கசப்பும் இனிப்பும் | தினகரன் வாரமஞ்சரி

கசப்பும் இனிப்பும்

கசப்பு-1

கடந்த வாரத்தில் தென்னிலங்கை ஓவிய மணி மும்தாஸ் ஹஃபீளின் தூரிகை வழங்கிய கண்ணைக்கவரும் முகப்பட்டைகள் மூன்றைப் போட்டு அவற்றில் செய்யப்பட்டிருக்கும் முக்கிய இருட்டிப்பை வெளிச்சமிட்டேன். 

பொதுவாக, ஒரு நூலின் அட்டைப்படத்தில் தலைப்பு கட்டாயம் இருக்கும். அதுபோல ஆசிரியர் (எழுத்தாளர்) பெயரும் இருந்தாக வேண்டும். அது அவர் தீட்டும் அழகழகான அட்டைப்படங்களில் இல்லையே என்பதே என் பேனையின் ஆதங்கம். 

இதே போல், இன்னொருவர் ஆற்றும் இலக்கியப்பணியிலும் ஆதங்கம் உள்ளது. 
அவர் கிழக்கிலங்கை கிண்ணியா இலக்கிய முதுசம்!  

நமதருமை ‘தேசத்தின் கண்’ அதிஉன்னத திறனாய்வாளர் கே.எஸ்.சிவகுமாரன் பல காலங்கள் புரிந்த பணியை இவர் இந்தக் கிண்ணியாப் பிரதேசத்திலிருந்து தொடர்கிறார். 
முதலில் அவரை மனதாரப் பாராட்டி விடுகிறேன். தயங்காமல் ஏற்றிடுங்கள் பி.ரீ.அஸீஸ்! (ஆம்! அதுவே அவர் பெயர்!  இந்த மனிதர் என்ன செய்கிறார் என்றால் சொந்தச் செலவில் நூல்கள் வெளியிடுவோரை அவரே அணுகி, அவர்கள் படைப்புகளை வலுக்கட்டாயமாகப் பெற்று தானே வார வெளியீடுகளில் இடம்பிடித்து ஒரு நல்ல திறனாய்வைச் செய்கிறார்! 

அப்பணியின் வழியே படைப்பாளியும், படைப்பும் வெளிச்சமாகி பளிச்சென இலக்கிய ஆர்வலர்களுக்குத் தெரிந்துவிடுகிறது!  
அவர் திறனாய்வுகளில் போற்றுதல்களே இருக்குமேயொழிய தூற்றுதல் இருக்காது.  
இயற்கையாகவே வாசிக்கும் பழக்கம் உடையோர் அந்த நூலைப் பெற ஆர்வப்பட்டு விடுவர்! 
இதற்குப் பிறகுதான் இருக்கிறது சங்கதி!  
நூலை எப்படிப் பெறுவது? விலை என்ன? வெளியீட்டகம் எது? விலாசம் என்ன? தொலைபேசி எண்கள்? 

ஊஹூம்! அஸீஸின் திறனாய்வுப் பகுதியில் எதிர்பார்க்க முடியாது முழு விவரமும் இருக்காது. அவர் வழங்கியதாக என் கண்ணுக்குப் படவில்லை. 
காரணம் அறிய மர்மம் துலங்க அவரிடமே விளக்கம் பெறத் தொ.பே, தொடர்பு கொண்டபோது அவர் சொன்ன பதில்;  

“என்னில் குற்றம் இல்லை. சம்பந்தப்பட்ட பத்திரிரைகள் செய்யும் வேலை. இடமில்லை என்று அந்த விவரங்களை நீக்குகிறார்கள். தங்கள் ஊடகங்கள் மூலம் படைப்புகளுக்கு மேலும் இப்படியான விளம்பரம் கொடுக்கத் தயக்கம்!” 
இந்த விளக்கம் எனக்கு ஏற்புடையதல்ல. முக்கியமாக, இன்றைய அச்சு ஊடகங்கள் இலக்கியம் வளரவும் செழிக்கவும் உதவுகின்றன. (ஆதாரம்: ‘வாரமஞ்சரி’யில் வரும், ‘ஞானம்’ ஆசிரியர், ஞானசேகரன், சட்டத்தரணி ரஷீத் எம். இம்தியாஸ் பத்தி எழுத்துப் பக்கங்கள்) 

