தேர்தல் முறை மாற்றத்தில் அரசு கூடுதல் அக்கறை | தினகரன் வாரமஞ்சரி

தேர்தல் முறை மாற்றத்தில் அரசு கூடுதல் அக்கறை

நாட்டில் நிலவும் கொவிட் சூழல் காரணமாக மாகாணசபைகளுக்கான தேர்தல்களை நடத்துவதற்கான பௌதிக சூழ்நிலை இல்லாத போதும், தேர்தல் முறைமை மாற்றம் குறித்து அரசாங்கம் தொடர்ந்தும் கவனம் செலுத்தி வருகிறது. தேர்தல் முறைமை மற்றும் தேர்தல் தொடர்பான சட்டத்தைத் திருத்துவதற்காக நியமிக்கப்பட்ட விசேட பாராளுமன்ற குழு தொடர்ச்சியாகக் கூடி இதற்குத் தேவையான

விடயங்களை ஆராய்ந்து வருகிறது. தேர்தல் மறுசீரமைப்புத் தொடர்பில் அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் சமூக அமைப்புகளின் கருத்துக்கள் அல்லது முன்மொழிவுகள் பெறப்பட்டு வருகின்றன.

கடந்த புதன்கிழமை கூடிய இந்த விசேட குழுவின் முன்னிலையில் பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத ஆறு அரசியல் கட்சிகள் அழைக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு கட்சியும் தமது முன்மொழிவுகளை இங்கு சமர்ப்பித்திருந்தன. இலங்கை லிபரல் கட்சியின் செயலாளர் கமல் நிசங்க குறிப்பிடுகையில், நியூசிலாந்தில் காணப்படும் தேர்தல் முறையைப் பயன்படுத்துவது பொருத்தமானது என்று கூறினார்.

தமது கட்சி மாவட்ட விகிதாசார முறைக்கு எதிர்ப்பு என்றும், இருந்த போதும் தேசியப் பட்டியல் முறைமை அவ்வாறே பேணப்பட வேண்டும் என்றும் என்றும் அவர் சுட்டிக் காட்டியிருந்ததுடன், பாராளுமன்றத்துக்கு 225 உறுப்பினர்களைத் தெரிவு செய்யும் போது 160 பேரை தேர்தலின் மூலமும், 65 பேர் தேசியப் பட்டியலின் ஊடாகவும் நியமிக்கப்பட வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.

அகில இலங்கை தமிழர் மகாசபையின் தலைவர் கே.விக்னேஸ்வரன் இக்குழு முன்னிலையில் தனது நிலைப்பாட்டை முன்வைக்கையில், 30 வருடங்கள் நாட்டில் நிலவிய யுத்தம் காரணமாக வெளிநாட்டுக்குச் சென்ற 1.5 மில்லியன் பேர் தமது வாக்குகளை அளிப்பதற்கு வாய்ப்புக்கள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்றும், இதற்காக சட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

பெண் பிரதிநிதித்துவத்தை 30 சதவீதமாக உயர்த்த வேண்டும் என தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி சுட்டிக் காட்டியது. பாராளுமன்றம், மாகாணசபை மற்றும் உள்ளூராட்சி மன்றங்களிலும் இது பேணப்பட வேண்டும் என்பது அக்கட்சியின் நிலைப்பாடாக இருந்தது. தற்பொழுது நடைமுறையில் உள்ள விகிதாசார முறை எந்தவித மாற்றமும் இன்றி தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்லப்பட வேண்டும் என முருகேசு சந்திரகுமாரின் சமத்துவக் கட்சி பாராளுமன்ற விசேட குழுவில் தெரிவித்தது. இந்த முறையின் கீழ் சகல இனங்களுக்கும் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவம் செய்வதற்கான வாய்ப்பு கிடைப்பதாகவும், ஜனநாயகத்துக்கு இது மிகவும் முக்கியமானது என்றும் அக்கட்சி தெரிவித்தது.
உள்ளூராட்சி மன்றங்களில் பெண்களின் பிரதிநிதித்துவம் 25 வீதமாக அதிகரிக்கப்பட வேண்டும். அத்துடன், வெளிநாடுகளில் உள்ள மற்றும் இடம்பெயர்ந்துள்ள தரப்பினரின் வாக்களிக்கும் உரிமையை பாதுகாக்க வேண்டும் என்றும் சமத்துவக் கட்சி சுட்டிக் காட்டியது.

