொண்டிருக்கவும் முடியாது.  

தற்போது அரசாங்கம் முதலீடுகள் நாட்டுக்குள் உள்வர வேண்டுமென்று வழிமேல் விழிவைத்துக் காத்திருக்கும் சந்தர்ப்பத்தில் தரமிடல் நிறுவனங்களுடன் கொம்புகளை பிணைத்து சண்டைக்குப் போவது புத்திசாலித்தனமான ஒரு நடவடிக்கையல்ல. மாறாக தரமிடல் நிறுவனங்களுடன் தொழில்சார் ரீதியில் தொடர்புகளைப் பேணி தம்மிடமுள்ள நாட்டின் பொருளாதாரம் குறித்த சரியான உண்மைத் தன்மைகொண்ட தகவல்களை வெளிப்படுத்துவதன் மூலம் சாதகமான பெறுபேறுகளைப் பெற அரசாங்கம் முயற்சிக்க வேண்டும்.

இறைமைக் கடன் தரமிடல் மாற்றங்களை இலங்கைக்கு எதிரான மேற்குலக சதி என்று பாடப்படும் பல்லவிகளெல்லாம் உள்ளூர்வாசிகளின்   நுகர்வுக்கு வேண்டுமானால் எடுபடலாம் ஆனால் சர்வதேச ரீதியில் அது சாத்தியமில்லை.  
2019 ஆம் ஆண்டிறுதியில் கோவிட் தொற்று பரவத் தொடங்கினாலுங்கூட இந்த ஆண்டில் ஆசிய வட்டகையைச் சேர்ந்த நாடுகளில் பல இலங்கையை விட பலமடங்கு வெளிநாட்டு நேரடி முதலீட்டைக் கவர்ந்திருந்தன.  உதாரணமாக, இலங்கையுடன் அடிக்கடி ஒப்பிடப்படும் சிங்கப்பூர்   92.1 பில்லியன் டொலர்களையும், வியட்நாம் 16.1 பில்லியன் டொலர்களையும், தாய்லாந்து 4.1 பில்லியன் டொலர்களையும், கம்போடியா 3.7 பில்லியன் டொலர்களையும், அரசியல் கொதிநிலைகொண்ட மியன்மார் 2.8 பில்லியன் டொலர்களையும், வங்காள தேசம் 1.6 பில்லியன் டொலர்களையும் கவர்ந்திழுத்துக் கொண்டன. இதே 2019 இல் இலங்கையின் வெளிநாட்டு நேரடி முதலீடுகளின் அளவு வெறும் 0.8 பில்லியன் டொலர்கள் மாத்திரமேயாகும்.  

ஆகவே, இன்றைய சூழ்நிலையில் வெளிநாட்டு நேரடி முதலீடுகளை எதிர்பார்க்கும் அளவுக்கு அதிகரிப்பது சாத்தியமாகத் தோன்றவில்லை. இலங்கையின் உறுதியற்ற வெளிநாட்டுத் திரவத்தன்மை, உள்நாட்டில் அரச வருவாய்களை அதிகரித்துக்கொள்ள முடியாத நிலை, இலங்கையில் வெளிநாட்டுச் சொத்தொதுக்குகள் குறைவடைந்து செல்வதைத் தடுக்க அரச நிறுவனக்கட்டமைப்பினால் முடியாது போனமை போன்ற பல்வேறு காரணிகள் இலங்கைப் பொருளாதாரத்தின் உடைந்து விழுந்தன்மை அதிகரித்துச் சென்றமைக்கான காரணங்களாகும். தனியார்துறை நிறுவனங்களின் செயலாற்றம்  தொடர்பிலும் இவ்வாறான ஒரு நிலைமை அதிக பாதிப்புகளை ஏற்படுத்தும். உள்நாட்டில் ஏற்பட்டுள்ள அந்நியச் செலாவணி பற்றாக்குறை ஏலவே வணிக நடவடிக்கைகளில் ஒரு சுருக்கத்தன்மையினை எற்படுத்தியுள்ளது. இது தொடருமாயின் வங்கிகள் உள்ளிட்ட நிறுவனங்களின் திரவத்தன்மை குறித்தும் பிரச்சினைகள் எழும். 

சர்வதேச நாணய நிதியத்திடம் சென்றால் நிதி ரீதியில் நொருங்கிவிழும் தன்மை கொண்ட நாடு என்ற நிலையில் இருந்து மீட்சிபெற்று புதிய கடன்களைப்பெற நம்பகத்தன்மையை ஏற்படுத்தலாம். ஆனால் அரசாங்கத்தின் தெரிவாக அது இல்லை.   உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி என்பவற்றிடமிருந்து அடுத்துவரும் மூன்று வருடங்களில் நீர்வழங்கல், நெடுஞ்சாலைகள் கல்வி மற்றும் சுகாதாரம் ஆகிய துறைகளின் செயற்திட்டங்களுக்காக 3 பில்லியன் டொலர்கள் கிடைக்குமென அரசாங்கம் கருதுகிறது. அவற்றை விரைவுபடுத்தி அந்நிதியை நாட்டுக்குள் கொண்டுவந்தால் நிலைமையைச் சமாளிக்கலாமெனவும் கொவிட் நிலைமை சுமுகமாகும்போது நாட்டுக்குள் உல்லாசப்பயணிகள் வருகை மிகப்பெரிய பாய்ச்சலைக் காணுமெனவும் அதன்மூலம் தற்போதைய நெருக்கடிகளைச் சமாளித்துவிடலாமெனவும் நம்பப்படுகிறது.
ஆனால் கோவிட் நோய்த்தொற்று விரைவாகத் தீரும், சுற்றுலா விரிவாகும் என்பதற்கான எந்தவிதமான சாதகமான சமிக்ஞையும் இதுவரை இல்லை. அத்துடன் தொடரும் சமூக அமைதியின்மைகள் ஆர்ப்பாட்டங்கள் தொழிற்சங்க நடவடிக்கைகள் போன்றனவும் நாடடின் நிச்சயமற்ற தன்மையினை மேலும் அதிகரிக்கும் அபாயநிலை காணப்படுகிறது.
அந்நிலையில் உலகின் மிகப்பெரிய இரத்தினக்கல் இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. 200 மில்லியன் டொலர் பெறுமதியுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ள அது ஏலத்தில் விடப்படுமெனத் தெரிகிறது. அதன் மூலம் இலங்கைக்கு ஒரு நிதிப் புதையல் கிடைத்ததாக எடுத்துக் கொள்ளலாம். 

எவ்வாறாயினும் இலங்கை தனது நெடுநாள் பொருளாதாரப் பலவீனங்களுக்கு நிலைத்திருக்கத்தக்க நிரந்தரத்தீர்வுகளுக்குப் பதில்     பிரச்சினைகளுக்கு தற்காலிகமான பிளாஸ்டர்களை ஒட்டுவதன் மூலம் நிலைமையைச் சமாளிக்க முயல்வது மட்டும் தெளிவாகப் புரிகிறது.    

கலாநிதி எம்.கணேசமூர்த்தி
பொருளியல்துறை
கொழும்பு பல்கலைக்கழகம்

Comments