உனக்கில்லையா உபதேசம் | தினகரன் வாரமஞ்சரி

உனக்கில்லையா உபதேசம்

காலைச்சூரியனும் இன்னும் கண்ணில் தென்படவில்லை, மெல்லிய பனித்துளிகளும் மேனியில் வீழ்ந்து, குளிரைக்கூட பொருட்படுத்தாமல் போர்க்கள வீரன் போல ஆச்சாரியாவும் தன் வீட்டு முற்றத்தை துப்பரவு செய்து கொண்டு இருந்தான். 'நேற்று இருந்த வெயிலுக்கு இது என்ன கடவுளின் பரிசா!" என்று நினைத்த படியே பின் பக்கமாகவும் வேலையை தொடர்ந்தான். 'என்னதான் மழையோ, குளிரோ தனது வழமையான வேலைகளை செய்யாமல் விடமாட்டாரே" என்று முணுமுணுத்துக்கொண்டு மண்டபத்தில் இருந்த வானொலிப்பெட்டியை ஒலிக்கச்செய்தாள் ஆச்சாரியாவின் மனைவி. அவளும் அவனுக்கு இணையானவள் தான், காலையில் நேரத்துடன் எழுந்த கையோடு பிள்ளைகள் இருவரையும் படிப்பதற்காக எழுந்திருங்கள் என்று கூறிவிட்டு அடுக்களை சென்று காலை ஆகாரம், தேனீர் போன்றவற்றை விரைவாக தயார் செய்தாள்.'அப்பா" என்று அழைத்தபடியே ஆச்சாரியாவின் அருகில் சென்று 'இந்தாங்க குடிங்க, ஞாபகம் இருக்கு தானே உங்களுக்கு, இன்று ஊரடங்கு தளர்த்தப்படும். நேற்று நான் சொன்ன பொருட்கள் எல்லாம் வாங்க வேண்டும்" என்றாள். 'நாம் என்ன காட்டுக்குள்ள தானே இருக்கிறோம், தடுக்கி விழுந்தா கடை இருக்கு, ஏன் இப்படி அவசரம் உனக்கு" என்று சொல்லியபடியே வீட்டு முற்றத்தில் இருந்த கதிரையில் இருந்து தேனீர் அருந்தினான் ஆச்சாரியா. 

இதமான பாடல்கள் வானொலியில் ஒலித்தன, வேலை செய்த களைப்பை போக்க சற்று திண்ணையில் சாய்ந்தான். விடியும் காலைப்பொழுதும், விதவிதமான மெல்லிசைப்பாட்டும் ஆச்சாரியாவுக்கு தாலாட்டுவது போல் இருக்க அவனும் உறங்கி விட்டான். நேரமும் ஆறுமணி பதினைந்து நிமிடமானது. வீட்டுக்கு வெளியே ஆரவாரங்களும், உரத்த தொனியில் சிங்களத்தில் திட்டுவதும், அழுகைக்குரல்களும் திடீரென எழுந்தன. ஆழ்ந்த தூக்கத்தில் இருப்பவனை தம்பட்டம் அடித்து எழுப்புவது போல் ஆச்சாரியாவையும் அந்த சப்தம்  தட்டி எழுப்பியது. 'என்ன புள்ள நடந்தது" என்று பதட்டத்துடன் தெருவை எட்டிப்பார்த்தான். 'அடடே! என்னடா இவ்வளவு கூட்டம், புள்ள அந்த பையைத்தாங்க" என்று விரைவுபடுத்தியபடி தனது அறைக்குள் சென்று மேல்சட்டையை அணிந்தான். 'நான் சொன்னா கேட்கவே மாட்டாரே, பெரிய விஞ்ஞானி மாதிரி தான் பேசுவாரு இப்போ தெரியுது தானே என்ன நடக்குது என்று" என திட்டிக்கொண்டே பையையும், பணத்தையும் ஆச்சாரியாவிடம் கொடுத்தாள். 'சரி, சரி, நான் போயிற்று வாறன் புள்ள" என கூறியபடியே தனது வீட்டு வாசல் கதவை திறந்து வெளியில் வந்தார். பக்கத்து வீட்டு கடை தானே இது நமக்கு, மேலும் பழக்கமான கடையும் கூட ஆறுதலாக போவோம் என்று நினைத்து வந்த அவரின் முகம் இஞ்சி தின்ற குரங்கு போல் துவண்டு போனது, காரணம் மூக்கையும், வாயையும் மறைக்க முகமூடி அணிந்து மக்கள் கூட்டம் முண்டியடித்துக் கொண்டு வரிசை கிரமமாக நின்றது. 'ஐயோ! என்னடா இது, தெரிந்த கடை என்று வந்தால் இங்கோ வரிசையா" புலம்பியபடியே வரிசையின் இறுதியில் இணைந்தான். 

