உண்மையை கண்டறிந்து நீதியை நிலைநாட்ட சமூகத்தில் ஓங்கி ஒலிக்கும் குரல்கள்; சிறுமி ஹிஷாலினியின் மரணத்தின் மர்மங்கள் | தினகரன் வாரமஞ்சரி

உண்மையை கண்டறிந்து நீதியை நிலைநாட்ட சமூகத்தில் ஓங்கி ஒலிக்கும் குரல்கள்; சிறுமி ஹிஷாலினியின் மரணத்தின் மர்மங்கள்

கொலையா? தற்கொலையா? என்பதை கண்டறிவதில் பொலிஸார் தீவிர விசாரணை

முழு நாட்டையும் சோக அதிர்ச்சியில் மூழ்கடித்துள்ள முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிசாத் பதியுதீனின் வீட்டில் பணிப்பெண்ணாக பணியாற்றிய பதினாறு வயதேயான மலையக சிறுமி ஹிசாலினி ஏரிகாயங்களுடன் மர்மமான முறையில் மரணமான சம்பவம் தொடர்பாக முழுமையான விசாரணைகளை நடத்தி ஒளிந்திருக்கும் உண்மைகளை நாட்டுக்கு வெளிப்படுத்த வேண்டும் என சமூக மட்டத்தில் குரல்கள் ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கின்றன.

அரசியல் கட்சி வேறுபாடின்றி சகல அரசியல் கட்சி தலைவர்களும் சிறுமியின் மரணம் தொடர்பில் உண்மையை கண்டறிய தமது பூரண ஒத்துழைப்பை வழங்க முன் வந்திருப்பது ஒரு வரவேற்க தக்கதாகும். அதிலும் குறிப்பாக முன்னாள் அமைச்சர் பாராளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியுதீன் அங்கம் வகிக்கும் கூட்டணி கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரான சஜித் பிரேமதாச, ரிஷாட்டின் கட்சியை கூட்டணியில் இருந்து விலக்கி உள்ளதாகவும் விசாரணைகளுக்கு சகலவிதமான ஒத்துழைப்புகளையும் தருவதாகவும் கூறியிருப்பது மேலான விடயம் என அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அத்துடன் இன, மத, மொழி பேதம் அற்ற வகையில் சகல மக்களும் பொது அமைப்புகளும் சமய, சமூக தலைவர்களும், நாட்டிலுள்ள மகளிர் அமைப்புகளும் இந்த விடயத்தில் ஒருமித்த குரலில் அரசாங்கத்தை வலியுறுத்தும் சூழல் சமூகத்தில் மிகத் தீவிரமாகியுள்ளதை தினமும் அவதானிக்க முடிகிறது. மலையகத்தில் மட்டுமல்லாது நாடு பூராகவும் கண்டன ஆர்ப்பாட்டங்கள், ஊர்வலங்கள் தினமும் நடந்து கொண்டிருக்கின்றன. அதனால் இந்த சிறுமியின் மரணம் தொடர்பான உண்மைகளை கண்டறிந்து வெளிப்படுத்த வேண்டிய பாரிய சமூகப் பொறுப்பு இலங்கையின் நீதித்துறைக்கு உள்ள சவாலாகுமென அரசியல் சமூக அவதானிகள் தெரிவித்துள்ளனர்.

நீதித்துறையின் வழிகாட்டலில் அதற்கான பணியினை இலங்கை பொலிசார் தீவிரமாக செயற்பட்டு நம்பிக்கையை கொடுத்துள்ளனர். நேற்றுமுன்தினம் சிறுமியின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டு இரண்டாவது மரண பரிசோதனையை நடத்த நீதித்துறை முன்வந்திருப்பது சகல தரப்பு மட்டத்திலுள்ள மக்களாலும் பெரிதும் வரவேற்றப்பட்டுள்ளது.

இந்த விடயத்தில் அரசியல் அழுத்தங்கள் அல்லது தனிப்பட்ட முறையிலான செல்வாக்குகள் எதனையும் செலுத்தாது உண்மை கண்டறியப்பட வேண்டும் எனும் கருத்து ஓங்கி ஒலிக்கின்றனது.

இந்த விடயத்தில் சம்பந்தப்பட்ட முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீனை தனிப்பட்ட முறையில் பழிவாங்கும் எண்ணம் எவருக்கும் இருக்கக்கூடாது என்றும் அவரது இல்லத்தில் அவருக்குத் தெரியாமலேயே அவரது உறவினர்களால் அல்லது தொழில் புரிபவர்களால் இந்த சம்பவம் நடத்தப்பட்டிருக்கலாம் எனும் கோணத்திலும் விசாரணைகள் நடத்தப்பட்டு உண்மை நிலை வெளிக்கொணர வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

நமது விசேட நிருபர்

Comments