எங்கள் சிவகுமாரன், உடல் நலிவுற்று ஓய்வில் இருக்க, அவர் விட்ட பணியை அஸீஸ் போன்றவர்கள் செய்யும் பொழுது பொறுப்புணர்வுடன் நிறைவேற்றல் அவசியத்திலும் அவசியம். 

கசப்பு-2

துவையல் – இந்த வார்த்தையை உச்சரித்தாலே நாக்கைச் சப்புக்கொட்டுவோம் இட்லியா? தோசையா? 

இந்த அழகான – ‘துவையல்’ “சட்னி’ என மாறிப்போய் பரிணாமம் பெற்று, ‘வைட் சட்னி’ (White – chutney) ‘ரெட் சட்னி’ (Red Chutny) என்றாகிப் போயிருக்கிறது தமிழ் நாட்டில்! ஐயகோ!  

அங்கே இளைய தலைமுறைகள், “துவையல்னா என்னம்மா?” எனக் கேட்கிறார்கள்! அந்தக் காலம் இங்கே, இலங்கைத் தமிழ் பேசுவோர் மத்தியிலும் வந்துவிடக் கூடாதென்ற அச்சத்தில் அவசரமாகப் கசப்பில் பதிவிடுகிறேன். 

ஏற்கெனவே அங்கே, அரிசிச் சோற்றை ‘ரைஸ்’ (Rice) ஆக்கியும், தயிர் ‘கேட் ரைஸ்’ (Curd Rice) என்று சொல்லியும் வழக்கத்திற்கு வந்து விட்டது. 

“சோறு” என்ற பதமே தமிழகத்து நகரங்களில் வெகு வேகமாக மறைந்து, வடமொழிச் “சாதம்” உபயோகிக்கப்படுகிறது. இச் சாதம், ‘பிரசாதம்’ என்ற சொல்லின் விகுதி தானாம்! 

கோயில் போன்ற ஆன்மிக தலங்களில் புனிதமான ஒன்றாக பிரசாதம் கருதப்படுகிறது. கருதட்டும் கருத்துப்பிரச்சினை இல்லை. அதிலிருந்து ‘சாதம்’ என்பது கடன்பெற்று நல்ல தமிழான ‘சோறு’ நல்லடக்கமாகி விட்டதே! அது தமிழ்மணிகளுக்குப் பிரச்சினை தானே?  

நம்ம முண்டாசுக்கவிஞன் (பாரதியார்) “வயிற்றுக்குச் சோறிட வேண்டும் இங்கு வாழும் மனிதருக்கெல்லாம்” என்று தானே பாடினான். இத்தனைக்கும் பிரசாதத்தைக் கண்டிபிடித்த பிராமணப் பிறப்பு அந்த மகாகவி! 

“பெருஞ்சோற்று உதியன்” என்ற அடைமொழி கொண்ட புறநானூற்று வேந்தன் என் நெஞ்சுக் கூட்டில் உலா! 

நல்லவேளை! கொழும்பு வட்டாரத்திலும், யாழ். குடா நாட்டிலும் தேனகத்திலும் (கிழக்கிலங்கை) எங்கெங்கும் ‘சோற்றுக் குவியலே!  