இது நமது ஊர் மக்களா? எப்படி இவர்கள் நடைமுறை சட்டங்களுக்கு அமைவாக ஒருவருக்கிடையிலான இடைவெளி கிட்டத்தட்ட மூன்று அடிக்கு மேலாக பேணுகின்றனர்,   சற்று முன்னர் தானே ஊரடங்கு சட்டமும் தளர்த்தப்பட்டது, அப்படி இருக்க எப்படி இந்தக் கூட்டம் இவ்வளவு விரைவாக வந்தது  என்ற ஆச்சரியத்தோடு தனக்கு முன்னால் நின்ற சூரியமூர்த்தியிடம் 'தம்பி, என்னப்பா நடந்தது, பொலிஸ் அதிகாரிகள் வந்த சத்தம் கேட்டது, ஏதும் பிரச்சினையா?" என்று பேச்சுக் கொடுக்க ஆரம்பித்தான். 'ஆம் ஐயா, இவர்கள் ஊரடங்கு சட்டம் தளர்த்த முன்னரே வந்து விட்டனர், அதுவும் பரவாயில்லை கடைக்கு முன்னால் ஒருவரோடு ஒருவர் முட்டிமோதிக் கொண்டு பொருட்களை வாங்கினார்கள், அந்த நேரம் இங்கு வந்த அதிகாரிகள் எல்லோருக்கும் நல்ல அடி, அது தான் இந்த மாற்றம்" என்று சிரித்தபடியே கூறினான் சூரியமூர்த்தி. 'என்ன செய்யிற தம்பி, என்ன சொன்னாலும் திருந்த மாட்டாங்க நம்ம சனங்க, இது யாருக்காக நமக்காக தானே இது புரியாது இவங்களுக்கு, இந்த கொரோனாவ கட்டுப்படுத்த தானே விதிமுறைகளும், சட்டங்களும் எல்லாம் நமது நன்மைக்காக தானே, இதை இந்த சமுதாயம் எப்போதுதான் அறியப்போகுதோ" என்றார் ஆச்சாரியா. இதனை கேட்டவுடன் சூரியமூர்த்தியும் “படிச்சவர் படிச்சவர் தானே! ஐயா எவ்வளவு விளக்கங்களை தெரிந்து வைத்திருக்கிறார், அவர் ஒரு அரசாங்க அதிகாரியும் கூட ஆகவே அவர் சொன்னால் சரியாகத்தான் இருக்கும்” என்று பெருமூச்சு விட்டான்.  

