காலை, மாலை வேளைகளில் மட்டுமே பஸ் சேவை; மாகாணங்களுக்கிடையில் இன்று முதல் மட்டுப்படுத்தப்பட்ட போக்குவரத்து | தினகரன் வாரமஞ்சரி

காலை, மாலை வேளைகளில் மட்டுமே பஸ் சேவை; மாகாணங்களுக்கிடையில் இன்று முதல் மட்டுப்படுத்தப்பட்ட போக்குவரத்து

இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவிப்பு

அரச மற்றும் தனியார் துறை ஊழியர்கள் நாளை முதல் மீண்டும்  கடமைக்கு திரும்பவுள்ளதையடுத்து அதற்கு வசதியாக மாகாணங்களுக்கிடையிலான பொதுப் போக்குவரத்து சேவைகளை இன்று முதல் ஆரம்பிக்கவுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

அதன்படி மட்டுப்படுத்தப்பட்ட வகையில்  காலையிலும் மாலையிலும் மாத்திரம் பஸ் சேவைகளை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

திங்கட்கிழமை முதல் மாகாணங்களுக்கிடையிலான பயணத்தடை நீக்கப்படலாமென்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
அவ்வாறு மாகாணங்களுக்கிடையிலான பயணத்தடை  நீக்கப்படுமானால் மாகாணங்களுக்கிடையிலான பொதுப் போக்குவரத்து சேவையை முன்னர் இருந்ததைப் போல் இயல்பு நிலைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மாகாணங்களுக்கிடையில் பொதுப் போக்குவரத்து சேவைகள் நாளை முதல் ஆரம்பிக்கப்படுமென தெரிவித்துள்ள அவர்,

பயணிகள் போக்குவரத்து பஸ் மற்றும் ரயில்களில் ஆசனத்திற்கு மட்டுப்படுத்தப்பட்ட வகையில் பயணிக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.

சுகாதார நடைமுறைகளை முறையாக பின்பற்றி  பொது போக்குவரத்து சேவைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக தெரிவித்துள்ள அவர் ஆசனங்களுக்கு மேலதிகமாக பயணிகளை ஏற்றிச்செல்லும் பஸ்களை கண்காணிப்பதற்கு பொலிசாரின் ஒத்துழைப்பு பெறப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே இடைநிறுத்தப்பட்டிருந்த மாகாணங்களுக்கிடையிலான பஸ் சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக முன்னெடுப்பதற்கு கடந்த 14ஆம் திகதி முதல் தீர்மானிக்கப்பட்ட போதும் கொரோனா வைரஸ் பரவல் நிலையை கருத்தில் கொண்டு கடந்த 17ஆம் திகதி மீண்டும் அதனை தற்காலிகமாக இடைநிறுத்த போக்குவரத்து அமைச்சு தீர்மானித்தது.

அந்த நிலையில் நாளை திங்கட்கிழமை முதல் பயணத்தடை முற்றாக நீக்கப்படுமானால் மாகாணங்களுக்கான பொது போக்குவரத்து சேவைகளை ஆரம்பிக்க முடியுமென அமைச்சர் ஏற்கனவே  தெரிவித்திருந்தார்.

இத்தகைய நிலையில் நாளை மாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்து சேவைகளை  முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.(ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம், சுப்பிரமணியம் நிசாந்தன்

 

Comments