தேர்தல்களை உரிய நேரத்தில் நடத்துவதற்கு அவசியமான சட்டம் விரைவில் தயாரிக்கப்பட வேண்டும். வேட்பாளர்கள் தமது சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களை காலம் தாழ்த்தாது தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு வழங்குவதற்கான பொறிமுறையொன்றை உருவாக்குவதன் அவசியத்தை   ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பு இக்குழு முன்னிலையில் வலியுறுத்தியது.

அரசியல் கட்சிகள் கூட்டணிகளை உருவாக்குவதைத் தடுப்பதற்கான கொள்கை தயாரிக்கப்பட வேண்டும் என சிங்களதீப ஜாதிக பெரமுன, பாராளுமன்ற விசேட குழு முன்னிலையில் தெரிவித்தது. தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் வேறு கட்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் உறுப்பினர்களின் உறுப்புரிமையை இரத்துச் செய்வதற்கான புதிய சட்டத்தைத் தயாரிப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும் அந்தக் கட்சி சுட்டிக் காட்டியது.

அரசியல் கட்சிகள் மாத்திரமன்றி தேர்தலுடன் தொடர்புபட்ட அமைப்புகளிடமும் முன்மொழிகள் பெறப்பட்டுள்ளன. சுயாதீன தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பஃவ்ரல் அமைப்பும் இக்குழு முன்னிலையில் அழைக்கப்பட்டிருந்தது. தொகுதிவாரி மற்றும் விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறை அடங்கிய கலப்பு முறைமையிலான தேர்தல் முறைமையே இலங்கைக்குப் பொருத்தமானது என அந்த அமைப்பு சுட்டிக் காட்டியிருந்தது.

பூகோள விடயங்கள், சனத்தொகை மற்றும் ஏனைய விடயங்களை கருத்தில் கொண்டு தற்பொழுது காணப்படும் தேர்தல் மாவட்டங்களை 22 முதல் 40 வரை அதிகரிக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. வேட்பாளர்களின் செலவினங்களை வரையறுத்தல், ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத்தேர்தலை ஒரே தினத்தில் நடத்துதல், தேர்தல் நாட்காட்டியொன்றை செயற்படுத்துதல், தேர்தல் முறைமையில் மற்றும் தற்பொழுது காணப்படும் தேர்தல் சட்டத்தில் காணப்படும் குறைகளை கண்டறிந்து அவற்றைப் புதுப்பித்தல், அரச அதிகாரம் மற்றும் அரச சொத்துக்களை துஷ்பிரயோகம் செய்வதைத் தடுத்தல், தண்டப்பணம் மற்றும் தேர்தல் சட்டத்தை புதுப்பித்தல், அணைத்து வாக்காளர்களும் நியாயமான வகையில் தகவல்களை பெற்றுக் கொள்ளும் உரிமையை உறுதிப்படுத்துதல், பிரசாரங்கள் தொடர்பான சட்டங்கள் உள்ளிட்ட போதுமான அளவு பெண் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்துதல் போன்ற விடயங்கள் தொடர்பில் பஃவ்ரல் அமைப்பு குழுவின் முன்னிலையில் கருத்துத் தெரிவித்தது.   

தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர், ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் இந்த விசேட குழுக் கூட்டங்களில் பங்கெடுத்து வருகின்றனர். ஜனாதிபதித் தேர்தலையும் பொதுத்தேர்தலையும் ஒரே தினத்தில் நடத்துவது சாத்தியமில்லை என இங்கு கருத்துத் தெரிவித்த தேர்தல் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய குறிப்பிட்டார்.

தேர்தல் பிரசாரச் செலவுகளை கட்டுப்படுத்துவதற்காக துரிதமாக சட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும் எனவும் அவர் சுட்டிக் காட்டினார்.

இதேநேரம், குறித்த விசேட குழுவுக்கு உதவும் வகையில் நிபுணர்கள் குழுவொன்றும் நியமிக்கப்படவுள்ளது. இந்தக் குழுவுக்கான பிரதிநிதிகளின் பெயர்களும் அரசியல் கட்சிகளால் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழக துணை வேந்தர் சிரேஷ்ட பேராசிரியர் சுதந்த லியனகே, கலாநிதி அனுர கருணாதிலக்க, சட்டத்தரணி சுரேன் பர்னாந்து, பேராசிரியர் பி. பாலசுந்தரம்பிள்ளை மற்றும் சட்டத்தரணி பாலச்சந்திரன் கௌதமன் ஆகியோர் இந்தக் குழுவின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இந்தக் குழு தொடர்ச்சியாகக் கூடி தேர்தல் முறைமை மற்றும் அது தொடர்பான சட்டங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்கள் குறித்து ஆராய்ந்து வருகிறது.

பி.ஹர்ஷன்

Comments