அந்த நேரம் பார்த்து இடையில் நின்ற ஒருவரிடம் அவரது உறவினர் ஒருவர் தானும் இடையில் இணைந்து கொள்ள முற்பட்டார், உடனே அங்கே பக்கத்தில் இருந்தவர்கள் வாக்குவாதம் செய்தனர். இதைப் பார்த்துக் கொண்டிருந்த ஆச்சாரியா 'பாருங்கள் இப்படியான ஆட்கள் இருப்பதாலே தான் நாம் இன்றும் பின்தங்கி இருக்கின்றோம், எல்லாரும் ஒழுங்காகத் தானே வரிசையில் நிற்கின்றனர், இவன் மட்டும் இடையில் சேரப்பார்க்கிறான், நாம் எல்லாம் பைத்தியகாரன்கள் என்று நினைத்து விட்டான் போலும், இப்படிப்பட்டவர்களால் தான் இன்றும் நமது நிலை சீர்கெட்டுவிட்டது" என்று உரத்த தொனியில் கூறினார். உரத்து பேசினாலே அவர் தானே உத்தமர் என்றும் நமது சமுகம் ஏற்றுக்கொண்டுவிட்டதே, என்ன செய்வது கூட்டத்தில் பேசுபவன் குற்றவாளி என்றாலும் நாயகன் ஆகின்றானே. ஆச்சாரியாவின் பேச்சை எல்லோரும் அப்படித்தான் கவனித்துக் கொண்டு இருந்தனர். இது போதுமே வாய்ப்பு கிடைத்தால் சும்மா விடுவோமா அடுத்தவர் குறைகளையும் பிழைகளையும் சுட்டிக்காட்டி நான்தான் சிறந்தவன் என்று வெளிக்காட்டிக்கொள்வது தானே இயல்பு. அப்படித்தான் ஆச்சாரியாவும் 'இங்க பாருங்கப்பா நாம் எல்லாம் எவ்வளவு அமைதியாகவும், நேர்மையாகவும் இந்த வரிசையில் நின்று காத்துக் கொண்டு இருக்கின்றோம், ஆனால் இவன் இடையில் நுழையப்பார்க்கிறான். ஒவ்வொருவருக்கும் சுயஒழுக்கம் வேண்டும், நாட்டின் தற்போதைய நிலையைக் கட்டுப்படுத்த நமது பங்களிப்பும் மிக அவசியம்" என்று கூறினார'. மெல்ல மெல்ல வரிசையும் முன்னோக்கி நகர்ந்து கொண்டு இருக்கின்றது. 

'மாமா... மாமா... நானும் இடையில் வரலாமா" என்று கூறியபடி ஆச்சாரியாவை நோக்கி அவர் தங்கையின் மகன் வந்தான். இதைக்கேட்டதும் ஆச்சாரியாவுக்கு என்ன செய்வது என்று தெரியாமல் அங்குமிங்கும் சுற்றிப்பார்த்தார், யாராவது நம்மைப் பார்க்கிறார்களா என்று காரணம் இதற்கு முன்னர் ஊருக்கு உபதேசம் பண்ணிவிட்டோம். இவனுக்கு இல்லை என்று மறுக்கவும் முடியாது, மறுத்தால் இன்று வீட்டில் நமக்கு சாப்பாடு கிடையாது. என்று மனதில் புலம்பியபடியே 'இங்கே மற்றவர்கள் எப்படி இருக்கிறார்கள் என்று முதல் நன்றாக கவனித்துப்பார், விடியற்காலையில் இருந்து இவர்கள் இங்கே வரிசையில் நிற்கின்றனர், நீ இடையில் நுழைந்து விடலாம் என்று நினைக்கின்றாய்" என கோபமாக கூறினார். இதைப்பார்த்துக் கொண்டிருந்த சூரியமூர்த்தியும் 'ஐயா, அவன் சின்னப்பிள்ளை பாவம் தானே இடையில் வரட்டுமே" என்றான். 'அது எப்படி சாத்தியம், சின்னவனோ, பெரியவனோ சட்டம் எல்லாருக்கும் ஒன்று தான்" என்று சாடினார். 'ஐயா, இல்லை என்றால் அவனுடைய பொருட்களை நீங்களே வாங்கிக் கொடுக்கலாமே, அப்போது யாரும் கோபிக்க மாட்டாங்க"என்றான் சூரியமூர்த்தி. வரிசையின் இடையில் ஒருவர் இணைவதும், அல்லது வரிசையில் நிற்கும் ஒருவர் பிறருக்காக செயற்படுவதும் ஒன்று தான். இது இந்த முட்டாளுக்கு விளங்கவில்லை போலும் என்று சிரித்துக் கொண்டு மருமகனின் கையிலிருந்த பொருட்களின் பட்டியல் சீட்டினை பெற்றுக் கொண்டார் ஆச்சாரியா. இப்படித்தான் மற்றவர்கள் பாவம் என்று அவர்களின் சூழ்நிலைகளை அறிந்தும் அறியாமலும் உதவி செய்கின்றோம், ஆனால் அவர்களே நம்மை முட்டாள்கள் என்று ஏமாற்றிச் செல்கின்றனர். 