தற்சமயம் தமிழ்நாட்டிலிருந்து ஒரு நல்ல செய்தி. 
முத்தமிழ்க் கலைஞர் தம் புதல்வர், புதிய தமிழகத்தின் (அரசாட்சியின்) முதல்வர் பத்து வருசமாகத் தூசு மண்டிக் கிடக்கும் செம்மொழிப் பண்பாட்டு அலுவலகக் கட்டடத்திற்கு வெள்ளை அடித்து உயர் தனிவழித் தமிழ் மேம்பாட்டுக்கு என்னென்னவோ செய்யப்போகிறாராம்! 
செய்யட்டும் செய்துதான் தீரவேண்டும் தமிழை அறிந்தும் அறியாமலும் வடதிசையில் உள்ளோருடன் அழித்துக் கொண்டிருக்கிற தமிழ்நாட்டவர் விழிப்புணர்வு கொள்ளட்டும். 

இனிப்பு

கடந்த வெள்ளி (23.07) நிகழ்ந்த ஒரு சந்திப்பு, இப்படியும் மனிதர்கள் இருந்திருக்கிறார்களே, இன்றைக்குக் காண இயலவில்லையே என்று கேட்க வைத்தது. 

அந்த சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்தவரோ, இலங்கையின் முஸ்லிம் முன்னோடி இதழ் “இஸ்லாமிய தாரகை” குடும்பத்தைச் சார்ந்த மூன்றாம் பரம்பரை – ஃபெரோஸ் நூன் பட்டயக் கணக்காளர். 

எங்களுடன் கலைஞர் கவிஞர் எம்.எஸ். அப்துல் லத்தீஃபும் இணைந்தார்.  

அங்கே (கொழும்பு -09, தெமட்டகொடை) அந்த “86” அகவை ‘வாலிப’ரை இந்த ‘84’ சந்திக்கும் நிகழ்வு நிகழ்ந்தன. 

“ஏ.எம்.எம். நிஸார்” என்பவர், கொழும்பின் பின்தங்கிய பிரதேசங்களிலொன்றான, கொழும்பு – 10, மாளிகாவத்தைப் பகுதியைச் சார்ந்த பணக்காரன் அல்லர்! வெகுவெகு சாமான்யார். ஆறு பெண்பிள்ளைகளையும் ஓர் ஆணையும் பெற்ற பாக்கியசாலி! (அபாக்கியசாலி என்று பதியவே மாட்டேன்!) 

அப்பகுதி கல்வித் தேவைகளுக்காக ஆரம்பிக்கப்பட்ட டென்ஹாம் பாடசாலையில் (இப்போது தாருஸ்ஸலாம்) ஆறாம் வகுப்பு மட்டுமே படிப்பு!   செய்த தொழில் என்ன? அல்லது பெற்ற வேலைதான் என்ன?  

ஒரு சமூக சேவகன்! ஒரு சமூகசேகவன்! 

வாழ்வாதாரம் இன்றி இரத்தக் கண்ணீர் சிந்திய வட்டார மக்களின் மேம்பாட்டுக்காக தன்னையே தியாகித்துக் கொண்ட தனக்கு ஆறு பெண்களாயிற்றே, கரைசேர்ப்பது எப்படி என்று கலங்காமல் பிறருக்காக வாழ்ந்த ‘சமூகஜோதி’ ‘தேச கீர்த்தி’ – ‘தேசமான்யன்!’ (இவை எல்லாம் அவர் பின்னாட்களில் பெற்ற கௌரவங்கள்) 

ஒரு சமயம், மாளிகாவத்தையில் ஒரு பெரும் சமூகப் பிறழ்வு! அதற்கு இந்தப் பத்தி எழுத்தாளனும், தினகரன் நிருபர் என்ற வகையில் செய்தி சேகரிக்கப்போய் இருந்தேன்! 

மிகப்பிரபலமாக அன்றும் இன்றும் தமிழும் ‘வை.எம்.எம்.ஏ” அமைப்பின் மாளிகாவத்தை கிளையின் தலைவர் தேர்தல் அது – ஒரு நகரசபைத் தேர்தலுக்கு ஒப்பாக! 

