அனைத்து பிரதேசங்களும் நேற்று விடுவிப்பு | தினகரன் வாரமஞ்சரி

அனைத்து பிரதேசங்களும் நேற்று விடுவிப்பு

கொரோனா  வைரஸ் பரவல் காரணமாக தனிமைப்படுத்தலுக்காக நாட்டில் முடக்கப்பட்டிருந்த  அனைத்து பகுதிகளும் நேற்று முதல் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக கொரோனா வைரஸ் தடுப்புக்கான தேசிய மத்திய நிலையத்தின் தலைவர் இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் இறுதியாக யாழ். மாவட்டத்தில் வடமராட்சி வடக்கு கிராம சேவகர் பிரிவு தனிமைப்படுத்தல் முடக்கத்திலிருந்து   விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கிணங்க  நேற்றைய தினம் நாட்டின் அனைத்து பகுதிகளும் தனிமைப்படுத்தலில் இருந்து முழுமையாக விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் கொரோனா வைரஸ் முதலாவது அலை தொடக்கம் நாட்டின் பல்வேறு பகுதிகள் படிப்படியாக தனிமைப்படுத்தலுக்கான முடக்கத்திற்கு உட்படுத்தப்பட்டன. ஆரம்பத்தில் கிராம சேவகர் பிரிவு மட்டத்தில் தனிமைப்படுத்தல் முடக்கம் மேற்கொள்ளப்பட்ட நிலையில் பின்னர் கொரோனா  வைரஸ் தொற்று நோயாளர்கள் அதிகமாக இனங்காணப்பட்டுள்ள பகுதிகள் தெரிவு செய்யப்பட்டு  அத்தகைய பகுதிகள் மட்டும் தனிமைப்படுத்தலுக்கான முடக்கத்திற்கு உட்படுத்தப்பட்டன.

எவ்வாறெனினும் கடந்த பல மாதங்களாக நாட்டில் பெருமளவு பிரதேசங்களில் படிப்படியாக தனிமைப்படுத்தலுக்கான முடக்கம் நடைமுறைப்படுத்தப்பட்டது..

நேற்றைய தினம் நாட்டில் இறுதியாக தனிமைப்படுத்தலுக்காக முடக்கப்பட்டிருந்த   யாழ். வடமராட்சி வடக்கு கிராம சேவகர் பிரிவு தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது நாட்டில் அனைத்து பகுதிகளும் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா மேலும் தெரிவித்துள்ளார்.(ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்

 

Comments