ஒரு மாதிரியாக கடைக்கு அருகில் இவர்கள் நெருங்கிவிட்டனர். சூரியமூர்த்தியும் தன் பையிலிருந்த பட்டியல் சீட்டினை எடுத்து மெல்லிய சத்தத்துடன் வாசித்தான். இதை அவதானித்த ஆச்சாரியா 'என்னப்பா! மூன்று மாசமா ஊரடங்கு சட்டம், நீ முழுக்கடையையும் அப்படியே வாங்கப் போறாயா, ஏன் அவசரம், இப்படி எல்லாரும் வாங்கிப் போனால் கடைசில இருக்கிறவங்க என்ன செய்யிற" என்று கிண்டலாக பேசினார். 'ஐயா நம்மட நிலமை உங்களுக்கு தெரியும் தானே, நேற்றுத்தான் எங்களுடைய ஐயாவின் வீட்டுக்குப் போய் அவரிடம் பத்தாயிரம் ரூபாய் கடனாக வாங்கி வந்தனான், இன்னும் ஒரு மாதத்திற்கு வேலை இல்லையாம், அதுதான் இருக்கிற காசுக்கு எல்லா சாமான்களை வாங்கி வைப்பம் என்று நினைச்சன்" என தன் நிலமையை பகர்ந்தான். 'அப்படியில்லை தம்பி, இந்த ஊரடங்கு சட்டம் கிட்டத்தட்ட மூன்றுநாட்களுக்கு ஒரு தடவை தளர்த்தப்படும் எனவே பொறுமையாக கொஞ்சம் கொஞ்சமாக வாங்கலாம், அரசாங்கம் எமக்காக நிறைய சலுகைகளை வழங்கவுள்ளது, ஏதும் அவசர தேவைக்காக பணம் தேவைப்படலாம் கொஞ்சமாச்சி சேமித்து வை" என்று ஆலோசனை கூறினார் ஆச்சாரியா. தினக்கூலிக்காரனின் வாழ்க்கை திண்டாட்டம் தான் அவன் ஒருநாள் வேலைக்கு செல்லாவிட்டால், அப்படித்தான் சூரியமூர்த்தியின் குடும்பமும், அவனுக்கு மூன்று பிள்ளைகள், அவன் கிணறு, வாய்க்கால், மலசலகூட கழிவு குழாய்கள் தயாரிக்கும் இடத்தில் வேலை செய்கிறான், அவனது தினக்கூலி நாள் ஒன்றிற்கு எண்ணூறு ரூபாய் மட்டுமே. இது அவர்களுக்குப் போதாது அப்படி இருக்க இவர்கள் இந்த ஊரடங்கு காலத்தில் எப்படித்தான் அனுசரிக்கப் போறார்களோ என்று நினைத்துக் கொண்டே ஆச்சாரியாவும் தனது சீட்டை எடுத்தார். 

'சரி ஐயா நான் போறன் " என்று கூறியபடியே வீட்டுக்கு சென்றான். 'எனக்கு இந்த சீட்டில் இருக்கும் பொருட்களின் அளவுகளில் இரண்டு மடங்கு தாங்க" என்று கூறியபடியே ஆச்சாரியா தனக்கு பிடித்த தின்பண்டங்களையும் கொள்வனவு செய்தார். வெகு நேரமாக இவர்களை அவதானித்துக் கொண்டு இருந்தான் இவர்களுக்குப் பின் நின்றவன். “என்னடா! இந்த மனிசன்  உபதேசம் செய்தானே ஆனால் தானோ அதற்கு எதிர்மாறாக செயற்படுகின்றானே என்று நினைத்துக் கொண்டு பார்த்தும் பார்க்காதது போல் நின்றான். என்ன செய்ய முடியும் ஆச்சாரியாவைப் போலவும் மனிதர்கள் உள்ளனர், சூரியமூர்த்தியைப் போலவும் அப்பாவியான ஏழைகளும் உள்ளனர். அதுவும் பரவாயில்லை தவறுகளைக் கண்டும் காணாததைப்போல் இருப்பவர்களே பிழைகள் இடம் பெறுவதற்கு மறைமுக காரணிகள் ஆகும். இவ்வாறான மனிதர்கள் தட்டிக் கேட்டால் மட்டுமே மாற்றம் உண்டாகும்.போலியைக் கண்டு ஏமாறாதீர்கள்........ 

சயூரன் 
காரைதீவு  

Comments