கடுமையான போட்டி, ஒரு பட்டதாரி கலாநிதிக்கும், ஒரு ‘கல்லாநிதி’க்கும்!  

கடைசித்தருணத்தில் வென்றவர் ‘கல்லாநிதி’யே! ‘நிஸார்’ என்ற சாமான்யரே! 

இது எப்படி சாத்தியமாயிற்று? ‘மக்கள் சேவை, என்பது நூற்றுக்கு நூறு சரியானது!  

அன்று வெகுசாமான்ய மாளிகாவத்தை மக்களின் புள்ளடிகளை நேரில் கண்டும், பின்னர் தினகரனுக்கு செய்தியாக வழங்கிய போதும் நான் புல்லரித்துத்தான் போனேன்.  

இந்த 2021 நடுப்பகுதியில் மீண்டும் அந்தச் சமூக சேவையாளரின் சந்திப்பு இனிப்பிலும் இனிப்பு!  

அவர், தான் ஆறாம் வகுப்புவரை கற்ற தாருஸ்ஸலாம் வித்தியாலய விஸ்தரிப்புக்கும், குறிப்பாக மதிற்சுவர் அமைப்பதற்கும், உழைத்த உழைப்பையும், பெருந்தலைவர் ஸேர் ராஸிக் ஃபரீத், அரசியலாளர்கள் எம்.எச். முஹம்மத், ஜாபீர் ஏ. காதர், ஏ.எச்.எம். பௌஸி போன்றவர்களுடனும் ஊடாடி மாளிகாவத்தை மக்களது மேம்பாட்டுக்கு ஆற்றிய சேவைகளையும் மடை திறந்த வெள்ளமாக ஒவ்வொன்றாகச் சொல்லிக் கொண்டே போனார். 

அந்த வகையில், அவர் புரிந்த சமூகப் பணிகள் ஒவ்வொன்றையும் அறியக் கிடைத்த பொழுது நான் மட்டுமல்ல, அழைத்துச் சென்ற பட்டயக்கணக்காளர் ஃபெரோஸ் நூன், கூட வந்த கலைஞர் கவிஞர் அப்துல் லத்தீஃப் ஆகியோரும் அதிசயமும் ஆச்சரியமும் அடைந்தார்கள். 

இட நெருக்கடியால், எழுத்துக்களைச் சுருக்கும் கடமையில் பட்டியலிட இயலாச் சூழ்நிலை எவ்வாறாயினும் முத்தான ஒரு தகவலைப் பதிவிடுகிறேன். 

காலஞ்சென்ற ஜாபீர் ஏ.காதர் (கொழும்பு நகராதிபதி, நாடாளுமன்ற உறுப்பினர், இராஜாங்க அமைச்சர்) அன்னாரது சமூகப் பணிகளைக் கௌரவிக்கும் வகையில் வீட்டுவசதி அமைச்சின் அனுசரணையில் ஒரு வசதியான வதிவிடத்தை வழங்கிய பொழுது, அந்த மாடி வீட்டை தன்னிலும் மிகமிக வசதி குறைந்த குடும்பம் ஒன்றுக்கு அன்பளிப்புச் செய்த மனித நேயன் நிஸார்! 

மாளிகாவத்தை மக்கள் – குறிப்பாக மூத்த மனிதர்கள் ‘நிஸார் ஆகிய சேவைச் செம்மலுக்கு எந்த கௌரவமும் செய்யாததை ஒரு புறம் வைத்துவிட்டு, இன்று, இந்த 2021ல், 86வயதில், உடல் நலம் மிகக் குன்றி, துணைவியார் பராமரிப்பில் மகளார் ஒருவரது இல்லிடத்தில் (தெமட்டகொடை) இறுதிப் பொழுதுகளைப் போக்கிக் கொண்டிருப்பதை அறியுங்கள். அவர் தம் நலம் வாழ இறைவனிடம் இறைஞ்சுங்கள்.  

Comments